"முஸ்லிம்கள் இன்று தங்களிடையே பிளவுபட்டிருக்கிறார்கள். இது இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்ல. ஆகவே உலக முஸ்லிம்கள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து விட்டு ஒன்று படவேண்டும். அதன்மூலமே சமுதாயத்தை பலமுள்ளதாக ஆக்கமுடியும். மன்னர் அப்துல்லா சமுதாய ஒற்றுமைக்கு முன்னுரிமை கொடுப்பவர். அதன்படி சகல தரப்பினரையும் இணைக்கும் சர்வதேச இஸ்லாமிய மகாநாட்டை சமீபத்தில் அவர் நடாத்தினார்."
இவ்வாறு பிரபல இஸ்லாமிய அறிஞரும் பிரசாரகருமான டாக்டர் ஸாகிர் நாயிக் ரமழான் 8 செவ்வாய் அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் உள்ள IICC எனப்படும் இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் நடைபெற்ற வைபவத்தில் பேசும்போது குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில் கல்வியானது, மார்க்க கல்வியோடு நவீன கல்வியையும் சேர்த்து போதிக்க கூடிய முறையில் இருக்க வேண்டும். இரண்டுமே இக்காலத்தில் அவசியமானவை.
இந்த கருத்தின் அடிப்படையில்தான் IRF என்னும் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனத்தை தான் இலாப நோக்கில்லாது ஆரம்பித்த தாகவும் இந்நிறுவனமே PEACE TV ஐயும், இந்தியாவில் சில பாடசாலைகளையும் நடத்துகின்றது என்று அவர் தெரிவித்தார்.
PEACE TV செனல்தான் உலகத்திலேயே ஆகக் கூடுதலான மக்கள் பார்க்கும் இஸ்லாமிய தொலைகாட்சி என்ற ஸாகிர் நாயிக், சுமார் 100 மில்லியன் மக்கள் ஆங்கில செனலையும், 80 மில்லியன் பேர் உருது செனலையும் பார்ப்பதாகவும் சமீபத்தில் துவங்கிய வங்காள மொழி செனலும் மக்களிடம் பிரபலம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸம் ஸம்மிற்கு நிகர் ஸம்ஸம்மே
ஸம்ஸம் தண்ணீர் உலகத்திலேயே சிறந்த தண்ணீராகக் கருதப்படுகிறது. அள்ள அள்ளக் குறையாத வற்றாத ஊற்றாக அது இருக்கிறது.
எவ்வளவு காலம் வைத்து பாவித்தாலும் இத்தண்ணீர் உகந்ததாக இருப்பதுபோல் வேறு எந்த தண்ணீரும் வையகத்தில் இல்லை. விஞ்ஞான ரீதியில் என்ன ரசாயனம் கலந்தாலும் சில நாட்களுக்கு மேல் அவைகள் தாங்குவதில்லை.
மக்காவின் கதி பகுதியில் ஸம் ஸம் நீர் விநியோகத்திற்கான மிகவும் நவீனமான தொழிற்சாலை சவூதி ரியால் 700 மில்லியன் செலவில் 2010 ரமழானில் செயல்பட வைக்கப்பட்டது. 13,405 சதுரமீட்டர் அளவில் சில கட்டிடங்களில் அமைந்துள்ள இது 42 முனைகளில் நீர் விநியோகம் செய்கிறது.
சாதாரணமாக 5,000 கன மீற்றர் தண்ணீர், 10 லீட்டர் பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டு சுமார் 2 லட்சம் போத்தல் வரை தினசரி நீர் விநியோகம் செய்ய முடியும். இதனால் ஸம்ஸம் தண்ணீர் போத்தல்கள் 24 மணி நேரமும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்றன.
இதனுடைய பிரதான நீர் கொள்ளும் தாங்கியானது சுமார் 10 மில்லியன் லீட்டர் கொள்ளும் வசதி பெற்றது. இதன்மூலம் நான்கு குழாய்கள் வழியாக மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலுக்கு 200 மில்லிலீட்டர் கன அளவு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அக்குழாய்கள் எஃகினால் செய்யப்பட்டவை.
இத்தொழிற்சாலையின் மத்திய கிடங்கு முற்றாக குளிரூட்டப்பட்டது. எச்சரிக்கை, மற்றும் தீ பற்றிய அறிவிப்புகளையும் கொண்டது. இப்பகுதி மட்டும் சவூதி ரியால் 75 மில்லியன் செலவில் கட்டப்பட்டது.
மக்காவில் நோன்பு இப்தார்
ரமழான் மாதமானது, மற்ற இஸ்லாமிய நகரங்களைவிட மக்காவில் எப்போதும் விசேஷமான அம்சங்களைக் கொண்டதாகவே இருக்கும். அபிவிருத்தி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் இம்முறை ரமழான் விசா 14 நாட்கள் என மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
பெரிய பள்ளிவாயலில் நோன்பு திறப்பதற்காக ஈத்தப்பழமும் சவூதி கோப்பியும் வழங்கப்படும். பள்ளிவாயலின் வெளிப்புறத்தில் விதவிதமான பதார்த்தங்களின் வாசம் வருவோர் போவோரை ஈர்க்கும்படி இருக்கும். சமூசா மிகவும் பிரபல்யம். ரூ-அஃப்சா, விம்டோ மற்றும் தயிர் வகைகளில் செய்த குளிர் பானங்கள் நோன்பாளிகளுக்கு தாக சாந்தி செய்ய வல்லவை.
