Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:58:30 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
காயல் வரலாறு
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 8
#KOTWART078
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 18, 2016
குஞ்ஞாலி மரக்காயர்களுக்கு எந்த ஊர்?
இந்த பக்கம் 9427 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எனக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் என்று நினைக்கின்றேன்.

பழுப்பு நிறத் தலைப்பாகையும் வெள்ளங்கியும் நீண்ட தாடியும் கொண்ட ஒரு பெரியவர் வருடத்திற்கு ஒரு தடவை என் வீட்டிற்கு வந்து ஒரு நாள் தங்கி இருப்பார்.

வீட்டினர் அனைவரும் அன்னாரை பூக்கோயா தங்ஙள் என்றழைப்போம். மலையாளமும் தமிழும் கலந்த நடை. பழுத்த நிறைந்த பார்வையுடன் கரகரத்த குரலில் “இங்கோட்டு வரீ” என அழைத்து முதிர்ந்து சுருங்கிய பருத்த விரல்களினால் தலையை வருடி விடுவார். துஆச்செய்வார்.

அன்னாரின் முன்னோர்கள் யமன் நாட்டைச்சார்ந்தவர்கள். அந்தரத்தீவு என்றழைக்கப்படும் இலட்சத்தீவில் குடியேறியவர்கள். இலங்கைக்கு அடிக்கடி வருகை புரியும் அன்னார் அங்கு வணிகம் புரிந்து கொண்டிருந்த எனது வாப்பாவின் வாப்பா அவர்களுக்கு அறிமுகம்.

அந்த தொடர்பில் என் வாப்பாவின் அழைப்பின் பேரில் வருடந்தோரும் இலட்சத்தீவிலிருந்து கொச்சி வந்து கொச்சியிலிருந்து திருவனந்தபுரம் வாயிலாக ஊர் வருவார். அப்போது எங்கள் வீட்டிற்கும் வந்து செல்வார். அவரின் காலத்தோடு இத்தகைய வருகைகள் நின்று போயின.

நமதூரின் பல வீடுகளுக்கும் இத்தகைய பட்டறிவுகள் உண்டு.

கோயா தங்ஙள்மார்களோடு நமதூருக்கு உள்ள தொடர்பு மிகப்பழமையானது.

```````````````````````````````````````````````````````````````````````

ஷெய்கு ஸைனுத்தீன் மக்தூம் இரண்டாமவர் (இவரைப்பற்றி “ காஹிரீ தர்ஸ் நடத்திட்டுண்டு “ என்ற முந்தைய கட்டுரையில் பார்த்துள்ளோம்). அவர்களின் பின்தோன்றல்கள் இன்றளவும் கேரளத்தின் பொன்னானி, மஞ்சேரி பகுதியில் வசித்து வருகின்றனர்.

பொன்னானியில் உள்ள வலிய பள்ளி என்றழைக்கப்படும் ஜும்ஆ மஸ்ஜிதின் கதீபாக புதியகத் ஸெய்யது முத்துக் கோயா தங்ஙள் பணியாற்றி வருகின்றார். இவர் மக்தூமி தலைமுறையின் 14 ஆவது வழித்தோன்றல் என கூறப்படுகின்றது.

மக்தூமி முஸலியாரகத் அசோஷியேஷன் என்ற பெயரில் செயல்படும் குழுவினர் கடந்த ஆண்டின் முற்பகுதியில் நமதூருக்கு வந்திருந்தனர். மக்தூமி பெரியார்களின் வழித்தோன்றல்களையும் அது தொடர்பான வரலாற்று தடயங்களை கண்டறிவதே அவர்களின் நோக்கம். அப்போது இவர்களுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடந்தது.

அதன் தொடர்ச்சியாக சென்ற மாதம் 29 ஆம் தேதி கோழிக்கோட்டில் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்திப்பு நேரம் மாலை என்பதால் அன்று காலையில் இந்தியாவின் முதல் கடற் தளபதி குஞ்ஞாலி மரக்காயரின் நினைவில்லம், அருங்காட்சியகம் ஆகியவற்றை பார்த்துவரலாம் என கிளம்பினேன்.

கோழிக்கோட்டிலிருந்து வடகரா செல்லும் நெடுஞ்சாலையில் 46 ஆவது கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆயில் மில் என்ற பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் இரிங்கல் என்ற சிறு கிராமம் உள்ளது.

