புனித ரமழான் மாதம் நம்மை விட்டும் விடைபெற்றுச் சென்றுவிட்டது. கையில் வைத்திருந்த தங்கப் புதையலை யாரோ தட்டிப் பறித்ததைப் போன்று அது நம்மை விட்டும் சென்றுவிட்டது. முஸ்லிம்களின் “ஆன்மிக மாதம்” என்றும் கூட ரமழானைச் சொல்லலாம். பள்ளிவாசல்களில் ஒரே கூட்டம்... ஆயுள் முழுமைக்குமான ஆன்மிக அனுபவத்தை அந்த ஒரே மாதத்தில் அடைந்து விடலாம் என்பதைப் போல அப்படி ஓர் ஆர்வம்! தொழுகை வரிசைகள் முடிவற்று நீண்டது. செல்வமும் (ஜகாத்) ஓரளவு வினியோகம் செய்யப்பட்டது. வழக்கமான பிறைக் குழப்பங்கள்... மூன்று பெருநாட்கள்... வட்டிலாப்பம், கோழிக்கறி சகிதம் பெருநாட்களும் வந்து போயின!
மீண்டும் பள்ளிவாசல்கள் காற்றாடத் துவங்கிவிட்டன. ஆறு நோன்பு முடிவதற்குள் ரமழானும் மறந்து போனது. இனி அது அடுத்த வருடம்தான் நமது சிந்தையில் உறைக்கும். ரமழான் சென்ற பின், இனி அடுத்த ஆன்மிகக் கொண்டாட்டமான “ஹஜ்” குறித்து நம்மவர்கள் கவனம் கொள்வார்கள். பயண ஏற்பாடுகள், அதற்கான சேகரிப்புகள், அது குறித்த தகவல்கள் என இனி வேறொரு பரபரப்பு நம்மைத் தொற்றிக்கொள்ளும்...இதுவும் ஒரு வருடாந்திரச் சடங்கே...!
இஸ்லாம் வகுத்த ஐம்பெரும் கடமைகளில் ஏற்றத் தாழ்வில்லை. எந்தவொரு முஸ்லிமுக்கும் கலிமா எந்தத் தரமோ, அதே தரம்தான் ஹஜ்ஜும். ஆனால், ஹஜ்ஜைப் பொருத்தமட்டில், அது ஒருவன் தன்னளவில் சுயமாக செய்துகொள்ளும் கடமையல்ல. ஓரளவு பொருளாதார வசதியும், உடல் ஆரோக்கியமும் ஒருவனுக்கு இருந்தால் மட்டுமே அவன் ஹஜ் குறித்து எண்ணிப்பார்க்க முடியும்.
ஆனால், பொருள் வசதியிருந்தும், ஆரோக்கியமான உடல் நலம் கொண்டிருந்தும் கூட பலர் இன்னும அந்த இறுதிக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது பரிதாபத்திற்குரியது. இன்னும் வேறு சிலரோ வருடா வருடம் அதை (ஹஜ்ஜை) மேற்கொள்கிறார்கள். இதுவும் மார்க்க அடிப்படையில் தேவையற்றதே. மற்ற நான்கு கடமைகளிலும் சுணக்கம் காட்டுபவர்கள், அவற்றில் ஈடுபாடில்லாதவர்கள் ஹஜ்ஜுக்கு செல்வதில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஏன்? சிந்திக்க வேண்டும். ஹஜ்ஜின் நோக்கங்களுக்கு மாறாறன வேறு ஏதோ ஒரு நோக்கத்தை மனதிற்கொண்டு மக்கா பயணம் செய்பவர்களின் ஹஜ்ஜை இறைவன் பொருந்திக் கொள்ள மாட்டான்.
