Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:00:02 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 43
#KOTWART0243
Increase Font Size Decrease Font Size
வியாழன், நவம்பர் 10, 2016
உறைந்த கொடி! (பாகம் 1)
இந்த பக்கம் 2710 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

படுக்கையில் புரண்டு புரண்டு கிடந்தேன். இளம் வெயில் கீற்றானது சன்னல் கிராதிகளினூடாக கடந்து வந்து அறைக்குள் கட்டம் செவ்வகம் என வரைந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒரு வேலையும் இல்லை. வெளியே தெருவில் பள்ளி ,கல்லூரி பேருந்துகளின் ஹர்ர்... ஹர்ர்... என்ற இரைச்சல் எரிச்சலை ஊட்டியது . மிதந்து அலையும் கழுகு போல மனம் இலக்கின்றி அலைந்து அலைந்து சலித்துக்கொண்டிருந்தது.

“வாப்பா போன் அடிக்குது” என்றவாறே என் கையில் போனை திணித்து விட்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் என் இளைய மகன் .

“ ஹலோ யாருங்க ?

சார் வணக்கம் ! நான் திருனவேலியிலேந்து சிவராமன் பேசறேன். நீங்க பாலை கபீர் சாருங்களா ?

ஆமா சார் .. சொல்லுங்க ...

தோழர் மகேஷ் ஒங்க நம்பர கொடுத்தாரு.

ஆங்,,, சரி சரி.. ஏதோ பட ஸ்கிரீனிங்க் விஷயமாக உங்கள கான்டாக்ட் பண்ணுவாங்கனு சொன்னாரு.

ஆமா ஸார். வர்ற 26 ஆம் தேதி எங்க பரணி பிலிம் ஸொசைட்டி சார்புல ஷாஹித் ஆஸ்மி படம் போடறதா இருக்கோம். படம் முடிஞ்ச பின்னாடி நீங்க அது பத்தி பேசுனா நல்லா இருக்கும்.

படம் எதப்பத்தி சார்.

அது ஒரு பொலிட்டிக்கல் ஃபில்ம் சார்.

ஓகே சார். நான் கண்டிப்பா வர்றேன். அதுக்கு முன்னாடி படத்தோட டிவிடிய கொரியர்ல அனுப்பிடுங்க சார்.

கண்டிப்பா.. அட்ரஸ வாட்ஸ் அப்ல அனுப்பிடுங்க. நான் டிவிடிய இன்னைக்கே அனுப்பிடறேன்.”

அவர் சொன்ன மாதிரியே அடுத்த நாளே நேர்த்தியான தடித்த பழுப்பு உறையில் டிவிடி வந்து சேர்ந்தது. படத்தை ஒரே மூச்சில் பார்த்து முடித்தேன்.

படம் உண்டாக்கிய அதிர்வுகள் மனம் முழுக்க கொப்பளித்துக் கொண்டிருந்தது.

இந்த நினைவுகள் தணியும் முன்னரே லேப்டாப்பில் அது பற்றிய எனது எண்ண ஓட்டத்தை ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்.

அடுத்த நாள் சிவராமனின் போன் வந்தது.

“சார் , படத்த பாத்தியேளா ? ரொம்ப டிஸ்டர்ப் பண்ணியிருக்குமே?

ஆமா சார். படம் முடிஞ்ச பொறவு ஒரு நா முழுச அதே நெனவாவே இருக்கு. எனக்கு எழுத வர்ற அளவுக்கு பேச வராதுதான். ஆனாலும் இந்த படத்த பாத்த பொறவு அதப்பத்தி பேசிறனும்னு முடிவு பண்ணிட்டேன் சார். ரொம்ப நல்லது சார். நிகழ்ச்சிக்கு மறக்காம வந்திருங்க. ஒங்களுக்கு பஸ்ஸ விட திருச்செந்தூர்லேருந்து வர்ற திருனவேலி பாஸஞ்சர் ட்ரெயினல வந்தா பாளயங்கோட்டயில எறங்கிருங்க. அங்கேயிருந்து நம்ப வீடு பக்கம்தான் “. ஆமாஞ்சார். மதியானம் ரெண்டு மணிக்கு வண்டி . அதுல ஏறுனா மூணு மூணரை மணி போல பாளயங்ககோட்ட வந்துரும். எறங்கறதுக்கு முன்னாடி போன் பண்ணுறேன்

