நள்ளிரவு பன்னிரெண்டு மணி... ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊர் மக்கள்... ஆரவாரமற்ற தெரு வெறிச்சொடிப்போய்க் கிடந்த அர்த்த சாமம்... ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமான இடம் என்பதால் காற்றுக்குப் பஞ்சமில்லை... இருப்பினும் கோடைக்காலம் ஆதலால் வீட்டின் ஜன்னல் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருந்தது...
திடீரெனக் காற்றில் கலந்தப் புகைப்படலமும், ஏதோ எரியும் நெருப்பு வாடையும் வீட்டிலுள்ளவர்களின் தூக்கத்தைக் கலைத்தது. வீடு முழுவதும் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டு பதைபதைத்துக்கொண்டு அடுப்பாங்கறையை நோக்கி தட்டுத் தடுமாறி ஓடிப்போய் பார்த்தால் ஒன்றுமில்லை!
பார்வை தானாகவே ஜன்னல் பக்கம் திரும்ப பதட்டத்தோடு ஓடிச் சென்று வெளியில் எட்டிப்பார்த்த போது அந்த பயங்கரம்! வீட்டுக்கு எதிர்புறத்தில் தனியாருக்குச் சொந்தமான காலி மனையில் படர்ந்திருந்த முட்செடிகளில் செக்கச்செவேலென அக்கினிப் பிழம்புகள் தம் கோரப் பசிக்கு நாட்டு உடைமரங்களை இரையாக்கிக் கொண்டிருதன. அரை பனை உயரத்திற்கு அதன் வீரியம் வெறிகொண்டு எழுந்தெரிந்த காட்சியைப் பார்த்தவுடன் பயத்தால் உடலுறுப்புக்கள் சலனமற்று உறைந்து போயிற்று.
பதைத்தது நெஞ்சம், பதறியது உள்ளம், நடுங்கியது உடல், காற்றின் வேகம் அதிகரிக்கவே அக்கினி தம்போக்கில் தாண்டவமாடத் துவங்கியது.
சற்று நேரத்திற்குள் தெருவாசிகள் விழித்தெழுந்து ஓடிவரவே கூக்குரலும், ஆரவாரங்களும் அந்த இடத்தை ஒரு போர்க்களம் போல் ஆக்கியது. கதவுகள் திறக்கப்பட்டன... தண்ணீருக்காக மோட்டார்கள் போடப்பட்டன... நீளமான பிளாஸ்டிக் (ஓஸ்) குழாய்கள் வழியாகத் தண்ணீரைப் பீச்சியடித்து தீயின் ஆவேசத்தைக் குறைக்க முயன்றனர் ஆசாரிமார் தெரு இளைஞர்கள். ம்ஹும் அது அடங்குவதாக இல்லை!
கட்டுக்கடங்காத தீயின் நிலை கண்டு சிலர் தீயணைப்புப் படையினருக்கு போன் போட்டு நிகழ்வை விளக்கினர். தெருவே கலவர பூமியாகக் காட்சியளித்தது. சின்னஞ்சிறுசுகள் தூக்கக் கலக்கத்தில் துரு துருவென செய்வதறியாது விழித்துக் கொண்டிருந்தனர். தொடர்ந்து போராடி தீயை அணைக்க படாத பாடு பட்டுக்கொண்டிருந்தது ஓரு கூட்டம்.
கடந்த வருடம் நமதூரில் நகராட்சிக்கு எதிர் புறம் முத்தாரம்மன் கோவில் (வடக்கு) தெருவில் என் தாயார் வீட்டுக்கு முன் நடந்த சம்பவம்தான் இது!
