நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் காலம் அது. எனது மஞ்சள் நிறப் பைக்குள் கல் சிலேட்டும், ஒரேயொரு தமிழ் புத்தகமும், ஒடிந்த சில பம்பாய்
கல்குச்சி துண்டுகளும் இருக்கும். சட்டைப் பைக்குள் சவ்மிட்டாய் வாங்கித் தின்பதற்கு பத்திரமாய் பாதுகாத்து வைத்திருக்கும் ஐந்து பைசா. அப்போது
அதுவே பெரிய துட்டு.
காலையில் எழுந்து குளித்துவிட்டு, பாண்ட்ஸ் பவுடர் பூசி, வாசனை என்ணெய் தேய்த்து, படிய வாரிய தலை குலைந்துவிடாமல், பசியாறிய பின்
தாயாரின் கனிவான பிரார்த்தனையோடு வீட்டுப்படியிறங்கி, வீதியில் கால் பதித்ததும் - துவங்கிவிடும் எனது அதிசய உலகம்.
விதவிதமான வினோதக் காட்சிகள்... பல்வேறு மனிதர்கள்... துள்ளிக் குதித்து ஓடிகின்ற ஆட்டுக்குட்டி... வேப்பமர நிழலில் அமர்ந்து அசைபோடும்
பசுமாடு... எப்போதாவது போகும் சிற்றுந்துகள்... ஹெர்குலிஸ் சைக்கிளில் இருந்து வரும் கனீரென்ற பெல் சத்தம்... டீக்கடை பெஞ்சுகளில்
அமர்ந்து, உணர்ச்சி பொங்க உலகக் கதை பேசும் யார் யாரோ சிலர்... இப்படி காலைப் பொழுதின் காட்சிகளை ரசித்தவனாக (வாய் பார்த்தவனாக)
பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், வழக்கம் போல மனதை மயக்கும் ஒரு வித அற்புதமான வாசம் காற்றில்
மிதந்து வரும்.
நொடிப்பொழுது கண்ணை மூடி சுவாசத்தை இழுத்து வாசனை வந்த திசை நோக்கி முகத்தை திருப்புவது வாடிக்கையான அனிச்சை செயல். காரணம்
அருகில் இருக்கும் “அமிர்தா பேக்கரி”. ஆம்! இது காயலின் இனிப்பு பெட்டகம். நமதூருக்குக் கிடைத்த மதுரப் புதையல். அமிர்தம் எனும்
சொல்லுக்கு அன்று பொருத்தமான ஓர் அடுமனை.
பள்ளிக்கூட மணி அடிக்க இன்னும் நேரமிருக்கின்றது... அமிர்தா பேக்கரியின் பின்புறம் இருக்கும் நீல நிற கதவு எப்போதும் திறந்தே இருக்கும்.
அதனுள்ளே நாகத் தட்டுகளில் பிஸ்கெட் மாவும், கேக் மற்றும் பன் தயாரிக்கும் பொருட்களும் பரத்தி வைக்கப்பட்டிருக்கும். இடுப்பில் ஒரு டவல்
மட்டுமே கட்டிக்கொண்டு பிஸியாக இருக்கும் சாச்சா, ஒரு நீண்ட கம்பும் அதன் நுனியில் படகு துடுப்பு போன்ற பகுதியில் பிசைந்து வைத்த மாவை -
கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் செங்கற்களால் கட்டப்பட்ட சூளை அடுப்பிற்குள் (அந்தக்கால ஓவன் அடுப்புக்குள்) புகுத்தி
சுட்டெடுக்கும்போது ஏற்படும் பட்டர் வாசனை, அலாதி மணத்தை அப்பகுதியில் பரப்பும் என்பது ஊரறிந்த ரகசியம்.
