[பாகம் 1 காண இங்கு அழுத்தவும்]
=========================================
1884 இல் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட மத்ரஸதுல் கைரியா அல் இஸ்லாமியா (பாடசாலை) ஓரிரு ஆண்டுகளில் நிதிப் பற்றாக்குறை காரணமாக இடைக் காலத்தில் மூடப்பட்டாலும், மத்ரஸதுல் பாரி, ஆசிரிய மாணவர்களின் நலன்களுக்காக திருப்தியோடு செலவிட்டது. இதற்கு மாப்பிள்ளை ஆலிமின் ஆளுமையோ மக்களின் ஆன்மீக உணர்வோ, சமயக் கல்வியின் பாலான பற்றோ காரணமாக இருக்கலாம். இதனைத் தொடர்ந்து சமகாலத்தில் பல மத்ரஸாக்கள் வெவ்வேறு பிரதேசங்களில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சித்திலெப்பை அவர்களும் மாப்பிள்ளை ஆலிம் அவர்களும் சமூக எழுச்சியை இரு வேறுபட்ட நோக்கில் எதிர்பார்த்தாலும் அவர்களுக்கிடையில் பல ஒருமைப்பாடுகள் காணப்படுகின்றன. சித்திலெப்பை கண்டியில் வாழ்ந்த அப்துல் காதிர் மியான் பிள்ளையின் மகளை மணமுடித்தார். மியான் பிள்ளை காயல்பட்டிணத்தை சேர்நதவர். எனவே, மண உறவில் சித்தி லெப்பைக்கும் காயல்பட்டிணத்துக்கும் தொடர்பிருக்கிறது.
சித்திலெப்பையின் சன்மார்க்க ஆசிரியர்களுள் ஒருவரான கசாவத்தை ஆலிம் (1829-1893) கீழக்கரை தைக்கா ஸாஹிப் ஆலிமிடம் கற்றவர். மாப்பிள்ளை ஆலிம் அவர்களும் அதே முதர்ரிஸிடம் கற்றவர் ஆவார். ஒருபோது, "கசாவத்தை ஆலிம் எனது வலது கண்ணைப் போன்றவர். மாப்பிள்ளை ஆலிம் எனது இடது கண்ணைப் போன்றவர்" என்று தைக்கா ஸாஹிப் அவர்கள் குறிப்பிட்டதாக குறிப்பு உண்டு. (கசாவத்தை ஆலிம் புலவர் - ஏ.எம் நஜ்முதீன்)
அந்த வகையில் மாப்பிள்ளை ஆலிமையும் சித்தி லெப்பையையும் கருத்தளவில் பிணைத்த ஒருவராக கசாவத்தை ஆலிமைக் குறிப்பிடலாம். கண்டி நீதி மன்றங்களில் ஆங்கில நீதிபதிகளுக்கு முன்னால் வரும் நிகாஹ், தலாக் வக்பு, வராஸத் தொடர்பான வழக்குகளில் கசாவத்தை ஆலிமின் பத்வாக்களை அவர்கள் வினவிக் கொண்டிருந்தார்கள் என சித்தி லெப்பை குறிப்பிடுகிறார்.
சித்திலெப்பை சட்டத்தரணி என்ற வகையில் நீதி மன்றங்களோடு தொடர்புடையவராக இருந்திருக்கிறார் என்பதால் ஆசிரிய-மாணவத் தொடர்பு நீடித்திருப்பதைக் காண்கிறோம். "கசாவத்தை முஹம்மத் லெப்பே ஆலிம் அவர்கள் லாஹிருடைய இல்மில் மிகவும் தேர்ச்சியுடையவர். இலங்கையில் எந்தக் கோட்டுத் தலங்களிலும் மார்க்க வழக்குகள் உண்டானால் அவர்களின் பத்வாவையே ஏற்றுக் கொண்டார்கள்" என சித்திலெப்பை கூறுகிறார்.
