நமது காயல்பட்டணம்.காம். தனது 15 வருட சேவையை பூர்த்தி செய்து 16 வது வருடத்தை துவங்குவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.
கடந்த 2001ம் ஆண்டு மார்ச் மாதம், நம் KMT மருத்துவமனையில் பணியாற்றிய பொன்செல்வி தற்கொலை
விவகாரத்தில் நமது ஊடகம் அவ்வப்போது வெளியிட்ட செய்திகளின் தொகுப்பை இன்னமும் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளில் நமது ஊரின் மூத்த பெருந்தகைகள் எப்படி நிதானமாக செயல்பட்டு, மத
நல்லிணக்கம் ஓங்கவும், மீண்டும் அமைதி ஏற்படவும் எவ்வாறெல்லாம் ஈடுபட்டார்கள், பாடுபட்டார்கள் என்பதை அறிய வரலாற்றுக் குறிப்பாக இது இருக்கும்.
நமது ஊர் - சமூக விரோதிகளால் அச்சுறுத்த பட்டபோது இதன் நிர்வாகிகளுடனும், மற்றும் அமைதிக்குழுவினரிடமும் அனுதினமும் தொடர்புகொண்டு நாங்கள் ஆறுதல் அடைந்திருக்கிறோம். அவ்வப்போதுள்ள சூழ்நிலைகளை அறிந்து, இங்குள்ள
சகோதர்களுடன் கலந்தாலோசித்து அவசியமான உதவிகளை செய்திருக்கிறோம்.
நாங்களெல்லாம் உடலால் ஊரைவிட்டு வெகுதூரத்தில் வாழ்கின்றபோது, இவ்விணைய தளத்தின் செய்திகளையும், நிழற்படங்களையும் அவ்வப்போது பார்க்கையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நமது ஊரைச்சார்ந்த பல்வேறு மக்களின் மரணச்
செய்திகள், அது ஒட்டிய வாசகர்களின் கருத்துப் பதிவுகள் மூலம், மறைந்தவர்கள் பற்றிய சிறப்புகளை அறிய நல்லதொரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
நகர் நலம் காக்க, உலகெங்கும் துவங்கப்பட்ட பல்வேறு நலமன்றங்கள் தோன்றுவதற்கும், இவ்வூடகம் வெளியிட்ட நலமன்ற செய்திகளும், நிழற்பட தொகுப்புகளும் ஒருவகையில் காரணமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். மட்டுமின்றி, நேரில்
காணாத நமது ஊர் சகோதர்களை இத்தளம் வெளியிடும் செய்தித்தொகுப்புகளில் காணக்கிடைக்கும் நிழற்படங்கள் மூலம் கண்டிருக்கிறோம்.
உலகெங்கும், வாழும் நமதூர் சகோதரர்கள் கொண்டாடும், பெருநாள் நிகழ்ச்சிகள், சென்றுவரும் சுற்றுலா தளங்கள், இன்னபிற இடங்களை காணுகையில், அந்தந்த இடங்களுக்கே சென்ற உணர்வை அளிக்கின்றன.
"எழுத்து மேடை" என்ற ஒரு பகுதியை துவங்கி பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் வரக் காரணமாகவும், பல்வேறு எழுத்தாளர்கள் உருவாக காரணமாகவும், இருந்தது இச் செய்தித் தளமே.
இன்னும் பல சிறப்புகளுக்கு தகுதியுள்ள இவ்வூடகம், இன்னும் பல சேவைகளை தொடர்ந்து செய்ய, இன்னும் மெருகேற மனதார வாழ்த்துகிறேன்.
இருப்பினும், ஒரு சில நேரங்களில் இவ்வூடகம் வெளியிடும் செய்திகள் அதிர்ச்சி ஊட்டுபவையாகவும், அதிருப்தியாகவும், உள்ளன . அவ்வாறான நேரங்களில் நிர்வாகிகளுடன் நேரில் தொடர்பு கொண்டு என் மனக்குறைகளை பதிவு செய்திருக்கிறேன்.
பொதுவாகவே, ஒருவரின் குறையை பகிரங்கப்படுத்தாது அவரிடமே கூறுவதுதான் நாகரிகம் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்திருக்கிறேன்.
இறுதியாக, உங்களின் இந்த சமூகப்பணி, அல்லாஹ்வால் அங்கீகரிக்கபட்டதாக இருக்கட்டுமாக. இத்தளத்தின் நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக்கும் அல்லாஹ் நிறைவான செல்வத்தை கொடுப்பானாக ஆமீன்.
|