2000ஆம் ஆண்டு டிசம்பர் 03ஆம் தேதி...
காலை 08.00 மணி...
“மாமா... மாமா...!”
“இன்னங்க... யாரோ உங்கள கூப்பிடுறாங்க...” என் தாயார் கூறினார்.
“யாரும்மா... கொஞ்சம் பார்த்து சொல்லேன்...” என்றார் ‘எஸ்.கே.மாமா’ என அனைவராலும் அன்பாய் அழைக்கப்பட்ட என் தந்தை - மறைந்த மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள்...
“அடடா... எனக்கும் மறந்தே போச்சே...? டிசம்பர் ஆறு வருதே...? உங்கள கைது செய்யத்தான் போலிஸ் வந்திருக்கிறார்... சீக்கிரம் பசியாறிட்டு போங்க...” ஏதோ, சந்தையில் மீன் வாங்க அனுப்புவது போல பேசினார் என் தாயார்.
“தம்பி... கொஞ்ச நேரம் வெயிட் பண்றியா...? நா டீ குடிச்சதோட இருக்கிறேன்... கொஞ்சம் பசியாறிவிட்டு வர்றேன்...” முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்வதற்காக ஆறுமுகநேரி காவல் நிலையத்திலிருந்து வந்திருந்த காவல்துறை கான்ஸ்டபிளிடம் என் தந்தை கூற,
“அதுக்கு என்ன மாமா...? எவ்ளோ நேரம்ன்னாலும் காத்திருக்கிறேன்...” ஏதோ வணிகம் பேச வந்தவர் போல அவரும் இசைவு தெரிவித்தார்.
“எதுல வந்திருக்கா தம்பீ...? ஜீப்லயா, பைக்லயா...?
““பைக்லதான் வந்தேன்... அதுலயே டபுள்ஸ்ல போயிறலாம் மாமா...”
“வேற யார்லாம் லிஸ்ட்ல இருக்காங்க...?”
“உங்க மருமகன் மன்னர் பாய்... அப்புறம், தைக்கா தெருவுல ஒரு மாமா...” என ஒரு ஏழு பேரை பட்டியலிட்டார் காவலர்.
வீட்டில் தண்ணீரில் ஊற வைத்திருந்த ஐந்து மாவில் (அரிசி, வறுகடலை, சிறுதானியங்கள் சிலவற்றைக் கொண்டு அரைத்த மாவுக்குத்தான் ‘ஐந்து மாவு’ என்று பெயர்.) சிறிது சீனியும், வாழைப்பழமும் போட்டு, தன் கைகளால் பிசைந்து உண்டு எழுந்தார் என் தந்தை.
“மர்ஸூன்... மர்ஸூன்...”
மர்ஜூனா என்ற பெயருடைய என் தாயாரை இப்படித்தான் அவர் அழைப்பார்.
“புள்ளே... எனக்குத் தேவையான சாமான்களையெல்லாம் ஒரு பையில் போட்டு தாம்மா...”
“அதெல்லாம் அப்பவே ரெடி பண்ணியாச்சி... போன வருஷம் வரைக்கும் எனக்கு தேதி நினைவில் இருந்ததால டிசம்பர் ரெண்டாம் தேதியே எல்லாத்தையும் எடுத்து வச்சேன்... இந்த முறை கொஞ்சம் மறந்துட்டுங்க...” என்று கூறியவாறே பொருட்கள் அடங்கிய பையை என் தந்தையிடம் கொடுக்க, ஸலாம் சொல்லி விடைபெற்ற தந்தை என்னைப் பார்த்து,
“தம்பீ... இவங்க திருச்செந்தூர் சப் ஜெயிலுக்கு கூட்டிட்டுப் போறாங்களா அல்லது பாளையங்கோட்டைக்கான்னு தெரியலே... அதிகாலையில வெளிய போயிட்டு வந்தப்போ சைக்கிளை வீட்டு வாசல்ல வச்சேன்... உம்மாட்ட சாவிய வாங்கி, அத கொஞ்சம் வீட்டுக்குள்ள எடுத்து வச்சிர்றியா...? என்றார். “சரி வாப்பா” என்று நான் கூறவும், எனக்கும் ஸலாம் சொல்லிவிட்டு காவலருடன் புறப்பட்டுச் சென்றார்.