நீங்கள் என்ன நன்மை செய்தாலும் அல்லாஹ் அதனை அறிந்துகொள்கிறான்... ஹஜ்ஜுப் பயணத்திற்கான சாதனங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எனினும், இறையச்சமே மிகச் சிறந்த வழித்துணை சாதனமாகும். அறிவுடையோரே! எனக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 2:197)
ஒரு நூறு வருடங்களுக்கு முன்பு - ஏன் ஓர் ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூட ஹஜ் செய்வது என்பது எளிமையான காரியம் அல்ல. புனித இறையில்லம் அமைந்தள்ள சஊதி அரபிய்யாவில் அன்றைக்கு இந்தியாவில் இருந்த வசதி கூட அங்கு இல்லை. பாலைவனப் பாதைகளும், ஒட்டகங்களுமே அங்கு பயணம் செய்யும் வழித்தடங்களாகவும், வாகனங்களாகவும் இருந்தது. மக்கா எப்போதும் போல, அப்போதும் சீர் பெற்ற, அழகிய நகரமாகவே காட்சி தந்தது. ஒரே நேரத்தில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுக் குவியும் கேந்திரம் என்பதால் மக்கா பெரும் வணிகக் கேந்திரமாகவும் இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ஹஜ் யாத்ரீகர்கள் தரும் வருமானமே அரபுகளின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்தது.
1950இல் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர்தான். இன்று அது கிட்டத்தட்ட 35 லட்சத்தைத் தொட்டு நிற்கிறது. துருக்கியர்களின் ஆட்சியில் மக்கா இருந்த வரை, அதில் எந்த நவீன வசதியும் செய்யப்படவில்லை. 1932இல் மன்னர் அப்துல் அஜீஸ் இப்னு அல் ஸஊத் ஆட்சியில்தான் மக்காவில் ஒவ்வொன்றாக நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இறைவனால் ஹஜ் பயணம் எப்போது கடமையாக்கப்பட்டதோ, அன்றிலிருந்து எல்லாத் துன்பங்களையும், இடர்களையும் சகித்துக்கொண்டு மக்கள் கூட்டங்கூட்டமாக புனித மக்கமா நகரை நோக்கி சென்று கொண்டுதான் இருக்கின்றனர். கி.பி. 1045 அக்டோபர் மாதம்
மக்கா சென்ற நாஸர் ஏ.குஸ்ரோ என்பவரின் அனுபவத்தைக் கேளுங்கள்:-
“மக்கா மலைகளுக்கு நடுவே இருந்தது... ஹரம் ஷரீஃபின் மேற்கு வாசலுக்கு அருகில் மட்டும் மரங்கள் காணப்பட்டன. அபூ குபைஸ் மலையின் கீழ் ஸஃபா குன்றும், வட பகுதியில் மர்வா குன்றும் இருந்தன. இடையில் நிறைய படிகள்... மக்காவில் நிரந்தர குடியிருப்புவாசிகளாக 2 ஆயிரம் பேர் இருந்தனர்... நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருப்பதற்காக வந்த வெளிநாட்டினர் சுமார் 500 பேர்...”
“மக்காவில் கிடைக்கும் தண்ணீர் மிகவும் துவர்ப்பானது... மலைகளிலிருந்து வரும் மழை வெள்ளத்தைச் சேகரிக்க ஏராளமான தொகை செலவழித்து நீர்நிலைகள் கட்டியிருந்தனர்...”
கி.பி. 1183இல் ஹஜ் பயணம் செய்த இப்னு ஜுபைரின் அனுவம் இது:-
“ஜித்தாவிலுள்ள பெரம்பான்மையினர் கருத்து வேற்றுமைகளிலும், சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டு வந்தனர்... அவர்களுக்கு மதமில்லை... ஹஜ் பயணிகளை கிறிஸ்தவர்கள், யூதர்களை விட ஜித்தாவாசிகள் மிக மோசமாக வரவேற்றனர்... ஹாஜிகளின் பணம் உள்ளிட்ட சகல சொத்துக்களையும் கொள்ளையடிப்பதற்கான சிறிய சந்தர்ப்பத்தைக் கூட அவர்கள் பாழாக்கவில்லை... வாளால் சுத்திகரிக்கப்பட்ட ஒரு நகரம் இருக்குமானால் அது ஜித்தாதான்!”
“சிலுவைப் போர் வீரர்கள் 16 ஹஜ் பயணியரின் கப்பங்களை தீ வைத்து நீரில் மூழ்கடித்தனர்... புனித ஹாஜிகளை வரவேற்பதற்காக அரேபியா கண்டத்தில் கட்டப்பட்டிருந்த ஏராளமான வரவேற்பு வளையங்களைத் தீக்கிரையாக்கினர்... மதீனாவில் நுழைந்து, திருநபிகளாரின் வீட்டைக் கொள்ளையடிப்பதே அவர்களின் மற்றுமொரு நோக்கமாக இருந்தது...”