நாற்பது வருடங்களுக்கு முன்பு நமதூர் வாசிகளுள் அரபு நாட்டில் வேலை செய்தோர் மிக சொற்பமானவர்களே. அயல்நாடு என்றால் அது ஹாங்காங்,
இலங்கை என ஓரிரு நாடுகளை மட்டுமே சொல்லலாம். தாய்நாட்டில் பம்பாய், கல்கத்தா, ஒரிசா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பரவலாகத்
தொழில் செய்து வந்தனர் நம்மவர்கள். இவர்கள் பயணத்திலிருந்து வரும்போது,
ஆந்திரா எனில் மாம்பழம் மற்றும் பணாட்டு வகைகள்,
பம்பாய் நகரத்திலுள்ளோர் பதாம் பிஸ்கட், சாக்லேட், மார்வாடி ஸ்வீட்ஸ் மற்றும் பாம்பே ஹல்வா,
கல்கத்தா - ஒரிசா போன்ற இடங்களிலிருந்து ஊர் வருவோர் ரசகுல்லா, பிஸ்தா ஹல்வா, பெங்காலி ஸ்வீட்ஸ்
ஆகியவற்றைக் கொண்டு வருவது வழக்கம்.
அயல்நாட்டிலுள்ளோர் வரும்போது மட்டுமே கொக்கோ (கொக்கா) அயிட்டங்கள் வீட்டு உறவினர்களின் நாவுகளில் படும். அந்த வீட்டு
தெருப்படிகளில், கலர் கலராக புது வகை மணத்துடன் கிடக்கும் கொக்கா தாள்களை ஆவலோடு எடுத்து, யாருக்கும் தெரியாமல் முகர்ந்து பார்ப்பதும்,
இலேசாக சுவைத்துப் பார்ப்பதும் அக்காலத்தில் என் நெஞ்சு சுமந்த ஏக்கம் எனலாம்.
அன்று நடுத்தரவாசிகளுக்கு கொக்கா போன்ற உயர்தர இனிப்பு வகைகள், தின்பண்டங்கள் ஆகியவை எட்டாக்கனியாகவே இருந்தபோது, அந்த
ஏக்கத்தின் தாக்கத்தை ஓரளவிற்கு நீக்கியது அமிர்தா பேக்கரி என்பதை எவராலும் மறுக்க இயலாது. அந்தக் காலத்தில், அந்தக் கடையின் அழகே
தனி. அடுக்கி வைக்கப்பட்ட பல வகை பேக்கரி பிஸ்கட்டுகள், நேர்த்தியான டிசைன்களில் பல்சுவை கேக்குகள், க்ரீம் பன், தேங்காய் பன், க்ரீம்
கோன், தங்க நாணய வடிவிலான கொக்கா, கோழி முட்டை வடிவத்தில் மிட்டாய், குருவி, யானை, குதிரை பிஸ்கெட், ப்ளம் கேக், ஸ்வீட் & சால்ட்
பிரட், ரஸ்க், ஜீரக மிட்டாய், பாதம் மிட்டாய், அத்திப்பழம், பப்ஸ் வகைகள், அன்று நகரில் கொஞ்சமாய் இருந்த சுகர் பேஷண்ட்டுகள் சாப்பிட
ஏதுவான காரா எனும் முறுக்கி வைத்த அடுக்கு பிஸ்கட், டைமண்ட் பிஸ்கட், ஸ்பெஷல் மக்ரூன், ரிச் கேக், கல்கண்டு பிஸ்கட், கோகனட்
கிரன்ஞ், கப்கேக், அரலோட் பிஸ்கட், அட்டைப் பெட்டியில் வரும் ஜெம்ஸ் கொக்கா, செர்ரிப்பழம், ஒட்டகப் பால் சாக்லேட், அக்ரோட், பாதம்,
பிஸ்தா, முந்திரி பருப்பு - இப்படி ஏராளமான தின்பண்டங்களைத் தன்னகத்தே தக்க வைத்த ஓர் இனிப்புச் சுரங்கம் என்றே சொல்லலாம். தமது
சொந்த தயாரிப்பானாலும் சரி, கம்பெனி அயிட்டங்களானாலும் சரி, தரமான - சுவையான தின்பண்டங்களை - கண்பார்வைக்கு அழகான முறையில்
நேர்த்தியாக அடுக்கி வைத்து விற்பனை செய்வதில் சாச்சா கெட்டிக்காரர்.