ஓகே சார்.

````````````````````````````````````````````````````````````

மறு நாள் காலை அதிகாலை தொழுகையை தொழுது விட்டு வீட்டுக்குள் வரும்போது டீயை அலுமினிய பாத்திரத்திற்குள் வடித்துக் கொண்டிருந்த என் மனைவி , ஏங்க அபூபக்கருட மச்சினன் வீட்டு கலியாணம் இன்னிக்கு காலய்லனுதானே சொன்னீங்க , போறீங்களா ? என கேட்டாள்.

டீ குடிக்க முன்னாலயே மதியான சாப்பாட பத்தி பேசுறீய என்ன விஷயம் ? போவாம இருந்தா இங்க செலவு மிச்சம் பிடிக்க ஏலாதுல்ல என்றேன்.

காலய்லிலேயே ஒன்னு கிடக்க ஒன்னு பேசாதீங்க . ஆமா ஒங்க ஒரு வேள சோத்துக்காச வச்சு சொத்தா சேர்க்க முடியும். ஆளப்பாருங்களேன் தொடர்ந்து கலியாண சாப்பாடா இருக்கே. அதான் ஒங்க உடம்புக்கு ஒத்துக்குமோ ஒத்துக்காதோன்னு தெரியலியேன்னுதான் கேட்டன். நல்லதுக்கு காலமில்ல. போனா போங்க போகாட்டி கெடங்க எனக்கென்ன?”

சும்மா இருந்தவளை சீண்டிய நிறைவில் “சரி சரி பேச்ச உடு “ என்றவாறே கோப்பையில் டீயை ஊற்றிக்கொண்டே அடுப்பங்கரையை விட்டு வெளியேறினேன்.

பேப்பர் படித்து ஒரு குட்டித்தூக்கம் போட்டு குளித்து முடிக்கவும் மணி பத்தே முக்கால் ஆகிவிட்டது.

பிரின்ஸ் தெருவிற்கு கிளம்பினேன். அபூபக்கர் வீடு அங்குதான் உள்ளது.

அவன் வீட்டிற்கு முன்னால் யாரையும் காணோம். கலியாணம் பெரிய பள்ளிவாசலில்.வைத்து நடைபெறுவதாக சொன்னார்கள். காலையில் டிஃபன் எதுவும் சாப்பிடாததால் வயிற்றுக்குள் பசியானது பெரும் படலம் போல கிளம்பி வயிற்றை கீறிக் கொண்டிருந்தது.

தெரு முனையில் அபூபக்கர் வெள்ளை பைஜாமுவும் குர்த்தாவும் போட்டு காலை லேசாக வளைத்தவாறே நடந்து வந்து கொண்டிருந்தான்.

“காக்கா ! கலியாணத்துக்கு வந்தீங்களா?

தவிர்க்க முடியாத சின்ன வேலையினால வர முடியலப்பா.

அதான பாத்தேன். கலியாணத்துக்கு போறது டைம் வேஸ்டு. சாப்பாட்டுக்கு போறதுதான் கடமங்கற கொள்க உள்ள ஆளாச்சே நீங்க.

கண்டுபிடிச்சாட்டானே கள்ளன் என நினைத்த நான் சரி சரி ரொம்ப பேசாதே நா திருனவேலிக்கு போவ வேண்டியிருக்கு சீக்கிரம் சோத்த போடு என்றேன். திருநவேலியில என்ன விசேஷம்.... ?

.... பட ஸ்கிரீனிங்குக்கு போறேம்பா.

ஆமாமா... இன்னிக்கு தமிழ் இந்துல இன்றைய நிகழ்ச்சி பகுதியில ஷாஹித் ஆஸ்மினு ஏதோ படம் போடறதாகவும் அதப்பத்தி எழுத்தாளர் பாலை கபீர் உரையாற்றுவார்னும் போட்டிருக்கே. ஓய் பேப்பர்காரன் பவரா எழுத்தாளர்னு போட்டுட்டா நீர் எழுத்துக்காரனா ஆவீருவிரோ ? ஒவ்வொரு பத்திரிக்கைகக்கும் நீர் ஒம்ம கட்டுரைய அனுப்பி அதப் போட வைக்கரதுக்கு படுற பாடு எனக்குள வேய் தெரியும்.

சரி சரி ரொம்ப பேசாதே முதல்ல சோத்த போடு

மாடில பொண் ஊட்டுக்காரங்களுக்கு மொதல்ல சாப்பாடு வைக்கிறாங்க அங்க போங்க காக்கா என்றவுடன் ஏணிப்படிக்குள் கால் வைத்தேன்.

மிக குறுகலான படிகள். பிடிமானத்திற்காக உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்க விட்டிருந்தார்கள். அது பாடம் பண்ணிய பழம் பாம்பு போல இழை பிரிந்து ஆடிக் கொண்டிருந்தது.

மாடிக்குள் பத்து பேர் அளவில் இரண்டு இரண்டு பேராக உட்கார்ந்திருந்தனர். தாலங்களில் இரண்டு பேர் உண்ணத்தக்க அளவில் நெய்ச்சோறு பரத்தப்பட்டிருந்தது. அந்த சோற்று குவியலில் பதிக்கப்பட்ட கிண்ணங்களில் களறிக்கறியும் , சிறு பருப்பு கடைசலும் எலுமிச்சை அடை ஊறுகாயும் கலந்த கத்தரிக்காய் கறியும் மெலிதான ஆவி பறக்க பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தன.

நானும் ஒரு வயதான மனிதரை தேடிப்பிடித்து உட்கார்ந்தேன். திருமண விருந்துகளில் தாலத்தில் எனக்கான பங்கை பாதுகாக்க நான் வழமையாக கடைப்பிடிக்கும் உத்தி.

ஆனால் இந்த முறை எனது உத்தியை தோற்கடித்துக் கொண்டிருந்தார் அந்த வயசாளி. “கறி பழம் போல வெந்திருக்கிதுல்லே “ என சொல்லிக்கொண்டே தனது உடைந்த அரைப்பல்லைக்காட்டி சிரித்த அவரின் வாய்க்குள் கறித்துண்டுகள் பல்லில் படாமல் நேரே அவரின் குடலுக்குள் லாகவமாக சென்று கொண்டிருந்தது. இடைவேளை எதுவுமின்றி ஒரே சீராக அவரின் கையும் வாயும் ஒத்திசைவோடு இயங்கிக் கொண்டிருந்தது. சுதாரித்துக் கொண்டு என் பங்கு கறியையும் சோற்றையும் முன்னெச்சரிக்கையுடன் என் பக்கம் இழுத்து வைத்துக் கொண்டேன்.

சாப்பிட்டு விட்டு எழுந்திருக்கவும் மதிய தொழுகைக்கான பாங்கு ஒலித்தது. கீழே அபூபக்கரிடம் சொல்லி விட்டு கிளம்பும்போது அங்கு நல்ல கறுப்பு நிறத்தில் நெற்றியில் பூத்த வியர்வையுடன் கூச்சமான சாயலுடன் நின்றிருந்த புது மாப்பிள்ளையிடம் “ இவர்தான் எழுத்தாளர் பாலை கபீர் “என அறிமுகப்படுத்தினான். கீழ் உதட்டை வளைத்து அரைப்புன்னகை புரிந்த பையனிடம் , கலியாணமெல்லாம் சிறப்பாக முடிந்ததா ? என கைகுலுக்கி விசாரித்து விட்டு வீடு நோக்கி நடந்தேன்.

மஞ்சள் நீக்கம் செய்யப்பட்ட முழு வெள்ளை வெயிலும் வெக்கையும் தெருக்களின் அகல நீளத்தில் ஒரு அங்குலம் கூட விடாமல் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. எதைப்பற்றியும் கவலைப்படாத சிறுவர்கள் கோல் போஸ்டுக்கு அடையாளமாக இரண்டு செருப்புகளை மண்ணில் புதைத்து கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

