முன்னுரை:
நகர்மன்றம் அல்லது நகராட்சி என்பது 18 அல்லது 23 உறுப்பினர்களுக்குள் அடக்கம் அல்ல. மாறாக ஒட்டு மொத்த நகருக்கே உளத் தூய்மையோடு உழைக்க வேண்டிய பொறுப்புள்ள மாமன்றமாகும்.
நகராட்சி அமையும் முறை:-
கடந்த பத்து ஆண்டுகளாக நமது நகராட்சியில் சுயநலமிக்க உறுப்பினர்கள் (ஒரு சிலரைத் தவிர) மிகுதமானவர்கள் செல்ல ஆசைப்பட்டனர். அவ்வாறே சென்றவர்கள் நகருக்கு என்று நல்லது செய்வதை விட அவர்களுக்கு என்றே அதிகம் எதிர்பார்த்தனர். காரணம் 2001ல் துணைத் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட போட்டியில் ஊரின் முக்கியத் தலைவர்களை விட, ஒரு சிலரின் ஆதிக்க அதிகார எண்ணத்தில் ஏற்பட்ட கோளாறினால் உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதின் விளைவு பொது வாழ்க்கை தூர நோக்குச் சிந்தனை, அனுபவம் போன்ற எதுவும் இல்லாத வாலிப மற்றும் நடுத்தர வயதை உடைய நம் சகோதரர்கள் 2006ல் பல முனைப் போட்டியில் வெற்றி பெற்று நகர் மன்றத்தினுள் நுழைந்ததின் விளைவு நகராட்சி நாற்றக் கேடாகி விட்டது.
குடும்பத்தின் தேவைகள் உடைய, நடுத்தர வயது கொண்ட சகோதர, சகோதரிகள் நகர் மன்றத்தினுள் செல்வது ஊழலுக்கு வழி ஏற்படுத்தும். நகராட்சிக்கு உறுப்பினராக செல்ல விரும்புவார்களுக்கு முதலில் இறைவனது அச்சம் இருக்க வேண்டும். அடுத்து தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும் என்னால் இயன்ற அளவு (மற்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து) காயல்பட்டினத்தை தன்னிறைவு பெற்ற நகரமாக மாற்ற முயற்சி எடுப்பேன் என்று உறுதி கொள்ள வேண்டும். பொதுவாக பொதுச் சேவைக்கு என்று வருபவர்கள் குடும்பத்தின் எல்லாத் தேவைகளையும் முடித்தவராகவும், ஓரளவுக்கு வசதி உடையவராகவும் அதே சமயம் அல்லாஹ்வுக்குப் பயந்து ஊருக்கு உழைக்கும் எண்ணம் உடையவராகவும் இருப்பது சாலச் சிறந்தது.
மேலும் நகர் மன்றத்திற்குள் செல்ல விரும்புபவர்களுக்கு அதிக பட்சம் 55 முதல் 65 வயது வரம்பு உடையவராக இருந்தால் நல்லது. குறிப்பாக தனி நபர், தனி ஜமாஅத், கொள்கை ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்காமல், இவர் நல்லவர், கலீமா சொன்னவர், ஒழுக்கமானவர், ஊர் மக்களோடும் ஜமாஅத்துக்களோடும் ஒத்துப் போகக் கூடியவர் எனும் பரந்த எண்ணங்கொண்டு ஊர் மக்களும், ஜமாஅத்துகளும் செயல்படனும். ஆக ஒரு நகராட்சி மக்களுக்கு பயனுள்ள நகராட்சியாக அமைய மேற்கூறிய ஆழிய கருத்துக்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
உறுப்பினர்கள் தேர்வில் ஜமாஅத்துக்களின் பங்கு:-
பொதுவாக நமதூர் கலாச்சாரத்திற்கு தகுந்தாற்போல் - ஊரின் அனைத்து ஜமாஅத்துக்கள் இந்த விஷயத்திலும் தலையிட்டு விருப்பு, வெறுப்பின்றி தனிநபர்களின் ஆதிக்கம், மனமாச்சரியத்திற்கு இடம் கொடுத்து விடாமல் கூட்டு ஆலோசனையின் படி உறுப்பினர்கள், தலைவர், துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தயவு கூர்ந்து அரசியல் பண்ண வேண்டாம். அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களை அழைத்து முற்கூட்டியே முடிவு எடுக்கணும்.
அரசியல் கட்சிகளின் சார்பாக உறுப்பினர்கள் தேர்வு அவசியமில்லை. இருப்பினும் ஆளும் கட்சியைச் சார்ந்தவர் தலைவராக இருப்பது நகருக்கு நல்லது. இவைகளை ஊரின் ஐக்கியப் பேரவை இறைவனை முன்னிறுத்தி ஊரின் 5 ஆண்டு நலன் கருதி அனைவர்களையும் அழைத்து கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நம்மிடம் சில அதிருப்திகள் இருந்தாலும் ஜமாஅத்துக்களின் மூலம் நல்ல உறுப்பினர்களை ஐக்கியப் பேரவைக்கு தெளிவுபடுத்தி பேரவையும் நியாயமான அடிப்படையில் கலந்து ஆலோசித்து நிறுத்தும் போது இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக பேரவைக்கு கட்டுப்பட்டு நடக்க மக்கள் தயாராக உள்ளார்கள்.