கி.பி. 1503இல் மக்கா சென்ற லுடோவிகா டி.வர்தமா என்ற போர்ச்சுகீசியரின் அனுபவம் இது:-
உலகின் பல பாகங்களிலிருந்தும் இங்கு வியாபாரப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன... இந்தியாவின் ‘மெஜரா’விலிருந்து பலவிதமான ஆபரணங்களும், மலைப் பிரதேசத்தில் கிடைக்கும் பொருட்களும் கொண்டு வரப்படுகின்றன...
இங்கு ஆண் - பெண் ஒவ்வொருவருமே மூன்று அல்லது நான்கு ஆடுகளை அறுத்துப் பலியிடுகின்றனர். (குர்பானியைச் சொல்கிறார்!) முதல் நாளிலேயே 30 ஆயிரம் ஆடுகள் பலியிடப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்... இறையருளை நாடி ஒவ்வொருவரும் அதை ஏழை - எளிய மக்களுக்கு தானம் செய்கின்றனர். இங்கு ஏழைகள் வழிபாட்டுக்கல்ல; இங்கு கிடைக்கும் இறைச்சியைச் சாப்பிட்டு பசியைத் தீர்த்துக் கொள்ளவே இங்கு வருகின்றனர் என்பது எனது தாழ்மையான கருத்து!”
1807இல் மக்கா சென்ற அலீ பா அல் அப்பாஸீ…….
“1807 ஜனவரி 23ஆம் தேதியன்று அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் மொரோக்கோவிலிருந்து புறப்பட்டு, கிட்டத்தட்ட 15 மாதங்கள் பயணத்திற்குப் பிறகு மக்கா வந்து சேர்ந்தேன்... ஒரு நாள் வஹ்ஹாபிக் கும்பல் ஹஜ் கிரியை நிறைவேற்றுவதற்காக மக்காவில் நுழைந்தது... இஹ்ராம் உடையும், வாளும் அவர்களின் அடையாளமாக இருந்தன... அவர்களைக் கண்டதும் மக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர்... அவர்களை எதிர்கொள்ள சிறுவயது பையன்கள் மட்டுமே முன்வந்தனர்...”
இவ்வாறாக ஹஜ் குறித்து அக்கால பயண இலக்கியங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் பல சுவாரஸ்யமானவை. சில திகிலூட்டும் அனுபவங்கள் வாய்ந்தவை. அக்கால முன்னோர்கள் இறைநாட்டம் ஒன்றையே முன்னிறுத்தி, பல இன்னல்களையும், சிரமங்களையும் தாங்கி பயணம் மேற்கொண்டனர். 1960களில் ஹஜ் பயணம் சென்றவர்கள் கூட ஜித்தாவிலிருந்து ஒட்டகம் மூலமே மக்கா சென்றடைந்தனர். அந்தத் தலைமுறையில் இப்போதும் கூட சிலர் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.
எழுபதுகளுக்குப் பிறகு உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. அரபு நாடுகளில் எண்ணெய் பணம் எண்ணற்ற வசதிகளை உருவாக்கியது. இன்று உலகின் நவீன கட்டமைப்பு வசதிகள் உள்ள நாடுகளாக அவை திகழ்கின்றன. அப்போதெல்லாம் குறைந்தபட்சம் ஹஜ் வசதி மட்டும்தான் இருந்தது. இன்று மாதம் மூன்று ‘உம்றா’ குழுக்கள் பயணப்படுகின்றன. உலகின் மிக நவீன - பிரம்மாண்டமான விமான நிலையங்கள் ரியாத், ஜித்தா போன்ற இடங்களில் உள்ளன.
ஹஜ் பயணம் முன்பு போல அஞ்சத்தக்க பயணமல்ல! உம்றாவோ - பத்து நாட்கள் ‘டெலிகேட் டூர்’ என்பது போலாகிவிட்டது. அதனாலோ என்னவோ... அது சார்ந்த மிகையான கொண்டாட்ட மனோபாவங்கள் நம்மிடையே பெருகிவிட்டன. ‘இறையச்சம்’ குறைந்து போய், வாழ்க்கையின் வனப்பு மிகுந்த ஒரு ஜாலி டூர் ஹஜ் என்பது போல ஓர் எண்ணம் தெரிந்தோ, தெரியாமலோ நம் எல்லோரிடமும் காணப்படுகிறது.