பெரும்பாலும் மக்கள் தத்தம் வீடுகளில் நடக்கும் விஷேசங்கள் மற்றும் வைபவங்களுக்கு அமிர்தா பேக்கரியை அணுகுவது வழக்கம். பிறந்தநாள்
கேக்குகளில் பெயர் எழுத நாம் அரபியில் எழுதிக் கொடுத்தாலும், அதில் பரிச்சயமே இல்லாத சாச்சா - அச்சு அசலாக அதே போல தனது கை
வண்ணத்தில் கேக்குகளில் எழுதித் தருவார். தூத்துக்குடியிலிருந்து வரும் பெரிய பேக்கரிகாரர்கள், “என்ன சாச்சா இப்படி இருபது டிசைன்களில் கேக்
வச்சிருக்கீங்களே...? நாங்களே கூட பத்து டிசைனுக்கு மேலெ போட மாட்டோமே...? எப்படி விற்கும்?” என வினவும்போது, “அதெல்லாம் விற்று
விடும்!” என சாச்சா படு கேஷுவலாக பதில் கூறுவாராம். இன்றளவும் நல்ல மணமும், சுவையும், மிருதுவான தன்மையும் கொண்ட அமிர்தா
பேக்கரியின் கேக்குகள், மிருதுவான இரண்டு ரூபாய் பன் மற்றும் சுவையான தேங்காய் பன்னுக்கு ஈடே இல்லை எனலாம். இருப்பினும் கடந்த
ஐந்தாறு வருடங்களாக சாச்சா ஓய்வில் இருப்பதால், தற்போது சொந்த தயாரிப்புகள் குறைவாகவும் கம்பெனி வகைகள் அதிகமாகவும் அக்கடையில்
காணப்படுகின்றன.
என்னதான் சொல்லுங்க... நம்ம சாச்சா - கடை நடத்தும் காலத்தில் இருந்த அந்த பழைய கெட்அப் இப்போது இல்லைதான்! காரணம், அன்று
கலப்படமில்லாத தரமான மைதா, பருப்பு (நட்ஸ்) வகைகள், வெண்ணெய், பரபரவென்று குருனாவோடு இருக்கும் டால்டா ஆகியவை எளிதாகக்
கிடைத்தன. மாவு குழைக்க - சேர்க்க என எல்லாவற்றிலுமே கைவேலைகள்தான் அதிகம். விறகடுப்பு ஓவன் இருந்தது. இப்போது காலத்தின்
கோலத்தால் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் ஓவன் அடுப்புகள் மற்றும் மூலப் பொருட்கள் அனைத்திலும் வேதிப்பொருட்களின் கலப்படம். எல்லாமே
இயந்திரமயமாக்கப்பட்டு விட்டதால், பழைய சுவையும் - மணமும் சற்று சுருதி இறங்கித்தான் காணப்படுகிறது. இருப்பினும் உள்ளூரிலிருக்கும்
பேக்கரிகளில் அமிர்தா பேக்கரிக்கென தனியிடம் இன்றளவும் உள்ளது.
ஒரு காலத்தில், கண்ணியத்திற்குரிய பெருந்தகை மர்ஹூம் எல்.கே.அப்பா அவர்கள் மெயின் ரோட்டில் காரை நிறுத்தி, ”டேய் அவனை (சாச்சாவை)
நான் கூப்பிட்டேன்னு இங்கே வரச் சொல்” என்பார்களாம். ஓடி வந்த சாச்சாவிடம், “என்னப்பா! இன்னைக்கு இந்த ஐட்டம் சரியில்லையே? ஏன்,
என்னாச்சு?” என்று கேட்க, “ஆமா அய்யா... எனக்கு இன்னொரு வேலை இருந்ததால், வேறெ ஆள்கிட்டெ கொஞ்சம் கையெ மாத்தி விட்டேன்...