`````````````````````````````````````````````````

வீட்டில் ஒரு மணி நேரம் தூக்கத்திற்குப்பின்னர் காயல்பட்டினம் ரயில் நிலையம் வந்து சேர்ந்த போது மதியம் 1:45 மணி. டிக்கட் கவுண்டர் அருகே மடு தொங்கிய செவலை நிற நாய் ஸ்டேஷனின் மொத்த அமைதிக்குள் தூங்கிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் மாஸ்டர் அப்போதுதான் வந்து கவுண்டரின் இரும்புக் கதவை திறந்தார். அதன் ஓசையில் லேசாக கண் விழித்து பார்த்த செவலை மீண்டும் தூங்கத் தொடங்கியது. கவுண்டரில் நான்தான் முதல் ஆள்.

பாளையங்கோட்டைக்கான பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு பிளாட்பார்மில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்தேன். எதிர்த்தாற் போல இருந்த சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் சீமைக்கருவேல மரம் மண்டியிருந்தது.

விர்ரென பறந்து வந்த ஊர்க்குருவி இணை கருவேல மரத்தின் உச்சியில் இலைகளற்று நீண்டிருந்த ஒற்றை கிளையில் உட்கார்ந்தன. தனிமைக்கு பங்கம் என உணர்ந்ததினாலோ என்னவோ சில வினாடிகளில் கிர்ச் கிர்ச் என ஒலி எழுப்பியவாறே அரை வட்டத்தில் இரண்டு முறை தலையை சுழற்றி விட்டு அந்தர வெளியில் விருட்டென அவை பறந்து கரைந்தன.

எம்பி ஆளுங்கட்சிக்காரன் எவனையொல்லாமோ பிடித்து ஊர்க்காரர்கள் தில்லி வரை ரயில்வே அமைச்சரிடம் போய் மனு கொடுத்தும் ஒன்றும் நடக்காமல் போய் கடைசியில் அனைத்து கட்சிகளும் ரயில் மறியல் போராட்டம் என அறிவித்த பிறகு வந்து சேர்ந்த ஆஸ்படாஸ் மேற்கூரையும் கறுப்பு நிற சலவைக்கல் தளமும் விளக்குகம்பத்தில் ஒட்டியிருக்கும் பிட் நோட்டீஸ் போல இருந்தன.