நண்பகல் 12.30 மணியானது.
“மாமீ... மாமீ...”
“அடேய் ஸாலிஹ்... காலைல வந்த போலிஸ்தான் திரும்ப வந்திருக்கார்... வழமை போல உன் வாப்பா என்னத்த மறந்து வச்சிட்டுப் போனாங்களோ தெரியலை... அதை எடுக்கத்தான் வந்திருப்பார் அவர்...”
உம்மா சொன்னது போலவேதான் நடந்திருந்தது.
“தம்பி, உங்க அப்பா வெள்ளெழுத்துக் கண்ணாடியையும், இந்த மாசம் ஒன்னாம் தேதிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் உள்ள ‘இந்து’ பேப்பரையும் எடுத்துட்டு வரச் சொன்னாங்க...”
அடுக்களையிலிருந்தவாறே அதைக் கேள்வியுற்ற என் தாயார்,
“மாமா டீ ஏதும் கேட்டால் வாங்கிக் கொடுத்துக்குங்க... பீடி, சிகரெட் கேட்டா மட்டும் இரக்கப்பட்டுடாதீங்க...” என்று காவலரிடம் சொன்னார்.
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமீ... இன்னிக்கு நேத்தா அவங்கள எனக்கு தெரியும்...?” என்று கூறி, என் தந்தை மறந்து வைத்துவிட்டுச் சென்ற பொருட்களை வாங்கிச் சென்றார்.
பாபரி மஸ்ஜித் திரும்பக் கட்டிக் கொடுக்கப்படுகிறதோ, இல்லையோ... ஒவ்வோர் ஆண்டும் எங்கள் குடும்பத்திற்கும், ஆறுமுகநேரி காவல்துறைக்கும் இடையிலுள்ள உறவு மட்டும் மிகவும் வலிமையாகவே கட்டிக் கொடுக்கப்பட்டு வந்தது.
உத்தரபிரதேசம் - அயோத்தி நகரில் அமைந்திருந்த 400 ஆண்டுகால பாரம்பரியமிக்க பாபரி மஸ்ஜித், 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் நாளில் சமூக நல்லிணக்க விரோதிகளின் தீவிர கூட்டுச் சதி காரணமாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளியைப் பறிகொடுத்தது போதாதென்று, அதைத் தொடர்ந்து நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வுகளிலும் முஸ்லிம்கள் - குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாக்கப்பட்டனர்.
பாதிப்பின் உச்சகட்டத்திற்கு சமுதாயம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், முஸ்லிம் சமுதாய அமைப்புகள் பலவும் அவரவர் வடிவமைப்பில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்கங்கள், மத நல்லிணக்க நிகழ்ச்சிகள் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்த - டிசம்பர் 06ஆம் நாள் என்றாலே முஸ்லிம்களின் போராட்ட நாள் என்றானது. அதே நாள் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளாகவும் இருப்பதால், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் காலப்போக்கில் இணைந்து போராடத் துவங்கினர்.
