“ரயில்
ஒரு மந்திரக்கம்பளம்.
பார்வை தொடாத நிலவெளிகள் வழியே பறக்கிறது.
அதிகாலையின் பனி சீற வேகமெடுக்கிறது.
ஆறுகளைக் கடக்கிறது.
மலைகளைச் சுற்றி வருகிறது.
மழையில் நனைந்தபடி தாழ நகர்கிறது.
கால யதார்த்தத்தை இழக்கிறது.
பயிர்வெளிகளைக் காற்றின் கைகளால் வருடுகிறது.
மனிதன் மூட்டையாக்கி வைத்திருந்த
எல்லாமும்
தொலைந்துபோகச் செய்கிறது.
எதன் மீதோ
நழுவி நழுவிச்செல்கிறது. “
------ கவிதாயினி குட்டி ரேவதி
கொல்கத்தாவிற்கு நான் சென்ற வாரம் சென்றிருந்தேன். அங்கு செல்வது ஒன்றும் எனக்கு ஒன்றும் புதிதில்லை. எழுத்து மேடைக்கு எழுத தொடங்கி,
கேமிரா வாங்கிய பிறகு நடக்கும் பயணம் என்பதால் இந்த பயணத்தில் என் கண்களையும் காதுகளையும் திறந்து வைக்க வேண்டி இருந்தது.
எழுத்துக்கும், கேமிராவிற்கும் தீனி போட்டாக வேண்டுமே!!
சென்னையிலிருந்து வண்டி ஏறியாகி விட்டது. என்னுடன் கேரள மாநிலம் கொச்சியில் பணியாற்றும் இளம் கடற்படை வீரரும் பயணித்தார்.
விடுமுறையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவர் இந்தியாவெங்கும் பணியாற்றியுள்ளார். அந்த பட்டறிவின் அடிப்படையில் அவர் சொன்னார். “
இந்தியாவில் புது தில்லியில் மட்டும்தான் குறைந்த செலவிலும் அதிக செலவிலும் வாழ முடியும். “
இது தொடர்பாக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் நான் அவரிடம் , “ இந்தியர்களிலேயே நல்ல இயல்பு கொண்டவர்கள் எந்த மாநிலத்தவர்கள்? “
எனக்கேட்டேன். அதற்கு அவர் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த சிக்கிம் மாநிலத்தவர்தான் மிகவும் நட்பு பாராட்டும் தன்மை கொண்டவர்கள் என்றார்.
பொதுவாகவே தொடர்வண்டிகளில் பயணிக்கும் வட மாநிலத்தவர்கள் மிகவும் தாறுமாறாக நடந்து கொள்வார்கள். தமிழர்களும், கேரளீயரும் இதில்
ஓரளவு விதி விலக்கானவர்கள்.
இந்த வட நாட்டுஆசாமிகள் இருக்கையின் முழு பரப்பையும் தன் வீட்டு படுக்கை போல கருதிக் கொண்டு அடைத்து கொள்வார்கள். எதிர்
இருக்கையில் இருப்பவரின் மேனியில் படும் வண்ணம் காலை வைப்பார்கள். தூங்கும் நேரம் தவிர மீதி நேரங்களில் ஓயாமல் தின்று கொண்டே
இருப்பார்கள்.
பழத்தோல், உணவுப்பொட்டல காகிதம், பயன்படுத்திய காகித குவளை போன்றவற்றை நடைபாதைகளில் வீசி எறிவார்கள். அவர்களின் சராசரி
உரையாடலானது பெருங்குரலில் சண்டை போடுவது போல இருக்கும். அவர்கள் பயன்படுத்தும் பான், பீடா, கடுகு எண்ணை கலந்த நெடி அந்த கோச்
முழுக்க வீசும்.
வட மாநில தொடர்வண்டி பயணிகள் பற்றிய என்னுடைய எதிர்மறையான பதிவிற்கு ஒரு காரணம் உண்டு. எனது 23 வருட கால தில்லி,
ஜய்ப்பூருக்கான நெடுந்தூர பயணங்களில் இவர்களின் நடத்தைகளில் எவ்வித மாற்றத்தையும் நான் கவனித்ததில்லை. தனி ஆளின் பட்டறிவை பொது
எண்ண ஓட்டமாக மாற்ற முடியாதுதான். வேறு யாருக்காவது இதிலிருந்து நேர் மாறான அனுபவங்களும் கிடைத்திருக்கலாம்.