அதானாலெதான் இப்படி ஆயிடுச்சு... இனி நானே கவனமா செய்றேன்” என சாச்சா தலையைச் சொறிந்து கொண்டு பணிவுடன் சொல்வாராம்.
வழக்கமான சுவை குன்றும்போது, அக்கறையோடு கண்டிக்கும் அப்போதைய பெரிய மனிதர்களும் இப்போது இல்லை. ஒருவேளை இருந்தாலும்
இப்படி உரிமையோடு கண்டிக்கத்தான் இயலுமா என்ன?
மூன்று தலைமுறைகளுக்கு முன் தோன்றிய அமிர்தா பேக்கரி இன்றும் மக்கள் மனதில் இடம்பிடித்து வரக் காரணம் என்ன? என நான் சாச்சாவிடம்
வினவியபோது, “தம்பி முதலில் கடவுள் நம்பிக்கை வேண்டும்... அப்படி நம்பிக்கையா இருக்கிறவங்க யாரையும் ஏமாற்றாமல் நாணயமா
நடந்துக்குவாங்க... இரண்டாவது கடின உழைப்பு... மூன்றாவது வாடிக்கையாளர்களின் மனதைப் புரிந்து நடப்பது...” என்றார். அதற்கோர்
உதாரணத்தையும் அவர் கூறினார். ஆரம்ப காலத்தில் கப் கேக்கில் முந்திரி பருப்பு துகல்களைச் சேர்த்து வந்தாராம்... அதைச் சாப்பிடும்போது சிறிய
குழந்தைகளுக்கு தொண்டையில் போய் சிக்கிக் கொள்வதால் கொடுக்க இயலவில்லை என வாடிக்கையாளர்கள் சிலர் சொன்ன மாத்திரத்திலேயே அதைத்
தவிர்த்துக் கொண்டாராம்.
ஒருமுறை நமதூரில் பிரபலமான ஒரு பெரிய மனிதர் இக்கடையில் வேஃபர் பிஸ்கட் (ஓலை பிஸ்கட்) வாங்கிச் சென்று வீட்டிலுள்ள தம் பேரக்
குழந்தைக்கு கொடுத்துள்ளார். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தையின் தொண்டையில் அது ஒட்டி, வாந்தி எடுத்துள்ளது. உடனே சுகாதார ஆய்வாளரை
கையோடு அழைத்துக்கொண்டு, நேராக கடைக்குச் சென்று, நடந்ததைக் கூறி அந்த பிஸ்கட்டை இனி விற்பனை செய்யக்கூடாது என கண்டித்துளார்.
இன்று அப்படி நடந்திருந்தால் - கடைக்காரரின் ‘சாமர்த்தியத்தில்’ சுகாதார ஆய்வாளரே சில மணித்துளிகளில் பேக்கரி காரராக மாறியிருப்பார்.
ஆனால் சாச்சா அப்படிச் செய்யவில்லை. அந்தக் கம்பெனியிலிருந்து வந்த அனைத்து பிஸ்கட்டுகளையும் கடையிலிருந்து உடனே அகற்றி,
கம்பெனிக்கு திருப்பி அனுப்பி விட்டாராம். பிஸ்கட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது நன்றாக தெரிந்திருந்தும், ஒரு பொருளில் கிடைக்கும்
லாபத்தை விட வாடிக்கையாளர் திருப்தியே பெரிது என்று கருதி, அவர்களின் உணர்வுகளை மதித்து நடந்து கொண்ட விதம்தான் சாச்சாவின்
வெற்றிக்குக் காரணம்.
சரி, இனி அமிர்தா பேக்கரியின் தோற்றமும் அதன் உரிமையாளர் பற்றிய விபரங்களையும் சற்று பார்ப்போம்.