பொருள் வசதி உள்ளவர்கள், பணக்காரர்கள்தான் ஹஜ் செய்வார்கள் என்ற கோட்பாடு இப்போதில்லை. நூறு வருடங்களுகு்கு முன்பு ஆயிரம் ரூபாய் மிக மிகப் பெரிய தொகை! ஒப்பீட்டளவில் இன்று 1 லட்சம் பெரிய தொகை அல்ல! சாதாரணமானவர்கள் கூட சற்று முயற்சி செய்தால் 1 லட்சம் ரூபாயை இன்று திரட்டி விடலாம். இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்தால் அது 2 லட்சமாகவும் ஆகக் கூடும்.
எனவே, இன்று பயண ஏற்பாடாயினும் சரி, அதற்காக பொருளீட்டுவதானாலும் சரி... முன்பு போல பலருக்கு சிரமம் தரக்கூடிய ஒன்றல்ல! எனவேதான் இன்று சாதாரணர்களும் கூட ஹஜ் பயணம் மேற்கொள்வதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது வரவேற்கத்தக்க அம்சமே! ஆயினும், இன்று ஹஜ் பயணம் என்பது ஓர் ஆன்மிகக் கடமை என்ற தளத்திலிருந்து விலகி, அதில் தனி நபர்களின் புகழ் பெருமைகளும், கொண்டாட்டங்களும் சற்று தூக்கலாகத் தெரிகின்றன. ஒரு வரிசைக் கிரமப்படி ஹஜ் என்பது இறுதிக் கடமைதான். ஆனால், பெரும்பாலோர் (இது தவறாகவும் இருக்கலாம்) அதற்கு முன்பு உள்ள நான்கு கடமைகளையும் தங்களது வாழ்வில் அனுசரித்து வாழ்கிறார்களா... என்பது கேள்விக்குறியே...! இதனால்தான் சில வருடங்களுக்கு முன்பு, புகழ்பெற்ற ஒரு தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் ஹஜ் குறித்து, “முதன்மை பெறும் இறுதிக்கடமை” என்று எழுதினார்.
முதலில் ஒரு ஹஜ் பயணி இங்கு தனக்குத்தானே ஒரு “ஹீரோ” மனோபாவத்தை வரவழைத்துக் கொள்கிறார்... அல்லது சூழல் அவரை அந்த நிலைக்குத் தள்ளுகிறது. பயணம் சொல்லப் போகும் வீடுகளில் அவரை வெகுவாக உபசரிக்கிறார்கள்... இன்னும் சிலரோ அவரை வேண்டி விரும்பி, தங்களது இல்லங்களுக்கு வர வேண்டும் என விரும்புகிறார்கள்... அல்லது வலிய அழைத்துச் செல்கின்றனர்... விருந்து உபசாரங்களிலும், வரவேற்பு வைபவங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கழிகிறது. அவரது “ஆகிரத்” சார்ந்த கடமையை செய்யப்போகும் ஒருவருக்கு ஏன் இத்துனை விருந்துபசாரங்கள்...? வரவேற்புகள்...?? நமக்குப் புரியவில்லை. தொழுகை போல - நோன்பு போல - ஹஜ்ஜும் ஒருவரது கடமை. தொழுவதற்கோ, நோன்பு வைப்பதற்கோ, ஜகாத் கொடுப்பதற்கோ எந்த ஒருவரையும் நாம் கொண்டாடுவதில்லை; வாழ்த்துவதில்லை... ஹஜ்ஜுக்கு மட்டும் தனித்த “விசேஷம்” ஏன்...? இறைமறை குர்ஆனும், இறைத்தூதர் அவர்களின் வாழ்க்கை வரலாறும் தெளிவுற நமக்குப் பாடமாக இருக்கும்போது இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்கள் ஏன்...?