கொட்டும் மழையில் சென்னையில் ஆர்ப்பாட்டம், தொழுகைப் போராட்டம் என்றெல்லாம் பல போராட்டங்கள் நடத்தப்படுவதாக ஆண்டுதோறும் அறிவிப்புகள் வெளியாயின. அதற்கு அடுத்த நாளிலிருந்து காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் களை கட்டும். மேலப்பாளையம், காயல்பட்டினம், அதிராம்பட்டினம், கீழக்கரை, களக்காடு அருகிலுள்ள ஏர்வாடி, முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டத்தில் பல ஊர்கள் என முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளிலில், வீதிகளில் கடை வைத்திருந்தோர், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் ஊர் வந்தோர் உட்பட பலதரப்பட்ட மக்களையும் கைது செய்து கணக்குக் காட்டுவது காவலர்களின் கடமையாகவே மாறிவிட்டிருந்தது. கைது செய்யப்படுவோர் டிசம்பர் 06ஆம் தேதி மாலையிலோ அல்லது 07ஆம் தேதியோ விடுவிக்கப்படுவர்.
உள்ளூரிலிருப்பவர்கள் என்றால் பரவாயில்லை... அந்த நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டுச் சென்றதால், இருந்த வேலைவாய்ப்புகளை இழந்தோர், தொழில்துறைகளில் பாதிக்கப்பட்டோர் ஏராளம்.
ஆண்டுகள் கடந்தன... இந்த ஆண்டும் நேற்று சில சமுதாய அமைப்புகளால் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவற்றில் வீரியம் குறைந்துள்ளதால், காவல்துறையின் முன்னெச்சரிக்கைப் படலத்திலும் வீரியமில்லை. கைது நடவடிக்கைகள் பெரும்பாலும் இல்லை.
காயல்பட்டினம், தூத்துக்குடியில் ஒரு பகுதி, மேலப்பாளையம் என சில ஊர்களில் கடந்த சில ஆண்டுகளாக யாருமே கடையடைப்புக்கு அழைப்பு விடுக்காத நிலையிலும், முஸ்லிம்களால் தமது கடைகள் அடைக்கப்பட்டு, அமைதி வழியில் கண்டனங்கள் பதிவு செய்யப்படுகிறது.
மறுமுனையில், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயிலைக் கட்டித் தரக்கோரி, இந்து முன்னணி போன்ற அமைப்புகளாலும் போராட்டங்கள் பெயரளவில் நடத்தப்பட்டு வருவது கவனிக்கத்தக்கது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 21 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இன்றளவும் வழக்குகள் நிலுவையில்... தண்டனையளிக்கப்பட வேண்டியவர்களோ - அடுத்த பிரதமரை நாட்டு மக்களுக்கு இனங்காட்டும் தொடர் பரப்புரையில்... அதற்கடுத்த நிலையிலுள்ளோர் அதற்கு மறுப்புரையில்... நம் ‘சுதந்திர’ இந்தியாவில் இருந்துகொண்டு இதுகுறித்து வியப்பதில் பொருளில்லை.
இழந்துவிட்ட பாபரி மஸ்ஜிதை திரும்பப் பெறும் கோரிக்கைகளுடன் ஆண்டுதோறும் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கத்தான் செய்கின்றன. கருத்து வேறுபாடுகளை மறந்து அனைத்து தரப்பு முஸ்லிம்களும் அதில் இணைந்து கலந்துகொள்கின்றனர்.
ஆனால்.......
இருக்கும் பள்ளிகளிலோ - கொள்கையால், நிர்வாக செயல்பாடுகளால் ஏகப்பட்ட கருத்து மோதல்கள்... அதாவது, இருக்கும் பள்ளிவாசல்களில் வருடம் முழுக்க வேற்றுமையில் வாழ்ந்துவிட்டு, இழந்த பள்ளிவாசலுக்காக ஒரேயொரு நாள் மட்டும் ஒற்றுமையாக போராட்டம்...
விளைவு???
அமைப்புகள் வாழ்கின்றன. கோரிக்கைகளோ சவப்பெட்டிக்குள்!!!
“எந்த ஒரு சமூகத்தையும் நிச்சயமாக இறைவன் மாற்றம் காணச் செய்ய மாட்டான்... அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக்கொள்ளாத வரை” என்ற இறைவசனம்தான் நினைவில் வந்து வந்து செல்கிறது.
|