வீரபாண்டியபட்டினத்தைச் சார்ந்த அமிர்தம் பீரிஸ் என்பவர், தமது சகோதரரோடு 1963இல் தஞ்சாவூரில் சிலோன் தாசன் எனும் பெயரில் ஒரு
பேக்கரியை துவங்கினார். அவரது மூத்த மகன் ஜேசய்யா பீரிஸ் (நம்ம சாச்சா) துவக்க காலத்தில் உள்ளூரில் மளிகைக் கடை நடத்தி வந்தாராம்.
அதற்குப் பின் கருவாட்டு வியாபாரம் என தொழில் மாறி, அதிலும் திருப்தியடையாமல் போகவே, படகு ஓட்டும் பயிற்சி எடுத்து இராமேஸ்வரத்தில்
படகோட்டியாக இருந்தாராம். அப்போது, தகப்பனார் அமிர்தம் பீரிஸ் தனது மகனை தஞ்சாவூர் பேக்கரிக்கு அழைத்துச் சென்று கடையில் வைத்துக்
கொண்டாராம். அடுமனைத் துறையில் ஆர்வம் அதிகமாகக் கொண்டிருந்த சாச்சா ஜேசய்யா பீரிஸ், அத்தொழிலை கவனமாகக் கற்று கைதேர்ந்தார்.
தனது தந்தைக்கும், சித்தப்பாவுக்கும் சில பிரச்சனை எழவே தந்தையும், மகனும் கடையிலிருந்து பிரிந்து 1969இல், காயல்பட்டினம்
கே.டி.எம்.தெருவிலுள்ள வானாச்சானா வீட்டாருக்குச் சொந்தமான ஓடு போட்ட பழைய கட்டிடத்தில் (ஓட்டை பள்ளிக்குடத்திற்கு கிழக்குப் பகுதியில்)
வானாச் சானா ஹாஜியார் கடையின் பெயர் பலகையை (போர்டை) எடுத்துக் கொடுக்க, நாவலர் எல்.எஸ்.இபுறாஹீம் ஹாஜியார் ரிப்பன் வெட்டி
அமிர்தா பேக்கரியைத் துவக்கி வைத்தார்களாம்.
அப்பகுதிகளில் உள்ளோர் பலர், “இந்த இடத்தில் மூன்று மாதங்களுக்கு மேல் எவரும் தொடர்ந்து கடை நடத்தியதே இல்லை... நீங்கள் எத்தனை
மாதம் நடத்தப் போகின்றீகளோ...?” என ஏளனமாகக் கூறுவார்களாம். சாச்சாவின் நேர்மை மற்றும் கடின உழைப்பால் சுமார் இரண்டரை ஆண்டு
காலம் அந்த இடத்திலேயே கொடிகட்டிப் பறந்துள்ளார். கடை அடைக்கும் நேரத்தில், தொலைவில் யாரவது நடந்து வந்தால் கூட - ஒருவேளை நம்
கடைக்குத்தான் வருகிறாரோ என, அந்த நபர் கடந்து போகும் வரை கடையை அடைக்காமல் காத்திருப்பாராம். சில வேளைகளில் கடையில்
ஊழியர்கள் வரவில்லை எனில், அப்பகுதியில் உள்ள சில வாண்டுகள் சாச்சா, “எங்களுக்கு மாவு பிசைய சொல்லித் தாருங்கள் நாங்கள் உதவி
செய்கின்றோம்” என விரும்பி வேலை பார்த்துச் செல்வார்களாம். அவ்வாறு வீட்டிற்குச் செல்லும் சிறுவர்களை, “இவ்ளோ நேரம் எங்கேடா போய்க்
கிடந்தாய்?” என தாயார் வினவ, “நாங்கள் விளையாடப்போனோம்” என பொய்யுரைக்கும்போது, “படுவா நீ பொய் சொல்றா... உன்னிடம் பேக்கரி
வாசனை வருது... அமிர்தா பேக்கரிக்குத்தானே போய்ட்டு வந்தா...?” என வாசத்தை வைத்தே கண்டுபிடித்து விடுவார்களாம். காலங்கள்
உருண்டோட வானாச்சானா ஹாஜியாரின் உற்ற நண்பரான எல்.கே காணி ஹாஜியாரின் அன்பைப் பெற்று, ஹாஜியப்பா தைக்காவிற்கு எதிரேயுள்ள
காணி ஹாஜியாருக்குச் சொந்தமான (தற்போதிருக்கும்) கட்டிடத்திற்கு இடம் மாறினர்.