ஒரு வழியாக தீயை அணைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட சில மணி நேரத்தில் மணியோசையும் சயரன் ஒலியோடும் தீயணைப்புப் படையினர் வந்து சேர்ந்தனர். செய்வதற்கு ஒன்றுமில்லை. சரி வந்தது வந்து விட்டோம் என அக்கம் பக்கத்தாரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர் அதிகாரிகள். படுவேகமாக பைக்கில் வந்த ஒருவர் அதை ஓரங்கட்டிவிட்டு, ஆவேசத்தோடு தீயணைப்பு படையினரோடு சண்டைக்கு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார். தைக்காத் தெருவில் நான் போட்டிருந்த சாமியானாப் பந்தலின் துணிகளையும் கம்புகளையும் உங்கள் வாகனம் கிழித்தெறிந்து விட்டு வந்துள்ளது. எனக்கு நஷ்ட ஈடு தாருங்கள் இல்லை என்றால் நான் கேஸ் போடுவேன் என மிரட்டிக் கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த தீயணைப்புப்படையின் அதிகாரி,
“ஏன்யா இங்கே தீயெரிஞ்சு மக்கள் செத்தாலும் பரவாயில்லை... உனக்கு உன் பந்தல்தான் பெருசா போச்சா? என்னய்யா ஊரு இது? எந்தத் தெருவுக்குள்ளே போனாலும் கல்யாண வீட்டுப் பந்தல் அதையும் பாதி இடத்துலெ தெருவையே அடச்சு வெச்சிருக்கீங்க? நாங்க எப்படி ஊருக்குள்ளே வர்றது? இனிமேல் ஹெலிக்காப்டர்லெதான் உங்க ஊருக்குள்ளெ வரணும். மூணு இடத்துல பந்தலைக் கடந்து வர முடியாமெ நாங்க தடுமாறிக்கிட்டிருந்தோம். ஊர்க்காரங்கதான் தைக்காத் தெரு வழியாப் போகச் சொன்னாங்க! அங்கே வந்து பார்த்தா அங்கேயும் துணிப்பந்தல் போட்டிருக்காங்க! அது உன் பந்தல்ன்ணு யாருக்குயா தெரியும்? ஏன் இப்படி எங்க உயிரை எடுக்கிறீங்க?”
என தாங்கள் சரியான பாதையில் வந்தும் சரியான நேரத்திற்கு உள்ளே வர முடியாத காரணத்தை விளக்கினர். புரிந்து கொண்ட பந்தல்க்காரர் மன்னிப்புக் கேட்டு விட்டு நைசாக நழுவினார்.
தீயணைப்புப் படையினரின் சேவைகள் மிக உன்னதமானவை. நம் உயிர் காக்க அவர்கள் தம் உயிரைப் பொருட்படுத்தாமல் மக்களை மட்டுமல்ல மிருகங்களின் உயிரையும் காப்பாற்றும் கடமை உணர்வுள்ளவர்கள்.
மணியோசையோடு அசுர வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்து சேர சற்று தாமதித்து விட்டால் மக்களின் மலிவான ஏச்சுக்களும், பேச்சுக்களும் அப்பப்பா... அதையெல்லாம் செவிமடுக்காமல் காரியத்தில் இறங்கி காப்பாற்றுவதில் கவனம் செலுத்துவதே இவர்களின் பணி.
வழித்தடத்தில் ஏற்படும் இடைஞ்சல்களான பந்தல்கள், மின்வடம், குறுகிய சாலை அல்லது சந்துகள், தெருவோரங்களில் குவிக்கப்பட்டிருக்கும் கற்கள் மற்றும் மணல்கள் இவற்றையெல்லாம் தாண்டி ஊருக்குள் வந்து தீயணைத்து உயிர் காப்பது என்பது சாதாரண காரியமல்ல.
எந்த ஊர்களிலும் இல்லாத இந்த வழக்கம் நமதூரில் மட்டும்தான் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதைகளை அடைத்து வைத்துக் கொண்டு தம் வீட்டு வைபவங்களை நடத்தி மகிழும் சுயநலம்!
ஒரு சைக்கிள் போகுமளவிற்கு மட்டும் வழியை விட்டு விட்டு மீதியிடங்களை நாட்கணக்கில் ஆக்கிரமித்து, வரிசையாக விழா எடுத்து சடங்கு சம்பிரதாயங்களை நடத்தும் கொடுமை!!