இரவு பெய்த கோடை மழை தெறிப்பின் அடையாளமாக மழை நீரானது சிறிய அளவில் சலவைக்கல்லில் தேங்கியிருந்தது. சலப்... சலப்... என ஒலி எழும்ப தேங்கிக் கிடந்த தண்ணீரை மிதித்தவாறே பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் வந்து கொண்டிருந்தான்

எல தண்ணிய சவட்டிட்டு எங்கல போறே பெஞ்சு இங்க கெடக்குல்லா. இதுல உக்காருலெ.... என்றவாறே கக்கத்தில் வைத்திருந்த ஓலைபெட்டியை சிமிண்ட் பெஞ்சின் மறுமுனையில் கீழ் ஓரத்தில் இறக்கி வைத்து விட்டு வந்து உட்கார்ந்தார் பெரியவர். அவருக்கு வயது எழுபதிற்கு மேல் இருக்கும். சட்டை அணியாத மேனி. தொப்பையும் கூனும் இல்லாத பனங்கட்டை போன்ற நிமிர்ந்த உடல். வெளுத்த தலையில் தேய்த்திருந்த எண்ணை காதின் மேல் மடலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது.

ஓலைப்பெட்டியிலிருந்து முறுகிய பதநீர் வாசம் வந்து கொண்டிருந்தது. அந்த மணத்தில் லயித்தவனாய் அந்த ஓலைப்பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“வேறொன்னுமில்லய்யா.. எங்க வெளயில உள்ள பனமரத்துல எறக்குன பதனில காச்சுன கருப்பட்டி. . திருனவேலிலதான் மவள கட்டிக் கொடுத்திருக்கேன். போவும்போது வெறுங்கையா போவப்படாதுல்லா. அதான் ஒரு சிப்பம் கருப்பட்டிய எடுத்துட்டு பேரனயும் கூட்டிட்டு போறன் .

பெரியவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே தட தடவென அதிர்ந்தவாறு இரண்டு ஓரங்களிலும் தூசியையும் துண்டுக்காகிதங்களையும் சேர்த்து கிளப்பிக் கொண்டு திருநெல்வேலி பாசஞ்சர் ட்ரெயின் வந்து சேர்ந்தது.

வண்டிக்குள் பெரிதாக கூட்டம் ஒன்றுமில்லை. மொட்டை அடித்து தலை நிறைய சந்தனம் பூசிக் கொண்டு நான்கைந்து பேர் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தனர். மேலிருக்கையில் அவர்களின் பைகளுடன் அரை மூடித் தேங்காய் , பழம் , விபூதி பாக்கட்டுகளுடன் சங்கர் ஸ்டால் , பந்தல் மண்டபம் , திருச்செந்தூர் என லேபிள் ஒட்டிய பஞ்சாமிர்த குப்பியும் இருந்தன.

நான் அவர்களைத்தாண்டி அடுத்த இருக்கையில் ஒரு வயதான பெண்மணியும் இளம் கணவன் மனைவியும் அவர்களின் ஐந்து வயது மதிக்கத்தக்க மகனும் இருந்தனர். அவர்கள் பக்க வாட்டு இருக்கையில் உட்கார்ந்திருந்ததால் எனக்கு சன்னலோர இருக்கை கிடைத்தது.

அதில் போய் வசதியாக அமர்ந்தேன். மூன்று மாத இதழ்களை கையோடு கொண்டு வந்திருந்தேன். சன்னலோர காற்றும் வாசிப்பும் ஒன்று சேர நினைவுகள் தூக்கத்திற்குள் நழுவிக் கொண்டிருந்தது.

ஹய் ஹொய் தங்கர தக்கா... ஹய் ஹொய் தங்கர தக்கா...

என ஏற்ற இறக்கத்துடன் ஒலித்த சிறு குரலில் தூக்கம் தொலைந்தது.

பக்கத்து இருக்கையில் இருந்த ஐந்து வயது சிறுவனின் கொண்டாட்ட ஒலிதான் அது . மேல் பெர்த்துக்கும் கீழ் பெர்த்துக்கும் இடைப்பட்ட ஏறு கம்பியில் ஒரு காலை நுழைத்து மறு காலை கீழே தொங்கப்போட்டுக்கொண்டு தாறுமாறாக ஆடிக் கொண்டே ரயிலின் தண்டவாள லயத்துக்கு ஏற்ப தலையை ஆட்டிக்கொண்டு எழுப்பிய கூச்சலை பல சைகை காட்டியும் அவனது அப்பாவால் நிறுத்த முடியவில்லை.

எரிச்சலாகிப்போன அப்பாக்காரன் , ஏய் கணேஷ். கைகட்டி அமைதியா ஒக்காரு என கண்களை உருட்டிச் சொல்லவும் ஆர்ப்பரித்துக் கொந்தளித்துக்கொண்டிருந்த வெந்நீர் சட்டியில் குளிர் நீரை ஊற்றினால் போல அந்த சிறுவன் அப்படியே அடங்கிப்போய் உட்கார்ந்தான்.

கீழ் உதட்டை பிதுக்கி மேலுதட்டின் மீது வைத்தான். இடது கையை நெஞ்சின் குறுக்காக கட்டி வலது கையின் ஆட்காட்டி உதட்டின் மீது வைப்பதும் எடுப்பதுவுமாக இருந்தான் சிறுவன்.