இன்னும் சில ஊர்களில் தங்களது ஹஜ் பயணத்தை சுவரொட்டி அடித்து, ஊர் முழுக்க விளம்பரம் செய்கின்றனர். ஹஜ் பயணம் புறப்படுவோர் தங்களது செலவில் சொந்தபந்தங்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரையும் வேனில் ஏற்றி, தன்னை வழியனுப்ப அழைத்துச் செல்கிறார்.
எனது சிறு வயதில், எங்கள் பகுதி பிரபலம் ஒருவர் (இன்றும் அவர் இருக்கிறார்!) ஒரு பஸ் நிறைய ஆட்களை ஏற்றி, திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றார். அன்று எங்கள் தெருவே அல்லோகல்லோலப்பட்டது. நானும் உடன் வருவேன் என்று எனது உம்மாவிடம் அழுது அடம்பிடித்ததும் என் நினைவில் பசுமையாக உள்ளது. அதன் பிறகு, அந்தப் பிரபலம் பலமுறை ஹஜ் செய்துவிட்டார். அந்த ஒருமுறை மட்டுமே அவர் ஆட்களைக் கூட்டிச் சென்றார். இதிலுள்ள பெரும் சோகம் என்னவெனில், அவ்வாறு அழைத்துச் செல்லாவிடில் உறவினர்கள் வருத்தம் கொள்கின்றனர். “இலவசமாகக் கூட்டிச் சென்றால், எங்கு வேண்டுமானாலும் போவோம்” என்ற நமது வெகுமக்களின் மனோபாவம் இதில் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
வேறு சில தமாஷ்களும் நடப்பதுண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹஜ்ஜுக்குச் சென்ற எனது மனைவிக்கு, அவளது தோழிகள், உறவினர்கள் என சிலர் சால்வை (துண்டு) போர்த்தினர். அரசியல் மேடைகளே சால்வைகளை மறந்து நீண்ட நாட்களாகிறது. (அங்கு இப்போ ‘பொன்னாடைகள்’தான்!) எனக்கு சிரிப்பாக இருந்தது. சிலரிடம் நான் கேலி போல கேட்டேன்...
“ஹாஜிமாவுக்கு மட்டும்தானா...? ஹாஜிமாவின் புருஷனுக்கும் வேஷ்டி - சட்டை எடுத்துத் தந்தால் என்ன...? குறைந்தா போய்விடுவீர்கள்...??”
“நீ போகும்போது உனக்கும் தருவோம்...!”
“அப்போது என் பெண்டாட்டிக்கு பட்டுச் சேலை எடுத்துத் தர வேண்டும், சரியா...?”
“ஆ... சரி... சரி...”
இப்படிப் போகும் உரையாடல்.
வரவேற்பு வைபவங்கள், விருந்துபசாரங்கள் என தேவையற்ற சுமைகளை ஏற்படுத்தி, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தொல்லை கொடுக்கும் இதுபோன்றவைகளை சமூக நலன் சார்ந்து இனியேனும் நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கொண்டாட்ட மனோபாவம் தவறல்ல! தங்களுக்குப் பிடித்தமான ஒன்றைத்தான் எவரும் கொண்டாடுவார்கள். ஆனால் கொண்டாட்ட வேகத்தில் எதைக் கொண்டாடுகிறோமோ அதைப் பின்னுக்குத் தள்ளிவிடுவது சரியல்ல!
- ஹஜ் பயணத்தில் அதுதான் இங்கு நடக்கிறது!
குழந்தையைக் குளிப்பாட்டி, கழிவு நீரோடு குழந்தையையும் தெருவில் வீசி விடுவது போல இது உள்ளது.
இறை சார்ந்த விஷயங்களில் இறை உவப்பை மட்டும்தான் நாம் நாட வேண்டும். அதற்கு விளம்பர ஜிகினாக்கள் தேவையில்லை. இறைவனுக்கும், நமக்குமான உரையாடலில் எந்த இடைத்தரகருக்கும் வேலை இல்லை. ஹஜ் அந்த அனுபவத்தை நமக்குத் தருகிறது.
- சரியான ஹஜ்ஜை, சரியான முறையில் செய்து, இறை உவப்பைப் பெற நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக! (ஆமீன்.)
தகவல்கள் உதவி:- சமநிலைச் சமுதாயம் - 2009 - நவம்பர் இதழ் |