“ஜன்னலில் ஒரு சிறுமி ...!” (The little girl at the window)
ஆசிரியர்: தொத்தோசங் என்ற டெட்சுகோ குரயோனகி
தமிழில்: சு.வள்ளி நாயகம், சொ.பிரபாகரன்
விலை: ரூ.50/=
வெளியீடு:
இயக்குனர்,
நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா,
புது தில்லி - 110 016.
இன்று கல்வி குறித்து நிறைய பேசப்படுகிறது. எழுதப்படுகிறது. கல்வி வணிகமயமாகி விட்டது.உலகமயமாகி விட்டது என்ற கூப்பாடு நாடெங்கும் அதி உச்சத்தில் கேட்கிறது. பொதுவாக கல்வியைப்பெற ஆகும் செலவு குறித்தே எல்லோரது கவனமும் செல்கிறதேயன்றி ,எத்தகைய கல்வி நமது குழந்தைகளுக்கு கிடைக்கிறது எனபது குறித்து யாரும் யோசிப்பதில்லை. குழந்தைப் பருவத்தில் பெற்றோர் இடும் முதலீட்டுக்கு லாபம் சம்பாதிக்கும் நவீன வியாபார இயந்திரமாகவே தமது குழந்தைகளை பெற்றோர்கள் கருதுகின்றனர் என்றால் அது மிகையில்லை.
இவ்வாறு பேசப்படும் கல்வி கூட உயர்நிலைக் கல்வி ,அல்லது மேல்நிலைக் கல்வி என்பதோடு முடிந்து போகிறது. குழந்தைப்பருவ கல்வி குறித்து நம்மில் யாரும் சிந்திப்பதேயில்லை. அடி உரம் போட்டால்தான் மரம் நன்கு வளரும். ஆனால் என்ன உரம் இடப்பட்டது எனபது குறித்து இங்கு யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் அதில் கிடைக்கும் கனிகளுக்கு மட்டும் நாம் இப்போதே ஆசைப்படுகிறோம். வளர்ந்து வரும் ஒரு சமூகத்தின் அடிக்கட்டுமானம் போன்றவர்கள் குழந்தைகள். அந்தக் குழந்தைகளுக்கு இன்று எவ்வாறான கல்வி புகட்டப்படுகிறது ..?அது சரியான கல்விதானா ..?இந்தக் கல்வியை உள்வாங்கும் ஒரு குழந்தை நாளை என்னவாக ஆசைப்படுவான் ..?அல்லது என்னவாக மாறுவான் ..?சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆங்கிலக் கல்வியும், மதிப்பெண் விழுமியம் சார்ந்த கல்வியே இன்று பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் அதிகம் விரும்பப்படுகிறது. 95 மார்க் எடுத்தவன் 96 மார்க் எடுத்தவனை விட திறமையில் குறைந்தவன். அந்த ஒரு மார்க் எத்தனையோ குழந்தைகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. மேலும் குழந்தைகளின் இயல்பான மலர்ச்சிக்கு இன்றைய கல்வி வித்திடுவதில்லை. வகுப்பறை என்னும் நான்கு சுவர்களுக்குள் அவர்களை அடைத்து ,ஆசிரியர்களின் கேள்விக்கணைகள் என்ற அம்பால் அவர்களை துளைத்து எடுக்கிறோம். குழந்தைகள் கேள்வி கேட்க ஆசிரியர்கள் என்றாவது வகுப்பறையில் பதில் சொல்லியிருக்கிறார்களா ..?அல்லது குழந்தைகள் கேள்வி கேட்கத்தான் முடியுமா ..?
அப்படிக் கேட்டால் அவன் அதிகபிரசங்கி என்று ஆசிரியரால் தலையில் தட்டி உட்கார வைக்கப்படுவான். அல்லது பிற மாணவர்கள் மத்தியில் அவமானப்படுத்தப் படுவான். இதுதானே உண்மை ..?கேள்விக்கணைகள் மூலம் அவர்களுடைய கற்றல் திறனை சிதைப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமையில்லை. யோசிக்கும் போது இந்த வகுப்பறைகள் யாருக்குத் தேவை ..?ஆசிரியர்களின் “வளமான பொருளியல் “வாழ்க்கைக்கு மட்டுமே இந்த வகுப்பறைக் கல்வி துணை புரிகிறது.