பெரிய பள்ளியில் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே தரப்படும். அதற்குள் ஆயிரக்கணக்கான பணியாட்கள் அங்குள்ள பிளாஸ்டிக் கப்களையும் விரிப்புகளையும் அகற்றி, சுத்தம் செய்து மஹ்ரிப் தொழுகைக்கு தயார் செய்துவிடுவர்.
மக்கா நகரில் வசிக்கும் சவூதிவாசிகள் தங்கள் வீடுகளில் நோன்பு திறப்பதற்கு விசேஷமான பதார்த்தங்களை செய்வார்கள். கோதுமை மற்றும் இறைச்சி கலந்த சூப் முக்கியமாக இருக்கும். நோன்பு நோற்பதால் ஏற்படும் களைப்பை இந்த சூப் போக்கிவிடும் என்பார்கள். சர்பத் கல்-ஹப் என்ற உணவும் இருக்கும்.
மக்காவாசிகளிடம் ரமழானில் மிகவும் பிரபல்யமான உணவு வகைகள் தப்சா, ஸர்பியன், மன்டி மற்றும் சுட்ட இறைச்சி. மஹரிப் தொழுகைக்குப் பிறகு மக்காவாசிகள் உணவகங்களில் கூடுவர். இஷா தொழுகைக்குரிய அழைப்பு வந்ததும் உடனடியாக உணவு வேலையை முடித்துவிட்டு பள்ளி நோக்கி செல்வர்.
சமூசா செய்வதற்கு மாட்டிறைச்சியே அதிகம் பயன்படும். பிரேசில் நாட்டில் இருந்து தான் மாடுகள் அதிகம் இறக்குமதியாகும். தற்போது அதற்கு தடை இருப்பதால் சமூசாவிற்கு மாட்டிறைச்சி கிடைப்பது தட்டுப்பாடாக உள்ளது. ஆகவே சமூசா விலையும் அதிகம்.
மதீனாவில் மக்கள் வழங்கும் ‘இப்தார்’
மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளியில் தினசரி சுமார் 250,000 உள்ளூர் வெளியூர் நோன்பாளிகளுக்கு மதீனாவாசிகள் நோன்பு திறப்பதற்கான உணவு வகைகளைக் கொடுக்கிறார்கள். இங்குள்ள குடும்பங்கள் இதனை போட்டிபோட்டு செய்கின்றன பல நூற்றாண்டுகளாக.
பிற்பகலிலேயே மஸ்ஜிதை சுற்றி உள்ள பகுதிகளில் இளைஞர்களும் முதியவர்களும் இப்தாருக்குரிய பொதிகளை விநியோகம் செய்வதைக் காணலாம். இச் செயலை தங்களுக்கு கிடைக்கும் ஒரு பாக்கியமாக இவர்கள் கருதுகிறார்கள்.
பள்ளி உள்ளே ஈத்தம்பழம், கோப்பி, பாண், ரொட்டி, கேக், தயிரோடு கூடிய குளிர்பானங்கள் மட்டும் உண்ண தரப்படும். வேறு உணவுகள் கொண்டுவரக்கூடாது. வழக்கம்போல் இவைகள் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு மஹ்ரிப் தொழுகைக்கு ஆயத்தம் செய்யப்படும்.
வெளிப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வரிசையாக அமர்கிறார்கள். பெண்களுக்கு தனி இடம் உண்டு. மக்கள் போக்குவரத்திற்கும் சக்கர நாற்காலியில் செல்வதற்கும் வசதியாக இடம்விடப்படும். இறைச்சி கறி, சோறு, பழவகைகள், குளிர்பானங்கள் அங்கு உண்பதற்கு தரப்படும். நகரசபை அதிகாரிகளும் சுத்தத்தை அங்கு கண்காணிப்பு செய்வார்கள்.
இப்தார் உணவு விநியோகம் செய்பவர்கள் பலர் காலையிலேயே சமையல் வேலையை துவக்கி விடுவர். சிலர் தங்கள் வீடுகளிலேயே செய்வர். வேறு சிலர் உணவகங்களில் வாங்குவார்கள். எல்லோரும் மிகவும் சிறந்த ஈத்தம்பழ வகைகளை தேர்ந்து எடுப்பர்.
மஸ்ஜிதின் உள்ளே உணவு விநியோகம் செய்யும் முஹம்மது பகதி கூறுகிறார். “நாங்கள் ரமழான் இப்தாருக்காக இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வேலையைத் துவங்கிவிடுவோம். எங்கள் குடும்பம் பல தலைமுறைகளாக இப் பணியைச் செய்கிறது. நோன்பாளிகளுக்கு தண்ணீர் பித்தளை கோப்பையில் தரப்படும். அக்கோப்பை தினசரி வாசமூட்டப்படும். ஆகவே தண்ணீர் நறுமணம் கொண்டதாக இருக்கும்” என்றார் அவர்.
|