“ஏங்க... என் மாமி மக பீவி ஃபாத்திமாக்கு பொம்பள புள்ள பொறந்திருக்குதாம்...”
“அப்படியா? சந்தோஷம்... புள்ளைய பாக்க போகனும்பியே...?”
“ஆமாங்க... என்னவாச்சும் வாங்கிட்டுப் போகனுமே...? என்ன வாங்கலாம்...?”
“பஜார்ல ஒரு ஸ்டேஷனரி ஷாப் குழந்தைகளுக்குன்னே தொறந்திருக்காங்களாம்... அங்க புதுப்புது மாடல்கள்ல பால் போச்சி, சூப்பி, செரிலக் - நெஸ்டம் போன்ற மாவு அயிட்டங்கள், டயாபர்ஸ், தாய்க்கு பால் சுரக்க மதர் ஹார்லிக்ஸ் எல்லாம் ஃப்ரெஷ்ஷா வச்சிருக்காங்களாம்... அதோட நா துபையிலேர்ந்து கொண்டு வந்த ஜான்ஸன் அன்ட் ஜான்ஸன் பேபி கிட்டையும் எடுத்துட்டுப் போயி குழந்தைக்கு கொடுப்போம்...”
புதிதாகப் பிறந்த குழந்தையைக் காணச் செல்லும் பொதுமக்கள் பொதுவாகப் பேசிக்கொள்பவைதான் இவை. இது நம் யாவர் வீட்டிலும் சாதாரணமாகக் காணக் கிடைக்கும் காட்சிகள்.
தாய்ப்பாலை விஞ்சிய உணவு என்று குழந்தைக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், இன்றுள்ள தாய்மாருக்கு பத்து மாதம் சுமந்து பெற்ற தங்கள் குழந்தையின் நலனை விட, தம் உறக்கம் கெடக்கூடாது என்பதுதான் முதன்மைக் கவலையாக உள்ளது.
குழந்தையின் பால்குடிப் பருவம் இரண்டாண்டுகள் என்கிறது திருமறை குர்ஆன். “குழந்தை பிறந்தது முதல் 6 மாதங்கள் வரையாவது அதற்கு தாய்ப்பால் கொடுங்கள்” என்று, மனசாட்சியுள்ள மருத்துவர்கள் இன்றளவும் வலியுறுத்திச் சொல்லிக்கொண்டேதான் இருக்கின்றனர். ஆகக் குறைந்தது 4 மாதங்களாவது கொடுக்கலாம். ஆனால், பிறந்து சில நிமிடங்களே ஆன நிலையில், உடனடியாக புதிய பால்போச்சைக் கையிலெடுத்து, லக்டொஜன் மாவைக் கலக்கி பச்சைக் குழந்தைக்குக் கொடுக்கும் மாபாதகச் செயலை என்னென்று சொல்ல?
காரணம் கேட்டால் உடனே கிடைக்கும் விடை: “வாப்பா, நீ சொல்றது அந்தக் காலத்துக்கு சரி! இப்ப நாம அந்தக்காலத்து மனுஷி மாதிரியா உணவு உண்கிறோம்...? இன்னைக்குள்ள உணவு முறைக்கு, எந்தத் தாய்க்கும் போதிய அளவு பால் சுரப்பதில்லை...”
ஒரு பைசா செலவில்லாமல், சில வினாடிகள் கூட சிந்திக்க நேரமெடுக்காமல், நுனி நாக்கில் தன் கண்டுபிடிப்பை உரக்கச் சொல்வாள் பிள்ளையைப் பெற்றவளின் தாய். வெளிநாட்டிலிருந்து, ஒரு மாத விடுமுறையில் ஊர் வந்த புருஷனோ, “இருக்கப் போவது ஒரு மாசம்... அதுலயும் பயணத்துல சில நாட்கள் கழிந்துவிடும்... இருக்கும் இருபது நாள்ல அத இத பேசிட்டு இருக்காம, எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இருப்போம்...” என்று விரும்பாமவுனியாகி விடுவார்.
காயல்பட்டினத்தில் நடந்த நிகழ்வு ஒன்று: ஒரு பெண்ணுக்கு புதிதாகக் குழந்தை பிறந்தது. மருத்துவமனையிலேயே பால் புட்டி கொண்டு மாவு கலக்கிக் கொடுக்க ஆயத்தப்படுவதைக் கண்ட பெண்ணின் கணவன் அதைத் தவிர்க்கக் கூற,
“இன்னங்க... தயவுசெய்து இதுலல்லாம் தலையிடாதீங்க... பிள்ளைக்குத் தேவையான பால் சுரந்தால் நான் ஏன் இப்படிச் செய்யப் போகிறேன்...?” என்றாள் பிள்ளையைப் பெற்றவள்.