அழைப்பு, நிக்காஹ், கைப்பிடித்து விடுதல், மாலையில் பெண் சோடிப்பு, இரவு விருந்து, மறுநாள் வலிமா, இப்படி நான்கு நாள் அந்த தெருவை அடைத்து வைத்துக் கொண்டு வேறு யாரும் போக முடியாத நிலை!!!
சாதாரண நாட்களிலேயே இப்படி என்றால், திருமண சீசன் மாதத்தில் சொல்லவே வேண்டாம்! பொதுமக்கள் தமது அவசரத் தேவைக்காக ஆட்டோ, வேன், கார், பைக் போன்ற வாகங்களில் செல்லும்போது போகும் இடமெல்லாம் பந்தல், தட்டி அடைப்பு, தடுப்புக்கயிறு என இருப்பதால் நான்கு தெருக்கள் சுற்றிப் போகும் பரிதாப நிலை.
பிற ஊர்களில் நடக்கும் திருமணங்கள் கோயில், சர்ச், மண்டபங்கள் என யாருக்கும் தொந்தரவில்லாத நிலையில் நடக்கும். நமதூரில் மட்டும் இட வசதியில்லை, நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடத்தினால் சொன்னவன், சொல்லாதவன் எல்லாம் வருவாங்க என சுயநலம் கருதி பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் இச்செயலை நியாயப்படுத்தி வருகின்றனர்.
போதாதக் குறைக்கு பந்தல்காரர்கள் அடுக்கடுக்காக திருமணங்கள் நடக்கவிருப்பதால், முதலில் அமைத்த பந்தலை அகற்றாமல் அப்படியே நாட்கணக்கில் விட்டுவைத்து, அடுத்த தெருவில் அடுத்து நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு அதைப் பயன்படுத்தி, தம் வாகனக்கூலி, பந்தல் பிரிக்கும் கூலி என செலவினங்களை மிச்சப்படுத்த, இவ்வாறு திருமணப் பந்தல்களை அம்போவென அந்த தெருக்களிலேயே நாட்கணக்கில் விட்டு வைத்திருக்கின்றனர்.
இது பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சலை தரும் செயல். இதனால் அவசரத்தேவைக்கு கனரக வாகனங்களான லாரி, தீயனைப்பு வாகனம், வேன்கள் தெருக்களுக்குள் செல்ல இயலாமல் பெரும் சிரமத்திற்குள்ளாவது இயல்பான ஒன்றாகிப் போயிற்று. திருமண வீட்டாரிடம் கேட்டால்,
“கல்யாணம் முடிஞ்சு இரண்டு வாரம் ஆயிடுச்சு... பொண்ணும் மாப்பிளையும் டூர் போயிட்டும் வந்தாச்சு... மருமகன் அடுத்த வாரம் ஸஃபர் புறப்பட்டுப் போறாங்க... பந்தலுக்கு காசும் கொடுத்தாச்சு... பந்தல்காரர்தான் இன்னும் வரவில்லை... நாங்க என்ன செய்ய? எங்க வீட்டுக்குள்ளேயும் காற்றும் வெளிச்சமும் வராமெ நாங்களும்தான் ரெம்பவும் கஷ்டப்படுகிறோம்...” என்பார்கள்.
பொதுவாக இதுபோன்ற - நாட்கணக்கில் விட்டு வைத்திருக்கும் பந்தல் அல்லது தெருக்களை அடைத்து மேடை போட்டு நடத்தும் திருமணங்கள் இவற்றால் பாதிக்கப்படுவோர் பற்றிய எண்ணம் நமக்கில்லாமையே இதற்கு காரணம். நம் நகராட்சியும் தன் பங்கிற்கு பந்தல்காலுக்கு இவ்வளவு என்றும், சந்தோஷமா இவ்வளவு என்றும், வரியும் - படியும் வாங்கிச் செல்வதோடு சரி. அதுக்கப்புறம் அந்த பக்கமே தலை வைத்து படுப்பதில்லை.