நெடுஞ்சாலையிலிருந்து பக்கவாட்டில் செல்லும் சாலையில் இரண்டரை கிலோ மீற்றர் தொலைவில் வலது பக்கம் உள்ளது குஞ்ஞாலி மரக்காயர் நினைவு அருங்காட்சியகம்.





நுழைவாயிலின் வலதுபுறம் நான்கு குஞ்ஞாலி மரக்காயர்களின் நினைவாக இந்திய கடற்படை நிறுவியுள்ள நினைவுத்தூண் கம்பீரமாக நிற்கின்றது. காட்சியகத்திலுள்ள பொருட்கள் குறைவாக இருந்தாலும் அதனை நல்ல முறையில் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் பேணி வரும் கேரள அரசைப் பாராட்ட வேண்டும்.





அருங்காட்சியகத்திலிருந்து 200 மீற்றர் தொலைவில் குஞ்ஞாலி மரக்காயர் ஜும்ஆ மஸ்ஜித் இருக்கின்றது. இங்கு குஞ்ஞாலி மரக்காயரின் கேடயம் உள்ளது. போர்த்துக்கீசியரிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய வாள், புனித ஆசனம் ஆகியவை இந்த பள்ளிவாசலில் ஜும்ஆ குத்பாவிற்கு இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. போர்த்துக்கீசியர்களுடானான போரில் குருதி சாட்சியம் பகர்ந்த போராளிகளின் மண்ணறைகள் இந்த பள்ளி வளாகத்தில் நிறைந்து காணப்படுகின்றது.









அருங்காட்சியகத்தின் வழிகாட்டியான என்.கே.ரமேஷ் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் விளக்கினார். குஞ்ஞாலி மரக்கார்களின் கோட்டையின் நடுவில்தான் இந்த காட்சியகம் அமைந்திருக்கின்றது. கோட்டையின் திட்ட மாதிரியை அருங்காட்சியகத்தில் வைத்திருக்கின்றார்கள். இப்போது அந்த கோட்டையின் சிதிலம் கூட இல்லை. இதைப்பற்றி ரமேஷ் கூறும்போது , “ குஞ்ஞாலிகளின் வாழ்விற்கும் நினைவிற்கும் சாட்சி சொல்ல இன்று கோட்டையின் சிறு கல் கூட இல்லை. நடந்தவை அனைத்திற்கும் இந்த கோட்டை பிராந்தியத்தை சூழ ஓடும் மூராட்டுப்புழைதான் (ஆறு) ஒரே ஒரு மௌன சாட்சி என உருக்கமாக கூறினார்.















குஞ்ஞாலிகளின் வாள் வீச்சில் மின்னித் திலங்கிய இரிங்கல் கோட்டை பிராந்தியத்தின் மொத்த பரப்பின் மீதும் மாபெரும் கருங்குடை போல கவிழ்ந்திருக்கும் மௌனமானது வாழ்வின் மீதான நமது வழமையான புரிதல்கள் அனைத்தையும் தூசிப்படலம் போல பரத்தி பொருளற்றதாக்கி விடுகின்றது.



அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்தவுடன் வருகையாளர் பதிவேட்டில் என் விபரங்களை பதிந்து முடித்தவுடன் அங்கு பணியில் இருந்த சசிகுமார் என்ற அலுவலர் “ நிங்ஙளு தமிழ் நாடோ காயல்பட்டினமோ? “

நான் தலையசைத்தவுடன் “ காயல்பட்டினம் குஞ்ஞாலி மரக்காமாருடே நாடல்லே “ என ஆர்வத்துடன் கேட்டார்.

அதற்கான சான்றுகளைக் கேட்டேன். கேரளத்தின் முக்கியமான கல்வியாளரும் வரலாற்றாய்வாளரும் தற்சமயம் கல்லூரி முதல்வராக பணியாற்றி வருபவருமான முனைவர்.ஹுஸைன் ரன்டதானி எழுதியிருப்பதாக சொன்னார். இந்த தகவலை அவரது இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது இது தொடர்பாக கட்டுரையும் காணக்கிடைக்கின்றது. (“ Shaikh Zainuddin Makhdum and successors” by Dr.Hussain Randathani ) அதை வாசிக்கும்போது சுவாரசியமான கூடுதல் தகவல்கள் கிடைத்தன.