இந்த களேபரங்களுக்கு நடுவே நான் சென்ற ஹவ்டா மெயிலில் நாகாலாந்து, சிக்கிம் , மிஸோரம் மாநிலத்தவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் வண்ணமயமான ஆடை அணிகலன்களும் அமைதியும் நாகரீகமும் மிக்க நடத்தைகளும் மனங்கொள்ளும் விதத்தில் இருந்தது.
வடகிழக்கு மாநிலத்தவர்களை அவர்களின் மங்கோலிய முகச்சாயல் காரணமாக நேபாளிகள் என பொதுவாக பெரும்பாலான இந்தியர்கள்
கருதுகின்றனர். இந்திய அரசும் வடகிழக்கின் 06 மாநிலங்களிலும் மக்கள் நல வளர்ச்சி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை விட படை படையாக
ராணுவத்தினரைக் கொண்டு குவிப்பதில்தான் கவனமாக இருக்கின்றது. பெரும்போக்கு இந்தியாவின் இந்த பாரபட்சம் காரணமாக வடகிழக்கு
மாநிலத்தவர்களும் தங்களை இந்தியர்களாக நினைக்கும் நிலை அவ்வளவாக இல்லை.
`````````````````````````````````````````````````````````
தொடர்வண்டி அடுத்த நாள் அதிகாலையில் கோல்கத்தாவின் ஹவ்டா நிலையத்தினுள் போய் நின்றது. வெளியே நல்ல குளிர் இருந்தது. அது
இதமாகவும் இருந்தது. காலப்பொறியினுள் (Time Machine) ஏறி வெள்ளையர் கால இந்தியாவிற்குள் நுழைந்தது போல இருந்தது. வெள்ளையர்
காலத்தில் கட்டப்பட்டு பின்னர் புதுப்பிக்கப்பட்டாலும் வெள்ளையர்களின் தடங்கள் ஹவ்டா சந்திப்பு தொடர்வண்டி நிலையத்தின் உள்ளேயும்
வெளியேயும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
தெருக்களில் பதித்துள்ள தண்டவாளங்களில் ஊர்ந்து வரும் ட்ராம் என்ற தெரு தொடர் உந்தானது வெள்ளையர் கால பழமை வாய்ந்தது. இந்தியாவில்
வேறு எங்கும் இது பயன்பாட்டில் இல்லை. மனிதன் நடப்பதற்கும் ஓடுவதற்கும் இடைப்பட்ட நடை ஓட்டம் என்று சொல்வோமே அந்த வேகத்தில்தான்
தெரு தொடர் உந்து நகர்கின்றது. கயிற்றை பிடித்து இழுத்து அடிக்கும் மணிதான் இதன் விஸில்.
கோல்கத்தா நகரின் செல்லப்பிள்ளையான இந்த தெரு தொடர் உந்தை நவீன வளர்ச்சியின் காலில் கட்டப்பட்ட இரும்பு குண்டு என சொல்லலாம்.
தொடர் வண்டி போல தோற்றமளித்தாலும் ரயிலின் அதிர வைக்கும் அச்சுறுத்தும் வேகம் இதில் இல்லை. எனவே இதை ரயில் பிஞ்சு என்று கூட
அழைக்கலாம். நம் வீட்டில் தவழும் செல்லப்பிள்ளையை ஆளுக்கு ஒரு பெயர் சொல்லி நாம் அழைப்பது போலத்தான் இதுவும்.
ஹவ்டா சந்திப்பு நிலையத்தின் அருகில் ஓடுகின்றது கங்கை நதியின் கிளையான ஹூக்ளி ஆறு. இதில் அரசின் மாநகர படகு போக்குவரத்து
நடைபெறுகின்றது . பாபு காட்டிலிருந்து ஹவ்டா வரையிலான கட்டணம் வெறும் 05 ரூபாய்கள்தான். நம் நாட்டில் வேறு எங்காவது இத்தனை
மலிவான சுகமான போக்கு வரத்து உண்டா ? என தெரியவில்லை.
பச்சை நீரில் பாலை ஊற்றி விட்டாற்போல உள்ள ஹூக்ளியின் பரந்த நீர் பரப்பு. நம் வாழ்க்கையை போலவே கண்ணுக்கு புலப்படாத முழு வேகத்தில்
ஓடும் நீரோட்டம். அச்சம் எதும் இல்லாமல் நீர் பரப்பையும் படகையும் நம்மையும் தடவிச்செல்லும் இளங்காற்று என எங்கள் நதி பயணம்
ஹவ்டாவில் நிறைவடைந்தது.
