டிசம்பர் பிறந்துவிட்டாலே, குளிரோடு சேர்ந்த கொண்டாட்டங்களும் தொடங்கி விடுகின்றன. பள்ளி கல்லூரிகளின் அரையாண்டு விடுமுறைகள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், அதையொட்டிய புத்தாண்டு துவக்க கொண்டாட்டங்கள் இவைகள்போக இப்போது சமீபகாலமாக நமதூர் மக்களின் சீசனாகிப்போன குளிர்காலக் கல்யாணங்கள் ..! டிசம்பர் இருபது தொடக்கம் முப்பது வரையிலும் எங்கிருந்தோ திணிக்கப்பட்ட ஒன்றுபோல அடுத்தடுத்து வரிசையாக திருமணங்களின் அணிவகுப்பு ..! எதை விடுவது ..எதற்குப் போவது ..கல்யாண வீட்டார்களின் சிரமத்தைக் காட்டிலும் , அதற்க்கு அழைக்கப்படுபவர்களின் சிரமம் மிக அதிகம்.
விதவிதமான அளவிலும், கலரிலும் அழைப்பு அட்டைகள் வந்து விழுகின்றன. அதன் மீது ஏதேதோ சீரியல் நம்பர்கள் , மொத்தம் என்பதற்கு சுருக்கமாக “ மொ”என்ற எழுத்துக் குறியீடு. பெயரெல்லாம் சரியாகத்தானிருக்கும். நம்ம வீட்டுக்கு வந்தவரைக்கும் அது நம்மோடதுதான்.எது சோத்துகார்டு ..எது வாழ்த்துக் கார்டு என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ( வாழ்த்துக் கார்டு எனில் சோத்துக்கு அழைக்காத வெறும் நிக்காஹ் கார்டு என்றறிக ..!) வாழ்த்துக் கார்டைக் கண்டவுடன் மனதுக்குள் ஒரு சின்ன எரிச்சல் “ ..இதுக்குத்தான் பெருசாக கூப்பிட்டானுக்கும் ..போக்கத்த பய ..” சோத்துக்கு சொல்லி அனுப்பியவனைக் காட்டிலும் இந்த “வாழ்த்து நபர்தான் “தெருவில் போகும்போதும் வரும்போதும் நம்மை அடிக்கடி ‘கல்யாணத்துக்கு வந்துவிடு ...வந்துவிடு ..”என்று நச்சரித்தவனாக இருப்பான். இதுபோன்ற நிறைய சோத்துக்கு படும் கல்யாண காலங்கள் எனில் இவர்களது ரவுசு அதிகம் தெரியாது. இவர்களது தனித்த கல்யாணம் ஒன்றேதான் அப்போது நடைபெறுகிறது எனில் நிறையப்பேருக்கு பொல்லாத கோபம் வரும். பெண்டாட்டியிடம் சொல்லி ஆறுதல்அடைபவர்கள் ஏராளம். இனி பெண்டாட்டி பழைய கதைகளையெல்லாம் எடுத்துச் சொல்லி “ இன்னாங்கோ நம்ம மச்சி பிள்ளையின் கல்யாணத்துக்கு அவனை எல்லாத்துக்கும் எடுத்தோமே ..”என்ற பேச்சுவரும் இவர்கள் வீட்டு கல்யாண விருந்தின்போது கூப்பிட்டார்களா ..?என்பதை இருவருமே வசதியாக மறந்திருப்பார்கள். சரி போகட்டும் ..வீட்டுக்கு வீடு வாசல்படி ..!