அவனை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்த அப்பாக்காரன் தனது சிரிப்பை அடக்க முடியாமல் அந்த சிறுவனை தன் நெஞ்சோடு சேர்த்தணைத்து , என் செல்லம் , நீ கத்தினதினாலதான் அப்பா சத்தம் போட்டேன். இனி அப்படி செய்யாத கண்ணு...

போப்பா ஒன்னோட நானு காய் .... என முகத்தை திருப்பிக் கொண்டான் சிறுவன். “ போ... நான் ஒன்னோட கத்து.... “ என பிணங்கும்போது என்னிடம் கூறும் எனது இளைய மகனின் முகம்தான் நினைவிற்கு வந்தது. எல்லா குழந்தைகளின் சேட்டைகளும் குறும்புகளுமான உலகம் ஒன்றுதான் போலும். மனம் அப்படியே குளிர்ந்து லேசானது போல் இருந்தது.

இஞ்சி டீ சூடா பருப்பு வட வட போளீய்.... எனக்கூவியவாறே வலது கையில் ஒரு தட்டத்தையும் இடது கையில் டீ கேனையும் ஏந்திபடியே வெள்ளை சட்டையும் வேஷ்டியும் உடுத்திய நடுத்தர வயது மனிதர் வந்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து பருப்பு வடையின் பொறித்த மணமும் காற்றில் மிதந்து வந்தது. கலியாண விருந்தினால் வயிறு மந்தமாக இருந்தாலும் மூக்கு சும்மா இருக்க விடுவதில்லை. ஒரு வடை , ஒரு போளி , டீயை வாங்கிக் கொண்டேன்.

மிதமான சூட்டில் இருந்த பருப்பு போளி வடையுடன் சூடான இஞ்சி டீ கலவை தந்த கிறக்கத்தின் நடுவே ரயில் செய்துங்க நல்லூரை தாண்டிவிட்டது.

போன் ஒலித்தது. சிவராமன்தான். சார் , வண்டி எங்க வந்திருக்கு ? சிறீவைகுண்டம் தாண்டியாச்சா அப்ப சரி . என் அண்ணன் பையன் நம்பர உங்களுக்கு எஸ்ஸமெஸ் அனுப்பியிருக்கேன். பாளயங்கோட்டை ஸ்டேஷனுக்கு வெளியே நிப்பான். கான்டாக்ட் பண்ணிக்கோங்க....

மூணரை மணிக்கு பாளையங்கோட்டை ஸ்டேஷனுக்குள் மெல்ல அசைந்து நுழைந்தது ரயில். வெளியே வெயில் அவ்வளவாக இல்லை. பிளாட்பாரத்தை விட பள்ளத்திற்குள் கிடந்த ரயில் நிலையத்தின் அலுவலக வாசலில் ஸ்டேஷன் மாஸ்டர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கையில் பச்சை சிவப்பு என எந்தக்கொடியும் இல்லை. முதுகுக்கு பின்னே ரயில் மீண்டும் ஊர்ந்து செல்ல தொடங்கியிருந்தது.

ஸ்டேஷனுக்கு வெளியே ஹீரோ ஹோண்டா பைக்குடன் வெள்ளை நிற டீஷர்ட் போட்ட ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான். என்னை அடையாளங்கண்டு மெலிதாக புன்னகைத்தான்.

தம்பி நீங்கதானே பூபதி? ஆமா சார் ஒங்கள கூப்புட்டு வரச்சொல்லி சித்தப்பாதான் அனுப்பிச்சாங்க.

ஆறேழு நிமிட ஓட்டத்திற்குப் பிறகு பாளையங்கோட்டை மேட்டுத்திடல் அருகில் உள்ள சலனமில்லாமல் நீண்டு கிடந்த தெருவிற்குள் நுழைந்த பைக் “மணி பவனம் “ என எழுதியிருந்த ஒரு வளாகச்சுவரின் வெளியே நின்றது. சூடான வெண்ணிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறத்திற்கு உடை மாற்றிக் கொண்டிருந்த அந்தி வெயிலும் தெருவின் அமைதியும் அந்த சுற்றுப்புறத்தையே பொதிந்து கொண்டிருந்தன.

இருபுறமும் செடிகொடிகள் நிறைந்திருந்த ஏணிப்படிகள் வழியாக முதல் மாடியில் இருந்த போர்ஷனின் வாயிலில் இருகரம் கூப்பி நின்றார் சிவராமன். மெலிந்த தேகம். முன் வழுக்கை . பிரஷ் போல இருந்த மீசை வாயைத் தொட்டுக் கொண்டிருந்தது. சிரித்த முகத்துடன் , வாங்க சார்.. என வரவேற்றார்.

முன் ஹாலில் மூங்கிலாலான சாய்விருக்கையும் சிறு மேசையும் போடப்பட்டிருந்தது.

வலது பக்கம் இருந்த மர மாடத்தில் சிவராமன் அவரின் பணிக்காலத்தின் போது வாங்கிய நட்சத்திர செயல்பாட்டிற்கான விருதுகள் , பாரதியாரின் படம், குழந்தை பொம்மை, பித்தளையில் செய்யப்பட்ட புத்தர் முகம் ஆகியவை இருந்தன.