“சரி, ஒருவேளை அப்படித்தான் போல...” என்று எண்ணியவனுக்கு - பச்சைக் குழந்தைக்கு பால் புட்டியைத் திணிப்பது ஏனோ சரியாகவே படவில்லை. உடனடியாக, விவரமறிந்த தன் தாயிடம் சென்று விளக்கம் கேட்க,
“புள்ளைய படச்சவன் அதுக்கான ரிஸ்கையும் (உணவாதாரத்தையும்) சேர்த்தேதான் படைக்கிறான்... முன்னாடி இருந்த தாய்மாருக்கு வேறு வழியில்லே... தாய்ப்பால் கொடுத்தே ஆகனும்னு நிர்ப்பந்தம் இருந்ததால தான் உறங்க வேண்டிய நேரத்தையெல்லாம் குழந்தை உறங்கும் நேரத்திற்கேற்ப மாற்றியமைத்துக்கொண்டு, குழந்தை சிணுங்கும்போதெல்லாம் அதற்குத் தயங்காமல் தாய்ப்பால் தருவாள்... முதல் ரெண்டு நாளைக்கு சரியா வராதுதான்... குழந்தை வாய் வைத்து தொடர்ந்து உறிஞ்சும்போதுதான், சுரப்பிகள் நன்றாக இயங்கி, பால் தொடர்ந்து சுரக்க வாய்ப்பேற்படும்...
அன்னைக்கி தாய்க்கு சுகமில்லாமல் போனால் கூட, தன் குழந்தைக்குப் பால் கொடுக்க - குழந்தை பெற்ற வேறு பெண்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது... அதனால் பால்குடி உறவுகளும் வளர்ந்தது... இந்தக்காலத்துல, பால்மாவு டப்பா ஈஸியா கிடைக்குதில்ல...? அதனால தானும் அவதிப்படத் தேவையில்லே... யாரையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய அவசியமும் இல்லே... இன்றைய தாய்மாருக்கு அவங்க நிம்மதியா இருக்கிறதுதான் பெருசாப் போச்சு...” என்றாள் தாய்.
தனக்குக் கிடைத்த இந்தச் செய்தியை அவன் உடனடியாகத் தன் மனைவியிடம் திணித்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. மனைவிக்கு மெதுவாகப் பாடம் நடத்தினான் பக்குவப்பட்ட அந்தக் கணவன். அதிகாரத்தால் கிடைக்காத பயன் அன்பால் கிடைத்தது. தன்னைப் பெற்ற தாய் கூட புட்டிப்பாலைக் கொடுக்க வலியுறுத்திய நிலையிலும், கணவன் தந்த பாடத்தால், தன் அவதியைக் கூட பொருட்படுத்தாமல், “தாய்ப்பால் மட்டுமே என் குழந்தைக்குக் கொடுப்பேன்” என உறுதியெடுத்தாள். செய்தும் பார்த்தாள். மூன்றே நாட்களில், அளவுக்கதிகமாக பால் சுரந்தது.
இது ‘கராமத்’ எனும் அற்புதமல்ல. உடல் நலமுள்ள யார் முயற்சித்தாலும் இந்த அனுபவம் கிடைக்கும். பாவம்! தன் மகளுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுத்த சரித்திரத்தையும் அந்த மூத்த தாய் மறக்கும் நிலைதான் இன்று எல்லோர் வீட்டிலும். விதிவிலக்குகள் இருக்கலாம்.
பசிக்காக குழந்தை அழுகிறது... பால் குடிப்பதற்காக அதன் நாக்கும், முரசும் இறுக ஒட்டிக்கொண்டு உறிஞ்சுகிறது... அப்படிப்பட்ட குழந்தைக்குப் போய் ரப்பர் சூப்பியை வாயில் திணிக்கவும் தாய் என்ற பெயரிலிருக்கும் பலரால் முடிகிறது. பாலுக்கு ஏங்கும் குழந்தையின் அழுகையை நிறுத்த சூப்பியைத் திணித்து ஏமாற்றும் இந்தத் தாயை, நாளை அக்குழந்தை வளர்ந்து - ஆளாகி ஏமாற்றும்போது மட்டும், எல்லாத் தாயும் சொல்லும் ஒரே வாசகம்:
“உன்னப் பெத்து வளக்க நா எவ்ளோ கஷ்டப்பட்டேன்... இப்படி ஏமாத்துறியே...?”