ஹூக்ளி நதியின் கரையிலேயே ஆழம் கிட்டதட்ட 20 அடி வரை இருக்குமாம். இதில் புதை மணல் வேறு. தப்பித்தவறி யாராவது விழுந்தால் நீர்
சமாதிதான். இதில் படகு ஏறும் இரும்பு நடை தளத்தின் ஓரங்களில் எந்த வித தடுப்பரண்களும் இல்லை. அந்த தடுப்பரண்களின் கீழே இளம் பச்சை
நிறத்தில் மோதி கொண்டிருக்கும் அலையை பார்க்கும்போது மீள முடியாத அதன் ஆழம் நினைவிற்கு வந்து மனம் நடுங்கியது.
````````````````````````````````````````````````````
கொல்கத்தா நகரத்தில் தங்கியிருந்த 05 நாட்களில் எனது அலுவல்கள் முற்பகல் 11 மணிக்குப் பிறகுதான் தொடங்கும். அது வரை எனக்கு நகரின்
தெருக்களில் அலைந்து திரிவதுதான் வேலை. மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் உடையாலும் உணவாலும் வேறுபட்ட மனிதர்களின்
வாழ்வியல் கூறுகளை அவதானிப்பது என்பது மிகவும் சுவையான பட்டறிவும் கல்வியும் ஆகும். கோல்கத்தாவில் குல்லட் எனப்படும் மண் கலயத்தில்
தேனீர் குடிப்பது என்பது நம்மை காலத்தின் வேகமான சுழற்சியிலிருந்து மீட்டெடுக்கும் அனுபவத்தை தரக்கூடியது.
தேனீரின் அளவு குறைவுதான் என்றாலும் நல்ல சுவை. நமதூரின் மண் பானைகளும் மீன் சட்டிகளும் நினைவுக்குள் வந்து போனது. இந்த மண்
கலயத்தில்தான் தயிர் , லஸ்ஸி , குலாப் ஜாமூன் , ரசகுல்லா இனிப்பு வகைகளை பரிமாறுகின்றனர். வட நாட்டின் பல இடங்களில் இதை பார்க்க
முடியும். இந்த மண்கலய பயன்பாடு மூலமாக ஏற்படும் நன்மைகள் ஏராளம்.
மண்ணில் மக்கும் பிரச்சினை இல்லை . காகித குவளைக்காக மரங்களை அழிக்க தேவையில்லை. இவற்றினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகின்றது.
குடித்தவுடன் வீசி விடுவதால் கழுவும் நீர் மிச்சம். இதன் விலை மிக மலிவு. மண் சார்ந்த கைத்தொழில் பாதுகாக்கப்படுவதோடு நிறைய பேருக்கு
வேலை வாய்ப்பும் ஏற்படுகின்றது. நமதூரிலும் மண் கலயம், சிட்டி, பானைகள் மீண்டும் நடைமுறைக்கு வந்தால் புற்று நோய்க்கு காரணாமான
ஞெகிலி எனப்படும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு வெகுவாக குறையும்.
`````````````````````````````````````````````````````
முதல் நாள் நகர் உலாவின்போது கோல்கத்தாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மாணிக் தலா – கேளா பேகன் பகுதி சென்றேன்.
அந்த பகுதி முழுக்க கட்டப்பட்டிருந்த வளைவு அலங்காரங்களும் தோரணங்களும் கவனத்தை ஈர்த்த்து. உள்ளே சென்று பார்த்ததில் எளிய
மக்களுக்கான கூட்டு திருமண ஏற்பாடுகள்தான் அவை என தெரிந்தது.
இந்த சமுதாய நிகழ்வு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக கேளா பேகன் பகுதி பைத்துல்மால் அமைப்பினரால் நடத்தப்பெறுகின்றது . இந்த வருடம் 14
முஸ்லிம் இணைகளுக்கு திருமண ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டு மண விருந்து , மண மக்களுக்கான புத்தாடை உட்பட இந்த புது
இணைகள் வாழ்க்கையை துவங்குவதற்கான வீட்டு தளவாட பொருட்களும் பைத்துல்மால் சார்பில் முற்றிலும் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது என
அந்த மஹல்லா வாசிகள் தெரிவித்தனர்.
