டிசம்பர் 9. விடியற்காலை ஐந்தரை மணி... எனது செல்போன் சினுங்கியது. தூக்கf; கலக்கத்தோடு எடுத்து “ஹலோ” என்றேன். ”அஸ்ஸலாமு அலைக்கும் என்ன ரெடியா? நீங்க கரெக்ட்டா ஆறேகால் மணிக்கு அல் ஜாமியுல் அஜ்ஹர் முனைக்கு
வந்துடுங்க! நாங்க அங்கே வெயிட் பண்ணுறோம். எல்லோருமா சேர்ந்து போயிடலாம்” என மறுமுனையில் ஒலித்த குரலுக்கு “சரி வந்தர்றேன்” என பதில் கூறி பல்துலக்கச் சென்றேன். காலைக் கடன்களை முடித்து விட்டு ஒளுச்செய்து சுப்ஹு
தொழுத பின் நானும் புறப்பட ஆயத்தமானேன்.
முந்தைய நாள் இரவு கடற்கரையில் வைத்து நண்பர்கள் கூடி முடிவு செய்திருந்தோம். நான், எஸ்.கே சாலிஹ், சாளை முஹம்மது மெய்தீன், மெகா நூஹு காக்கா, நாற்பத்தெட்டு இபுறாஹீம் ஆகியோர் காயாமொழியில் உள்ள செம்பருத்தி
தோட்டத்திற்குச் செல்வதென்று. அதிகாலை இதமான குளிரில், மங்கிய வெளிச்சத்தில், நமதூர் பிரதான வீதியில் ஆங்காங்கே மனித நடமாட்டம் தென்பட்டன, டீக்கடையில் சுர்ரென உரிந்து குடிக்கும் சப்தம்... செய்தித்தாள் படிக்கும் சிலர்... சுருண்டு
படுத்துக் கிடக்கும் ஆடுகள்... சுவரில் ஒட்டிய போஸ்டர்களை ருசிபார்க்கும் மாடுகள் என காலைப்பொழுதின் துவக்கம் ரசிக்கும் படியாக இருந்தது.
காத்திருப்பின் இடையிலே கைபேசியில் ‘மெகா’ நூஹு காக்காவின் அழைப்பு வந்தது, “எப்பா எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க! டீ குடித்துவிட்டு ஒன்னா புறப்படலாம்”. “சரி மனுஷன் ஆசையா கூப்பிறாரு... போகாலம்” என நன்பர்கள் சம்மதம்
தெரிவிக்கவே, அவர் வீட்டிற்குச் சென்றோம். ஆவி பறக்க அசத்தலான இஞ்சி டீயை இன்முகத்தோடு தந்து உபசரித்தார். அங்கிருந்து நாங்கள் மூன்று பைக்குகளில் பயண துஆவை ஓதி புறப்பட்டோம்.
வானம் சற்று வெளுத்திருந்தது. திருச்செந்தூர் கோவிந்தம்மாள் மகளிர் கல்லூரி சாலையின் இருபுறமும் கைகோர்த்து நிற்கும் மரங்கள்... அகன்ற தார் சாலை வாகன நெரிசலின்றி செல்வதற்கு வசதியாக இருந்தது. பனிமூட்டம் அதிகமாக இருந்ததால்
வாடைக் காற்று நாசியைத் துளைத்தது. உச்சந்தலையில் சுர்ரென பனி இறங்க, குளிரில் உடல் நடுங்கிற்று. பைக்கை ஓரங்கட்டி நிறுத்தி விட்டு, ஆபத்துக்குப் பாவமில்லை என்று பைக் துடைக்க வைத்திருந்த துணியை என் தலையில் ஸ்கார்ஃப் போல
கட்டிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தேன்.