கேரள கடற்கரையோரம் வந்திறங்கிய அறபு வணிகர்களுக்கும் உள்ளூர் வணிகர்களுக்கும் இடையே ஊடகம் போல செயல்பட்டு வந்த குஞ்ஞாலி மரக்காயர்கள் அரிசி வணிகமும் செய்து வந்துள்ளனர். அவர்களின் பிறப்பிடம் காயல்பட்டினமாகும்.

அரசியல் சமூக தளத்தில் செல்வாக்கு பெற்றிருந்த குஞ்ஞாலிகள் கொச்சியில் நிலை பெற்ற போது அவர்கள் காயல்பட்டினத்தில் தங்கியிருந்த மக்தூமி அறிஞர்களை கொச்சிக்கு அழைத்து வந்தனர்.

இப்படி வந்தவர்களில் முதன்மையானவர் ஷைஹ் அஹ்மத் மஃபரி ஆவார்கள். அன்னார் பத்ஹுல் முயீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் நூற்களின் ஆசிரியர் ஷைஹ் ஜைனுத்தீன் மக்தூம் இரண்டாமவர் அவர்களின் பாட்டனார் ஆவார்கள்.

ஷைஹ் ஜைனுத்தீன் மக்தூம் இரண்டாமவர் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தின் சோம்பாலா என்ற இடத்தில் அடங்கப்பெற்றுள்ளார்கள். இந்த மக்தூமி அறிஞர்கள் புகழ் பெற்ற சூஃபி குடும்பத்தைச் சார்ந்தவர்கள். இவர்களின் முன்னோர்கள் தெற்கு யமனின் ஹழ்ரமௌத்தைச் சார்ந்தவர்கள். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டு வாக்கில் காயல்பட்டினம், கீழக்கரை போன்ற ஊர்களில் குடியேறியிருக்கின்றனர். இவர்களின் தலைமுறைத் தொடர் முதல் கலீஃபா ஹழரத் அபூபக்ர் சித்தீக் (ரழி) அவர்களில் சென்று முடிவடைகின்றது.

இந்த தகவல்களை கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தரும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான மலபார் கழகத்தின் இயக்குனருமான பேராசிரியர் முனைவர் கே.கே.என். குரூப்பு அவர்களும் ஆமோதித்தார்.









இந்த மக்தூமி --- குஞ்ஞாலி கூட்டுதான் சாமூத்திரி மன்னருடன் சேர்ந்து கேரள கரையை ஆக்கிரமித்த போர்த்துக்கீசிய காலனியாதிக்க வாதிகளை எதிர்த்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஜிஹாதை தொடங்கி வைத்தது.

கேரளத்தின் சாமூத்திரி என்ற ஹிந்து மன்னனின் தலைமையின் கீழிருந்த கடற்படை தளபதிகளான குஞ்ஞாலி மரக்கார்களை போர்த்துக்கீசியர்களுக்கு எதிராக போராடுவதற்கான சூளுரையை எடுக்க வைத்தது ஷேஹ் ஜைனுத்தீன் மக்தூம் இரண்டாமவர்தான்.

நம் நாட்டின் மேற்கு கடற்கரையில் செழித்தோங்கிய இந்தியர்களின் கடல் வாணிபத்தை கைப்பற்ற வந்த போர்த்துக்கீசியர்கள் நம் நாட்டின் கிழக்கு கடற்கரையின் வணிகத்தையும் கைப்பற்ற வேண்டி காயல்பட்டினம், கீழக்கரை, வேதாளை போன்ற ஊர்களின் மீது படையெடுத்து வந்தனர். கொலை, கொள்ளை, மஸ்ஜிதுகளுக்கும் வீடுகளுக்கும் தீ வைத்தல் என பெரும் அழிச்சாட்டியத்தைச் செய்துள்ளனர் . நமதூரின் மீதான இந்த படையெடுப்பு பல தடவை நடந்துள்ளது.

இந்த காலகட்டங்களில் நமதூருக்கு கேரளத்தின் கடற்போராளிகள் அணி வந்து போர்த்துக்கீசியரை எதிர்த்து போரிட்டு வெற்றியும் குருதி சாட்சியமும் அடைந்துள்ளனர் என்பதை நாம் அறிவோம்.

இதில் ஒரு கூடுதல் தகவலும் உண்டு.

இரண்டாம் குஞ்ஞாலி மரக்காயர் என்றழைக்கப்படும் குட்டி போக்கர் என்ற குட்டி அபூபக்ர் (கி.பி : 1531 – 1571) அவர்களின் தலைமையிலான கடற் போராளிகள் ஹிஜ்ரி 976 ஜமாஅத்துல் ஆகிர் மாதத்தின் நடுப் பத்துகளில் (கி.பி. 1568) காயல்பட்டினம் வந்துள்ளனர்.