இந்த கேளா பேகன் பகுதி பைத்துல்மால் அலுவலகம் கூட அன்றைய சட்டமன்ற உறுப்பினர் திரு. சத்ய நாராயண் பஜாஜ் அவர்களின் தொகுதி
மேம்பாட்டு நிதியிலிருந்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதை நன்றியுடன் நினைவு கூறும் விதமாக அவரின் பெயரின் முன்னும் பின்னும் ஜனாப்,
ஸாஹிப் என்ற முஸ்லிம் சொல்லாடலை கையாண்டு கல்வெட்டை பைத்துல்மால் நிர்வாகிகள் பதித்துள்ளனர்.
திருமணத்திலும் அதை சார்ந்த சடங்கு நடைமுறைகளிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் திரை கிழிந்து வெளிப்படுவதை எளிதாக கண்டு கொள்ள இயலும்.
அதை கேளா பேகன் பைத்துல் மால் அமைப்பினர் கடந்து வந்துள்ளனர். தர்மத்தில் நடப்பதுதானே என திருமண ஏற்பாடுகள் ஏனோ தானோவென்று
செய்யப்படவில்லை. குறைந்த ஏற்பாட்டில் வண்ணமயமாக மண களம் கோலம் கொண்டிருந்தது.
கேளா பேகன் பைத்துல்மாலின் விளிம்பு நிலை மக்கள் மீதான கரிசனமும் மத நல்லிணக்க போக்கும் நாடு முழுக்க உள்ள பைத்துல் மால்களுக்கு
அழுத்தமாக செய்தியை சொல்லிக்கொண்டே இருக்கின்றது.
கேளா பேகன் பகுதியின் சிறப்பு இத்துடன் நிற்கவில்லை. சமுதாய திருமண அரங்கிற்கு மிக அருகிலேயே சிவந்த கற்களால் எழுப்பட்ட மஸ்ஜித்
ஒன்று அமைதியாக நின்று கொண்டிருக்கின்றது. அதன் பெயர் “ சோளியா “ 18 ஆம் நூற்றாண்டின் நடுவில் விக்டோரியா பேரரசியின்
ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த சோளியா மஸ்ஜித் கோல்கத்தாவின் புகழ் பெற்ற நாஹூதா மஸ்ஜிதை விட பழமையானது.
நாஹூதா மஸ்ஜித்
தென்னிலங்கையின் மாத்தறை – காலி பகுதியை சேர்ந்த உணவுப்பொருள் வணிகர் அலீ மரைக்காயருடன் காயல்பட்டினம், கீழக்கரை, சென்னை
வணிகர்களும் தனவந்தர்களும் இணைந்து உருவாக்கியதுதான் சோளியா மஸ்ஜித். அலீ மரைக்காயர்தான் இந்த பள்ளியின் முதல் முத்தவல்லி.
“ சோளியா “ என்ற உர்தூ பதத்திற்கு “ பை “ என்று பொருள். கையில் சரக்கு பைகளுடன் வரும் வணிகர்களால் இது கட்டப்பட்டதால்
காலப்போக்கில் இந்த பெயரே மஸ்ஜிதின் பெயராகவும் மாறிவிட்டது.
சோளியா மஸ்ஜிதில் உள்ள அடக்கத்தலத்திற்கு தனி வரலாறு உண்டு. இந்த அடக்கத்தலத்தில் காயல்பட்டினம், கீழக்கரை , நாகூர் , சென்னை
தையற்காரத்தெரு { ? }, இலங்கையின் காலி பகுதியைச் சேர்ந்தவர்களை மட்டுமே அடக்க முடியும். சோளியா மஸ்ஜிதை தவிர கோல்கத்தா
நகரினுள் எந்த வித மத , சாதி அடக்கத்தலங்களுக்கும் , கல்லறைகளுக்கும், எரியூட்டும் மயானங்களுக்கும் அனுமதியில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
1980களுக்கு பிறகு பராமரிக்கப்பட்டு வரும் இறப்பு பதிவேட்டின் படி 2013 ஆம் ஆண்டு வரை அடக்கப்பட்ட நமதூர்காரர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.
இது தொடர்பாகவும் , பள்ளி நிர்வாக குழு தொடர்பாகவும் சோளியா மஸ்ஜிதின் மஹல்லாவில் உள்ள பிஹாரீ முஸ்லிம்களுக்கும் தமிழக
முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட முரண்பாடு அன்றைய பிரிட்டிஷ் அரசு வரைக்கும் சென்றுள்ளது.
இதையொட்டி பிரிட்டிஷ் அரசின் வழக்குரைஞர் நாயகம் {SOLICITOR GENERAL} 16/04/1909 அன்று அரசின் நிலையை தெளிவுபடுத்தியுள்ளார். அந்த
ஆவணத்தின் பெயர் Deed of Appointment of Muththawally & Trustee. இந்த ஆவணத்தில் நமதூரைச் சார்ந்த 06 பெரியவர்கள்
கையொப்பமிட்டுள்ளனர். தீர்ப்பின் வரிகளில் வாதிகளை “ சோளியா சமூகம் “ என விளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணத்தின்படி சோளியா மஸ்ஜிதின் நிர்வாக தலைமை காயல்பட்டினவாசிகளிடம் மீட்கப்பட்டதோடு, அடக்கத்தலத்தில் குறிப்பிட்ட
ஊர்காரர்களை மட்டுமே நல்லடக்கம் செய்யும் உரிமையும் பாதுகாக்கப்பட்டது. நமதூரைச் சார்ந்த லுங்கி நிறுவனம் ஒன்றின் நிறுவனர் மர்ஹூம்
ஜைனுல் ஆபிதீன் அவர்களும் சோளியா மஸ்ஜிதின் முத்தவல்லியாக இருந்துள்ளார். இன்று அவரது கொள்ளுப்பேரன் ஜனாப் கே. இஸட். ஷுஐப்
தலைவராகவும் செயலாளராக ஜனாப். எம்,பி,ஏ. மரைக்கார் அவர்களும் இருக்கின்றனர்.
கோல்கத்தாவின் ஜகரிய்யா தெரு , சாந்தினி சௌக் பகுதிகளில் தொழில் புரியும் நமதூர், நாகூர், கீழக்கரை வாசிகள் வருடத்திற்கு இரு முறை
{ரமழான் மாதம் இஃப்தார், ரபீயுல் அவ்வல் மாதம் மீலாது} சந்திப்பார்கள். இன்று அந்த நடைமுறையானது பல காரணங்களினால் மெல்ல தேய்ந்து
வருகின்றது.
மஹல்லாவாசிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே இடைவெளியை அவதானிக்க முடிந்தது. அத்துடன் பள்ளிக்கும் போதிய பராமரிப்பு இல்லை.
பள்ளியின் நிறுவன ஊர்க்காரர்கள் என்ற உரிமை வாதமும் உலக சகோதரத்துவம் என்ற நம்பிக்கை அடிப்படையிலான அடையாளமும் மோதும்
இடமாக சோளியா மஸ்ஜிதின் அடக்கத்தலம் மாறியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது?
மஸ்ஜிதும் அதனைச் சார்ந்த அடக்கத்தலமும் இறைச்சொத்து ( வக்ஃப் ) என்பதுடன் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொது என்னும்போது தனி
உரிமை கோரல் என்பது எந்த அளவிற்கு சரி ? என்ற வினாக்கள் மீண்டும் மீண்டும் எழுகின்றன.
நமதூர் வரலாற்று தொன்மத்தின் நீட்சியானது கிழக்கு கடற்கரையின் மேல் முனையான கோல்கத்தா வரை வலுவான சமகால நிலவியல் தடயங்களோடு
நீடித்திருப்பது என்பது சாமானியமான ஒன்றல்ல. இந்த தொல்லியல் செல்வங்களை பராமரிக்கும் பொறுப்பு கொல்கத்தாவில் வாழும் அனைத்து
காயலர்களுக்கும் உண்டு.
``````````````````````````````````````````````````````````````````````````````
புது தில்லி, மும்பை, சென்னை என்ற இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அநீதிகள் அதிகம் தீண்டாத நகரமாக
கோல்கத்தா விளங்குகின்றது.
இந்தியாவின் பெரு நகரங்களில் உழைக்கின்ற கீழ் தட்டு மக்களுக்கு இரண்டே இரண்டு வாய்ப்புகளைத்தான் நமது அரசுகள் அளிக்கின்றன.
நகரத்தை எழிலார்ந்த வளர்ச்சி பாதையில் நடத்திச் செல்கின்றோம் என்ற பெயரில் விளிம்பு நிலை மக்களை நகரத்திற்கு அப்பால் எவ்வித
வசதிகளுமற்ற அத்துவானக்காட்டில் தூக்கி கடாசுவார்கள். அல்லது நகரத்திற்குள் அவர்களை நடைபாதைகளுக்குள்ளும் சாக்கடைகளுக்குள்ளும்
அழுத்தி வைப்பார்கள். இந்த வகையில் கோல்கத்தா இரண்டாம் பிரிவில் வருகின்றது.
கரிய தூசியை மேலாடையாக போர்த்திய பழங்கட்டிடங்கள் நிறைந்த நகரமாக கோல்கத்தா விளங்குகின்றது. பன்றிகளோடு போட்டியிட்டுக் கொண்டு
சேரிகளில் மக்கள் சாக்கடையோடும் வறுமையோடும் புரள்கின்றனர்.
எல்லா இந்திய நகரங்களைப்போலவே நுகர்ந்து எறியப்பட்ட தங்களது வாழ்வை நகரின் குப்பைத்தொட்டிகளிலிருந்து மீட்டுபவர்கள் இங்கும் உண்டு .
இங்குள்ள சேரிகளிலும் சிறு குறு கைத்தொழில்களை நிறையவே பார்க்க முடிந்தது. யாரும் சோம்பி இருக்கவில்லை. அதே நேரத்தில் கிறுக்கு பிடிக்க
வைக்கும் பதட்டமிக்க இயந்திரமயமான வாழ்க்கையும் இல்லை.
மனிதனை மனிதன் இழுக்கும் கைவண்டிகளை கோல்கத்தாவில் மட்டுமே காண முடியும். கை வண்டி இழுப்பவர்களில் பெரும்பாலானோர் பிஹாரைச்
சேர்ந்த முஸ்லிம் உழைப்பாளிகள் ஆவர். ஜோதி பஸு மேற்கு வங்க முதல்வராக இருந்தபோது கைவண்டியை மனிதன் இழுக்கும் முறைக்கு
முற்றுப்புள்ளி வைக்க முனைந்தபோது எங்களுக்கு இதுதான் வசதியாக இருக்கின்றது என கைவண்டிக்காரர்கள் மறுத்து விட்டார்களாம்.
இது போன்ற அடிமட்ட உழைப்பாளிகளை ஏராளமாக கொண்டுள்ள கோல்கத்தா நகர மக்கள் குளிப்பதற்கு வசதியாக ஆங்காங்கே இலவச பொது
குளியலறைகள் கட்டப்பட்டுள்ளன.
கோல்கத்தாவின் வீதிகளில் ஹூக்ளி அன்னையின் மாசுபடாத மடி நீரானது தங்கு தடையின்றி 24 மணி நேரமும் பீறிட்டுக்கொண்டே இருக்கின்றது.
குடிப்பதற்கும் குளிப்பதற்கும் இந்த நீர்தான்.
நகரமயமாக்கல் என்ற நரக மயமாக்கல் அறைகூவலுக்கிடையே மக்கள் நதியிலும், மண் குவளைகளிலும், கை இழு வண்டிகளிலும்,
பம்பரங்களிலும், தெரு தொடர் உந்துகளிலும், படகுகளிலும், நடை பாதைகளிலும், குப்பைகளிலும் வாழ்க்கையின் இழைகளை மீட்டிக்கொண்டே
இருக்கின்றனர்.
நான் சென்னையிலிருந்து கிளம்பும்போது ஏசி கோச்சில் பயணித்ததால் வெளிக்காட்சிகள் அனைத்தும் தடைப்பட்டு விட்டது. எவ்வளவு நேரம்தான்
கையோடு கொண்டு சென்ற நூல்களை வாசிப்பது ? கொல்லும் தனிமை என்னை சுற்றி வளைத்தது. குளிர்ந்த சிறைக்குள் இருந்த உணர்வு.
எனவே கோல்கத்தாவிலிருந்து திரும்பும்போது தீர்மானமாக சராசரி தூங்கும் வசதி கொண்ட பெட்டிக்கான பயணச்சீட்டை வாங்கினேன். இதில் பயணம்
என்பது ஒரு கணம் கூட அலுக்கவில்லை. கட்டிட பணி புரியும் வங்காள இளைஞர்கள், கேரளத்து மாணவ விளையாட்டு வீரர்கள் புடை சூழ 26
மணி, 10 நிமிட நேரமும் கொண்ட மொத்த பயணமும் களிப்பாக இருந்தது.
சனாச்சூர் , மூரி , சரஸ் கா தேல் [ஓமப்பொடி, பொறித்த நிலக்கடலை பருப்பு & பயறு கலவை, அரிசி பொரி, கடுகு எண்ணை] என்ற
வங்காளிகளின் மிக விருப்பமான உணவை உண்டும், கற்றும் பயணம் நிறைந்தது.
தகவலில் உதவி:-
ஜனாப் எம்.கே. முஹம்மத் ஹூஸைன்
ஜனாப் கே.இஸட். ஷுஅய்ப்
ஜனாப் கே.எம்.டி. ஸுலைமான் |