காயல்பட்டினத்தின் முதல் இணையதளமான காயல்பட்டணம்.காம் தனது 15 வயதைப் பூர்த்தி செய்து, 16ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டையும், வாழ்த்தையும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையதளத்தை நமதூர் மக்கள் பரவலாகப் பயன்படுத்துவதற்கு முன்பே துவக்கப்பட்டுவிட்ட இந்த இணையதளம், துவக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தனக்கென தனியொரு பயணப்பாதையை அமைத்துக்கொண்டு இயங்கி வருகிறது.
துவக்கத்தில் ஓரிரு காயல் நல மன்றங்களே இருந்தன. அந்த மன்றங்களின் சிற்சிறு அமர்வுகளையும் இந்த இணையதளம் அழகுற வடிவமைத்து செய்தியாகத் தந்ததன் மூலம், நமதூர் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளிலெல்லாம் புதிதாக காயல் நல மன்றங்கள் துவங்க முக்கிய காரணமாக இது விளங்கிற்று.
ஒரு மன்றம் புதிதாக அறிமுகப்படுத்தும் செயல்திட்டம் இந்த இணையதளத்தில் செய்தியாக வெளிவருவதைப் பார்க்கும் இதர மன்றங்கள், அத்திட்டத்தை தாங்களும் தத்தெடுத்துக்கொள்ளும் நிலை இன்று உள்ளது. அந்த வகையில், நான் சார்ந்த சிங்கப்பூர் காயல் நல மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல புதிய செயல்திட்டங்கள் பல மன்றங்களின் முக்கிய செயல்திட்டங்களாக இன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு காயல்பட்டணம்.காம் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.
என் மனதில் பட்ட ஒரேயொரு சிறிய குறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செய்திகளைப் பொருத்த வரை அவற்றை உடனுக்குடன் வெளியிட்டால் மட்டுமே அது உயிரோட்டமுள்ள செய்தியாக இருக்கும். ஆனால், மன்றங்களால் அனுப்பப்படும் செய்திகள் சில நேரங்களில் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் தாமதமாகவே வெளியிடப்படுகிறது.
“மற்ற உள்ளூர் இணையதளங்கள் உடனுக்குடன் வெளியிடும்போது, காயல்பட்டணம்.காம் மட்டும் ஏன் தாமதமாக வெளியிடுகிறது?” என்று இத்தளத்தின் செய்தியாளர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் வினவியபோது, “அனுப்பப்படும் செய்திகள் ஓர் அழகிய பதிவாக அமையும் பொருட்டு, அவற்றின் வாசகங்களில் சற்று திருத்தம் செய்து, வாக்கியங்களை அழகுற வடிவமைத்து, பெறப்பட்ட படங்களைக் கோர்வைப்படுத்தி, எத்தனை வருடம் கழித்து அச்செய்தியைப் பார்த்தாலும், அது சிறந்த பதிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல மணி நேரம் செலவழிக்கப்படுவதாகவும், படங்கள் அதிகமில்லாத - திருத்தம் அதிகமில்லாத மற்ற செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டே இருப்பதால், இதுபோன்ற மன்றச் செய்திகளை வெளியிட உடனுக்குடன் நேரம் எடுத்துக்கொள்ள இயலவில்லை” என்றும் விளக்கம் கூறினார். அது உண்மைதான்! தாமதமானாலும், காயல்பட்டணம்.காம் செய்தியை வெளியிட்ட பின் அதைப் பார்க்கும்போது, அந்த விளக்கம் எங்கள் கண்ணில் நன்றாகவே படுகிறது.
எனவே, இந்த தாமதம் தவிர்க்க முடியாதது என்பதை நாங்களும் உணர்ந்துள்ளோம். எனினும், கூடுதலாக பொறுப்பாளர்களைப் பணியமர்த்தி, இக்குறையை சரி செய்ய முயற்சிக்கலாம்.
செய்திகளை வெளியிடும்போது விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அது சாதகமாகவும் இருக்கும். பாதகமாகவும் இருக்கும். ஆனால், கண்ணியமான முறையில் எந்த வகையான விமர்சனங்கள் வந்தாலும் அதற்கும் கருத்துப் பகுதியில் இடம் கொடுக்க வேண்டும். அந்தப் பணியை காயல்பட்டணம்.காம் நன்றாகவே செய்து வருகிறது. தன்னை தனியொரு பகுதி, தனியொரு கொள்கையைச் சேர்ந்ததாக ஒருபோதும் இது காட்டிக்கொண்டதில்லை. இத்தளத்தை யார் பார்த்தாலும் அது தமது இணையதளம் என்று கருதும் வகையில் பொதுவான அமைப்பாகவே இத்தளம் திகழ்கிறது. அவ்வாறு இருப்பதையே நாங்களும் விரும்புகிறோம்.
செய்திகள் பகுதி என்பது இந்த இணையதளத்தின் முக்கிய உறுப்பு போன்றது. எனவே, செய்திகள் தாமதமாவதை மட்டும் தவிர்த்துப் பார்த்தால், குறையென்று சொல்ல ஒன்றுமில்லை. மக்களை ஆர்வப்படுத்த பல புதுப்புது ஆக்கங்களை அறிமுகப்படுத்தலாம் என்று நான் கருதிய நேரத்தில், ஒவ்வொன்றாக இந்த இணையதளம் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, மக்களை மகிழ்வித்து வருவதை நான் அனுபவித்து வருகிறேன். அது தொடரட்டும்.
நேரிய பாதையில், சீரிய முறையில் இவ்விணையதளம் சிறப்புற பயணிக்க எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் தெரிவித்து நிறைவு செய்கிறேன். |