[பாகம் 1 காண இங்கு சொடுக்கவும்]
---------------------------------------------------------
எல்லா ஏற்பாடுகளும் முடிந்து திரைக்காட்சி தொடங்கும்போது மாலை ஏழு மணியாகி விட்டிருந்தது. ஒற்றை ட்யூப் லைட்டின் வெளிச்சத்தில் ஹாலின் மையத்தில் மட்டும் இருள் மந்தமாகி வட்ட வடிவில் விலகி நின்றது.
கல்லுரி மாணவர்கள் , நடுத்தர வயதைக்கடந்தவர்கள் , பெண்கள் என முப்பது பேர் அளவில் வந்திருந்தனர்.
முதல் வரிசையிலிருந்த பெஞ்சில் போய் அமர்ந்தேன். ஹாலின் ட்யூப் லைட்டு அணைக்கப்பட்டு படம் தொடங்கியது.
மும்பையின் பெரு ஓட்டத்தின் சிறு இழையில் ஷாஹித் ஆஜ்மியின் கீழ் நடுத்தர வர்க்கத்து குடும்பத்தின் அன்றாட வாழ்க்கை ஊர்ந்து செல்கின்றது.
திடீரென ஒரு நாள் உடைந்து விழும் குடத்திலிருந்து சிந்தும் நீர் மண் விரைந்து கசிந்து தரைக்குள் இறங்குவது போல சக மனிதன் மீதான வெறுப்பானது மும்பையின் தெருக்களையும் வீடுகளையும் குடும்பங்களையும் படர்ந்து பிடிக்கின்றது.
வன்முறை எதிர் வன்முறை என்ற அதிவேகச் சுழலில் ஷாஹித் ஆஜ்மியினதும் அவனது குடும்பத்தினதும் வாழ்க்கையிலிருந்து அன்றாட சராசரி அமைதியான வாழ்க்கை உள்ளிழுக்கப்பட்டு அமிழ்த்தப்படுகின்றது.
புனையப்பட்ட வழக்கொன்றில் காவல்துறையின் சித்திரவதை , சிறைத்தண்டனை என சிக்கித்தவிக்கிறான் ஆஜ்மி. அவனுக்கு சிறையில் முதிர்ந்த நல்ல மனிதர் ஒருவரின் தொடர்பு ஏற்படுகின்றது. பழிவாங்கும் கனலை அவனது உணர்வு நிலைகளிலிருந்து மெல்ல கழுவி துடைத்து அறிவார்ந்த வழியில் நீதிக்காக போராடுவதை கற்பிக்கின்றார் அவர்
ஷாஹித் ஆஜ்மியின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபிக்கப்பட்டு வெளியில் வந்த பின்னர் அவன் சட்டம் பயின்று வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொள்கின்றான்..
பொய் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் தள்ளப்பட்ட அப்பாவிகளுக்காக வாதாடி விடுதலை பெற்றுத்தருகின்றான். அவர்கள் அப்பாவிகள்தான் என்பதை முதலில் தான் நேரடியாக விசாரித்தறிந்த பிறகே அவன் அவர்களுக்காக போராடுகின்றான்.
சொத்து பிரிவினை வழக்கு தொடர்பாக அவனை அணுகும் மணவிலக்கு பெற்ற பெண் வாடிக்கையாளர் ஒருத்தியை காதலித்து மணந்து கொள்கின்றான். இதில் அவனது குடும்பத்தினர் அவனுடன் முரண்படுகின்றனர்.
வழக்கறிஞர் வாழ்க்கை , தாயுடன் முரண் , இனிய மனைவியுடனான தித்திக்கும் இல்லறம் என்ற அவனது முக்கோண வாழ்க்கை பயணத்தில் நான்காவது கோணம் ஒன்று வடிவங்கொள்கின்றது.
பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் ஷாஹித் ஆஜ்மி உடைத்தெறிவதால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் பொது இடத்தில் அவமானப்படுத்துகின்றனர் அவனை கொல்லபோவதாக மிரட்டுகின்றனர்.
இந்த நெருக்கடி அவரது இல்லற வாழ்க்கைக்குள்ளும் ஊடுறுவுகின்றது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே சூடான விவாதம் நடக்கின்றது.
“ஷாஹித் இந்த கேசிலிருந்து நீ வெளியே வா!
ஏன் எதுக்காக வெளியேறனும்?
வெளிய வரணும்னா வெளிய வந்துதான் ஆகணும்
அதான் ஏன்னு கேக்கறேன்மா ? என தன் மனைவியை இரு கைகளாலும் வளைத்து பிடித்தவாறே அவன் கேட்டான்.
இதொன்னும் வெளயாட்டில்லீங்க நமக்கு நம்ம வாழ்க்க வேணும்
சரி இந்த கேசுல நான் அவங்கள கைவிட்டுட்டா அவங்க எங்க போவாங்க? போலீஸ் கிட்டயா போவாங்க ? அவங்களுக்கு யாரு இருக்காங்க?