பரஸ்பர குசலம் விசாரிப்பிற்குப் பிறகு மெதுவாக பேச்சு ஸ்கிரீனிங் பக்கம் திரும்பியது.

நான் கையோடு கொண்டு வந்திருந்த ஷாஹித் பட இறுவட்டை திரும்ப அவரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கி மேசை மேல் வைத்து விட்டு “சார் ! ரிட்டயர்மெண்டுக்குப்பிறகு மிச்சம் இருக்குற காலத்தல மனசுக்கு பிடிச்ச விஷயங்கள முழுசா செய்யனும்னு நினச்சிக்கிட்டுருந்தேன். அதோட குரல் வளயில ஆறு மாசத்துக்கு மின்னாடி கேன்ஸர் வந்திடுச்சி. பேச முடியாம போச்சி.

பேப்பர்ல எழுதிக்காட்டியும் சைகையிலயுந்தான் எல்லா கம்யுனிக்கேஷனும் நடந்துது. கிட்டதட்ட ஒரு ஊமயாவே ஆயிட்டன்னா பாருங்களேன். எங் கொரலத்தவிர எல்லாத்துட கொரலயும் கேட்க முடிஞ்சுது. நான் இத்தன வருஷமா பேசுன என் பேச்சு கூட எனக்கு மறந்துடிச்சானா பாருங்களேன்... என கலகலத்து சிரித்தார்..

சார் சாப்பிடுங்க! என்றவாறே சிறு தட்டில் ஓமப்பொடியையும் காஃபியையும் கொண்டு வந்து வைத்தார் சிவராமனின் மனைவி.

ஓமப்பொடி கீற்று ஒன்றை பாதி ஒடித்து வாயில் போட்டவாறே , “ மும்பை டாடா கேன்ஸர் இன்ஸ்டிடியுட்டுல ஆறு மாச டிரீட்மெண்டுக்குப்பிறகு இப்ப சரியாடிச்சி.’ என்றார்.

எல்லாத்தையும் சேத்து யோசிச்சு பாத்தேன். வாழ்க்கனு நான் வாழ்ந்ததுலாம் சின்ன நூல் கண்டு போல தோணிச்சு. ரிட்டயர்மெண்ட் டைம் வார வரய்க்கும் பொறுக்க முடியல. ரண்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் வீஆரெஸ் வாங்கிட்டேன். பரணி ஃபிலிம் சொசைட்டி வேற அப்படியே தூர்ந்து போய் கெடக்குது. அதுக்கு உயிர் குடுக்கணும். அதோட சூழலியல் தொடர்பான வேலய்களும் வேற வேலகளும் கெடக்குது என்றவர் தனக்கு முன்னால் இருந்த காஃபியை எடுத்து உறிஞ்சினார்.

சார் உங்களுக்கு எத்தனை கொழந்தைங்க ?

ஒரு பையன் , ஒரு பொண்ணு. ரெண்டு பேரயும் படிக்க வச்சு கலியாணமும் பண்ணி வச்சாச்சு. பையன் சென்னையில ஒரு தனியார் கம்பனியில வர்க் பண்றான். நல்ல சம்பளம்.

மகள் வந்து ஜார்க்கண்டுல ஆதிவாசி பகுதில ஒரு காந்தியன் மெடிக்கல் என்ஜிஓல சர்வீஸ் பண்றா.

அப்ப என்ஜிஓன்னா சம்பளம் பெரிசா இருக்காதே ! எப்படி சமாளிக்கிறாப்புல ? உண்மதான். அடிப்பட வாழ்க்க தேவைகள ஓட்டீறலாம். மேல் மிச்சமா எதுவும் சேத்துக்க முடியாது. காந்தியவாதிங்க அப்படித்தானே .ஆனா அவளுக்கும் அப்படி சர்வீஸ் பண்றதுதான் பிடிச்சிருக்கு. நாங்க தூர தூரமா இருந்தாலும் என்னோட பென்ஷன் பணம் , பையனோட சம்பளம் , மகளோட சம்பளம் எல்லாத்தயும் ஒன்னாக்கி அவங்க அவங்களுக்கு மாசா மாசம் என்னென்ன எவ்வளவு தேவையோ அவ்வளவு எடுத்துக்கிருவோம்.

சபாஷ் சிவராமன் ! காந்தீய கம்யூன் வாழ்க்கை . ஒன்னு வீட்டுக்கு இன்னொன்னு சமூகத்துக்குனு நல்லாதான் பிரிச்சிருக்கீங்க சார்...

தரையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக புன்னகைத்தவாறு இருந்தார் சிவராமன்.

ஹாலில் மாட்டியிருந்த கடிகாரத்தில் மணி ஐந்தரையாகியிருந்தது.