இங்கு வந்து போர்த்துக்கீசியருக்கு சொந்தமான இருபத்திரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் அரிசியும் மூன்று குட்டி யானைகளும் இருந்திருக்கின்றன. {சான்று நூல் : செ. திவான் எழுதிய “வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள் “, பக்கம் : 362} நமதூரின் கடல் தீரத்தில் குஞ்ஞாலி மரக்கார்களும் அவர்களின் தலைமையின் கீழ் வந்த கேரளத்து கடல் முஜாஹிதுகளும் போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடினார்கள் என்றால் அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் மக்தூமி பெரியார்களும் கேரளத்தின் ஹிந்து சாமூத்திரி மன்னரும்தான்.

இந்த கூட்டணி மட்டும் இருக்கவில்லையென்றால் காயல்பட்டினத்தின் தனித்தன்மை மிக்க பண்பாடு வாழ்க்கை முறை மார்க்க நெறி முதலியவைகள் பறிக்கப்பட்டு இன்னொரு கோவாவாக போர்த்துக்கீசிய அடிமை காலனியாக நமதூர் மாற்றப்பட்டிருக்கும்.

வரலாற்றின் இந்த திருப்பத்தில்தான் மனிதர்கள் மாமனிதர்களாக பெருகும் ரசவாதம் நிகழ்கின்றது.

எலும்பு தோல் சதை குருதியினால் ஆன உடம்பின் மூலம் அவர்கள் வாழ்ந்த நாள்களின் எண்ணிக்கையை விட அவர்களின் ஆன்ம வாழ்க்கை பல நுற்றாண்டுகள் கடந்து நீடிக்கும் நுட்பத்தை நாம் அறிந்துணர வேண்டுமென்றால் அவர்களை முழுமையாக திறந்த மனதுடன் வாசிக்க வேண்டும். போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பு நடந்து கிட்டதட்ட 500 வருடங்கள் ஆகி விட்டன. இந்த ஆக்கிரமிப்பைப்பற்றியும், அதற்கெதிரான போரைப்பற்றியும் பதிவான “ துஹ் ஃபத்துல் முஜாஹிதீன் “ நூல் தொகுப்பின் வயது 430 வருடங்கள் ஆகின்றது.



ஆனால் இன்றளவும் அவர்கள் நினைவு கூரப்படுவதற்கான காரணம் அவர்களின் மகத்தான வாழ்க்கை மட்டுமில்லை. அவர்கள் எதிர்த்து நின்ற அறியாமையும் கோழைத்தனமும் ஆக்கிரமிப்பும் மேலாதிக்க வெறியும் காலனியாக்கமும் புதிய வடிவங்களிலும் புதிய கோணங்களிலும் நாம் வாழும் உலகில் நீடிக்கின்றது என்பதுதான்.

வரலாறு என்பது ஒரு மீள்பார்வை. நேற்றுகளின் நினைவுக்குறிப்பேடு. நம் எதிர்கால வாழ்வின் உரைகல்லும் கண்ணாடியும் கூடத்தான். பூவுலக வாழ்வை கடந்து வாழும் மாமனிதர்களின் சமய குடும்ப பிராந்திய அடையாளங்கள் இக்காலத்தில் நமது சில பல அடையாளங்களோடு ஒத்துப் போகும் காரணத்தினால் நாம் பெருமிதம் கொள்வதும் அதனை கொண்டாடுவதும் நல்ல விஷயம்தான்.

ஆனால் அந்த அடையாளங்களுக்காக மட்டுமே அவர்களை தலையில் வைத்து கொண்டாடுவது என்பது மலைச்சிகரங்களை சுருக்குப்பைக்குள் முடிந்து வைப்பது போலத்தான்.

மகா ஆளுமைகளின் மீது நாம் ஏற்றி வைக்கும் அடையாள ஒட்டுதல்களும் புனித பற்றுகளும் மானுட குலத்தின் ஏனைய சமூகங்களிலிருந்து அவர்களை தனிமைப்படுத்துவதில்தான் போய் முடிந்து விடும்.