இங்கே சித்திலெப்பையின் அஸ்ராருல் ஆலம் என்ற நூலும், ஞானதீபம் என்ற சஞ்சிகையும் மாப்பிள்ளை ஆலிமின் கனீமதுஸ்ஸாலிஹீன், ரஸாலதுத் தஸவ்வுப் என்ற நூல்களும் ஒப்பு நோக்க வேண்டியனவாகும். சித்திலெப்பையின் அன்வாருல் ஆலிம் பற்றிய சர்ச்சையை கசாவத்தை ஆலிம் தீர்த்து வைத்ததாகவும் ஒரு குறிப்பு உண்டு. (ஹமோவஸ்த்)
எழுத்துத் துறையில், இருவரது படைப்புகளும் ஒப்பு நோக்கத் தக்கனவாகும். ஒரு பக்கம் ஆலிம் என்றவகையில் மாப்பிள்ளை ஆலிம் சமயம் சார்ந்த - பல்வேறு துறைகள் பற்றிய நூல்களை யாத்துள்ளார். சட்டத் துறையில் பத்ஹுல் மதீன், பத்ஹுஸ்ஸலாத், பத்ஹுத் தையான் எனும் நூல்களை எழுதினார். இவற்றின் தொகுப்பு நூலாக அமைந்த பத்ஹுத் தையான் (அறபுத்தமிழ் நூல்) பிற்காலத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. சித்திலெப்பை சுரூதுஸ் ஸலாத் என்ற தமிழ் நூலை எழுதியுள்ளார்.
இருவரும் வரலாற்று நூல்களை எழுதிய போதும் அவற்றின் பாணி வேறுபட்டது. சித்திலெப்பை வாழ்ந்த காலத்தில் முஸ்லிம்களுக்கு சட்டசபையில் அங்கத்துவம் வேண்டுமென்ற கோரிக்கை விடுக்கப்பட்டபோது, சேர். பொன். இராமநாதன், அப்படியொரு பிரதிநிதித்துவம் அவசியமில்லை என்றும் அவர்களும் தமிழ் மக்களே (இஸ்லாமியத்தமிழர்கள்) என்றும் வாதித்தார். இவ்வேளை, இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை சித்திலெப்பை (1884 இல்) முஸ்லிம் நேசனில் எழுத ஆரம்பித்தார். இது 1885 இல் தனி நூலாக வெளியாகியது. இதனை சித்திலெப்பையின் வாரிசு போல பணிபுரிந்த ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ் மேலும் ஆய்வு செய்து விரிவுபடுத்தி வெளியிட்டார்.
ஆனால், மாப்பிள்ளை ஆலிம் தனிநபர் வரலாறுகளையே அதிகமாக எழுதியுள்ளார். அதில் தமது மொழிப்புலமையை நன்கு வெளிப்படுத்தியுள்ளார். ‘மௌலித்’ எனும் பெயரில் கவிதையும் உரையுமாக அவை அமைந்தன. வாசித்து விளங்குவதை விட பக்திபூர்வமாக ஓதுவதற்காக அவை பயன்படுத்தப்பட்டன. அவை அறபு மொழியிலும் அறபுத்தமிழிலும் காணப்படுகின்றன. அன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், அறபுத்தமிழ் புழக்கத்திலிருந்தை இதற்கு காரணமாக இருக்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் பற்றிய வரலாறு மின்னதுல் ஸரந்தீப் பீ மத்இல் ஹபீப் என்ற தலைப்பில் அமைந்தது. அன்னை கதீஜா (ரழி), பாத்திமா (றழி), பத்ர் உஹத் கள ஸஹாபாக்கள் (ரழி), இமாம் ஷாபிஈ (ரஹ்), செய்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்), அபுல் ஹஸன் ஷாதுலி (ரஹ்) செய்து ஸதகதுல்லா (ரஹ்), செய்கு ஹஸன் மக்தூமி (ரஹ்), செய்கு முஸ்தபா (ரஹ்) முதலானோர் பற்றி மௌலிதுகள் காணப்படுகின்றன. இவை தவிர, ஷகரதுல் பாதிரிய்யா வ ஸில் ஸிலதுல் காதிரிய்யா முதலான கவிதை நூல்களையும் தந்துள்ளார்.