ஒருவேளை அந்தப் பகுதியில் தீ விபத்தோ அல்லது மாரடைப்பு, மயக்கம், மரணம் போன்ற எதிர்பாராத சம்பவங்களோ நடந்தால் அவர்களின் நிலமை என்ன? ஒரு ஆம்புலன்ஸோ தீயணைப்புப் படையினரின் வாகனமோ அந்த தெருவுக்குள் வர இயலுமா? சரி, ஓர் அவசரத் தேவைக்கு ஆட்டோவில் செல்லும் சாதாரண நோயாளிகள் கூட தெருத் தெருவாக சுற்றிச் செல்லும் நிலமையைத்தானே இந்த திருமண சீசன் நாட்களில் நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்?
ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டு மூதாட்டி பாத்ரூமில் வழுக்கி விழுந்து, கனுக்கால் எலும்பு விலகி, படாத பாடு பட்டார்கள். பதறியடித்துக் கொண்டு அவசரமாக ஆட்டோக்கு போன் போட்டால், அது வந்து சேர அரை மணி நேரம் பிடித்தது. தெருவெங்கிலும் திருமணப் பந்தலில் அழைப்பு. KMT மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தெருத்தெருவாய் சுற்றினார்கள். பாவம் கால் வலியில் அந்த மூதாட்டி பட்ட அவஸ்த்தையை நினைத்தால்... இப்படி பாதையை அடைத்து வீட்டில் வைத்து நடத்த வேண்டிய விஷேசங்களை வீதியில் வைத்து நடத்துவதால் ஏற்பட்ட விபரீதத்தின் விளைவுகளை எண்ணி மனம் வெதும்புகிறது. பாதிக்கப்பட்டோரது மன உளைச்சலும் பதுவாவும் (சாபமும்) வாழப் போகும் அந்த தம்பதியரைத் தாக்காமல் இறைவன் பாதுகாக்க வேண்டும்.
இதில் மார்க்க சட்டங்களோ, மாநபிகளார் கற்றுத்தந்த பொதுப்பாதை நியதிகளோ பேணப்படுவதில்லை. இஸ்லாமியர்கள், உலமாக்கள், மத்ரஸாக்கள் எனப் பல பெருமைகளுக்குச் சொந்தமான நம் காயலில் வீடுகள் கட்டப் பயன்படுத்தும் சல்லிக்கற்கள், செங்கல்கள், மண் குவியல்கள், என அனைத்தும் மக்கள் நடமாடும் பொதுப்பாதையில் குவிக்கப்பட்டு, காங்க்ரீட் போடும்போது தெருக்களில் கலவை வாகனங்களை நிறுத்தி வைத்து, பொது வழியை அடைத்து பிறருக்கு துன்பம் இழைத்து வருவது எவ்விதத்தில் நியாயம்?
போகும் பாதையில் கிடக்கும் ஒரு முள்ளை அகற்றி விட்டுச் செல்வோருக்கு அளவிலா நன்மைகளை அள்ளித் தரும் சன்மார்க்க சித்தாந்தங்கள் இங்கு மட்டும் ஏன் காற்றில் பறக்க விடப்படுகின்றது? அல்லாஹ் பாதுகாத்தான்... இதுவரை தீச்சம்பவத்தால் உயிர்ப்பலிகள் ஏதும் நடக்கவில்லை. மாறாக, குடியிருப்புப் பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடந்து, தீயணைப்புப் படையினர் ஊருக்குள் வர இயலாமல் போயிருந்தால், இத்தகைய திருமணப் பந்தல்களால் உயிரிழப்பும், பொருள் சேதமும் ஏற்பட்டிருக்கக் கூடும்.
இனியாவது வருங்காலங்களில் ரோட்டை அடைத்து வைத்து விழாக்கள், வைபவங்கள், திருமணங்கள் நடத்துவதை நாம் முற்றிலுமாகத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். வாழையடி வாழையாக தொன்றுதொட்டு நடந்துவரும் இவ்வழக்கத்தை நாம் கைவிட்டு, யாருக்கும் இடைஞ்சல் இல்லாத இடத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி, நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விப்போமாக!
வல்லோனின் நல்லருள் நம் எல்லோருக்கும் கிடைக்க பிரார்த்திக்கின்றேன்.
-ஹிஜாஸ் மைந்தன். |