“குழந்தைகள் சிரிக்க,அழ, நடக்க ..ஓட..ஆட பாட ..பிடிக்க ..வெறுக்க..விழைய..ஆசைப்பட..சுவைபார்க்க..என்று அனைத்தையும் வகுப்பறை சுவர்களுக்கு வெளியேதான் கற்கின்றனர் “ என்று கூறுகிறார் தென் ஆப்ரிக்க கல்வியாளர் இவான்இலிட்ஸ். இன்று கற்றலில் இன்பம், செயல்முறைக் கல்வி என அரசு புதிது புதிதாக பரிசோதித்துப் பார்க்கிறது. வகுப்பறைக் கல்விக்கு பதிலாக புதிய புதிய மாற்றுக் கல்வித் திட்டங்களை கல்வியாளர்கள் அரசுக்கு பரிந்துரை செய்த வண்ணம் உள்ளனர். ஆனால் வல்லநாடு மலையாவது அசைந்து விடும். நமது அரசில் உள்ள கல்வி புரோக்கர்கள் அசைய மாட்டார்கள்.
இந்தச் சூழலில் இன்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானில் ஒரு கல்வியாளர் இயற்கையோடு இயைந்த கல்வித் திட்டத்தை முயன்று பார்த்திருக்கிறார். அதற்காக தானே தனது சொந்த முயற்சியில் ஒரு பள்ளியையும் துவக்கி செயல்பட்டிருக்கிறார். அந்தப் பள்ளியில் சேர்ந்து குன்றாத ஆர்வத்தோடு கற்ற ஒரு மாணவிதான் தொத்தொசங். .அவருடைய கற்றல் அனுபவம்தான் இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம்.
1937 ல் ஜப்பானில் கொபயாஷி என்பவரால் துவக்கப்பட்டது “தொமோ ஹாகுன் “பாடசாலை. இவர் ஜப்பானில் ஜப்பானிய இசை ,உடலிசைக் கழகத்தை நிறுவியதில் முக்கியமானவர். அந்த வகையில் இவர் ஜப்பானியக் கல்வியாளர் பலருக்கும் பழக்க மானவர். அவரே அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
அவரது நோக்கமாக இவ்வாறு சொல்கிறார் ,” ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வார்ப்பு அச்சுக்களில் பிள்ளைகளைப் பொருத்தாதீர்கள். அவர்களை இயல்பாக வளர விடுங்கள் அவர்களது எதிர்பார்ப்புக்களை நசுக்காதீர்கள் அவர்களுடைய கனவுகள் உங்களுடையவற்றையும் விட பெரியவை “
அதே போல அன்றைய ஜப்பானில் நடைமுறையில் இருந்த வகுப்பறைக் கல்வியை புறக்கணித்துவிட்டு இயற்கையோடு இணைந்து புதிய கல்விமுறையை அவர் உருவாக்கிக் காட்டினார். பிள்ளைகளின் ஆளுமையையும்,சுய மரியாதையையும்,விருத்தி செய்வதற்கு போதுமான அளவுக்குச் சுயாதீனக் கலைத்திட்டத்தையும், குறைந்த தொகை மாணவர்களைக் கொண்ட வகுப்புக்களையும் அமைப்பதில் அவர் ஆர்வம் காட்டினார். படிப்பு காலையில் நடந்தது. உலாவச் செல்லுதல், தாவர மாதிரிகளைச் சேகரித்தல், விளக்கப்படம் வரைதல், பாட்டுப்பாடுதல், போன்றவை மாலையில் நடை பெற்றது.
தொமோ பள்ளிப் பிள்ளைகள் பள்ளி நேரம் முடிந்த பின்பும் கூட வீட்டுக்குச் செல்ல விரும்பவில்லை. அவ்வாறே காலையில் பள்ளிக்கு வருகைதர தாமதித்ததும் இல்லை இதுவே இப்பள்ளியின் சிறப்பு.
இப்பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறை என்று எதுவும் இல்லை. கைவிடப்பட்ட ஆறு ரெயில் பெட்டிகளே இதன் வகுப்பறைகள். எங்கும் சூழ செடி கொடி,மரங்கள் நிறைந்த அற்புதமான சூழல். பக்கத்தில் இலைகள் செறிந்து விழுந்து கிடக்கும் நீச்சல் குளம். குறிப்பிட்ட பாடவேளை என்று எதுவும் கிடையாது. விரும்புபவர் படிக்கலாம். அல்லது படம் வரையலாம். அல்லது ஆசிரியரிடம் விளக்கம் கேட்கலாம். அல்லது கரும்பலகையில் எழுதலாம். மேசை நாற்காலிகளை எத்திசை நோக்கியும் போட்டுக்கொள்ளலாம்.
முறையான பள்ளியில் ஒரே ஒரு வருடம் மட்டுமே படித்த தொத்தொசங் என்னும் மாணவி அங்கு கல்வியைத் தொடர விரும்பாமல் இப்பள்ளிக்கு ( தொமோ ஹாக்குன் ) தனது தாயுடன் வருகிறாள் .பள்ளியைப் பார்த்த உடனேயே அப்பள்ளியின் சூழல் அவளுக்கு பிடித்து விட்டது. தலைமை ஆசிரியர் கொபயாஷி அவளிடம் வீட்டில் இன்று என்ன நடந்தது ..? எல்லாவற்றையும் சொல்லு ‘என்று புன்னகையோடு கேட்கிறார். பழைய பள்ளியில் இவ்வாறு அவளை யாருமே கேட்டதில்லை. தொத்தொசங் மகிழ்ச்சியோடு சொல்கிறாள் .ஆசிரியர் ..இன்னும் ..இன்னும் ..என்கிறார். தொத்தொவுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறாள்.
மதிய உணவு வேலை வருகிறது அப்பள்ளியில் படிக்கும் மொத்த ஐம்பது மாணவ மாணவியர் கூட்டரங்கில் அவரவர்களின் சாப்பாட்டுக் கூடையை எடுத்துக்கொண்டு வட்டமாக அமர்கின்றனர். எல்லோரும் அவரவர்களின் சாப்பாட்டுப் பாத்திரத்தை திறந்து சாப்பிட ஆயத்தமாகின்றனர். கொபயாஷி சுற்றி வந்து எல்லோரது உணவு வையும் பார்வையிடுகிறார். பிறகு சொல்கிறார். “ கடலில் இருந்து ஒண்ணு ..தரையில் இருந்து ஒண்ணு ..” தொத்தொவுக்கு முதலில் அவர் சொல்வது புரியவில்லை. பிறகு கொபயாஷி விளக்குகிறார். “கடல் உணவும் ,தரை உணவும் முக்கியம் “ ஜப்பான் நான்குபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு.
“ மெல்லுங்கள் மெல்லுங்கள் உணவை நன்கு மெல்லுங்கள்
சோறு, காய்கறி மெல்லுங்கள்
இறைச்சி மீன் மெல்லுங்கள்
எல்லாமே மெல்லுங்கள். நன்றாக உண்ணுங்கள் ..!”
என்ற பாடலும் பாடப்படுகிறது.
தொதொசங் வகுப்பறையில் ஒன்பதே மாணவர்கள்தான் இருந்தனர். இங்கு கற்றல் அதற்கு உரிய முறையில் நிகழ்கிறது. ஆசிரியர் பேசும்போது அவர் வாயையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும் முறை இங்கே இல்லை.
இந்த முறைமை பிள்ளைகளை அவதானிப்பதற்கு ஆசிரியருக்கு துணை புரிகிறது. பிள்ளைகள் மேல்வகுப்புக்குச் செல்லும்போது அவர்கள் எத்தனை விரும்புகிறார்கள் ..எவ்வாறு சிந்திக்கிறார்கள்..அவர்களது தன்மை எத்தகையது ... என்பதை ஒருவர் உணருவதற்குத் துணை புரிகிறது.
இவ்வாறு தொமோஹாகுன் பள்ளியில் சிறுமி தொத்தொசங் தனது கல்வியைத் தொடர்கிறாள் ஆறே வகுப்புகள் இருக்கும் அப்பள்ளியில் தொத்தொசங் தனது கல்வியை நிறைவு செய்யும் முன்னரே இரண்டாம் உலகப்போர் குறுக்கிடுகிறது. அமெரிக்க போர்விமானங்கள் சரமாரி குண்டுகள் பொழிகிறது. மக்களின் வாழ்க்கை திசை தெரியாமல் தடுமாறுகிறது. போரின் அழிவு கொடிய வியாதியாக மாறுகிறது.
ஒரு B-29 போர்விமானம் வீசிய குண்டு தொமோ பள்ளியின் மீது விழுகிறது. மொத்த ரயில் பெட்டி வகுப்பறையும் சிதறிப்போகிறது.
இவ்வாறாக ஒரு கல்வி முறைமைக்கு போர் முடிவு கட்டுகிறது. பிறகு எப்போதுமே அவ்வாறான ஒரு பள்ளியை யாராலும் உருவாக்க முடியவில்லை. 1963 ஆம் ஆண்டு திரு.கொபயாஷி காலம் சென்றுவிடுகிறார்.
ஜன்னலில் ஒரு சிறுமி என்ற இந்நூல் ஆங்கிலத்திலும் ஏற்கனவே வெளியாகியுள்ளது. ஜப்பானிய புத்தக வெளியீட்டு வரலாற்றில் மிக கூடுதலாக விற்பனையாகி இருப்பது இந்நூல்தான். பல விருதுகளையும் இப்புத்தகம் பெற்றிருக்கிறது. சுதந்திரம்.வினோதம் ,அன்பு போன்ற பண்புகளை ஒரு பள்ளியின் உள்ளே கொண்டுவந்து ஒரு சிறுமியின் கண்ணோட்டத்தில் இந்நூலின் பக்கங்கள் விரிகின்றது.
161 பக்கங்கள் கொண்ட இந்த நூலை தமிழில் மிக அழகாக மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
கல்வித்துறை சார்ந்தவர்கள் மட்டுமில்லாது எல்லோரும் படிக்கவேண்டிய நல்ல நூல் இது.
|