சுமார் 200 தனிக் கவிதைகளையும் பாடியுள்ளார். இவை அனைத்தும் புகழ்பா (மத்ஹு) களாகவே காணப்படுகின்றன. மக்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கும் போக்கில் ஹத்யா மாலை போன்றவற்றையும் ஜும்ஆ தின குத்பாக்களையும் யாத்துள்ளார். இப்னு நுபாத்தாவின் குத்பாக்களை அறபுத் தமிழ் படுத்தி ‘குத்பா அந்நபவிய்யா’வையும் தந்துள்ளார்.
ஆனால், சித்திலெப்பை இவ்வாறாக இலக்கிய வடிவங்களை விடுத்து பாடநூல்களை வழங்கிய தோடு, முஸ்லிம் நேசனை சமூகத்தை வழிநடத்தும் பத்திரிகையாக அமைத்துக் கொண்டார். பெரும் பாலும் சித்திலெப்பையின் தமிழ் நடை, அறபுத் தமிழ் நடையையே ஒத்திருந்தது. இது அக்கால மக்களின் மொழியில் பேச வேண்டும் என்ற கருத்தில் எழுதப்பட்டதாகவும் கொள்ளலாம். சித்திலெப்பை ஆறு ஆண்டுகள் முஸ்லிம் நேசனைத் தொடர்ந்து நடத்தினார். பின்னர், அது மற்றொருவரின் கைக்கு மாறியது.
அறபு ஆக்கம் ஒன்றைத் தழுவி மாப்பிளை ஆலிம் "மதீனதுந் நுஹ்ஹாஸ்" என்ற பெயரில் 1858 இல் ஒரு நாவலை எழுதியுள்ளார். இது 1900 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டுள்ளது. இதனை தமிழ் பேசும் மக்களால் எழுதப்பட்ட முதல் நாவல் என கலாநிதி தைக்கா ஸாஹிப் ஆலிம் குறிப்பிடுகிறார். ஆனால், சித்திலெப்பையின் "அஸன்பே சரித்திரம்" என்ற நாவலே தமிழில் தோன்றிய முதல் நாவல் என்ற கருத்தும் உண்டு. 1884 இல் முஸ்லிம் நேசனில் எழுதப்பட்ட இந்நாவல் 1885 இல் தனி நூலாக வெளிவந்தது.
19 ஆம் நூற்றாண்டில் பிற்கூற்றில் வாழ்ந்த முஸ்லிம் சமூகத்தின் சமய, சமூக, பொருளாதார, ஆன்மீக நிலை பற்றிக் கூறும் இந்நாவல், இந்தியாவையும் எகிப்தையும் களமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கதாகும். ஒராபி பாஷா, ஜமாலுத்தீன் ஆப்கானி போன்றோரின் தாக்கம் எகிப்தையும் செய்யித் அஹ்மத் கானின் தாக்கம் இந்தியாவையும் நோக்கி நகர்த்தியிருக்கலாம் எனக் கூறுவோரும் உளர்.
மாப்பிள்ளை ஆலிம் தரீக்காவின் ஷெய்காக இருந்தமையால் அவர் முஸ்லிம்கள் மத்தியில் ஆன்மீக எழுச்சிக்கு முன்னுரிமை வழங்கினார். தைக்கா ஸாஹிப் ஆலிம் அவர்கள் மூலம் பெறப்பட்ட பிரதி நிதித்துவத்தை தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் பயன்படுத்தினார். மத்ரஸதுல் பாரியை தாபித்த அதே காலகட்டத்தில் அரூஸியதுல் காதரிய்யா தரீக்காவின் மையங்களாக தக்கியாக்களை உருவாக்கினார்.
