இந்தக்கட்டுரையை எழுதுவதற்கு காரணமாக அமைந்தவை சமீபத்தில் நடந்த மூன்று நிகழ்வுகள்.
முதலாவது, பக்கத்து ஊரிலுள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிரசவவலி ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று நாட்களாகியும் மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காததினால் அப்பெண் பரிதாபமாக இறந்துபோனாள். நமதூரைச் சேர்ந்த மாற்றுமதப் பெண் அவர். இதன் காரணமாக குறிப்பிட்ட அம்மருத்துவமனையில் குழந்தை பேறுக்காகவும், கர்ப்பிணி நிலையிலும் சிகிச்சை பெற்று வந்த பல பெண்கள் – பயத்தின் காரணமாக –அதுவரையிலும் தாங்கள் சிகிச்சை பெற்று வந்த அம்மருத்துவமனையை புறக்கணிக்கும் நிலை ஏற்பட்டது.
இரண்டாவதாக, புறநகரில் அமைந்திருக்கும் அந்த தனியார் மருத்துவமனையில் சாதாரண காய்ச்சல், வயிற்று வலி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறச் செல்லும் புறநோயாளிகளிடம் “சிகிச்சையில் தவறான விளைவுகள் ஏற்பட்டால் ,அதற்கு மருத்துவமனையோ அல்லது சிகிச்சை அளித்தமருத்துவரோ காரணமாக மாட்டார்“ என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய பிறகே சிகிச்சை அளிக்கிறார்களாம். பொதுவாக “மேஜர் ஆபரேஷன்“ போன்ற பெரிய சிகிச்சைகளுக்கே இம்மாதிரி உறுதிமொழிப் பத்திரம் வாங்கும் நிலை முன்பு வழக்கில் இருந்து வந்தது நம் அனைவருக்கும் தெரியும். இப்போது அது சாதாரண நோய்களுக்கும் கூட நிர்பந்தப்படுத்தி வாங்கும் ஒன்றாக அம்மருத்துவமனை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
மூன்றவதாக, கடந்த 05 11 2013 தேதியிட்ட “தி இந்து“ தமிழ் நாளிதழில் வெளியான -தவறான சிகிச்சைக்கு தனது மனைவியை பறிகொடுத்த - கொல்கத்தா மருத்துவர் திரு. குணால் சாஹாவின் நீண்ட நேர்காணல்.
இந்த மூன்று காரணங்களும் ஒன்றை அடுத்து இன்னொன்று என்று வரிசை அடுக்கில் நிகழ்ந்தவை.
கோல்கத்தாவைச் சேர்ந்த மருத்துவர் குணால் சாஹா. அவரது மனைவி அனுராதாவும் ஒரு மருத்துவர். இருவரும் அமெரிக்காவில் பணி புரிந்து வந்தனர். குழந்தைப்பேறு இல்லாத அந்த மருத்துவ தம்பதி, குழந்தைப்பேறின் பொருட்டும், ஒரு ஓய்வுக்காகவும் கோல்கத்தா வந்திருக்கின்றனர். வந்த இடத்தில் அனுராதாவுக்கு “மருந்து ஒவ்வாமை” எனும் நோய் ஏற்பட்டு, அதன் காரணமாக தோலின் மேற்புறத்தில் அரிப்பு ஏற்பட்டு, அது புண்ணாக மாறி அவருக்கு பெரும் தொந்திரவு கொடுத்திருக்கிறது. உடனே அவர் நகரத்திலேயே நம்பர் ஒன் மருத்துவரான சுகுமார் முகர்ஜியிடம் மருத்துவ ஆலோசனை பெற்றிருக்கிறார். முகர்ஜி “டேபோ மெட்ரோல்“ எனும் ஸ்டிராய்ட் மருந்தை உடனே செலுத்தவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அது பொதுவாக ஆஸ்துமா, மூட்டுவாதம் போன்ற நீண்டகால நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்து. உடன் விளைவை ஏற்படுத்தாமல் உடலில் மெல்ல மெல்ல ஊடுருவி நீண்ட காலத்துக்கு பலனளிக்கும் மருந்து இது. ஆனால் அனுராதாவுக்கு வந்திருப்பது நீண்டகால பிரச்சினை அல்ல. உடனடி தீர்வு வேண்டுவது. எனினும் முகர்ஜி அதையே அனுராதாவுக்கு கொடுத்தார். ஒரு நாளைக்கு 80 மில்லி கிராம் அளவில் தினமும் இரண்டு முறை அம்மருந்து அனுராதா உடலில் செலுத்தப்பட்டது.