ஆண்டுமுழுவதும் அவரவர் வசதிக்கேற்ப நடந்துவரும் திருமணநிகழ்வுகள் இப்போது செம்பாதியாக பிளக்கப்பட்டுவிட்டன. ஓன்று கோடைக்காலமான மே மாதம் திருமண மாதமாக அறியப்படுகிறது. அல்லது குளிர்காலமான டிசம்பர் மாதம் நிறைய திருமணங்கள் ஏற்ப்பாடு செய்யப்படுகின்றன. இடைப்பட்ட மாதங்களில் அனேகமாக திருமணங்களே நடப்பதில்லை. நடந்தாலும் அவை அளவில் மிகக்கொஞ்சமே. எனவே திருமணங்கள், அதுசார்ந்த பிற உபதொழில் முனைவோர் எல்லோருமே மே-டிசம்பரில் மாதங்களில் சுறுசுறுப்படைந்து விடுகிறார்கள். கறிக்கடைக்காரர்கள் ஐநூறு ரூபாய்த் தாள்களை சர் ..சர் ..என எண்ணுகிறார்கள். நிறைய ஆர்டர் எடுத்தவர்களின் கடைகள் ஒரு மூன்று நாளைக்கேனும் பூட்டித்தான் இருக்கும். கத்தி , கட்டை, தராசு எல்லாம் கல்யாணவீட்டுக்குப் போய்விடும். இவர் அடுத்த விருந்துக்கு ஆடு பிடிக்கப் போய்விடுவார். எனவே தவிர்க்க முடியாத லீவு.
நமதூரில் இன்னும் திருமண மண்டபங்களின் உபயோகம் புழக்கத்திற்கு வரவில்லை. (ஒரே ஒரு ஜலாலியா விதிவிலக்கு ) அது ஒன்றுதான் திருமணமண்டபமாக தொழில் ரீதியில் செயல்பட்டு வருகிறது. வேறு பகுதிகளில் தெருவில் பந்தல் போட்டோ, அல்லது பள்ளிவாசல்களில் வைத்தோ திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண மண்டபம் எல்லாப் பகுதியிலும் இல்லாவிட்டாலும், இறைஇல்லங்கள் இருக்கவே செய்கின்றன. இறைஇல்லங்களில் வைத்து திருமணங்கள் நிகழ்வது பொருத்தமான ஒன்றாகும். நபிகளார் விரும்பிய செயலாகும். அதை ஏன் நம்மவர்கள் தவிர்த்துவிட்டு வீதியில் பந்தல் போடுகிறார்கள் எனத்தெரியவில்லை. வீதியில் பந்தல்போட்டு போக்குவரத்தை தடை செய்து கல்யாணம் செய்வதால் நம்மால் பிறருக்கு எத்தகைய கெடுதல் செய்கிறோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் எண்ணிப்பார்பார்களாக ...!அதேநேரம் அருகில் பள்ளிவாசல் ஏதும் இல்லாதோரின் பிரச்சினை பரிவுடன் கவனிக்கத்தக்கது.
குளிர்காலம் ரெம்பவும் ரம்மியமானது. வியர்வை, கசகசப்பு எதுவும் இல்லாத காலம். எனவே விழாக்களுக்கும் , விருந்து போன்ற உபசரிப்புகளுக்கும் ஏற்ற காலம். குளிர்கால இரவுகள் கூட மிகவும் விரும்பத்தக்கது.சற்று வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் கொஞ்சம் சிரமம் தரக்கூடியது. குளிர்காற்றில் கல்யாண விருந்தின்மணமும், பெண்களின் பட்டாடை உரசும் ஒலியும்,தூரத்தில் கோரஸ்ஸாக ஒலிக்கும் பைத்துசபா பிள்ளைகளின் அந்த பாடல்ஒலியும் நெஞ்சைத்தழுவுகின்றன. ஆனால் ஒன்றே ஓன்று ..சிலகல்யாணங்களில் வாழ்த்துரை என்ற பெயரில் பொறுமையை மிகவும் சோதிக்கின்றனர். பேச்சாளரும் இதுதான் வாய்ப்பு என்று மைக்கை விட மறுக்கிறார். பொதுக்கூட்டம் எனில் கைதட்டி உட்க்கார வைத்துவிடலாம். விருந்தினரை என்ன செய்ய முடியும்..?.
இரண்டு தரப்புக் கல்யாணங்களுக்கும் செல்பவன் என்ற முறையில் தவ்ஹீதுக் கல்யாணங்கள் கொஞ்சம் சீக்கிரமே முடிந்துவிடும். அங்கு சடங்கு சம்பிரதாயங்கள் அதிகமிருக்காது. அதற்காக நான் எவரையும் குறை கூற விரும்பவில்லை.