வரலாறு என்பது முக்காலத்தையும் இணைக்கும் பெரு நதி போன்றது. அந்த பெரு நதியின் சிறு துளியாகிய நமதூரையும் நமது வரலாறையும் பண்பாட்டையும் மானிடப் பெரு வளையத்தில் கொண்டு போய் இணைக்கும் கண்ணியாக அந்த மகான்களை காணுவது பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை நாம் பார்க்கும்போது அவர்கள் தங்களின் சொந்த மொழி மத இன அடையாளங்களில் இருந்து கொண்டே அவற்றைத்தாண்டியும் பணியாற்றியுள்ளார்கள்.

இதற்கான துளி சாட்சியாக விளங்குவது இந்த நினைவேந்தல் கவிதை. இதை எழுதியது பேராசிரியரும் முனைவரும் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தருமான கே.கே.என். குரூப்பு அவர்கள்.

மக்தூம் இரண்டாமவருக்கு வந்தனங்கள்

ஓஹ்!
என் நிலத்தின்
இஸ்லாமியப் பேராசானே!
உங்களுக்கு
எங்களின் நெஞ்சார்ந்த மதிப்பும்
வந்தனங்களும்

யமனின் ஹழ்ரமவ்தை நீங்கி
பொன்னானியை
தாயகமாகவும்
பரப்புரை மையமாகவும்
ஆக்கினீர்

மலபாரின்
முழு மேற்கரையும்
இஸ்லாத்தின்
புதிய உயிரோட்டத்தில்
எழுச்சியடைந்தது

அது
புத்தொளியாகவும்
உத்வேகமாகவும்
வந்தது

போர்த்துக்கீசிய
அடக்குமுறையை
முழு மூச்சுடன்
எதிர்த்து நிற்க
உங்கள் சீடர்களுக்கு
கற்பித்தீர்கள்

நெறி
பொருள்
உயிர்
என அனைத்தும்
அச்சுறுத்தப்பட்டபோது

முழு
அழிவிலிருந்து
மொத்த
சமூகத்தையும்
காப்பதற்கும்
இம்மண்ணை
விடுவிப்பதற்கும்

தீரத்துடனும்
குருதியின்
சிவப்புடனும்
மீட்பதற்கும்

நீங்கள்
ஜிஹாதுக்கு
அல்லது
வாழ்வா சாவா
என்ற
போராட்டத்திற்கு
அழைத்தீர்கள்

தன்மானத்தினதும்
விடுதலையினதும்
மென்காற்று
வீசிய வேளையில்

கடலிலும்
கரையிலும்
நூறாண்டுகள்
வரையில்

போராளிகளும்
குருதி சாட்சிகளும்
உன்னத
நோக்கமொன்றிற்காக
மரித்தார்கள்

அந்தோ!
உங்களின்
துஹ்ஃபத்
காலனிய
கொடுங்கோன்மைக்கும்
படையெடுப்புக்கும்
எதிரான
பொது அறிக்கையன்றோ!

சோம்பாலாவின்
மஸ்ஜிதில் உள்ள
உங்களின்
மண்ணறை
விடுதலையினதும்
நீண்ட பயணத்தினதும்
சின்னமன்றோ!!!

(ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)

நமதூருக்கும் கேரளத்திற்குமான வரலாற்று அரசியல் பண்பாட்டு உறவுகளின் முடிச்சானது மழலையின் துணுக்கு மொழி போல மெல்ல மெல்ல அவிழ்கின்றது. நமதூரைப்பற்றி நாம் புரிந்து வைத்திருக்கும் சித்திரம் புதிய புதிய இடங்களை விரிவடைவதற்கான சாத்தியங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.





பேராசிரியர் முனைவர் கே.கே.என்.குரூப்பு தலைமையில் கோழிக்கோட்டில் கூடிய மக்தூமி குடும்ப முஸலியாரகத் அசோஷியேஷன் அமர்வில் இது தொடர்பான கருத்தரங்கம், நூல் வெளியீடு, இதழியலாளர் சந்திப்பு போன்றவற்றை நமதூரில் நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர்.

நமதூரின் ஆர்வமிக்க உள்ளங்களும் கரங்களும் ஒன்று சேர்ந்தால் இது சாத்தியமே இன்ஷா அல்லாஹ்!