தலைவர், துணைத் தலைவர் மட்டும் நல்லவராக இருந்து பயனில்லை. வல்லவராகவும் மக்களின் பிரச்சினைகளை அறிந்து மற்ற உறுப்பினர்களின் கூட்டு முயற்சியில் நகருக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தனும். அதே சமயம் தலைவர் மட்டும் நல்லவராகவும் வல்லவராகவும் இருந்தும் பலனில்லை. மாமன்றத்தின் மற்ற உறுப்பினர்கள் இறைவனுக்கு அஞ்சி சுயநலம் கருதாமல் தலைவரோடு கலந்து அனுசரித்து போகக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும்.
2006-ல் ஊரின் முக்கியஸ்தர்களிடம் (இருமுறை கூறியும்) எனது சிற்றறிவுக்கு எட்டிய ஆலோசனையை ஏற்க மறுத்து விட்டதின் விளைவு - அவமானம், குதிரைப்பேரம், மிரட்டல், தனி நபருக்கு பயந்து சமரசம் செய்தல் போன்றவைகள் தான் ஆரம்ப 3 வருடம் (2006 முதல் 2009 வரை) அரங்கேறின என்பது ஊரறிந்த விஷயம். சென்ற வருடங்களில் ஏற்பட்ட கசப்பான அவமானங்கள் ஏற்படாமலிருக்க வல்ல ரஹ்மான் உதவி புரிவான். அதற்கு ஏற்றபடி நாமும் தூய எண்ணத்துடன் முயற்சிக்கனும்.
நகராட்சியின் மூலம் மக்களின் எதிர்பார்ப்பு :-
நமது நகர மக்கள் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் மூலம் ஊருக்கு அதிகமான சேவைகள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறனர். குறிப்பாக தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். கிட்டத்தட்ட 10 வருடத்திற்கும் மேலாக சரிவர தண்ணீர் இல்லை. ஊரும் விரிவடைந்தும், ஜனத் தொகையும் கூடி வருகின்றன. இரண்டாவது குடிநீர்த் திட்டத்தை உடனடியாக அமுல் செய்து வேலை தொடங்கப்பட்டு மக்களுக்கு தேவையான குடிநீர் தினசரி இல்லாவிடினும், ஒரு நாள் விட்டாவது (அதாவது வாரத்தில் 3 நாட்களாவது) தண்ணீர் மக்களுக்கு கொடுக்க வழி வகை செய்யனும்.
குடிநீரை மோட்டார் பொருத்தி உறிஞ்சி எடுப்பதை தடுத்து நிறுத்தி முற்றிலுமாக இந்த ஈனச் செயலை ஒழிக்கனும். இதற்கு இறைவனுக்குப் பயந்து பொது மக்களும் ஒத்துழைப்பு கொடுக்கனும். அடுத்து ஊரை சுத்தமாக வைக்க நகராட்சி கூடுதல் நடவடிக்கை எடுக்கனும். துப்புரவு பணியாளர்கள் கூடுதல் நியமனம் செய்வதுடன், நவீன வசதி கொண்ட (குப்பை அள்ளும் வண்டி) லாரியை நகராட்சி கூடுதலாக வாங்கி, அதன் மூலம் தினசரி இருமுறை ஊரின் அனைத்துப் பகுதிகளிலும் துப்புரவு பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிக்கு பொது மக்கள் குறிப்பாக நமது தாய்மார்கள் விழிப்புணர்வு பெற்று நகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
இன்னும் தேவையுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் திறமையான சிமெண்ட் அல்லது தார்ச் சாலைகள் அமைக்க வேண்டும். நகராட்சியில் உள்ள அதிகாரி மற்றும் ஊழியர்கள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைப் பார்த்து படிப்பினைப் பெற்று ஊழற்ற நிர்வாகம் நடத்த வேண்டும். மேலும் உறுப்பினர்கள் அவரவர் சார்ந்த வார்டுகளை (தெருக்களை) சரியாக கவனித்து வந்தாலே - நமதூர் முன்னோடி நகரமாக எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் என்பது என் கருத்தாகும்.
நமது நகராட்சியில் வரும் வருமானத்துடன், அரசாங்கத்திடமும் வருவாய் பெற்று தேவையான நல்ல திட்டங்களும், சேவைகளும் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 3 மாதத்திற்கு ஒரு முறை கூடி கலைந்தோம் என்றில்லாமல், ஆக்கப்பூர்வமாக ஆலோசித்து ஊருக்கு தேவையான செயல்திட்டங்கள் வகுத்து செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற முயல வேண்டும். நமதூர் சரித்தரம் நம்மைப் பார்த்து பறை சாற்ற வேண்டும். அதாவது நமது சந்ததியினர் 2011 முதல் 2016 வரை உள்ள நகராட்சி நிர்வாகத்தைப் போல், காயல்பட்டணம் சரித்திரத்தில் கண்டதில்லை என்று போற்றும் அளவிற்கு உறுப்பினர்களின் செயல்பாடுகள் அமையுமானால் ஊர் போற்றும், நாடு போற்றும், உலகமெங்கும் வாழும் காயல்பதியின் மேன் மக்களும் போற்றுவார்கள். குறிப்பாக வல்ல ரஹ்மானின் அருள் என்றென்றும் நமக்கு நிறைவாக கிட்டும்.
முடிவுரை:
நான் மேலே குறிப்பிட்டது போன்று நமது நகராட்சியின் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு நகராட்சி நிர்வாகம் சீராகவும், செம்மையாகவும் திட்;டமிட்டு செயல்படும் போது அனைத்து தரப்பு மக்களும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவார்கள். அத்தருணத்தில் காயல்பட்டணம் நகராட்சி தமிழகத்தில் தலைசிறந்த நகராட்சியாகவும் விளங்கும். வல்ல அல்லாஹ் துணை புரிவானாகவும் ஆமீன்.
வஸ்ஸலாம்.
|