கொழும்பில் பழைய சோனகத்தெரு, மருதானை, லெயார்ட்ஸ் புரோட்வே, பம்பலபிடி, கிளிப்டன் லேன் முதலிய இடங்களிலும் கொழும்புக்கு வெளியே, வெலிகம, வெலிபிடிய, திக்வல்ல, வலஸ்முல்ல, காலியில் கிந்தோட்ட, மிலிதுவ, கடுகொட, மாத்தரை கடைவீதி முதலான இடங்களிலும் தக்கியாக்களை நிறுவினார். இவற்றுள் பல இன்று ஜும்ஆ பள்ளி வாசல்களான மாறியுள்ளன. இவர்களால் 355 மஸ்ஜித்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பு உண்டு. இவற்றில் வாராந்தம் மாப்பிள்ளை ஆலிமால் பாடப்பட்ட ஜலாலிய்யா ராதிப் ஓதப்படுகின்றது. நவீன சிந்தனைகளுக்கு உட்படாத மாப்பிள்ளை ஆலிம் வழக்கிலுள்ள சமய, சமூக, சிந்தனைக்கேற்ப முஸ்லிம்களை நெறிப்படுத்த முயற்சித்தார்.
இதற்கு மாறாக சித்திலெப்பை நவீன கல்விமுறையின் பால் ஏற்கனவே குறிப்பிட்டது போல சமய சூழலில் மேனாட்டுக் கல்வி என்ற வகையில் தனது கல்வி, கலாசார முயற்சிகளை முன்மொழிந்தார். கொழும்பில் இரண்டு பாடசாலைகளை ஆரம்பித்து வைத்த அவர், கொழும்புக்கு வெளியே கண்டி, பண்ணாகம் (மாத்தளை), கம்பளை, குருணாகல், பதுளை, காலி முதலிய இடங்களில் முஸ்லிம் பிரமுகர்களின் உதவியுடனும், கல்வி அமைச்சின் அணுசரனையுடனும் பாடசாலைகளை ஆரம்பித்தார். பெண்களுக்கென கண்டியில், திருகோணமலை வீதி, கடைத் தெரு, கட்டுகலை ஆகிய இடங்களில் தனியான பாடசாலைகளை ஆரம்பித்தார். இப்பாடசாலைகளை கவர்னர் ஹவலொக் தரிசித்ததோடு, சித்திலெப்பையின் முயற்சியையும் பாராட்டினார்.
பாடசாலைகளை ஆரம்பிப்பதோடு அவர் தனது பணியை நிறுத்திக் கொள்ளவில்லை. பெற்றோர் ஆசிரியர், மாணவர்களுக்கான வழிகாட்டல்களை முஸ்லிம் நேசன் மூலம் வழங்கிக் கொண்டிருந்தார். பாடத்திட்டங்ளை வகுத்துக் கொடுத்ததோடு, தேவையான பாடநூல்களையும் எழுதி விநியோகித்தார். அவற்றுள், தமிழ் 1-5, துஹ்பதுந் நஹ்வு வல் உஸூலுல் கிறாஅதில் அறபிய்யா (இலக்கண நூல்), கிதாப் அல்ஹிஸாப் (கணித நூல்), அறபு முதலாம், இரண்டாம் புத்தகம், ஹிதாயதுல் காஸிமிய்யா (இது கீழக் கரை அறபுத் தமிழ் மத்ரஸாக்களில் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாடநூலாக இருந்துள்ளதாக கலாநிதி தைக்கா ஸாஹிப் கூறுகிறார்) என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.
இஸ்லாமிய சூழலில் மேனாட்டுக்கல்வி முறை என்ற கொள்கையோடு சித்திலெப்பை தனது கல்வி நடவடிக்கைகளை விஸ்தரித்து செயற்பட்டாலும் இலங்கை முஸ்லிம்கள் அறபு, தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய நான்கு மொழிகளையும் கற்க வேண்டுமென வலியுறுத்தினார். அறபு மொழி வீட்டு மொழியாக மாற வேண்டுமென வலியுறுத்தினார். தாய்மொழியான தமிழை அறியாதவன் குருடனை ஒத்தவன் என்றார்.
மாப்பிள்ளை ஆலிம் அரசியல் தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. அதாவது, ஆன்மீக சிந்தனை அல்லது இந்தியர் என்ற நிலை இதற்குத் தடையாக இருந்திருக்கலாம். அல்லது அவரது கருத்துக்கள் பகிரங்கப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், சித்திலெப்பை இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் அதிகமாக ஈடுபட்டார். ஏற்கனவே குறிப்பிட்டது போன்று ஏனைய தேசிய இனங்களோடு சேர்ந்து சுதந்திரத்துக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். சட்ட சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்துக்காக வாதாடினார். இதனால் 1899 இல் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
முஸ்லிம் விவகாரங்களைப் பதிவுசெய்வது தொடர்பாக ஏற்பட்ட சிக்கலைத் தவிர்ப்பதற்காக கவர்னரிடம் மஹஜர் கையளித்தார். முஸ்லிம் நேசனூடாக அரசியல் தொடர்பான விளக்கங்களை வழங்கல், முஸ்லிம்களிடம் காணப்பட்ட மூடப்பழக்க வழக்கங்கள், போலிச் சடங்குகள் போன்றவற்றை இல்லாதொழிக்க பிரசாரம் செய்தல், பத்திரிகைகளுக்கிடையிலான வாதப்பிரதிவாதங்களுக்கு உரிய பதிலளித்தல் போன்ற பணிகளைச் செய்து வந்தார்
சமயத்துறையிலும் கலாசாரத் துறையிலும் சித்தி லெப்பையின் பணி அளப்பரியதாகும். மார்க்கக் கல்வி, பள்ளிவாசல் நிருவாகம், மத்ரஸாக்களின் புனரமைப்பு, சீதன ஒழிப்பு, மூடப் பழக்க வழக்கங்களின் தீமை போன்ற பல்வேறு விடயங்களிலும் அவரது கவனம் படர்ந்தது. அக்காலம் பற்றி ஆயும் முஸ்லிம் சமூகவியலாளருக்கு அவருடைய பத்திரிகைகள் அரிய தகவல் களஞ்சியமாகத் திகழ்கின்றன என்று நூலகர் எஸ்.எம். கமால்தீன் குறிப்பிடுகிறார்.
இவையனைத்தும் இவ்விரு பிரமுகர்களும் தமது கால இலங்கை முஸ்லிம்களுக்கு ஆன்மீக உலகியல் கல்வி தொடர்பாகவும், சமூக எழுச்சி தொடர்பாகவும் மேற்கொண்ட பணிகள் அடுத்த நகர்வுக்கு அத்திவாரங்களாக அமைந்தன. இருபதாம் நூற்றாண்டு முஸ்லிம்களின் வாழ்வு முறையிலேற்பட்ட மாற்றங்களுக்கு இவர்களின் செயற்பாடுகள் பங்களிப்புச் செய்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
வெளீயீடு:
வைகறை வாழ்வியல் சஞ்சிகை, இதழ்: 35,
மீள்பார்வை ஊடக மையம்,
49, சிறீ மஹிந்த தர்ம மாவத்த தெமட்டகொட,
கொழும்பு – 09.
சிறீலங்கா
இணையதளம்: www.meelparvai.net
முதன் முதலாக இக்கட்டுரை வைகறை என்ற இலங்கை பத்திரிகையில் வெளிவந்தது. வெளியீட்டாளர்களின் அனுமதியுடன், காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் இக்கட்டுரை மறுபதிப்பு செய்யப்படுகிறது.
|