ஆமா... அவங்களுக்கு யாருமில்ல... ஆனா நமக்குத்தான் முழு ஒலகமும் இருக்கே ?... “ என கழுத்தை வெட்டித் திருப்பிக்கொண்டு கணவனின் கைகளிலிருந்து சரிந்து திமிறி வெளியேறி பக்கத்து அறைக்குள் சென்றவள் பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டு பிறந்த வீட்டிற்கு கிளம்புகின்றாள்.
புயல் போல் கிளம்பிச்செல்லும் மனைவியைப் பார்த்துக் கொண்டே நிற்கின்றான் ஷாஹித் ஆஸ்மி.
இந்த நேரத்தில் எனக்கு மிக அருகாமையிலிருந்து விசும்பல் ஒன்று ஒரு ஒற்றை பீரிடலுடன் வலுவாக வெளிக்கிளம்பி அதே வேகத்தில் அடங்கிவிட்டது.
நான் திரும்பிப் பார்த்தேன். அந்த முக்கால் இருட்டில் குரலுக்கான முகம் தெரியவில்லை.
படம் நிறைவடைந்த பின்னர் என்னை பேச அழைத்தனர். நான் முன்னரே எழுதி மொபைலின் ஃபைலுக்குள் சேமித்து வைத்திருந்த இரண்டு பக்க கட்டுரையை ஒரேயடியாக வாசித்து முடித்தேன்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விவாதத்தை தொடங்கி வைக்க பலரும் அதை ஒட்டி பேசினர். சிவராமனின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
````````````````````````````````````````````
இரண்டு நாட்கள் கழிந்தது.
சிமிண்ட் தரையின் சுகத்தை கோடையில்தான் அனுபவிக்க முடியும் போல. பாய் விரிக்க சோம்பல்பட்டு வீட்டின் தரையில் படுத்துக் கிடந்தேன். நான்கைந்து நாட்களில் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்ற நினைப்பே எரிச்சலை உண்டாக்கியது.
சென்னை மண்ணடியில் இரும்பு மொத்த மார்க்கட் உள்ள ஜோன்ஸ் தெருவில்தான் எனது ரூம் இருக்கின்றது. நீள அகலமான இரும்பு தகடுகளும் கம்பிகளும் உருட்டுத்தடிகளும் நிறைந்த ரெக்ஸின் போர்வையுடன் தூசி படிந்து பல மாநில பதிவெண்களுடன் நிற்கும் லாரிகள்.
காலில் சுருள் சுருளாய் தடித்து புடைத்த நரம்புகளும் முந்திய நாள் இரவின் போதையால் வெளிறிய சிவப்புடன் கூடிய கண்களைகொண்ட சுமை தொழிலாளிகள் அந்த வண்டிகளின் விலாப்புறங்களில் நிற்பார்கள் . அவர்கள் .புளிச் புளிச் என துப்பிய பான் பராக் எச்சிலின் தடங்கள் , உலர்ந்த மூத்திர திட்டுகளையெல்லாம் தாண்டி மூன்று மாடி ஏறி ரூமில் போய் இறங்கி அப்பாடா என பாத்ரூம் குழாயைத் திருகினால் தண்ணீர் வராது .மண்டை காய்ந்து விடும்.
முதல் மாடியில் உள்ள ஆஃஃபீஸில் உள்ள கணக்குப்பிள்ளையை கேட்டால் அவரின் குட்டை கழுத்துக்கு மேல் பாங்காக உட்கார்ந்திருக்கும் வட்ட தலையை உயர்த்தாமலேயே “ பாய் ! மோட்டார் காயில் எரிஞ்சு போய் ரெண்டு நாளாச்சு. என்பார். ஹவுஸ் ஏஜன்டுக்கு போன் பண்ணினால் பிளம்பருக்கு சொல்லியாச்சு. நாளக்கி வந்து பாப்பாரு என்ற பதில் கிடைக்கும். “ நாளய்க்கி “ என்பதுடன் மூன்று தினங்களை கூட்டிக்கொள்ள வேண்டியதுதான். இரண்டு மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயமாக இந்த சிக்கல் வந்து போகும்போது பைப்பை திருப்பினால் அனிச்சை செயல் போல நீர் பீறிடும் என் சொந்த வீட்டின் அருமையை மனதில் தளும்பச்செய்யும்.
தூசும் புழுதியும் ஓசையும் ஒன்றுடன் ஒன்று கலந்து பெருங்குரலெடுத்து கத்தும் சென்னை வாசிகளும் ஒட்டு மொத்த சென்னையின் கரைச்சல் சித்திரம் மனதின் முன் எழுந்து வந்த போது “ மனுசன பழசாக்கிப்போடுற இந்த ஊருக்கு போகணுமாக்கும் “ என மனதிற்குள் ஆயாசம் மூண்டது.