செல்லும் வழியெங்கும் கிராமத்து மண் வாசனையும், பறவைகளின் விதவிதமான ஒலிகளும், பச்சைப் பசேலென்ற காட்சியும் மனதில் ஒருவித உற்சாகத்தைத் தந்தன. இதே சூழல்தான் திருநெல்வேலிக்குச் செல்லும்போது திருவைகுண்டம், அதுபோல
ஏரல், கச்சனாவிளை, அம்மன்புரம், சோனகன்விளை போன்ற பகுதிகளில் இருக்கும். ஆக, பயணத்தின் நடுவே இயற்கையின் எழில் கொஞ்சும் அழகிய காட்சிகளை ரசித்த வண்ணம் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தோம். நெடுஞ்சாலையின்
இடது புறத்திலிருந்து பிரியும் குறுகிய சாலை காயாமொழிக்கு வழி சொன்னது. வளைந்த வனப்பு மிக்க சாலையில், வண்டி ஓட்டிச் செல்வதே ஒரு தனி சுகம்தான். சற்று நேரத்தில் காயாமொழி எனும் பெயர்ப்பலகை எங்களை வரவேற்றது. இன்னும்
பழமை மாறாத கட்டிடங்கள், திண்ணை வீடுகள், செங்கல் பெயர்ந்த சுவர்கள், நம்மை விநோதமாகப் பார்க்கும் கிராமவாசிகள், அடுத்தடுத்தாற்போல் சேர்ந்திருக்கும் முஸ்லிம் தெருக்கள், தெருக்கோடியில் இருக்கும் பள்ளிவாசல், குட்டி கடைத்தெரு,
சொற்பமான அங்காடிகள் இப்படி கிராமத்து இலக்கணம் மாறாத தூய்மையான சிற்றூர் காயாமொழி.
காலை உணவுக்காக நிறுத்திய இடம் கண்டு சற்று தயங்கினேன். காரணம் புகை மண்டிய ஒரு பழைய கடை அது. தென்னை ஓலை வேயப்பட்ட மேற்கூரை கரிப்புகை பட்டு கருத்துப் போயிருந்தது. அந்தக் கடையில் ஒரு பெண்மணியும்,
மாற்றுத்திறனாளியான ஒருவரும் இருந்தனர். எங்களைப் பார்த்தவுடன் முகம் மலர்ந்தவர்களாக புன்னகைத்து, “வாங்க வாங்க... உள்ளே வாங்க” என உபசரித்து, பறிமாறுவதில் பரபரப்பானார்கள். கறைபடிந்த எவர்சில்வர் குடம், பன்னம்பழசான பலகை
மேஜை, ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்ட வாழை இலைகள் - இப்படி காட்சி தந்தது அந்த சின்னஞ்சிறிய உணவகம். சுற்றும் முற்றும் நோட்டமிட்டு திருதிருவென விழித்த என் மனநிலையைப் புரிந்து கொண்ட இபுறாஹீம், “என்ன அப்படி
பார்க்குறீங்க...? கடை பழசா இருக்கேன்னுதானே? இங்கே சாப்பிட்டுப் பாருங்க அப்ப தெரியும்” என்றார். கடையில் இருந்த பெண்மணி சுறுசுறுப்பானாள். இலைகள் போடப்பட்டு தண்ணீர் வைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கமகமக்கும் சாம்பார் வாளியை
எங்கள் முன் வைத்தாள். பசியோடு இருந்த எமக்கு அதன் வாசனை மூக்கைத் துளைத்தது. சற்று நேரத்திற்குள் சூடான இட்டலி... சும்ம பஞ்சுதான் போங்க...மொறுமொறுப்பான பருப்பு வடை, தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னி, ஆஹா....! அருமையான
காலை உணவு! மூன்றே நிமிடத்தில் இலை யாவும் காலி! இனி அடுத்த ரவுண்டு ஆவி பறக்கும் ஆப்பம், மிருதுவான உளுந்து வடை, அத்துடன் ஹாஃப் பாயில் முட்டை இப்படி அலாதி சுவையில் மெய்மறந்து போனோம். அடிக்கொரு தடவை அந்த
அம்மா சாம்பாருக்கும், சட்னிக்கும் தொங்கோட்டம் ஓட, “நீங்க விடுங்கம்மா நாங்க பார்த்துக்குறோம்”, என பறிமாறும் பொறுப்பை மெகா நூஹு காக்கா கையில் எடுத்துக் கொண்டார். நல்ல திருப்தியான உணவு. “அடடா! கடையெ பார்த்து தப்பா
எடைபோட்டுவிட்டோமே?” என சங்கடப்பட்டேன்.