சாச்சாவும், அவரது தம்பி எல்சேயர் பீரிஸும் சேர்ந்து கடையை மிகத் திறமையோடு நடத்தி வந்தனர். முழுக்க முழுக்க பதார்த்தங்கள் செய்யும்
வேலையை சாச்சாவும், விற்பனையை (சேல்ஸ்) தம்பி எல்சேயரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். காயல்பட்டினத்தின் நாடித்துடிப்பை உணர்ந்து,
நாணயத்தோடு தொழில் நடத்தி, மக்களின் நன்மதிப்பையும் - பேராதரவையும் தக்க வைத்துக் கொண்ட சாச்சாவுக்கு 2 ஆண், 2 பெண் மக்கள்
உள்ளனர். மூத்த மகன் மெரைன் ஆபீஸராகவும், மூத்த மகள் இந்தோனேஷியாவிலும், இளைய மகள் கல்லூரி விரிவுரையாளராகவும், இளைய
மகன் இன்னியாஸி பீரிஸ் தற்போது பேக்கரியை கவனித்தும் வருகின்றனர்.
சாச்சாவிற்கு நமதூரில் நிறைய நண்பர்கள் உண்டு. தாயும் பிள்ளையும் போல அவரோடு குடும்பத்தில் ஒன்றி உறவாடிய நட்பு வட்டாரம் இன்றும்
பசுமையாக உள்ளது. குறிப்பிட்டு சொல்வதானால், அண்மையில் காலமான - கொக்குசா நெய்னா
காக்கா அவர்களைச் சொல்லலாம்.
படத்தில் உள்ள தனது மகன் (எல்.கே.மேனிலைப்பள்ளியின் தற்போதைய ஆசிரியர் மீராத்தம்பி) மற்றும் மச்சி மகனோடு சாச்சாவின் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக - ஒருதாய்
பிள்ளைகள் போல் அமர்ந்திருக்கும் காட்சியே அதற்கு சாட்சி. இன்னும், கே.டி.எம். தெருவிலுள்ள பலரும், அதையும் தாண்டி நகரின் பல்வேறு
பகுதிகளில் வசிக்கும் பலரும் சாச்சாவின் நட்புக்குரியவர்களே.
அந்தக் காலத்தில் நமதூரில் பெரும்பாலான கடைகள் டீக்கடைகள்தான். இரவில் இப்போதுள்ளது போல் புரோட்டா கடைகள் எதுவும் கிடையாது. இரவு
நேரங்களில் ஓய்ந்து கிடக்கும் பஜாரில், சாச்சாவின் பேக்கரி மட்டும்தான் தாமதமாக அடைக்கும் கடை. சில வேளைகளில், பஸ்ஸிலிருந்து ஊர்
வருவோர் இரவு அல்லது காலை உணவிற்காக இந்த பேக்கரியை நம்பியே வருவார்களாம். கடை அடைத்து விட்டு திரும்புகையில், “சாச்சா ராத்திரி
முழுதும் பட்டினியா கிடக்கணும்... கொஞ்சம் கடையைத் திறந்து ரெண்டே ரெண்டு பன்னு மட்டும் எடுத்து தாங்க சாச்சா...” என தாழ்ந்த குரலில்
கேட்க, பசியாக யாரும் இருக்கக்கூடாது எனும் நல்ல நோக்கத்தில், தன் கடையின் ஆறு பூட்டுகளையும் திறந்து, தேவையானவற்றைக்
கொடுத்தனுப்பி பூட்டிய பின்னர், மீண்டும் வேறு ஒருவர் தலைகால் தெறிக்க ஓடி வந்து, “சாச்சா குழந்தைக்கு காய்ச்சல்... ஒரு பாக்கெட் மேரி
பிஸ்கட்டும், அம்பது கிராம் ரஸ்க்கும் தாங்க சாச்சா... ஆண்டவன் உங்களை நல்லாக்கி வைப்பான்...” என கெஞ்சுவார்களாம். இப்படியே,
அடைத்த கடையை மூன்று அல்லது நான்கு முறை கூட திறந்து பூட்டுவது தனக்குப் பழகிப்போன ஒன்று என சாச்சா கூறியபோது, அவரது ஈர
நெஞ்சம் என்னை நெகிழச் செய்தது.