“ ... என்ன செய்ய . பொறந்த ஊரு எல்லாத்துக்கும் அழகானதுதான். ஆனா இங்க பொழப்பு இல்லியே “ என்ற உள் மன உணர்த்தல்தான் மனதின் உள் விவாதத்தில் இறுதியாக நிலைத்து நின்றது.
சென்னைக்கு டிக்கட் போடுவதற்காக ட்றாவல் ஏஜண்ட் ரியாழிடம் போனில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிவராமனின் எண் செல் பேசியின் திரையில் நீல வண்ணத்தில் மேலும் கீழுமாக அசைந்து ஒளிர்ந்தது. டிக்கட் விஷயமாக பேசி முடித்தவுடன் சிவராமனை அழைத்தேன்.
‘’வேறொன்னுமில்ல சார் . ஒரு நியூஸக் கேக்குறதுக்குத்தான் போட்டேன். டிவியும் பாக்க முடியல.
என்ன பிரச்சின... ஏன் டீவிய பாக்க முடியல
அதுவா . காலய்ல முழிச்ச உடனே இரட்ட இரட்டயா தெரிஞ்சுது. நான் கண்ணாடி செக் பண்ணி பல வருசமாச்சு. அதுனால அரவிந்த் கண் ஆஸ்பத்திரிக்கு போனேன். அங்க கண்ணுல மருந்த விட்டு செக் பண்ணிணாங்க.
என்ன சொன்னாங்க..
நாளக்கி மறுபடியும் வரச்சொல்லியிருக்காங்க
அவங்க மருந்துட பவர்னால சரியாவே பாக்க முடியல்ல. ஏற்கனவே இருக்குற கோளாறோட இதுவும் சேந்துக்கிட்ட உடனே கிட்டதட்ட முக்கால் குருடனாவே ஆன மாதிரி இருந்திச்சி .ஒரு மாதிரியா சமாளிச்சுக்கிட்டு பஸ்ஸ பிடிச்சி வீடு வந்து சேந்தேன்.
தனியாவா போனீங்க
ஆமா .
ஏன் சார் இப்படி பண்ணுறீங்க...
என்ன பண்றது யாரயும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல.
அத விடுங்க . கண்ணுல டிஸ்டர்புங்கறதுனாலதான் டீவிய பாக்க முடியல அதனால யாகூப் மேமன் தூக்கு செய்திய தெரிஞ்சுக்க முடியல. மகேசுக்கு போன் போட்டேன். அவரு ராஜஸ்தான் டூர்ல இருக்காராம். ட்ரெய்ன்ல போறதுனால சிக்னல் தெளிவா இல்ல. அதான் ஒங்களுக்கு போட்டேன்’.
யாகூப் மேமன காலய்லேயே தூக்குல போட்டுட்டாங்களே...
அப்படியா .., என சில நொடிகள் மௌனமாக இருந்தவர் .. கலாம் இறந்த பரபரப்புக்குள்ளாற மேமன தூக்குல போட்ட நியூச பொதச்சாச்சில்லயா. என சிரித்தார்.
இது தொடர்பாக கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவர் போனை வைக்கும் முன்னர் .. சார் நீங்க அரவிந்து ஹாஸ்பிட்டலுக்கு நாளக்கி போறப்போ. தனியா மட்டும் போகாதீங்க என கூறி போனை வைத்து விட்டேன்.
இரண்டு நாட்கள் வேறு வேறு வேலைகளில் கழிந்து விட்டது. மூன்றாவது நாள் மதியம் வாக்கில் சிவராமன் நினைவு வரவே மனிதர் கண்ணுல பிரச்னன்னு சொன்னாரே என்னன்னு கேப்போம் என போனை எடுத்தேன்.
எதிர் முனையில் ஒரு இளைஞனின் சோர்வு தட்டிய குரல் கேட்டது. சிவராமன் சார் இருக்காரா எனக்கேட்டேன்.
இருக்காங்க . நான் அவர் பையந்தான் சார் பேசறேன் என்றது அக்குரல்.
மறு நாள் அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு போனதாகவும் .கண்களில் ஒரு பிரச்சினையும் இல்லை எனவும் ஒரு நரம்பியல் டாக்டரிடம் காட்டச்சொன்னதாகவும் அப்படிக்காட்டியதன் பேரில் மூளையில் புற்று நோய் கட்டி இருப்பதாகவும் அவர் இனிமேல் ஒரு வாரம் வரை உயிரோடு இருப்பது கடினம் எனவும் என அந்த நரம்பியல் நிபுணர் கூறி விட்டாராம்.