அங்கிருந்து புறப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் வீடுகள் மறைந்தன. வலது புற செம்மண் பாதையில் திரும்பினோம். இரு புறமும் தோட்டங்கள்... அதில் மா, தென்னை, தேக்கு, மரவள்ளிக்கிழங்கு என பலவகை மரங்கள் இருந்தன. கருக்கு மட்டை வேலி
ஓரத்தில் நட்டு வைத்த நாட்டு முருங்கைகளின் காய்கள் பறிக்க ஆளின்றி முற்றி வெடித்திருந்தன. உதிர்ந்து கிடந்த தேங்காய்களும், வெட்டி வைக்கப்பட்ட இளநீர்க்குலைகளும் கதவுகளே இல்லாத தோட்டத்தில் அப்படியே கிடந்தது ஆச்சரியம்! ஒரு
வேப்ப மர நிழலில் பைக்கை நிறுத்தி விட்டு இபுறாஹீமின் செம்பருத்தி தோட்டத்திற்குள் நுழைந்தோம்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் உயரத்திற்கு வளர்ந்து நிற்கும் செம்பருத்திச் செடிகள் மிக நேர்த்தியாக வரிசைப்படி இருத்தன. பச்சை நிற பட்டுச்சேலையில் சிவப்பு பூ போட்ட டிசைன் போல அச்செடியில் பூத்துக்குலுங்கிய பூக்களின் காட்சி
கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருந்தது. இத்தோட்டம் பற்றிய செய்தி சமீபத்தில் பசுமை விகடனில் விரிவாக வெளி வந்திருந்தது. அத்துடன் நமது இணையதளத்திலும் செய்தி வரவே, ஏராளமான கமெண்டுகளும், எத்தனையோ பேர் தொலைபேசியிலும்
அவரை வாழ்த்தியுள்ளனர்.
ஒருகாலத்தில் நமதூர்வாசிகள் தோல் வியாபாரத்தில் கோலோய்ச்சியிருந்தனர். சிலர் இரத்தின வியாபாரமும் செய்து வருகின்றனர். காலப்போக்கில் படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் பலர் தொழில்நுட்பத் துறையில் கால்பதித்து, கடல் தாண்டி தம்
காலத்தை கழித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலைபார்ப்பதுதான் கௌரவம் என தவறான புரிந்துணர்வால் தாய்நாட்டைத் துறந்து, அந்நிய மண்ணில் அடிமைகளாக அல்லது பலியாடுகள் போல் வாழ்ந்து வரும் கொடுமை! நமது பண்பாடு கலாச்சாரம்
ஆகியவற்றைத் தள்ளி வைத்து விட்டு, மேலைநாட்டின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி அதுவே சிறந்தது என மார்தட்டிக்கொள்ளும் எத்தனையோ பேர்கள் நம்முள் உள்ளனர். கையில் ஆண்ட்ராய்டு போன் அல்லது ஐபேடை வைத்துக்கொண்டு
ஆன்லைனிலேயே கேள்விகள் கேட்டு அதற்கேற்றார்ப்போல் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை! சொல்லப்போனால் இவர்களுக்கு ஒரு ஈர மண்ணும் தெரியாது! ஈர மண்ணின் மகிமையும் புரியாது. (இது குறைத்து மதிப்பிட அல்ல! உண்மையிலேயே ஈர
மண்ணின் மகத்துவம் அவர்களுக்குத் தெரியாது என்பதை உணர்த்துவதற்குத்தான்!)
இவர்கள் தம் பிள்ளைகளுக்கு இயற்கை பற்றிய ஞானத்தை வெறும் காகிதத்தில் மட்டுமே கற்றுத் தருகின்றனர். குயில் கூவும், மயில் அகவும், காகம் கரையும், கிளி பேசும், குருவி கிரீச்சிடும் என ஒலிகளையும், ஓசைகளையும் பாடப் புத்தகங்கள்
மூலம் உணர்த்தும்போது படிக்கும் குழந்தையின் உள்ளத்தில் பதிய மறுக்கும் ஏராளமான கேள்விகள் இருக்கத்தான் செய்யும். அவற்றுக்கு விடை காணாமல் உலக முன்னேற்றம் பற்றி பேசுவதும், கவலை கொள்வதும் இவர்களின் இயல்பு. இயற்கை
நமக்காக நம் முன் கைகள் நீட்டி வரவேற்கும்போது அதைத் தொலைத்து விட்டு தொலைதூரத்தில் அந்நிய நாட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்களில் வெறும் நான்கு சுவருக்குள் காலத்தைக் கழிக்கும் இவர்களுக்கு குருவி சத்தமும், குயில் பாட்டும்
எப்படி கேட்கும்? முழுக்க முழுக்க இயந்திரமயமான பிராய்லர் வாழக்கை வாழும் இவர்கள் தம் பிள்ளைகளை அடைகாக்க முடியாமல் அவசரகால சூழலில் ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, அங்கு இன்குபேட்டரில் வைத்து கல்வி புகட்டி வெளி
உலகு தெரியாமல் வெறும் மதிப்பெண்களை மட்டுமே குறி வைத்து கடகடவென வளர்த்தெடுக்கும் கறிக்கோழிகளாக உருவாக்கி வருகின்றனர்.
விடுமுறையில் ஊர் வரும்போது உள்ளூரில் நிம்மதியாக வாழும் மனிதர்களைப் பார்த்து ஏங்கும் இவர்கள் உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள். சொந்த மண்ணிலேயே சுதந்திரமாக வாழ்ந்து சுயமாகத் தொழில் செய்யும் சொற்பமானவர்களுக்கு முன்
தம்மை அற்பமானவர்களாக எண்ணுவது அவர்களின் உள்மனதுக்குத் தெரியும். கை நிறைய சம்பாதிப்பதும், அந்நிய தேசத்தின் வாழ்க்கையும் அலுத்துப் போன இவர்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதுதான் உண்மை!
வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் சுவாரசியமாக இருக்காது. ஏதாவது ஒரு மாற்றத்துடன் இருந்தால் தான் சுவாரசியமாக இருக்கும். எனவே நமக்கு வாழ்வியலில் ஒரு மாற்றம் அவசியம். கடிகார வாழ்க்கைக்குக் கடிவாளமிட்டு, நம் கையில்
வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்யைத் தேடி அலையாமல், இறைவன் நமக்களித்த அருட்கொடையான இயற்கையோடு ஒன்றி வாழ்வது அவசியம். இதைத்தான் நமது காயல் விவசாயி நாற்பத்தெட்டு வீட்டு இபுறாஹீம் செய்து வருகின்றார். சரி,
அறிவுரை போதும் இனி வாங்க நம்ம தோட்டத்துக்குப் போகலாம்...
தோட்டத்திற்குள் புகுந்ததும் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் பூ பறித்துக் கொண்டிருந்தார். அவருக்கு என்பது வயதாகின்றதாம். எங்களால் நம்பவே முடியவில்லை. நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்தார். நம்ம காயல் விவசாயி தனது
ஆடைகளை மாற்றி ஆளுக்கொரு சாக்குப்பையை தந்தார். “வாங்க நாம பூ பறிக்க போகலாம்” என்று எங்களை இரண்டு குழுவாகப் பிரித்து, “நீங்க இந்த பக்கம் போங்க! நீங்க அந்தப் பக்கம் போங்க!!” என பணித்து பூ பறிக்கும் முறையைச்
சொல்லித்தந்தார். ஒவ்வொரு செடியிலும் சுமார் பத்துப் பதினைந்து பூக்கள் இருந்தன.
ஏற்கனவே இங்கு வந்திருந்தபடியால் நூஹு காக்கா செடியிலிருந்து பறித்த ஐந்தாறு பூக்களை மென்று விழுங்கினார். “நீங்களும் சாப்பிடுங்க! உடம்புக்கு நல்லது” என்று சொல்ல, தயக்கத்துடன் இரண்டு பூக்களை சாப்பிட்டேன் வழவழ
கொழகொழவென்று இருந்தது. எஸ்.கே.சாலிஹ் தனது சட்டையைக் கழற்றி விட்டு, பழைய வேஷ்ட்டிக்கு மாறி முருங்கைக் கீரை பறிக்கச் சென்று விட்டார். நாங்கள் வரிசையாக உள்ள செடிகளில் இருந்து பூக்களைப் பறித்து பைக்குள் போட்டுக்
கொண்டோம். யார் அதிகமாகப் பறிக்கின்றார் என்பதில் எங்களுக்குள் ஒரு போட்டி வைத்துக் கொண்டோம். அரைமணி நேரத்தில் எனக்கு இலேசாக தலை சுற்றியது. “சரியான தூக்கமின்மையால் உள்ள அசதி... வயிறு நிறைய சாப்பிட்ட உணவு...
அதனால்தான் இப்படி” என எண்ணியவனாக சிறிது நேரம் நான் வேப்ப மர நிழலில் ஓய்வு எடுத்தேன். மற்றவர்கள் உற்சாகத்தோடு - கேலியும், கிண்டலுமாக வேலையில் மும்முரமாக இருந்தனர். இது எனக்குள் குற்ற உணர்வை ஏற்படுத்தியது. திடீரென
எனக்குள் ஓர் உற்சாகம் வரவே, நானும் அவர்களோடு இணைந்து கொண்டேன். சுமார் இரண்டரை மணி நேரத்தில் ஆயிரக்கணக்கான செம்பருத்திப் பூக்களை அள்ளி வந்தோம். குனிந்து, நிமிர்ந்து, வளைந்து, நெளிந்து பூ பறிப்பது நல்லதோர்
உடற்பயிற்சியாக அமைந்துவிட்டதை நான் உணர்ந்தேன்.
பறித்து வந்த அனைத்து பூக்களையும் செம்மண் தரையில் போட்டு வெயிலில் உலர்த்தினோம். சிவப்புக் கம்பளம் விரித்தாற்போல் தூவியிருந்த மலர்ப்படுக்கை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சிறுது நேரம் ஓய்வு. அதன்பின் நூஹு காக்காவின்
யோகாசனப் பயிற்சி ஆரம்பமாயிற்று. மனிதர் தலைகீழாக கால் மணி நேரம் நின்று எங்களை அசத்தினார்.