இந்த வரலாற்றுத் தேடல் பயணத்தை சாத்தியமாக்கி தந்த அருமை நண்பர்கள், மூணு மாடி வீட்டு யூனுஸ், சாளை முஹம்மத் இப்றாஹீம் சூஃபி, எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், முஸலியாரகத் மக்தூமி குடும்ப அமைப்பைச்சார்ந்த மஞ்சேரி கஃபூர் ஸாஹிப் ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

குறிப்பாக கோழிக்கோட்டில் தங்கிய இரண்டு தினங்களில் சுபஹ் தொழுகைக்கு பின்னரான பசித்த பொழுதில் சூடான அரிசி மாவில் செய்த மொறு மொறுத்த பத்திரியும் சாயாவும் வழங்கிய பாலேட்டனுக்கும் நன்றிகள்...



Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இவ்விணையத்தின் வழியே தோழர் பசீருக்கு ஒரு வேண்டுகோள்
posted by: அ மு அன்வர் சதாத் (மயிலாடுதுறை ) on 19 January 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42885

தோழர் சாளை பஷீர் அவர்களின்

"குஞ்சாலி மரக்காயர்களுக்கு எந்த ஊர்"
என்ற ஆக்கத்தை படித்து மகிழ்ந்தேன்.

தோழரின் முந்தைய பல ஆக்கங்களை
வாசித்து ருசித்தவன் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

தமிழகத்தில் அடுத்த தலைமுறை
வாசகர்கள் கொண்டாடப்போகும்
புகழ்மிக்க எழுத்தாளராக
திகழ்வார் என்பது நிச்சயம்.

தோழரிடம் பலமுறை நான் நேரிலும்
அலைபேசியிலும் கருத்துப்பரிமாறும் போதெல்லாம்
ஒரு வேண்டுகோள் வைப்பேன்.

அந்த வேண்டுகோளை
இந்த இணையத்தின் மூலம் அவரிடமும்
வாசகர்களிடமும்
இந்த வலைதள நிர்வாகிகளிடமும்
வைக்கிறேன்.

உயர்வகுப்பு கலாச்சார அடையாளங்களை
உயர்த்திபிடித்து கொண்டாடும் நெடுநாவல்
"விஷ்ணுபுரம்" போல

முஸ்லீம் சமூக
பண்பாட்டு கலாச்சார அடையாளங்களின்

மனிதத்தன்மையை உயர்த்திபிடித்து
அதை பரவலாக்கிக் கொண்டாட
எமக்கும் ஒரு நெடுநாவல் வேண்டும்.

அதன் பெயர் இப்படி இடுக

"காயல்பட்டினம்"

அன்புடன்
அ மு அன்வர் சதாத்
மயிலாடுதுறை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. உறக்கம் கலைந்தது!
posted by: S.K.Salih (Kayalpatnam) on 19 January 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42888

பொதுவாக சரித்திரம் சார்ந்த ஆக்கங்களைப் படிக்கையில் என்னையுமறியாமல் உறங்கத் துவங்குவேன்... கட்டுரையின் நீளத்திற்கேற்ப என் உறக்கமும் நீளும்!

ஆனால், சாளை பஷீர் அவர்களின் இந்த வரலாற்றுக் கட்டுரை என்னிடம் இருந்த உறக்கத்தையும் களைத்துவிட்டது.

பயனுள்ள அரிய பல தகவல்களை, அது தொடர்பானவர்களை நேரில் சந்தித்து, உரையாடி, தேவையான சான்றாவணங்களைப் பெற்று, அதனடிப்படையில் வரையப்பட்டுள்ள இக்கட்டுரை சிறந்த வரலாற்றுக் கட்டுரை என்பதில் சந்தேகமில்லை.

இது ஒரு துவக்கமே! இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும்... தேவையான விபரங்கள் (அது எவ்வளவு அவதியானாலும்) திரட்டப்பட்டேயாக வேண்டும்... நாளைய சமூகம் தான் யார் என்பதைப் பிசகற அறிந்து வாழ நாம் வழிவகை செய்ய வேண்டும்... அதற்கு இதுபோன்ற ஆக்கங்கள் துணை நிற்க வேண்டும்.

பொதுவாக இதுபோன்ற வரலாறுகள் - முஸ்லிம்களில் ஒரு சாராரால் மட்டுமே கைக்கொள்ளப்படும். இக்கட்டுரையோ - அந்த எல்லையையும் தாண்டி வியாபித்துள்ளது.

கட்டுரையாளரின் / கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் எதிர்பார்ப்புகள் படி நமதூரில் இதுகுறித்த முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உறுதி செய்யப்பட்ட வரலாற்றை நினைவுகூரும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும்.

எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கான வாய்ப்பை நம் யாவருக்கும் தந்தருள்வானாக, ஆமீன்.

கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தH கே.கே.என்.குரூப்பு அவர்களின் ஆங்கிலக் கவிதையை, தெள்ளு தமிழில் இன்னும் இனிமையாகத் தந்திருக்கலாம். (உரைநடை சொல்லுக்கு சொல் Enter Key தட்டி கவிதை போன்று ஆக்கப்பட்டுள்ளதாக என் கண்களுக்குப் படுகிறது.)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. கோவாவாகி இறை கோபத்திற்கு ஆளாகாமல் காத்த இறைவனுக்கே எல்லாப்புகழும்
posted by: SHEIKH ABDUL QADER (RIYADH) on 19 January 2016
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42889

அஸ்ஸலாமு அலைக்கும் வரமத்துள்ளஹி வபரக்காத்துஹு .

இறையருள் நிறைக..

இங்கு வந்து போர்த்துக்கீசியருக்கு சொந்தமான இருபத்திரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளனர். அவற்றில் அரிசியும் மூன்று குட்டி யானைகளும் இருந்திருக்கின்றன. {சான்று நூல் : செ. திவான் எழுதிய “வரலாற்றின் வெளிச்சத்தில் போர்த்துக்கீசியர்கள் குஞ்ஞாலிகள் “, பக்கம் : 362}

நமதூரின் கடல் தீரத்தில் குஞ்ஞாலி மரக்கார்களும் அவர்களின் தலைமையின் கீழ் வந்த கேரளத்து கடல் முஜாஹிதுகளும் போர்த்துக்கீசிய ஆக்கிரமிப்பிற்கெதிராக போராடினார்கள் என்றால் அவர்களின் பின்னணியில் இருந்தவர்கள் மக்தூமி பெரியார்களும் கேரளத்தின் ஹிந்து சாமூத்திரி மன்னரும்தான்.

இந்த கூட்டணி மட்டும் இருக்கவில்லையென்றால் காயல்பட்டினத்தின் தனித்தன்மை மிக்க பண்பாடு வாழ்க்கை முறை மார்க்க நெறி முதலியவைகள் பறிக்கப்பட்டு இன்னொரு கோவாவாக போர்த்துக்கீசிய அடிமை காலனியாக நமதூர் மாற்றப்பட்டிருக்கும்.

வரலாற்றின் இந்த திருப்பத்தில்தான் மனிதர்கள் மாமனிதர்களாக பெருகும் ரசவாதம் நிகழ்கின்றது.

நமது காயல்மாநகர் போர்ச்சுகீசியர்கள்வசப்பட்டு கோவாவாகி இறை கோபத்திற்கு ஆளாகாமல் காத்த இறைவனுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்.

""எம்னாட்டுமண்ணுக்கு பெருமைபெற்றுதந்த
யமன்நாட்டு தீங்குளப்பேராசானே
உங்க்களுக்கெங்களின் மரியாதைமிகு
மனமகிழ் மலர்க்கொத்துகள்

யமன் ஹழ்ரமவ்த் சிப்பியில்விளைந்து
போன்னானியில் முத்தாயமர்ந்து
தூயதாயகமாய்க்கண்டு
சேய்களாய் கொடிகளாய்ப்படர்த்தினீர்கள்

மலபாரின் பூரணமேற்கரையும்
புத்துயிர்பெற்று பாரென தீனொளிவீசியது
அதுவே வித்தாகி விருட்சமாய் உயர்ந்தது

போர்த்துக்கீசியர்களைஎதிர்கொண்டு
தூசாய்பறக்கச்செய்ய முழுமூச்சாய்
நின்றுசாவுமணியடிக்க தங்கள்சீடர்களுக்கு
வீரசீரானபயிற்சித்தந்தீர்கள்

நெறி,பொருள்,உயிருக்கு
முழுவழிவாய் உலைவந்தபோதும்
புழுவாகமல் வலுவோடு
உறுதியோடு இறுதிவரைநின்றுபோரிட்டு
இம்மண்ணை மீட்பதற்கும் புனிதப்போர்அல்லது
வாழ்வா சாவாவென அறைகூவலிட்டழைத்தீர்கள்

தன்மானத்தோடு சுதந்ததிர தென்றல்வீசியபோது
கடலிலும் கரையிலும் அலையலையாய் நூறாண்டுகாலம்
மெய்னொக்கமேந்தி நீர்சிந்தியமையாய்
குருதியும் மரணமும்

உங்களின் பாரிசன குடியேற்றங்கள்
கொடுங்கோன்மைக்கும் படையெடுப்புகளுக்காகவும்
கர்ஜித்த சிம்ஹ சொப்பனங்களன்றோ

சோம்பாலாவின்
மஸ்ஜிதில் உள்ள
உங்களின்
மண்ணறை
விடுதலையினதும்
நீண்ட பயணத்தினதும்
சின்னமன்றோ!!! ""