ஆறு மணிக்கு ஸ்டாட் பண்ணுவாங்க. நாம் மெதுவா நடந்தே போயிடலாம் என்றவர் உள்ளறைக்குள் சென்று லுங்கியில் இருந்து பேண்டுக்கு மாறினார். வெளியே வரும்போது கை நிறைய நூல்களை கொண்டு வந்தார்.

வச்சிகிடுங்க சார் ! என்று நீட்டினார் . பிரவுன் நிற மேல்தாள் கொண்ட சூழலியல் அமைப்பொன்று வெளியிட்ட சிறு சிறு மலிவு விலை .வெளியீடுகள்.

பாரதியார் படம் போட்ட மஞ்சள் நிற ஜோல்னாப்பையை தோளில் மாட்டினார் சிவராமன் .காம்பவுண்டு கேட்டின் ஓரமாக வெள்ளையும் செவலையும் கலந்த நாய் ஒன்று பாதி கண்ணை சோம்பலுடன் திறந்து மூடியபடி படுத்துக் கிடந்தது. தெருவின் நடுப்பாதிக்கு மேல் வெயில் சரிந்து கிடந்தது.

சார்! ஸ்கிரீனிங்க் ஸ்பாட் நடக்குற தொலைவுதான். நாம போற வழியில ஆஷ் தொரயிட கல்லறய பாத்துட்டு போலாமா என என்னிடம் சம்மதம் கேட்டார்.

ஆஷ் துரை இங்குதான் அடக்கமாயிருக்கின்றார் என்ற செய்தி எனக்கு புதியதாகவும் ஆர்வத்தைக்கிளப்புவதாகவும் இருந்தது.

அது எந்த எடத்துல இருக்கு சார்..?

பாளையங்கோட்ட மிலிட்டரி லைன் இங்கிலீஷ் சர்ச் கல்லறை தோட்டத்துக்குள்ள ஒரு எடத்துலதான் அவர அடக்கியிருக்கு...

அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால் பாளையங்கோட்டையின் சாலைகள் கழுவித்துடைத்தாற் போல ஓசையும் பரபரப்பும் ஒழிந்து போய் இருந்தன.அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை வெயிலின் கசகசப்பு நிறைத்திருந்தது.

பழரசக்கடையுடன் ஒட்டி இருந்த நிறுத்தத்தில் வந்து நின்ற தனியார் பேருந்தில் மொத்தம் அய்ந்தாறு பேர்களே இருந்தனர். கடைசி படிக்கட்டில் பாதி தொங்கியவாறே .... சங்க்சன்... அய்க்ரவுண்ட்... பாள பஸ் ஸ்டாண்ட்... என மாறி மாறி கத்திக் கத்திக் கொண்டிருந்தார் கண்டக்டர்.

பேருந்து நிறுத்ததிலிருந்து ஐந்து நடையில் நிமிட தனியார் எம்.ஆர்.அய். ஸ்கேன் சென்டர் இருந்தது . அதன் முகப்பில் மனித உறுப்புகளின் படத்தை வண்ண வண்ணமாக வரைந்து அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தது. ஸ்கேன் சென்டரை ஒட்டினாற் போல வளைந்து திரும்பி வலது ஓரம் சில அடிகள் நடந்தவுடன் இங்கிலீஷ் சர்ச் கல்லறையின் முகப்பு தென்பட்டது. பார்வைக்கு பள்ளிக்கூட முகப்பு போல இருந்தது.

சிமிண்ட் பாதையெங்கும் மஞ்சள் நிற மலர்கள் புதியதாகவும் பாதிவாடிய நிலையிலும் உதிர்ந்து கிடந்தன. வேறு குப்பைகள் எதுவுமில்லாமல் நடைபாதை தெளிவாக இருந்தது.

வலப்பக்கமாக எழுதப்பட்ட ஆங்கில “எல்” வடிவில் உறுதியாகவும் அகலமாகவும் பெரும்பாலான கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. சில கல்லறைகள் கிடைமட்டமாக மட்டுமே இருந்தன. எல்லா கல்லறைகளிலும் அடக்கப்பட்டவரைப்பற்றிய குறிப்புகள் இருந்தன. அகோர பசி அடங்கிய சாந்தம் கொண்ட விலங்கு போல கல்லறைக்குள் அலைந்த காற்றில் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது மரணம் .

நாங்களிருவரும் முழு கல்லறை தோட்டத்தையும் வலம் இடமாக சுற்றி சுற்றிப்பார்த்தும் ஆஷின் கல்லறையை மட்டும் காணவில்லை. விளக்கம் கேட்கவும் அங்கு யாருமில்லை.

நாங்கள் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த போது கல்லறை தோட்டத்திற்குள் நடுத்தர வயது பெண்மணி ஒருவர் நுழைந்தார். மெதுவாக அவரை அணுகி விபரம் கேட்டோம். மௌனமாக அவர் கை காட்டினார். வாயிலுக்குள் நுழைந்தவுடன் இடது ஓரத்திலேயே கம்பீரமாக அவரது கல்லறை நின்றிருந்தது. பெரும் வரலாறு ஒன்று சில அடி நிலத்திற்குள் நந்தி போல உறைந்து அமர்ந்திருந்தது.