அதற்குள் எஸ்.கே.சாலிஹ் குளித்துவிட்டு வரவே, வாங்க நொச்சி இலை பறிக்கப் போகலாம் என்று நூஹு காக்கா அழைத்தார். சரி ஆட்டுக்குத் தீனி போடுவதற்காக இருக்கும் என எண்ணிக் கொண்டேன். அப்புறம்தான் அதன் மகிமையை அவர்
விளக்கினார். நீண்ட காம்புகளில் குட்டை வடிவிலான நொச்சி இலை, மிகச் சிறந்த பூச்சிக்கொல்லியாம். அதன் இலைகளை நமது படுக்கை அறைகளில் வைத்தால் கொசுத்தொல்லை இருக்காதாம். அம்மரக் கொப்புகளையும் கொஞ்சம் இலைகளையும்
பறித்து வைத்துக் கொண்டோம். (வீட்டிற்கு வந்ததும் கட்டில்களின் அடியிலும் நொச்சி இலைகளைப் போட்டு வைத்தேன். என்னை ஏளனமாகப் பார்த்த என் மனைவி, ”ஆமா கொசு வராதாம். ராத்திரிக்கு தெரிஞ்சுடும்... ம்.. வையுங்க! உங்க ஆசையைக்
கெடுப்பானேன்?” என சொல்லி சிரித்தாள். உண்மையில் அன்று இரவு எனது வீட்டில் ஆள் அவுட் கொசு மருந்து வைக்காமலேயே நிம்மதியாகத் தூங்கினோம். எனது மனைவியும், மாமியாரும் ஆச்சரியப்பட்டனர். அதன்பின் காலையிலிருந்து வீட்டிற்கு
வருவோர் போவோரிடம் ஒரே நொச்சி இலை புராணம்தான்)
தோட்டக்காரர் சுப்பிரமணி தாத்தா (அவரா தாத்தா? சும்மா தாதா மாதிரி இருக்கின்றார்!) கொலிக்கி கம்பு கொண்டு வந்து, கொஞ்சம் முருங்கைக் காய்களைப் பறித்துத் தந்தார். எங்கள் உடல் நன்றாக வியர்த்திருந்தது. நாம் உடல் மெலிய கடற்கரைக்கு
வாக்கிங் செல்வதை விட ஆயிரம் மடங்கு மேல் இந்த பூக்களை பறிப்பது. நடைக்கு நடை உடலுக்கு நல்ல பயிற்சியும் கூட! தோப்புக் குளியல் என்று எப்போதும் ஒரே இடத்திற்குச் செல்லும் நாம், நமது குடும்பம் மற்றும் குழந்தைகளை
அழைத்துக்கொண்டு ஒரு பிக்னிக் போல இங்கு சென்று வரலாம்.
இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் செம்பருத்தி விவசாயம் செய்துவரும் எனது நண்பர் இபுறாஹீம், தினமும் அதிகாலை ஆறு முப்பது மணிக்கு நமதூரிலிருந்து காயாமொழி தோட்டத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் செல்கின்றார். தோட்ட வேலைகளை
முடித்துவிட்டு, காலை பத்தரை மணிக்கெல்லாம் ஊருக்குத் திரும்பி விடுகின்றார். மாற்றத்தை விரும்புவோர் மற்றும் உடல் மெலிய நடைப்பயிற்சி மேற்கொள்வோர் அவருடன் சேர்ந்து பூ பறிக்கச் சென்றால் அவருக்கு வேலைக்கு ஆளும் கிடைத்த
மாதிரி இருக்கும்... உங்களுக்கும் ஒரு நல்ல உடற்பயிற்சியாக அது அமையும். வாரத்திற்கு இரு முறையேனும் செல்ல வேண்டும் என நாங்கள் தீர்மானித்துக் கொண்டோம்.
மொத்தத்தில் பூப்பறித்துவிட்டு வந்த அன்றைய நாள் முழுதும் உற்சாகத்தோடும், ஒரு வகை மன நிம்மதியோடும் இருந்ததை நாங்கள் உணர்ந்தோம். இயற்கை நமக்களித்த எண்ணற்ற வரங்களையும், வழிகளையும் நாம் உதறித்தள்ளிவிட்டு,
ஏனோதானோ என்று வாழ்ந்து வருவதில் அர்த்தமில்லை! மாற்றம் ஒன்றே மாறாதது.
இன்ஷா அல்லாஹ் இனியும் செல்வோம்.
|