இன்று திருமணங்கள் எவ்வளவோ மாறிவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். காலமாறுபாடுகள் கல்யாணத்தையும் விட்டுவைக்கவில்லை. வேஷ்டி ,சட்டை அணிந்த மாப்பிள்ளைகளின் காலம் போய் பேண்ட்,ஷர்ட் மாப்பிள்ளைகள் வந்தார்கள் .இப்போது அதுவும் போய் யாரைப்பார்த்தாலும் ஷெர்வானி , பைஜாமா ,துண்டு அணிந்துதான் அழைப்பில் நிற்கிறார்கள் .சமயத்தில் நமக்கே பைய்யன் அடையாளம் தெரிவதில்லை. ஆனால் அதன் இன்னொருபுறமாக ஷெர்வானி அணிந்த பைய்யன்தான் மாப்பிள்ளை என்று வெகு சுலபமாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம் என்றும் சொல்கிறார்கள்.அதுவும் உண்மைதான். நிக்காஹ்நிகழ்வை விட மாலையில் நடக்கும் அந்த அழைப்பு நிகழ்வுதான் பிரதானமானது. நேற்று ஜலாலியாவில் நடைபெற்ற ஒரு அழைப்பில் வரிசையில் நிற்கும் மாப்பிள்ளைமார்களிடம் கைகொடுக்கும் நிகழ்வை காமிரா கன்கச்சிதமாக பதிவு செய்தபடி இருந்தது. எவர் வருகையையும் அதுவிடவில்லை. அழைப்புக்கு வராமல் ..நான் வந்தேனே ..என்று எவரும் பொய்சொல்ல முடியாது. காமிரா காட்டிக்கொடுத்துவிடும். ஒருவேளை திருமண சந்தடிகள் ஓய்ந்த பிறகு நிதானமாக ஒருநாளைக்கு அதை ஓட்டிப்பார்ப்பார்களோ ...என்னவோ ...!
கல்யாணவிருந்தின் அடையாளம் மாறிவிட்டாலும் , அதன் சுவை என்றும் போலவே மாறாமல் இருக்கிறது. காயலுக்கே உரிய ருசியும் , குணமும் என்றும் மாறாது. கல்யாணம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது களரிசாப்பாடுதானே ..!சொந்த குடும்பத் திருமணம் என்றால் மட்டும்தான் மாப்பிள்ளை-பொண்ணு நினைவுக்கு வரும். மாப்பிள்ளை யார் ..?இது யார் வீட்டுக்கல்யாணம் ..?இதற்க்கு நம்மை யார் அழைத்திருப்பார்கள் ..? என்ற சிந்தனைகள் இன்றி விருந்துக்கு வந்து சும்மா ஒரு கட்டுகட்டுகிறவர்கள்தான் அதிகம். நான் உட்பட. இந்த அழைப்பு அட்டைகள் எல்லாம் புழக்கத்துக்கு வரும் முன்பு பெண்டாட்டி சொன்னாள் என்று ஆசாத்தெருவுக்கு ஒரு கல்யாணசாப்பாட்டுக்கு போய்விட்டேன். அங்கு போய்பார்த்தால் தெரிந்த முகம் எதுவும் தட்டுப்படவில்லை. நானும் அங்கும் இங்கும் திரும்பித் திரும்பி பார்க்கிறேன். எந்த முகமும் அறிந்த முகமாயில்லை. சரி ..யாரோ நம்மைக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்று ஆறுதல் அடைந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன். மூன்றுநாள் கழிந்த பிறகுதான் தெரிகிறது. அது எனக்கு வந்த அழைப்பில்லை.எனது சகலப்பாடிக்கு வந்த அழைப்பு என்று. என்ன செய்ய முடியும் ..? இறைவன் எனக்கு அதை உரித்தாகி இருக்கிறான் என்று மட்டுமே திருப்தி பட்டுக்கொள்ள முடிந்தது. அதிலிருந்து ஒன்றுக்கு மூன்று தடவை விசாரித்தபின்பே விருந்துக்கு செல்வதை பழக்கமாக்கிக் கொண்டேன். இப்போது அந்த அவசியமில்லை. கார்டில் பெயர் எழுதித் தந்துவிடுகிறார்கள். அதிலும் கூட பெயருக்கு உரியவர் வரமுடியாமற்போனால் அவரது மகனோ அல்லது உடன் பிறந்தாரோ வருகிறார்களாம். எப்படியும் விருந்து கணக்கு சரிதானே ..! நீங்கள் கூப்பிட்டீர்கள் .என்னால் வரமுடியவில்லை. இதோ எனது மகன் வருகிறான். பின்னே ..அழைப்புக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா ..!என்ன நான் சொல்கிறது...!
பழைய செம்புத்தாலங்களும் இல்லை. மண்சிட்டியும் இல்லை. தண்ணீர்க் கலயங்களும் இல்லை. முன்பு எனில் சாப்பாட்டுக்கு போய்உட்கார்ந்ததும் பெரிய பெரிய தகர அண்டாவிலிருந்து மண்கலயத்தில் தண்ணீர்தான் முதலில் தரப்படும். அந்தக்கலயத்தை அருகில் உட்கார வைக்கவே பெரும்பாடுபடவேண்டும். சரியாக அது இருக்காது. ஒரு முயற்சி எடுத்தபின்பே அது சரியாக அமையும். நிறையப்பேர் கலயத்தை எதிரில் உள்ளவர்களிடம் கொடுத்து உன்பக்கமாக வைத்துக்கொள் என்பார்கள். அப்போதுதான் தண்ணீர் கவிழ்ந்தாலும் அது அவன் பக்கத்தோடு போய்விடும். எத்தனை பெரிய மனது பாருங்கள் .இன்னும் சில கலயங்களில் தண்ணீர் கோறும்போதே அதன் அடிப்பாகம் ஒழுகும். அதற்குள் அது உள்பக்கமாக போயிருக்கும். பலத்த சப்தத்துக்கு பிறகு கலயம் மீண்டும் வந்த இடத்துக்கே போய்சேரும்.
எனது மகளின் திருமணத்தின்போது ஒரு குறிப்பிட்ட பள்ளியில் தாலங்கள் வாடகைக்கு எடுத்தோம். ஆனால் அந்தத் தாலங்களில் அந்தப் பள்ளிக்கு உரியவை வெறும் ஐந்தோ பத்தோ மட்டும்தான். மீதித் தாலங்களில் வேறு வேறு பள்ளிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நான் சமையல்காரரிடம் விளக்கம் கேட்டேன்.
“இது என்ன ..?”
“காக்கா ..இது அப்படித்தான் நூறு தாலம் எடுத்தால் அதேபோல நூறு தாலங்களை நீங்கள் திருப்பிக் கொடுக்கவேண்டும். அது எந்த பள்ளியின் தாளமாக இருந்தாலும் பரவாயில்லை. ஏற்றுக்கொள்ளப்படும். எண்ணிக்கைதான் கணக்கு. இதை நமதூரின் எல்லா பள்ளிகளும் அங்கீகரித்திருக்கிறது...”
ஆஹா ...என்ன ஒரு சமதர்மம்...!.
எனக்கு சென்னை சென்ட்ரல்ஸ்டேஷன் ரயில்வே புக்கிங் கவுண்டர்கள்தான் நினைவுக்கு வந்தது அங்குதான் கவுண்டர்களில் இப்படி எழுதியிருப்பார்கள் “ ALL TRAIN ALL QUEUE “ நமது அரசியல் தலைவர்கள் அன்றாடம் உச்சரிக்கும் சமதர்ம சமுதாயம் நமது பள்ளிவாசல்களின் தாலங்களில் எப்போதோ அமுலுக்கு வந்துவிட்டன போலும் ..!
நடைமுறைகளில் எத்துணை மாற்றங்கள் வந்துவிட்டபின்பும் நமது திருமணங்களின் ஆன்மா இன்னும் அப்படியே தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்...இனியும் தொடரும் இறைவனிடம் பிரார்த்திப்போம் ...........ஆமீன்
குறிப்பு :-- இங்கே சில தகவல்கள் நகைச்சுவை கருதி எழுதப்பட்டுள்ளது. அவை யாரையும் புண்படுத்துவனல்ல.
|