முதலில் அந்த கட்டி அவரின் பார்வையை பறித்தது. பின்னர் அவரின் நினைவுகள் பெரும்பாலும் அழிந்து விட்டன. யாருடைய பெயரும் அவரின் நினைவில் இல்லை. கையும் காலும் செயலிழந்து விட்டதாகவும் சென்னை குன்றத்தூரில் தேர்ந்த ஒரு அக்யூ பங்சர் மருத்துவர் இருப்பதாகவும் அவரிடம் காட்டினால் குணம் கிடைக்கும் எனவும் உடனே புறப்பட்டு வரும்படி மகேஷ் மாமா சொன்னதாகவும் சிவராமனின் மகன் சொன்னான்.
நடுவீட்டில் நின்று கொண்டிருந்த எனக்கு தலை கிறு கிறுவென சுத்தியது. அப்படியே நடு திண்ணையில் படுத்து விட்டேன். மாடியிலிருந்து ஒரு அணில் இன்னொரு அணிலை துரத்தியபடி “ ற்றிக் ற்றிக் “ என குரலெழுப்பியவாறே என் பாதங்களின் மேல் விழுந்தடித்துக் கொண்டு ஓடின,
வீட்டின் பின்புற ஓடையில் பக்கத்து வீட்டு நாழிரா உடன் கதை அளந்து கொண்டிருந்த என் மனைவி மணியை பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்தவள் என் நிலையைக்கண்டவுடன் “ ... என்னங்க.. என்ன செய்யுது... “ என பதறியவாறு ஓடி வந்தாள்.
நான் ஒன்றுமில்லை என கை சைகையால் தெரிவித்தவுடன் சற்றே நிம்மதி அடைந்தவளாக .. உடுத்து வெளியே கிளம்பிய மனிதன் இப்படி நடு திண்ணையில் படுக்கிறாரே என்னடான்னு மனசு பதறிட்டு... என பட படத்தவளிடம் சிவராமன் விஷயத்தை சுருக்கமாக சொன்னேன்.
என்னங்க செய்ய அது ஒரு மனுசண்ட நசீபு ( தலை விதி ) என்றவாறே பக்கத்து வீட்டு நாழிரா அருகில் சென்றவள் விட்ட இடத்திலிருந்து பேச்சை தொடங்கி விட்டாள்.
````````````````````````````````````````````````````
ஒரு விருந்தாளி வருவது போல மரணம் முன் தேதியை சொல்லி வருமா ?
இன்ன தேதியில் வந்து உங்கள் அன்புக்குரியவரை என்றென்றைக்குமாக நான் என்னோடு கூட்டிக் கொண்டு போவேன் என்ற அதன் மொழியில் தொனிக்கும் உறுதியும் அச்சுறுத்தலும் பயங்கரமும் வீட்டின் சக உறுப்பினர்களின் நாக்கில் மரணத்தின் சுவையை ஒரு துளி சொட்ட விட்டு இந்தா சுவைத்துக் கொள் என்பது போல இருக்கின்றதே....
முந்தாநாள் வரை நம்மோடு பேசிக்கொண்டிருந்தவரை இனி ஒரு போதும் பார்க்க முடியாமல் ஆகிவிடும் என்கிற நிஜம் என்னை அப்படியே நடு திண்ணையில் உறைய வைத்துவிட்டது.
என்னையறியாமல் என் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சிமிண்ட் தரையில் விழுந்தது. என் கை விரல்கள் அனிச்சையாக அதில் அலைந்து கொண்டிருந்தது.. சுவர் கடிகாரத்திலிருந்து எழும்பிய வினாடி முள்ளின் க்றக் க்றக் என்ற ஓசையானது எலும்பைக்கடிக்கும் நாயைப் போல மணித்துளிகளை நொறுங்க கடித்து தின்றுக் கொண்டிருந்தது.
`````````````````````````````````````````````````````````````````````
சென்னைக்கு சென்ற பின் ஒரு வாரம் கழித்து மகேஷைப்பார்க்க கோடம்பாக்கம் போனேன். . மகேஷ் எனக்கு சில வருடங்களாக தெரியும் . என் சம வயதுக்கார். மகேஷ் தேர்ந்த ஒரு ஒளிப்படக்கலைஞரும் ஆவணப்பட இயக்குனரும் கூட. மகேஷ் வழியாகத்தான் எனக்கு சிவராமன் பழக்கம்.
வீட்டில் மகேஷ் மட்டும்தான் இருந்தார். அவரைச் சுற்றிலும் ஸ்பைரல் பைண்டிங் நூல்களும் குறுவட்டுக்களும் சிதறி கிடந்தன. நீண்ட நோட்டின் தாள்கள் மின்விசிறியின் காற்று இறைப்பில் படபடத்துக் கொண்டிருந்தன. நான் வரும் முன் எழுதிக்கொண்டிருந்திருப்பார் போல.
வேலய்ல குறுக்க வந்துட்டன் போல என்றேன்
அதொன்னும் பிரச்னயில்ல.. பிடிச்சா எழுதுவேன் . இல்லன்னா வண்டிய எடுத்துக்கிட்டு சூழலியல் அகழ்வாராய்ச்சினு ஊர் ஊரா சுத்துவேன் . இல்லாட்டி ஷோஃபால படுத்துக்கிட்டு கிளாசிக்கல் ஃபில்ம் பாப்பேன். யாரு நம்மள கேக்குறது. எனக்கு நாந்தான் ராஜா மேற்கு தொடர்ச்சி மலய பத்தின டாகுமெண்டரிக்கான ஸ்கிரிப்ட் எழுதிக்கிட்டிருந்தேன். நேஷனல் ஃபிலிம் டிவிஷனுக்கு அனுப்பனும். அது கெடக்கட்டும் அப்புறம் எழுதிக்கிறலாம்.
சிவராமன் சாரோட செய்திய கேட்டீங்களா ? என கேட்டுக் கொண்டே சமையல் கட்டுக்குள் சென்று இரண்டு பீங்கான் கோப்பைகளில் பிளைன் டீ ஊற்றிக் கொண்டு வந்தவர் மீண்டும் தொடர்ந்தார்
“ கேட்டீங்களா கபீர் ! சிவராமன் ரொம்ப மன உறுதியானவர். மொத தடவ அவருக்கு கொரல் வளயில கேன்ஸர் வந்தப்போ கொஞ்சங்கூட கலங்கல. அவரோட ஃபேமிலியும் அவர பாக்க வந்தவங்களுந்தான் அழுதழுது மாஞ்சி போனாங்க . அவர் என்னவோ மொகத்துல புன்னக மாறாமத்தான் இருந்தாரு.
அவரு ட்ரான்ஸ்ஃபர் ஆன அத்தன ஊருங்களுக்கும் நான் போய் தங்கியிருக்கேன். யார்ட்டயும் சொல்ல முடியாத ரகசியங்களயும் மன வேதனகளயும் அவரு எங்கிட்ட சொல்லியிருக்காரு. அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியோ அந்த அளவுக்கு கொழந்த மனசுங்கூட.
ஒரு தடவ அதாவது இது நடந்து இருவது வருஷமிருக்கும். அவர் பேங்க் மேனேஜரா இருந்த பிராஞ்ச்சுல உள்ள கேஷியர் இருபத்தையாயிரம் ரூபாயை எப்படியோ தவற விட்டுட்டார். கேஷியர் என்னவோ நல்ல மனுஷன். எப்படியோ பணம் தவறிப்போச்சு.. அன்னிய நெலவரத்துக்கு அவர் வாங்குற சம்பளத்த விட அது பல மடங்கு தொகை.
இத்தனய்க்கும் அவருக்கு கலியாணம் கட்டிக்கொடுக்குற வயசுல இரண்டு பெரிய பொண்ணுங்க. ஒரே ஒரு ஆம்பள பையன்தான். ஆனா விதிட வெளயாட்டப்பாருங்க அந்த பையனுக்கு மூள வளர்ச்சி இல்ல. அந்த கேஷியர் இது எல்லாத்தயும் ஒன்னா சேத்து நெனச்சுருப்பாரு போல. பணம் கொறஞ்சது தெரிஞசு போன ஒரு மணி நேரத்துல அவர் ஹார்ட் அட்டாக் வந்து அங்கேயே சரிஞ்சுட்டாரு.
ஒடனே சிவராமன் என்ன பண்ணாரு தெரியுமா ? இறந்து போன அந்த கேஷியர் தவற விட்ட தொகய தன்னோட பொண்டாட்டியோட நகய வித்து அன்னிக்கு சாயங்காலம் கணக்க முடிக்கிறதுக்குள்ள கட்டிட்டாரு. அடுத்த நாளே அந்த கேஷியரோட மொத்த குடும்பமும் சிவராமன் கால்ல விழுந்து கதறி நன்றி சொன்ன காட்சி இருக்கே. அத நான் சாவுற வறய்க்கும் மறக்க முடியாது கபீர். ஒருத்தன ஒருத்தன் கவுத்துற ஒலகத்துல இப்டி ஒரு மகாத்மா என்றவாறே மகேஷ் கண்களைத் துடைத்துக் கொண்டார். அப்போது அவர் கையில் இருந்த கோப்பை சரிந்து தேநீரானது அவரின் லுங்கியிலும் தரையிலுமாக கொட்டியது.
விடைபெறுமுன் சிவராமன் தங்கிருந்த வீட்டின் முகவரியை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டேன். சூளை மேட்டில் சிவராமன் தங்கியிருந்த வீடு இருந்தது.
சூளை மேடு சென்ற போது மாலை வெயில் அவ்வளவாக இல்லாவிட்டாலும் வீசிய காற்று இதமாக இல்லை.
முதுகுகளில் ஆமை ஓட்டைப்போல தோள் பைகளை சுமந்து கொண்டும் காதுகளில் இயர் ஃபோனை மாட்டிக்கொண்டும் எலக்ட்ரிக் ரயிலையும் பேருந்தையும் பிடிக்க தெருக்களில் தன்னுணர்வின்றி விசை பொம்மைகள் போல விரையும் கொத்து கொத்தான மக்கள் திரள். அவர்கள் யார் மீதும் மோதாமல் செல்வதே பெரும் சாதனை போல இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் பெரும் மக்கள் திரளை சென்னை நகரம் டினோசர் போல விழுங்கிக் கொண்டும் து[ப்பிக்கொண்டும் இருக்கின்றது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து கால் மணி நேர நடையில்தான் சிவராமன் தங்கியிருக்கும் வீடு இருந்தது. வாசலில் நான்கைந்து இணை ஷூக்களும் செருப்புகளும் கிடந்தன. கறுப்பாக நடுத்தர உயரத்துடன் ஒரு இளைஞன் வாசலுக்கு வந்து “ அய்யா வாங்க “ என்றான். சிவராமனின் ஒடுங்கி நீண்ட முகச்சாயலை அப்படியே நகல் எடுத்த மாதிரியான முகம்.
பிளாஸ்டிக் சேரைக் காட்டி இருங்க சார் என்றவன் .. அப்பா உள் ரூமுல இருக்கார். கூப்பிட்டு வாரேன் என்றான்.
நான் உட்கார்ந்த சேரின் வலது இடதாக நான்கு நான்கு சேர்கள் இருந்தன. அதில் நடுத்தர வயதைச் சார்ந்த இரண்டு பேரும் முப்பதுக்கும் நாற்பதுக்கும் உட்பட்ட வயது மதிக்க தக்க சிவப்பு டீ ஷர்ட் அணிந்த ஒருவரும் இருந்தனர்.
சார் லக்ஷ்மி விலாஸ் பேங்குலயா ஒர்க் பண்றீங்க எனக் கேட்டார் எனது இடது புறமிருந்தவர்.. இல்ல சார் நான் பிஸினஸ் பண்ணுறேன். சிவராமன் சார எப்படி பழக்கம்னா பரணி ஃபில்ம் சொஸைட்டில நடந்த ஒரு ஸ்கிரீனிங்கிற்கு என்ன அவர் கூப்பிட்டிருந்தார்....
இதற்கிடையே சிவராமனை கைத்தாங்கலாக அவரது மகனும் மகளும் கூப்பிட்டு வந்தனர். அரைக்கை பனியனும் முழங்கால் வரை நீண்ட தொள தொளவென இருந்த அரை டிரவுசரும் அணிந்திருந்தார்.
குரல் வந்த திசை நோக்கி கும்பிட்டு “ சார் வாங்க ! என்றார். முகத்தில் அதே மாறா புன்சிரிப்பு. கண்களுக்குள் கருவிழிகள் இலக்கில்லாமல் அலைபாய்ந்தன. மற்ற நண்பர்கள் இருந்த பக்கமும் திரும்பி வணக்கம் தெரிவித்தார்.
மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அக்யூ பங்சர் சிகிச்சையில் அவரது நினைவு திரும்பியிருப்பதோடு கைகால்களும் இயங்க தொடங்கி விட்டன. ஆனால் கண் பார்வை மட்டும் திரும்பவில்லை.
சிவராமன் வந்து அமர்ந்ததும் அங்கு கலகலப்பு கட்டியது.
இதற்கிடையில் சிவராமனின் மகள் எவர்சில்வர் டம்ப்ளர்களில் ஆவி பறக்க தேநீரை எடுத்து வந்தாள்.
எடுத்துக்குங்க மாமா !
வந்திருப்பவர்களின் பரஸ்பர அறிமுகம் நடந்தது.
ஒருவர் கல்வித்துறை சார்ந்த களப்பணியாளர். பெயர் அறிவுழகன். சென்னை வாசி. என சொன்னார். இன்னொருவர் பெங்களூருவில் பாதுகாப்புத்துறை தளவாட உற்பத்தி துறையில் இருப்பதாகவும் சொன்னார். சிவப்பு டீ ஷர்ட் அணிந்தவர் வேறு எங்கோ பார்த்தபடி அமைதியாக இருந்தார்.
அவரை சிவராமனே அறிமுகப்படுத்தினார். ... சார் வந்து பார்ட்டில ஃபுல் டைமரா இருக்கார்.
பார்ட்டினா அவருக்கு புரியாதுல்ல என்றார் பெங்களூருகாரர்.
சாரி சார். எம் எல்லுல வினோத் மிஸ்ரா பார்ட்டில இருக்கார். இப்போதுதான் சிவப்பு டீ ஷர்ட்காரர் என்னைப்பார்த்து புன்னகைத்தார்.
நீங்கள்ளாம் திருனவேலியா ... ?
பெங்களூருக்காரர தவிர மத்தவங்களுக்கு திருனல்வேலிதான் பூர்வீகம் பெங்களூருக்காரருக்கு தஞ்சாவூர் பக்கம். ஆனா பெங்களூரு போறதுக்கு முன்னாடி திருனவேலி வண்ணாரப்பேட்டையில நா வேல பாத்த பேங்குல அவரும் ஒர்க் பண்ணாரு. அப்பயிலேந்தே நாங்க ரெண்டு பேரும் நல்ல நெருக்கமாயிட்டோம்.
பெங்களூர்க்காரரை மெதுவாக உற்சாகம் தொற்றிக்கொள்ள தொடங்கியது. வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தவர் வாசலுக்கு வெளியே போய் துப்பி விட்டு வந்தார்.
எது எங்கள நெருக்கமாக்கிச்சுன்னு கேளுங்களேன்...
ம் சொல்லுங்க
நாங்க பார்ட்டி சார்பாக கலை நிகழ்ச்சி ஒன்ன திருனவேலி டவுனுல நடத்துனோம். அன்னய்க்கு அங்கு ஆளுங் கட்சில தீவிரமா இருந்த அங்குள்ள வி.ஐ.பி. ஒருத்தரு நிகழ்ச்சிய நிறுத்தச் சொன்னாரு
இல்ல சார் . இது தனியாளு நடத்துறதில்லீங்க .எங்க கட்சியிலிருந்து முடிவு பண்ணுன விஷயம்
என்னலே .பெரிய ......... கச்சி மண்ணாங்கட்டி கச்சி நிறுத்துல நெகழ்ச்சியனு அவர் மெரட்டவும் ரெண்டு பக்கமும் வார்த்த தடிச்சு போச்சு. பேச்சு பேசினாப்புல இருக்க அந்த விஐபி தன்னோட கார் டிக்கிய தொறந்து அதுலேருந்து மளார்னு ஒரு வீச்சரிவாள எடுத்தாரு.. சுத்தி நின்னு வேடிக்க பாத்தவங்கல்லாம் கையில உள்ளது கால்ல உள்ளதயல்லாம் வுட்டுப்போட்டு வெருண்டு ஓடிட்டாங்க
இப்ப `ரோட்டுல சிவராமனும் அந்த விஐபி மட்டும்தான்
தொடய்க்கி மேல வேஷ்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டு உருளைக்கட்டு மாதிரி இருந்த ரெண்டு காலயும் அகட்டி அகட்டி நடந்து வந்த அந்தாளு தன் கைய்ல அருவாள நிமித்தி வச்சிருந்தான். சிவராமன் சாருக்கு அந்தாளுக்கும் அர அடிதான் இடவெளி.
சிவராமன் சார் தன்னோட சட்ட பட்டன மள மளனு கழற்றுனாரு .
இந்த நிகழ்ச்சி இங்கதான்யா நடக்கும் ஒன்னால முடிஞ்சா என்ன வெட்டுயா பாக்கலாம்னு சொல்லி எலும்பு எலும்பா தெரிஞ்ச அவரோட மாரக்காட்டிக்கிட்டு நின்னாரு
ஒரே செகண்டுதான் அந்தாளு மொகம் வெளுத்து பெறகு செவந்திடுச்சி அவரு கைய்ல பிடிச்சிக்கிட்டிருந்த அருவாளு அப்படியே ஐஸ்ல வச்ச மாதிரி நின்னுக்கிச்சி.
பச்ச பச்சயா சிவராமன் சார ஏசுன அந்தாளு தன்னோட அடியாட்கள பாத்து அந்த மேடய பிச்சு வீசுங்கடானு சொல்லிக்கிட்டே கீழே குனிஞ்சு ஒரு கல்ல எடுத்து மேடய பாத்து வீசுற சாக்குல தன்னோட காரப்பாத்து போய்ட்டான்
அப்புறம் என்னாச்சு
அடியாளுங்க அங்க போட்டிருந்த நாலஞ்சு சேர ஒடச்சி நிகழ்ச்சி அறிவிப்பு தட்டிய கிழிச்சிப்போட்டு போய்ட்டாங்க. ஆனா நிகழ்ச்சி அரை மணி நேரம் லேட்டா நடந்தாலும் அங்கதான் நடந்திச்சி.
பெங்களூர்க்காரரு அப்படியே பேச்சை நிறுத்தி விட்டு மீட்டப்பட்ட பழைய நினைவுகளுக்குள் ஆழ்ந்து போனார்.
மெல்ல சிரித்துக்கொண்டே அது நடந்து முப்பது வருஷமாச்சி என சொன்ன சிவராமன் பட்டென தன் தலையை குனிந்தவாறே இரண்டு கைகளாலும் அதனை மெல்ல கொஞ்ச நேரம் நீவினார் . பின்னர் அவர் ஏதோ ஒன்றின் உரையாடலை கவனமாக கேட்பது போல இருந்தது.
என்ன ஆச்சு சார் என அறிவழகன் கேட்டார்.
