இணையத்தின் (INTERNET) வருகைக்கு பிறகு, காலகாலமாக செய்திகளை மக்கள் பெற்று வந்த முறைகளில் (செய்திதாள்கள், தொலைக்காட்சி, ரேடியோ)
பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முகநூல் (Facebook), ட்விட்டர் (Twitter) போன்ற சேவைகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் செய்திகளை பெறும் மக்களின்
எண்ணிக்கை பெரும் அளவில் அதிகரித்துள்ளது.
செய்திகளில் பொதுவாக ஆர்வம் காண்பிக்காத பலருக்கும் அதிநவீன அலைப்பேசிகள் (Smartphones), ஐபாட் (IPad) போன்ற சாதனங்கள் வழியாக செய்திகள்
சென்றடைந்தாலும், அச்சேவைகள், சாதனங்கள் மூலமே - ஊர்ஜிதம் இல்லாத செய்திகளும் எளிதாக அவ்வப்போது பரவுகின்றன.
உதாரணத்திற்கு தற்போது WHATSAPP என்ற சேவையின் மூலம் பரவும் கீழ்க்காணும் செய்தியினை காணலாம்:
Tonight 12:30 am to 3.30 am cosmo rays entering earth from mars. so switch off your mobile at night. Don't keep your cell
with you and put it away while you are sleeping because they are too much dangerous rays! nasa informs BBC NEWS. Please
spread this news!!
இச்செய்தியின் சாராம்சம் -
இன்று நள்ளிரவு 12:30 முதல் 3:30 வரை, அண்டக்கதிர்கள் (COSMIC RAYS), செவ்வாய்கிரகத்தில் (MARS) இருந்து பூமிக்குள் வரும். அதனால்
இரவில் அலைப்பேசிகளை அனைத்து விடுங்கள். நீங்கள் தூங்கும்போது அலைப்பேசிகளை உங்கள் அருகில் வைக்காமல், தூரத்தில் வைத்து
விடுங்கள். ஏனென்றால் அளவுக்கதிகமாக கதிர்கள் உள்ளன. NASA தெரிவிக்கிறது. பி.பி.சி. செய்தி. இந்த செய்தியை பரப்பவும்.
இது போன்ற செய்தி - ஒரு தகவலின் படி 2008 ஆம் ஆண்டில் இருந்து - அவ்வப்போது தொடர்ந்து SMS மூலமும், ஈமெயில் மூலமும், இன்னும்
பல வழிகளிலும் பரப்பப்பட்டு வந்துள்ளது.
இச்செய்தியில் உண்மை இல்லை. இச்செய்தியில் உள்ள தவறான தகவல்களை ஒவ்வொன்றாக காணலாம்:
(1) National Aeronautics and Space Administration (NASA) நிறுவனம் இத்தகவலை வழங்கவில்லை
(2) British Broadcasting Corporation (BBC) செய்தி நிறுவனம் இச்செய்தியை வெளியிடவில்லை
(3) செவ்வாய் (Mars) ஒரு கிரகம் (Planet). அது அண்டக்கதிர்களை (Cosmic Rays) உருவாக்குவதுமில்லை, வெளிப்படுத்துவதும்
இல்லை
(4) அண்டக்கதிர்கள் - (வெடிக்கும் இறந்த நட்சத்திரங்கள் மூலம் போல்) சூரிய குடும்பத்திற்கு (Solar System) வெளியில் இருந்து உருவாகி, அனைத்து திசைகளிலும் பிரயாணம் செய்யும் துகள்கள்
(particles) ஆகும்
(5) இந்த 'கதிர்கள்' - பிரபஞ்சம் (Universe) தோன்றிய காலத்தில் இருந்து, ஒவ்வொரு தினமும், ஒவ்வொரு வினாடியும், வீசிக்கொண்டு தான்
இருக்கின்றன. செய்தியில் குறிப்பிட்டுள்ளது போல் இன்று நள்ளிரவு 12:30 முதல் 3:30 வரை மட்டும் ஏற்படும் நிகழ்வு அல்ல
அண்டக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து பெரும் அளவில், அனுதினமும் - புவி வளிமண்டலமும் (Earth's Atmosphere), காந்தக சக்தியும்
(Magnetic Field), பூமியை காக்கின்றன. அந்த பாதுகாப்புகளை தாண்டி பூமியின் தரைமட்டத்தை அடையும் அண்டகதிர்களால் உள்ள ஆபத்து, என்றென்றும் உள்ளது.
எனவே 'இன்றிரவு' என பல ஆண்டுகளாக பரப்பப்பட்டு வரும் அண்டக்கதிர்கள் குறித்த இச்செய்தியில் உண்மை ஒரு துகள் அளவும் இல்லை! |