எங்களுக்கு பின்னால் கல்லூரி மாணவர்களிருவர் வந்து சேர்ந்தனர். அதில் வெள்ளை நிற பைஜாமவும் குளிர் கண்ணாடியும் அணிந்திருந்தவன் கண்ணாடியைக்கழற்றி பைஜாமாவில் துடைத்தவாறே எங்கேயோ குளிர் நாட்டுல பொறந்தவன்... இங்க வந்து குண்டடிபட்டு செத்து இப்பிடி வெந்து புழுங்குற மண்ணுக்குள்ள படுத்துக் கெடக்கணும்னு கனவுல கூட நெனச்சிருப்பானாப்பா ... ஹ்ம்ம்ம் . இதான் விதிங்கறது... என நண்பணிடம் சன்னமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.

``````````````````````````````````````````````

திரையிடல் நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்த இடம் ஒரு தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி பள்ளிக்கு சொந்தமானது . அதன் நுழை வாயிலில் நின்று கொண்டிருந்த ஒன்றிரண்டு பேர் சிவராமனை பார்த்து புன்னகைத்து வணக்கம் தெரிவித்தனர்.

அவர்களில் முன் நெற்றி வழுக்கையான ஒரு ஆள் விலை உயர்ந்த மஞ்சள் நிற பருத்தி சட்டையும் பேண்டும் அணிந்திருந்தார். என்னைப் பார்த்து புன்னகைத்தவாறே வந்தார்.

மாமா ! நீங்க காயல்பட்னமா ?

ஆமா ! எப்படி கண்டு பிடிச்சீங்க ? என்றவாறே கை குலுக்கினேன்.

என்ன மாமா அப்படி கேட்டுப்புட்டீங்க . நாங்க கொழும்புல சைவ சாப்பாட்டுக்கட வச்சுருக்கம்ல.. உங்கூருக்காரங்கள்ளாம் அங்கதான கல் யாபாரம் பண்றாங்க..

உங்க பேரு

ராதாகிருஷ்ணன்..

கொழும்புல எங்க கட

வெள்ளவத்தய்ல சீ சைடுலதான் கட..

ஒங்க ஊரு அலீ ஹாஜியார் காலய்ல பேருவளய்க்கு கல் வாங்க போறதுக்கு மின்னாடி நம்ப கடையில வந்துதான் ஆப்பமும் சொதியும் உளுந்த வடையும் சாப்புட்டுட்டு போவாங்க ...

அப்படியா ... கொழும்புலேருந்து எப்ப வந்தீங்க

நான் வந்து ரொம்ப வருஷங்களாச்சு மாமா

அப்ப கட

அத அண்ணன் தம்பிலாம் பாத்துக்கறாங்க

நீங்க ஏன் போறதில்ல

மாமா... எனக்கு சொந்த ஊரு பாளயங்கோட்டக்கி பக்கத்தில உள்ள ரெட்டியார் பட்டி. எங்களுக்கு ஏகப்பட்ட நிலபொலங்க சொத்துக இருக்கு. அத அனுபவிச்சால போதும் மாமா. இனிமே என்னத்துக்கு போட்டு காசு காசுன்னு அலயனும்.

எம்பாலிசி என்ன தெரியுமா மாமா நான் கோயில் கொளத்துக்குல்லாம் போறதுல்ல. பசிச்சவங்களுக்கு சாப்பாடு போடுவன்.அன்பே சிவன்தாங்குற நம்பிக்க உள்ளவன் நானு...

வாங்க டீ குடிச்சுக்கிட்டே பேசுவோமே என்றேன்.

மாமா இந்த தெரு முனய்ல ஒரு டீக்கடயில சுசியமும் டீயும் நல்லாருக்கும் என்றவர் அங்கு கூட்டிச் சென்றார்.

அவர் சொன்னது போலவே சுசியத்தின் உள்ளடக்கமான கடலை பருப்பு மசியல் தேன் போல இளகியிருந்தது .

டீக்கடையிலிருந்து திரும்ப வந்துக் கொண்டிருக்கும்போது சிவராமன் தன்னுடைய ஜோல்னா பையிலிருந்து ஃப்ளெக்ஸ் ஒன்றை எடுத்துக் கொண்டிருந்தார். பயிற்சி பள்ளியின் முன் பக்கம் ஓடும் சாக்கடை வாறுகாலின் சிமிண்ட் தளத்தில் குறுக்காக காலை வைத்துக் கொண்டு ஃப்ளெக்ஸ் பதாகையை கட்டினார். பரணி ஃப்லிம் சொஸைட்டி, திருநெல்வேலி என நீல வெள்ளை நிறத்தில் எழுதியிருந்த அதன் ஒரு பக்க முனை சற்றே தொய்ந்த நிலையில் இருந்தது.

[தொடரும்]

---------------------------------------------------------

[நிறைவு பாகம் காண இங்கு சொடுக்கவும்]

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved