எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியால் அறிவிக்கப்பட்ட ம.புஷ்பராயன் - தனது வேட்பு
மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமாரிடம் இன்று சமர்பித்தார்.
கூடங்குளம் அணு மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் People's Movement against Nuclear Energy (PMANE) அமைப்பின் தலைவரான உதயகுமாருக்கு அடுத்த நிலையில் பார்க்கப்பட்டு
வரும் புஷ்பராயன் மீது, தேச துரோகம் உட்பட பல வழக்குகளை தமிழக அரசு போட்டிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நபரான இவரும், உதயகுமாரும், இவ்வழக்குகள் காரணங்காட்டி காவல்துறை கைது
செய்வதிலிருந்து தப்பிப்பதற்காகவே இடிந்தக்கரையை விட்டு வெகு தொலைவுக்குச் செல்வதை தவிர்த்து வந்தனர் என்றும் ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.
மற்றொரு நாள், மற்றொரு தருணமாக இருந்திருந்தால், காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். இவர் மற்றும்
நூற்றுக்கணக்கானவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க உச்ச நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசை,
அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் வழக்குகள் வாபஸ் வாங்கப்படவில்லை. தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் இடிந்தக்கரையை விட்டு
வெளியில் வந்ததே - உச்ச நீதிமன்றம், அவரைக் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்ட பிறகுதான் என இன்றைய தி இந்து நாளிதழ் தெரிவிக்கிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவான போராளி என மாற்று அரசியல் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக அறிமுகம் ஆனவர் புஷ்பராயன். DCW
தொழிற்சாலைக்கு எதிரான விழிப்புணர்வு முயற்சிகள் - சில ஆண்டுகளுக்கு முன்னர் காயல்பட்டினத்தில் துவக்கப்பட்டபோது, அது தொடர்பாக
காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றிலும் அவர் கலந்துகொண்டார்.
சிறிது காலம் சென்ற பின்னர், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை தீவிரம் அடைந்தது. அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில்
ஈடுபடத் துவங்கிய அவரின் முழு நேரமும் அதற்காகவே கழிந்தது.
2012இல் தடைபட்டுப் போன, அவரின் சமூக ஊடக பக்கங்கள் - Facebook பக்கம், Twitter பக்கம், Blogspot
பக்கங்கள்...
https://www.facebook.com/pushparayan.victoria1
https://twitter.com/pushparayan
http://pushparayan.blogspot.in/
46 வயதான புஷ்பராயனின் மனைவி ஹேமலதா. 10 வயதில் க்ரூஸ் ரியோவரன் என்ற மகன். இவரின் சொந்த ஊர் - வேம்பார். ஆங்கில
இலக்கியம் பட்டதாரி. தத்துவம் பட்டதாரி. இலக்கியம் முதுநிலை பட்டதாரி.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடியவர், தாது மணல் அள்ளுவதற்கு எதிராகப் போராடியவர். சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிராகப்
போராடியவர். சுற்றுச்சூழலுக்காகவும், மீனவர் சமுதாய நலனுக்காகவும், கடல் வள நலனுக்காகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி
வருபவர்.
இது - அவரை தேர்தலில் நிறுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சி இணையதளம் வழங்கும் தகவல்.
http://candidates.aamaadmiparty.org/m.-pushparayan.html
அவர் குறித்து அவ்விணையதளம் வழங்கும் மற்றொரு தகவல் இவரின் தாயார் சேவியர் சந்திரவதனம். தந்தை - மறைந்த - மஹிபன் விக்டோரியா.
ஆம் - மறைந்த மஹிபன் விக்டோரியா.
டிசம்பர் 12, 2013. இது ஒரு போராளியின் வாழ்வில் ஒரு நாள். கேரளாவில் இருந்து பராமரிக்கப்படும் COUNTERCURRENTS.ORG இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின்
தமிழாக்கம் கீழே:
http://www.countercurrents.org/anitha151213.htm
காக்கை வானில் பறந்து சென்றால் திருநெல்வேலி
மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை கிராமம், தூத்துக்குடியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் டிசம்பர் 12 (2013) இரவு மற்றும்
அதைத் தொடர்ந்த நாட்களில் – அந்தத் தொலைவு கடக்கமுடியாத தொலைவாகவே காட்சியளித்தது.
நோயால் வாடும் எந்த 85 வயது தந்தையின் மகனையும் போல - தனது தந்தை உயிரிழக்கும் போது அவர் அருகில் இருக்க
விரும்பினார் புஷ்பராயன் விக்டோரியா. அந்த 100 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க முடியாததால், இறுதிச் சடங்கிற்காவது அங்கு செல்ல விரும்பினார் அவர்.
ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - அது இயலாத காரியம் என விரைவில் உணர்ந்தார்கள். தமிழக அரசு - புஷ்பராயன், தனது
தந்தையை இறுதியாக பார்க்கச் செல்ல முடியாத வகையில், அனைத்து தடங்கல்களையும் ஏற்படுத்தி ஆயத்தமாக இருந்தது.
ஜெயிலில் உள்ள குற்றவாளிகள் - தங்கள் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு நாட்டில், புஷ்பராயனின்
அனுபவத்தை - மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.
தனது இறுதி மூச்சை விடும்போது, புஷ்பராயனின் தந்தை மஹிபன் விக்டோரியா - தான் இரண்டு ஆண்டுகளாகக் காணாத தனது உறுதியான மகனை
எண்ணிப் பார்த்திருப்பார்.
850 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புஷ்பராயன்
மற்றும் PMANE அமைப்பிலுள்ள அவரது நெருங்கிய சகாக்களின் வாழ்க்கை - பல துயரங்களை உள்ளடக்கியது.
நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கையில் - தேசத் துரோகம் உட்பட பல வழக்குகள் போடப்பட்டுள்ள இடிந்தகரை மீனவ கிராம மக்களின்
வாழ்க்கை - மிரட்டல்களும், பொய்க் குற்றச்சாட்டுகளும் நிறைந்தவை.
சுந்தரி, சேவியர் அம்மாள் மற்றும் செல்வி ஆகியோர் திருச்சி சிறைச்சாலையில் கழித்த 6 மாதங்களை எவ்வாறு மறக்க முடியும்? அவர்களுக்கு
மதுரையில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு, தங்கள் வீடுகளுக்கு வர முடியாமல் தவித்ததை மறக்க முடியுமா?
தனது தந்தையை கிராமத்தில் பார்க்கச் சென்ற தேங்கா கணேசன் - ஜெயிலில் அடைக்கப்பட்டதைத்தான் மன்னிக்க முடியுமா?
இந்த நாட்டில் அணுமின் நிலையத்தின் அபத்தங்களைக் கேள்வி எழுப்பியதற்காக முகிலன் இழந்த நாட்களைத்தான் ஈடு செய்ய முடியுமா?
தனது வயதான பெற்றோரைப் பார்க்க முடியாமல் இருக்கும் உதயகுமாரின் தவிப்பைத்தான் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?
புஷ்பராயனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில், 200க்கும் மேற்பட்ட அதிரடி காவல் துறையினரை நிறுத்தியது மூலம், இடிந்தகரை கிராமத்தை திறந்த
ஜெயிலாக மாற்றிட - அரசு, தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தியதைக் காண முடிந்தது.
கைது செய்யப்படலாம் என்ற சூழலால், மேலும் பதட்டம் அதிகரிக்கும் என்ற காரணத்தால், தந்தையின் இறுதிச் சடங்கில் புஷ்பராயனால்
கலந்துகொள்ள முடியவில்லை. அவரது நண்பர்கள் - இறுதிச் சடங்கை ஒளிப்பதிவு செய்தனர். தனது தந்தையை இறுதியாக புஷ்பராயன் -
இடிந்தகரை சர்ச் பங்களாவில் உள்ள அவரது அறையில் கண்ணீர் மல்க கண்டார்.
மே 2013இல் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
மீதும், PMANE அமைப்பின் தலைவர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க அறிவுறுத்தியது.
டிசம்பர் 12 நிகழ்வு - தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிவிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில்
எல்லாம் சரியாக இருக்கிறது என பொய்யான ஆதாரங்களை வெளியிட்டு வரும் அரசாங்கம், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் - போராடிவரும் மக்களின்
உறுதியைக் கண்டு திகைத்துப் போய் நிற்கிறது.
ஆனால் - இதுவெல்லாம் ஒரு மகன், தனது தந்தையுடன் கழிக்க விரும்பி, கிடைக்காத அந்த சில நிமிடங்களுக்கு ஈடாகாது.
12ஆம் தேதி இரவு -
புஷ்பராயன் பயணிக்க முடியாத அந்த தொலைவு, அமைதியை விரும்பும் அனைத்து மக்களுக்கும் - மிகப்பெரிய தொலைவாகும். புஷ்பராயன், அவரின் குடும்பம் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான உலகெங்கும் இருக்கும் நண்பர்களின் தேற்றமுடியாத இந்த துயரம் -
இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.
|