தலையில் உள்ள புற்று நோய் கட்டி அவருக்குள் தாங்கவியலாத வேதனையை கிளப்பிக் கொண்டே இருப்பதினால் அவர் சரியாக தூங்கி பத்து நாட்களாகுவதாகவும் வேதனை உண்டாகும்போதெல்லாம் அவர் தன் தலையை தடவுவதாகவும் அவரின் மனைவி கூறினார்.
அனைவரின் முகத்திலும் கையாலாகாத வேதனை படர்ந்தது.
சில நொடிகளுக்குள் அதிலிருந்து மீண்ட சிவராமன் எந்த வித முகச்சலனத்தையும் காட்டாமல் விட்ட இடத்திலிருந்து பேசுவது போல தொடர்ந்து பேசத் தொடங்கினார்.
இந்த ஒலகத்துக்கு வந்ததுலாம் திரும்ப போய்த்தான் ஆகணும் இல்லியா . இது வரய்க்கும் கடவுள் நம்பிக்க , சடங்கு இல்லாம வாழ்ந்துட்டேன். இனிமயும் அப்படித்தான். பெறகு என்னோட கண்ணை தானம் பண்ணனும். கடசியா சடங்கு இல்லாமதான் பண்ணனும். கட்சிக் கொடிய போட்டு விட்டுருங்க. இதுலாம் நடக்கறதுக்கு நீங்கள்லாம்தான் ஹெல்ப் பண்ணனும் என ஒற்றை வாக்கியம் போல லேசாக சொல்லி முடித்தார்.
அவர் சொற்களின் பாரம் அங்குள்ள சூழலுக்கு மேல் வந்து அமர்ந்து கொண்டது
அந்த கனத்தை உடைக்க விரும்பியவனாய் நான் சொன்னேன், ... சிவராமன் சார் , பரணி ஃபிலிம் சொஸைட்டி வேலய இனிமதான் மும்முரமா பாக்கணும்னு நீங்கதான சொன்னீங்க .அக்யூ பங்சர்ல மீண்டு வந்திடுவீங்க. உங்களுக்கு இப்ப எவ்வளவோ இம்ப்ரூவ் ஆயிருக்கே..ஷாஹித் படம் மாதிரி இனி எவ்ளவோ போட வேண்டி இருக்கே .ஒங்க வாழ்க்கயிட தொடர்ச்சிதான் ஒங்க மக. அதுலாம் வளந்து வாறப்போ பாக்குறதுக்கு நீங்க இருக்கணுமில்லே
எனது இடது பக்கம் இருந்த அறிவழகன் , ஆமா சார் , இப்ப சென்றல்ல இருக்கற கவன்மெண்ட் வளர்ச்சினு வளர்ச்சினு சொல்லியே ஆட்சிய பிடிச்சாங்க... இந்த பித்தலாட்டத்தயெல்லாம் ஆவணப்படுத்தியிருக்காங்க. அதயெல்லாம் கொண்டு வரணுமே. அதுக்குள்ள நீங்க என்னமோ அடுத்த ஊருக்கு போற மாதிரி அவசரப்படறீங்களே ...
அறிவழகன் சார் நீங்க சரி சொன்னீங்க. இவனுங்க பேசறது அம்புட்டும் பொய்தான் . பொய்தான் அவங்களுக்கு கைமொதல் அது இல்லன்னா அவங்க கத தீக்கங்கு மேல விழுந்த மெழுகு உருண்ட மாதிரிதான் என மெல்ல அதிர்ந்த சிரிப்புடன் சொன்ன சிவராமன் இவங்கட பொய்கள ஒடக்கிற படம்தான் ஷாஹித். என சொன்னவர் அதைப்பற்றி கொஞ்சம் விரிவாக பேசத் தொடங்கினார்.
`அந்த ஷாஹித் ஆஜ்மி தனக்கான வாழ்க்கய தொடங்க ட்ரை பண்றதுக்குள்ளயே அடுத்தவங்களுக்கா வேண்டி அவருட வாழ்க்கயே முடிஞ்சி போச்சே... மாமனுசன்தான் அவன் என சொல்லிக்கொண்டிருக்கும்போதே குலுங்கி அழத் தொடங்கினார் சிவராமன்.
````````````````````````````````````````````````````````````````````````````
இரண்டு நாட்களாகவே சிவராமனின் நினைவாகவே இருந்தது.
மூன்றாம் நாள் அவருடைய மகளிடமிருந்து போன் வந்தது.
போன் பேசி முடித்தவுடன் போக்கறியாமல் அலைந்த என் கண்கள் எதிர் வீட்டு மாடியின் மேல் போய் நின்றது.
அந்த மாடியின் மூன்று மூலைகளில் சிவப்பு நிற முக்கோண கொடி சரிகை பார்டருடன் கட்டப்பட்டிருந்தது. வீசிக்கொண்டிருந்த காற்றில் கொடிகள் மட்டும் அப்படியே உறைந்திருந்தன.
[முற்றும்]
---------------------------------------------------------
[பாகம் 1 காண இங்கு சொடுக்கவும்] |