மாஷா அல்லாஹ் வந்து வந்தவர்களை நின்றுவெண்றுவிரட்டிய வரலாறுகள்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...தெளிவான பல சான்றுகள்
posted by: Shireen (Kayalpatnam) on 21 January 2016
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42912

கோவா வை போன்று நமது ஊர் மாறி போய் இருக்கும் என்று நினைக்கும் பொழுது மனதுக்கு பக் என்று உள்ளது. அல்லாஹ் நம்மை பாதுகாத்தான். தெளிவான படங்களுடன் சான்றுகளுடன் மிக அருமையான ஒரு மறக்கப்பட்ட வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்துள்ளீர்கள். தெரியாத பல புதிய வரலாறை என்னை போன்ற இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள இது ஒரு போர் அடிக்காத சுவாரஸ்யமான கட்டுரை... வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. மறந்துபோன வரலாறு
posted by: அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) on 16 September 2016
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44630

அஸ்ஸலாமு அலைக்கும்!

இது சற்றே காலதாமதமான பதிவுதான் என்றாலும், அவசியம் பகிரவேண்டிய ஒன்றாகவே கருதுகிறேன்.

சுதந்திரப் போர் என்றதும் நம் நாட்டவர் ஆங்கிலேயர்களை எதிர்கொண்ட வரலாற்றை மட்டுமே பலரும் எண்ணுவர். போர்ச்சுகலின் தளபதிகளோடும் கவர்னர்களோடும் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த சுதந்திரப் போர் நம்மால் பெரிதும் கவனிக்கப்படவில்லை.

சமீபத்தில், பழம்பெரும் எழுத்தாளர் மஹதி (கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் தகப்பனார்) அவர்களின் ”முதல் சுதந்திரப் போர் வீரர் குஞ்சாலி மரைக்காயர்” (நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை) எனும் நூலை படிக்கும் வாய்ப்பை பெற்றேன்.

வாஸ்கோடா காமா நம் நாட்டிற்கு கடல் மார்க்கத்தை மட்டும் கண்டுபிடிக்கவில்லை; மாறாக, நாட்டை அடிமைப்படுத்தி சுரண்டும் நோக்கத்துடனே வந்தான் எனும் (இந்நூல் உணர வைக்கும்) உண்மையை, மெகாலே கல்வி முறை நமக்கு சொல்லித்தரவில்லை.

பாரதியின் வீர வரிகளோடு துவங்கும் இச்சிறு நூலில் (160 பக்கங்கள்), காயல் குறித்த செய்தி போதுமான அளவு இல்லாத போதிலும், ஒரு முழு நீள வரலாற்று ஆவணப்படும் பார்த்த திருப்தி மிகுதியாகவே இருந்தது. தொன்மை வாய்ந்த தமிழர்-அரபியர் வணிக உறவை அழகாக எடுத்துக்கூறி அவிழும் சரித்திரத்திற்குள், காலப் பயணம் மேற்கொண்டதுபோல் உணரச் செய்யும் அழகிய தொகுப்பு இது.

குஞ்சாலி மரைக்காயர்களின் வீர சாகசங்களை இந்நூலில் படித்த பின், சகோதர் சாளை பஷீர் ஆரிஃப் அவர்களின் இக்கட்டுரைதான் ஞாபகத்திற்கு வந்தது. சில மாதங்களுக்கு முன் வாசித்த இவ்வாக்கத்தை, மீண்டும் ஒருமுறை ரசித்து வாசித்தேன்.

”பேராசிரியர் முனைவர் கே.கே.என்.குரூப்பு தலைமையில் கோழிக்கோட்டில் கூடிய மக்தூமி குடும்ப முஸலியாரகத் அசோஷியேஷன் அமர்வில் இது தொடர்பான கருத்தரங்கம், நூல் வெளியீடு, இதழியலாளர் சந்திப்பு போன்றவற்றை நமதூரில் நடத்த ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தனர்.”

இதனை சாத்தியப்படுத்த நமதூர் ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved