இந்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்புரியும் அமைப்பு தேசிய குற்ற ஆவண கூடம் (NATIONAL CRIME RECORDS BUREAU). இது ஒவ்வொரு ஆண்டும் - நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் மைய அரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பெறும் தகவல்களின் அடிப்படையில் PRISON STATISTICS INDIA என்ற புத்தகத்தை வெளியிடுகிறது. 2012 ஆம் ஆண்டு வரையிலான தகவல்கள் - இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
1995 ஆம் ஆண்டு முதலான தகவல்கள் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் - சிறைச்சாலைகளின் எண்ணிக்கை, சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் சுயவிபரங்கள், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை காலம், குற்றங்கள் விபரம், சீர்திருத்தம் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் போன்ற பலவகையான தகவல்களை இந்த அறிக்கை வழங்குகிறது.
262 பக்கங்கள் கொண்ட இவ்வாண்டிற்கான அறிக்கையின்படி - 2012 ஆம் ஆண்டு முடிய - இந்தியாவில் 1,394 சிறைச்சாலைகள் உள்ளன. அவைகளின் கொள்ளளவு மொத்தம் 3,43,169 என்றும், ஆனால் 3,85,135 பேர் சிறையில் இருந்தனர் (112.2%) என்றும் அவ்வாய்வறிக்கை தெரிவிக்கிறது.
அதிக எண்ணிக்கையிலான சிறைவாசிகள் - உத்தர் பிரதேஷ் மாநிலத்திலும் (80,311; தேசிய அளவிலான சிறைவாசிகளில் மாநிலத்தின் பங்கு - 20.9%), அதனை தொடர்ந்து மத்திய பிரதேஷ் (33,959; 8.8%) மற்றும் பீகார் (28,550; 7.4%) மாநிலங்களிலும் இருந்தனர். தமிழக சிறைகளில் 13,195 பேர் (3.42%) இருந்தனர். கொள்ளளவை விட அதிகமான (252.6%) சிறைவாசிகள் (14,780) சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளனர்.
சிறைச்சாலைகளும் பல வகைகளில் உள்ளன.
2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறுபவர்கள் மத்திய சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளது.
ஒரு மாநிலத்தின் முக்கிய சிறைச்சாலைகளாக மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 9 மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன.
இது தவிர சார்நிலை சிறைச்சாலைகள் (sub-jail) [தமிழகத்தில் 95] , பெண்கள் சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 3], சிறு வயது குற்றவாளிகளுக்கான திருத்தப்பள்ளிகள் (Borstal School) [தமிழகத்தில் 12], நல்நடத்தை சிறைவாசிகளுக்கான திறந்தவெளி சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 2], சிறப்பு சிறைச்சாலைகள் [தமிழகத்தில் 5] எனவும் உள்ளன.
மொத்த சிறைவாசிகளில் 66% பேர், விசாரணை கைதிகள் (Under-Trials).
பெருவாரியான சிறைவாசிகள் (44%) 30 முதல் 50 வயதை நிரம்பியவர்களாக இருந்தாலும், ஏறத்தாழ அதே எண்ணிக்கையில் (42.2%) 18-30 வயதினரும் சிறையில் உள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 4,470 மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். தமிழக சிறைகளில் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் 39 பேரும், விசாரணை கைதிகளாக 19 பேரும் உள்ளனர்.
நாடு முழுவதும் 1,590 பெண்கள், குழந்தைகளுடன் சிறையில் உள்ளனர். அவர்களுடன் 1,813 குழந்தைகளும் சிறையில் உள்ளனர். தமிழக சிறைகளில் - குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 5 பெண்கள், 5 குழந்தைகளுடனும், விசாரணை கைதிகளாக 9 பெண்கள், 9 குழந்தைகளுடனும் உள்ளனர்.
பெருவாரியான சிறைவாசிகள் (சுமார் 75%) - படிப்பறிவு இல்லாதவர்களாகவோ அல்லது 10ம் வகுப்புக்கு குறைவாக படித்தவர்களாகவோ உள்ளனர்.
மேலும் சிறைவாசிகளின் எண்ணிக்கையில் சுமார் 30% ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்கள் என காணமுடிகிறது.
மதங்கள் வாரியாக சிறைவாசிகளை பார்த்தோம் என்றால் - சிறையில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை, அவர்களின் தேசிய மக்கள் தொகை விகிதாசாரத்தை விட மிகவும் அதிகமாக உள்ளது காணமுடிகிறது. தேசிய மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு சுமார் 13% மற்றும் தமிழக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு சுமார் 6% என்ற புள்ளிவிபரங்களின் பின்னணியில் இந்த தகவல்களை அணுகவேண்டும்.
சிறைச்சாலைகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 1,27,789.
இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 22,687 (குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 17.75%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 4,678. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 642 (குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 13.7%).
விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 2,54,857.
இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 53,638 (விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 21.04%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 7,994. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 663 (விசாரணை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 8.29%).
முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் - 2012 நிறைவில் - 1,922.
இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 543 (முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் முஸ்லிம்கள் 28.25%). இந்த கணக்கை தமிழகத்தில் மட்டும் பார்த்தால் - முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநிலத்தில் - 2012 நிறைவில் - 523. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 77 (முன்னெச்சரிக்கை கைதிகள் என அறிவிக்கப்பட்ட மொத்த சிறைவாசிகளில் - மாநில அளவில் - முஸ்லிம்கள் 14.72%).
முன்னெச்சரிக்கை காரணத்திற்காக கைது செய்யப்படுபவர்கள் எண்ணிக்கையில் (மொத்தம் 1,922) - தமிழகம் முதல் இடமும் (523 பேர்; தேசிய அளவில் 27.19%), குஜராத் இரண்டாம் இடமும் (519 பேர்; தேசிய அளவில் 27%) பெறுகின்றன. மேலும் குஜராத் மக்கள் தொகையில் சுமார் 9 சதவீதம் உள்ள முஸ்லிம்கள், முன்னெச்சரிக்கை காரணமாக கைது செய்யப்படுவோர் விகிதாசாரத்தில் சுமார் 29% அளவில் உள்ளனர்.
சுமார் 75,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சிறையில் வெவ்வேறு காரணங்களுக்காக - நாடு முழுவதும், அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது - சிறையில் உள்ளவர்கள் 5 இல் ஒருவர் இஸ்லாமியர் (சுமார் 20%).
இந்திய தண்டனை சட்டங்கள் பிரிவிலான (IPC) குற்றங்களில் - சுமார் 55% சிறைவாசிகள், கொலை குற்றங்களுக்காக சிறைத்தண்டனை பெற்றுள்ளனர். 25% சிறைவாசிகள், கொலை குற்றங்களுக்காக விசாரணை கைதிகளாக உள்ளனர். இப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை - 1,10,001. விசாரணை கைதிகள் - 2,02,702.
போதைப்பொருட்கள் மற்றும் இதர மாநில அளவிலான சட்டங்கள்படியான குற்றங்களில் - 35% க்கும் மேலானவர்கள், போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் பிரிவின் கீழ் குற்றவாளிகள் என்றும், 25% க்கும் மேலானவர்கள், போதைப்பொருட்கள் குறித்த சட்டங்கள் பிரிவின் கீழ் விசாரணை கைதிகள் என்றும் உள்ளனர். இப்பிரிவின் கீழ் குற்றவாளிகள் என கூறப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை - 17,693. விசாரணை கைதிகள் - 52,066.
நாடு முழுவதும் - சராசரியாக - சிறைவாசிகளில் சுமார் 10 சதவீதம் பேர், வெளிமாநிலங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். தமிழக சிறையில் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையில் உள்ளவர்களில் 87 பேர் வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள். 47 பேர் வெளிநாடுகளை சார்ந்தவர்கள். விசாரணை கைதிகளாக சிறையில் உள்ளவர்கள் 252 பேர் வெளிமாநிலங்களை சார்ந்தவர்கள். 64 பேர் வெளிநாட்டினை சார்ந்தவர்கள். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் - 11 பேர் வெளிமாநிலங்களை சார்ந்தவர்கள்.
2011 ம் ஆண்டு கணக்கினை ஒப்பிடும்போது, 2012 ம் ஆண்டில் குற்றவாளிகள் என தீர்ப்பு கூறப்பட்ட சிறைவாசிகளின் எண்ணிக்கை, - தேசிய அளவில் - சற்று (0.6%) குறைந்துள்ளது. தமிழக அளவில் 10% குறைந்துள்ளது. விசாரணை கைதிகள் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, 2011 ம் ஆண்டை விட, 2012 ம் ஆண்டில், தேசிய அளவில் 5.7% கூடுதல் காணமுடிகிறது. தமிழக அளவில் இது 4.1% உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகள் மற்றும் அவற்றிலுள்ள சிறைவாசிகள் குறித்த விபரம் ...
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 7:20 am / 09.12.2013] |