உடலிலிருந்து வெளியாகும் கழிவுதான் சிறுநீரும், மலமும். அது உள்ளே இருந்தால் உடல்நலனைக் கெடுக்கும் என்பதால், சிறிது நேரம் கூட வைத்திருக்காமல் வெளியே தள்ளும் இயல்பை இறைவன் எல்லோர் உடலுக்கும் தந்திருக்கிறான். “ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்க முடியாது” என்ற பழமொழிக்கேற்ப, தனக்கு வந்தால் தனியிடம் தேடுவோர், தன் குழந்தையின் அதே கழிவை டயாபர்ஸ் (பாம்பர்ஸ்) கொண்டு பிஞ்சு உடலோடு சேர்த்தே பல மணி நேரம் வைப்பது யாரிடம் பெற்ற அறிவோ?
என்றாவது வெளியிடங்களுக்குச் செல்லும்போது அவதிப்படக் கூடாதே என்பதற்காக “கண்டுபிடிக்கப்பட்ட” இந்த டயாபர்ஸ், இன்று குழந்தையின் தவிர்க்க முடியாத - அன்றாட உடையாகவே மாறிப்போய்விட்டது.
“புள்ளே... என் ஃப்ரெண்டு அடுத்த வாரம் ஊர் வர்றான்... வீட்டுக்கு ஏதாவது சாமான் இருந்தால் தா! கொண்டு போகிறேன்... என்றான். என்ன வேணும்? சொல்லு!”
“எனக்கு என்னங்க வேணும்...? எல்லாம் செறப்பா ஈக்கிது... நம்ம புள்ளைக்குத்தான் பேம்பர்ஸ் முடியப்போகுது... ஒரு பாக்ஸ் பேம்பர்ஸ் மட்டும் அனுப்பி வைங்கங்க... ஒரு மாசத்துக்கு ஓடும்...”
நட்புக்காகக் கேட்ட நண்பனின் மொத்தப் பயணப் பொதியின் பெரும்பகுதியையும் இதுதான் அடைக்கும் என்பதைக் கூட கருத்திற்கொள்ளாமல், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது டயாபர்ஸ்.
“ஏம்மா... இத ஊருலயே வாங்கலாமே...?”
“ஆங்... ஊருல ஒழுங்கானது கிடைக்குமா...? ஃபாரின்ல தயாரிக்கிற மாதிரி வருமா...?”
ஆகா! என்னே புள்ள பாசம்!!!
குழந்தைப் பருவம் முழுக்க டயாபர்ஸையே மாட்டி விடுவதால், குட்டி போட்டு நஞ்சு தொங்கிய நிலையிலுள்ள ஆடு போல, காலை அகட்டி அகட்டி நடக்கப் பழகிய குழந்தை, நாட்கள் செல்லச் செல்ல, தனக்கு சிறுநீர் வருவதையோ, மலம் வருவதையோ - வாய் பேசத் தெரிந்தும் சொல்லத் தெரியாத அளவுக்கு வளர்ந்து, அதே தாயின் கைகளால் தர்ம அடி வாங்குகிறது. வளர்ந்து ஆளான பிறகு, அதன் பழக்கவழக்கத்தில் சோம்பேறித்தனம் ஒட்டிக்கொள்கிறது.
இதுவே, அவதி பாராமல் - சிறுநீர் கழிக்கும்போதெல்லாம் சுத்தம் செய்யும் பெண்ணின் குழந்தை போதிய அறிவு வளர்ச்சியுடனும், தன் மழலை மொழியாலேயே, “உம்மா... உச்சா...” “உம்மா... சீ...” “உம்மா... ஆயி...” என்று சொல்வதை, இன்றுங்கூட சில குழந்தைகளிடம் கேட்க வாய்ப்பு கிடைக்கும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாகத்தான் உள்ளது.
மனதில் பட்டது... எழுதிவிட்டேன். இது சரியெனப்பட்டு, நூற்றில் ஒருவரிடமேனும் மாற்றம் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியே!
மேற்சொன்னவை மட்டுமல்ல! மழலையருக்குப் பிரியமே மண்ணில் புரண்டு விளையாடுவதுதான். அவ்வாறு விளையாடும்போது, நிலத்தோடு குழந்தைக்குள்ள ஆத்மார்த்தமான தொடர்பு அவர்களின் ஆளுமையைத் தீர்மானிக்கும் அளவுக்கு உள்ளது. சுகாதாரம் என்ற பெயரில் இன்று அது தடுக்கப்படுவதால் ஏற்படும் இழப்புகள் குறித்தும் நிறைய எழுத ஆவலுள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது எழுத நாட்டம்.
|