அமிர்தா பேக்கரியில் மூன்று பேர் கொண்ட குழுவாகச் சேர்ந்து, மாவைக் குழைத்து பரத்தி, அதை லாவகமாக மேலே தூக்கி மேஜையில் அடித்து
பதமாக்கும் போட்டி நடத்தி, மாவை பக்குவத்திற்குக் கொண்டு வருவதில் சாச்சா கைதேர்ந்தவர். இப்படி பளுவான வேலை பார்த்ததில் அவரது தொப்புள்
உள்வாங்கி தொல்லை தரவே, வயிற்றில் ஆப்பரேஷனும் செய்துள்ளார். உழைத்துத் தேய்ந்த அந்த உடம்பில் வயோதிக வரிகள் விழவே, சர்க்கரை
நோய் மற்றும் மூட்டுவலியால் அவதியுற, உடல் நலன் ஒத்துழைக்க மறுத்ததால் கடை பொறுப்பை இளைய மகனிடமே முழுமையாக
ஒப்படைத்துவிட்டு, கடந்த ஆறு ஆண்டுகளாக தம் மனைவியோடு வீரபாண்டியன்பட்டினத்திலுள்ள தனது சொந்த வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
அவர் காயல்பட்டினத்திற்கு வரும்போதெல்லாம் அவரை நலம் விசாரித்து, “என்ன சாச்சா... நீங்க இல்லாமெ இப்ப கடையில ஒரு நிறைவு
இல்லை... பேசாம இங்கேயெ வந்து இருங்களேன்...” என பாசத்தோடும், உரிமையோடும் அணுகும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.
இக்கட்டுரைக்குத் தேவைப்படும் சில தகவல்களைச் சேகரிக்க, நான் பட்டினம் சென்று, அவரது வீட்டில் அவரைச் சந்தித்தபோது, ஊர் பெயரைச்
சொன்னதுமே உவகையுடன் என்னை வரவேற்று உபசரித்து, தனது அனுபவங்களை என்னோடு - ஒரு பாசமுள்ள தாய்மாமனைப் போல் பகிர்ந்து
கொண்டார். பல நிகழ்வுகளை நினைவுகூர்ந்த ஜேசய்யா பீரிஸ் எனும் அமிர்தா பேக்கரி சாச்சா, இறுதியாக ஒரு மெஸேஜை மட்டும் நமக்காக
முன்வைத்தார்.
அதாவது, “ஒரு ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கு தன்னம்பிக்கை, தொழில் மீதுள்ள ஈடுபாடு, கடினமான உழைப்பு மற்றும் உள்ளூர் மக்களின் ஆதரவு
இவை இருந்தாலே போதும்! அந்த ஸ்தாபனம் நிச்சயம் பல தலைமுறைகளைக் காணும்!! பல தலை முறையினரும் அந்த ஸ்தாபனத்தைக்
காண்பார்கள்!!!”
இதுதான் அவர் தந்த மெஸேஜ். தேவையான தகவல்கள் அனைத்தையும் பெற்ற பின்னர், நான் விடைபெற ஆயத்தப்படுவதை அறிந்துகொண்ட அவர்,
தன் களங்கமில்லா புன்சிரிப்போடு என்னை ஏறிட்டுப் பார்க்க, நானும் நன்றி கூறி விடைபெற்றுத் திரும்பினேன். |