இணையதள வாசகர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்!
மார்க்கநெறி பேணி நடக்கும் காயல்நகர ஆண் பெண்கள் அன்று முதல் இன்றுவரை சன்மார்க்கத்தை நன்கு புரிந்து நடப்பவர்கள். அதனால் தான் அவர்களில் இருபாலர்களும் ஹாபிழ்களாகவும், ஆலிம்களாகவும் இருக்கிறார்கள். இதனால் நமதூர் ஆலிம்கள் உள்ளுர் வெளிநாடுகளான இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில் முஅத்திம் (பிலால்) பணிகளையும், பேஸ் இமாம் மற்றும் ஜும்ஆ பள்ளியின் கதீஃபாகவும் வேலைசெய்து ஊருக்கு பெருமை சேர்க்கிறார்கள்.
பெண்கள் தைக்கா எவ்வளவு இருக்கிறது?
நமதூரில் சுமார் 35 பெண்கள் தைக்காக்கள் உள்ளது. பெரும்பாலான பெண்கள் தைக்காக்கள் ஊர் முழுவதிலும் கணக்கிட்டால், சுன்னத் வல் ஜமாஅத் தைக்காக்களே அதிகம். ஒரு சில மட்டும் தப்லீக் - தவ்ஹீத் தைக்காக்களாக இருக்கலாம். நமதூரில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை வியாழன் மாலையில் அல்லது ஞாயிறு பின்னேரம் திங்கள் இரவு வரும் காலம் சந்தித்தால் உங்கள் தைக்காவில் இன்ஷாஅல்லாஹ் நாளை திக்ரு, ராத்திபு நடக்குமா என்று கேட்டு கொள்வது வழக்கம். அல்லது உங்கள் தைக்கா சுன்னத் வல் ஜமாஅத் தைக்காவா? தவ்ஹீத் தைக்காவா என்ற கேள்வி எழுப்புவதை அறிந்திருக்கிறோம்.
காயல்நகரில் பெண்கள் தைக்கா இல்லாத தெரு எது?
காயல்நகரில் இரண்டு அல்லது மூன்று தெருக்களுக்கு ஒரு பெண்கள் தைக்காக்கள் இருக்கும். சில பகுதியில் தெருவுக்குத் தெரு பெண்கள் தைக்காக்கள் உண்டு. பெண்கள் தைக்கா இல்லாத தெருவாக பரிமார் தெரு இருந்து வந்ததை இதே தெருவைச் சார்ந்த சேரா முதலியா (என்ற) சேரா ஆலிமா ஹாஜ்ஜா உஸ்தாத் பீ தனது பத்தாண்டு மத்ரஸா அனுபவங்களை உள்ளடக்கி 15-10-2013 (ஹிஜ்ரி 1434 அரபா தினம்) அன்று பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹூ பெண்கள் தைக்கா என்ற பெயரில் உலமாக்களை கொண்டு ஆரம்பித்துள்ளார்கள். ஊரில் எத்தனையோ பெண்கள் தைக்கா ஆங்காங்கே செயல்பட்டு மார்க்க சேவை செய்து வரும்போது புதிதாக ஆரம்பித்த இந்த தைக்காவை பற்றி முதலில் எழுத என்ன காரணம் என்று கேட்கலாம்.
ஐந்து வக்து தொழுகை பெண்களுக்காக நடக்கும் தைக்கா எது?
தினம் ஐந்து வேளை தொழுகை பரிமார் தெரு பாத்திமா நாயகி பெண்கள் தைக்காவில் நடக்கிறது. ஊரிலுள்ள அனைத்து தைக்காக்களுக்கும் முதல்வழிகாட்டியாக இது அமைந்துள்ளதை எல்லோரும் மனதாரப் பாராட்டுகிறார்கள். இந்த தெரு பெண்கள் அனைவர்களுமே நடுத்தர மக்கள் ஆவர். இவர்கள் உழைத்து சாப்பிடும் வர்க்கத்தைச் சார்ந்தவர்கள். தங்கள் குடும்பத்துக்கு தேவையான வருமானத்துக்காக வடை, மீன் விற்றும் மாலை நேரத்தில் கடற்ரை பகுதியில் கஞ்சி விற்றும் பிழைப்பு நடத்தும் பெண்கள் இனம்.
மார்க்க வழிகளில் இவர்கள் பின்தங்கி இருப்பதை அறிந்த உத்தமி சேரா உஸ்தாது பீ ஹாஜ்ஜா அவர்களின் அரிய சேவையால் இந்த பரிமார் தெரு பெண்கள் தைக்கா சிறப்புடன் உருவானது. குர்ஆன் ஓதத் தெரியாத சிறுமியர்களையும், கம்மாக்களையும் கனிவுடன் அழைத்து வந்து தைக்காவில் அமரச் செய்து குர்ஆன் ஓதக் கற்றுத் தருவதுடன் மார்க்க விசயங்களை ஓய்வு நேரத்தில் சொல்லித் தருகிறார்கள்.
தொழுகை நேரம் வந்து விட்டால் வீடுவீடாக சிறுவர் சிறுமியர்களை அனுப்பி பரிமார் தெரு பெண்கள் தைக்காவிற்கு தொழ வர அழைக்கிறார்கள். தெருவில் மார்க்க அறிவில் பின்தங்கி உள்ள அனைத்து பெண்களுக்கும் முறைப்படி குர்ஆன் மார்க்க கல்வி கற்றுத் தருவதுடன் ஐந்து வேளையும் தவறாமல் தொழ வைப்பதே எனது இலட்சியம் என்கிறார்கள் சகோதரி சேரா ஆலிமா ஹாஜ்ஜா அவர்கள்.
இவர்களின் தந்தை மர்ஹூம் கஸ்ஸாலி மரைக்கார், கணவர் பெயர் ஹாஜி முஹைதீன் அப்துல் காதர். இவர்களின் மகள் சென்னையில் பல் மருத்துவப் படிப்பு படித்துக் கொண்டிருப்பதாக அறிந்தோம்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்தமாதம் ஊரில் முதல் பெண்கள் தைக்கா எது என்று தேடிபிடித்து அதுபற்றி சேவை தகவல் தரப்படும். (பெண்கள் தைக்கா குறித்து சிறப்பான தகவல் இருப்பின் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பித் தாருங்கள்.)
(இன்ஷாஅல்லாஹ் வளரும்…)
தைக்கா படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
---------------------------------------------------------------------------------
கட்டுரையாளர் KTM தெரு பெண்கள் தைக்காவின் நிர்வாகியாகவும் உள்ளார் |