ஆனால் அம்மருந்தின் உற்பத்தியாளர்களே ஒன்றிலிருந்து நான்கு வார இடைவெளியில் 40-120 என்ற அளவைத் தாண்டாமல் இதை உட்செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயல்பாக கொடுக்கப்படும் அளவை விட அது அனுராதாவுக்கு 15-50 மடங்கு அதிகம் செலுத்தப்பட்டுள்ளது. விளைவு...? அனுராதாவின் உடல்நிலை மோசமாகி அவர் இறந்துபோனார். இது நடந்தது 1998 ஆம் ஆண்டு.
உடனே குணால் சாஹா தனது மனைவியின் இறப்புக்கு டாக்டர் சுகுமார் முகர்ஜியின் தவறான சிகிச்சையே காரணம்... எனவே தனக்கு நட்டஈடு வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது கிட்டத்தட்ட 15 ஆண்டுகால இழுவைக்குப் பிறகு இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குணால் சாஹாவுக்கு 11 கோடி ரூபாய் நஷ்ட ஈடு அளிக்கவேண்டும் என்று சொல்லி இந்திய மருத்துவத் துறைக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது.
“இந்திய மருத்துவத் துறைக்கு – குறிப்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு “இது ஒரு கறுப்பு நாள்“ என்று சொல்லும் அளவுக்கு அந்த தீர்ப்பு பரபரப்பாக பேசப்படும் ஒன்றாக அமைந்திருக்கிறது. நான் இரண்டாவதாக குறிப்பிட்ட அந்த புறநகர் மருத்துவமனை ஏன் இப்போது அவசரஅவசரமாக நோயாளிகளிடமிருந்து உறுதிமொழிப் பத்திரம் வாங்குகிறது..? என்ற கேள்விக்கு இப்போது விடை தெரிந்திருக்கும்.
தங்களின் நோயை குணப்படுத்தி – தங்களை இயல்பான மனிதனாக வாழவைக்கும் பொறுப்பை –கடவுளுக்கு அடுத்தபடியாக – மருத்துவர்களுக்கே மக்கள் கையளித்துள்ளனர். டாக்டர்கள் சொல்வதையே வேதவாக்காக எண்ணி செயல்படும் மக்களின் இந்த அதீத நம்பிக்கையை ஒருசில மருத்துவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் தனியார் மருத்துவமனைகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. உயிரை மட்டும் விட்டு விட்டு மற்ற அனைத்தையும் உறிஞ்சி எடுக்கும் தனியார் மருத்துவமனைகள் சமயங்களில் உயிரையும் கூட உறிஞ்சி விடுகிறார்கள்.
சென்ற வருடம், தனது கர்ப்பிணி மனைவிக்கு தவறான சிகிச்சையளித்து அவளின் இறப்புக்கு காரணமான தூத்துக்குடி பெண் மருத்துவர் சேதுலட்சுமியை அந்தப் பெண்ணின் கணவனே வெட்டிப் படுகொலை செய்த சம்பவத்தை நாம் மறந்திருக்க மாட்டோம். ஒரு நோயாளி தவறான சிகிச்சையால்தான் இறந்தார் என்பதை எப்படி நிரூபணம் செய்வது..? என்ற ‘தகவலறிவு“ பொதுமக்கள் எவருக்கும் இல்லை. குணால் சாஹா போன்ற ஒரு மருத்துவருக்கே இக்கதி நேரும்போது சாதாரண பொதுமக்களைப் பற்றி என்ன சொல்ல..?
நோயாளிகளின் உரிமைகள் இந்தியாவில் ஏட்டளவில்தான் இருக்கின்றன. பேராசை கொண்டதும் நெறிகள் அற்றதுமான மருத்துவமனைகள் கோடிக்கணக்கான அப்பாவி நோயாளிகளை வஞ்சிக்கின்றன. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் யதார்த்தம் மருத்துவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாகவும், அணுகவே முடியாதவர்களாகவும் சாதாரண மக்கள் கருதுகிறார்கள்.
இந்திய மருத்துவ ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகளின் படி, ஒவ்வொரு நோயாளிக்கும் அவரது சிகிச்சை தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், ரசீதுகள் அவர் கேட்டதிலிருந்து 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த ஆணையத்தின் சட்டவிதி 1-3-2 சொல்கிறது. ஆனால் எந்த மருத்துவரிடமும் எந்த நோயாளியும் இதை கேட்டுப் பெறுவதுமில்லை. கேட்டாலும் எந்த மருத்துவரும் அதைக் கொடுப்பதுமில்லை.
வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட புதிய புதிய மருத்துவ உபகரணங்கள் வழி இப்போது ஒரு நோயாளி பரிசோதனை செய்யப்படுகிறான். தேவையோ, இல்லையோ வங்கிகளிலிருந்து பெருந்தொகை கடன்பட்டு வாங்கிய இக்கருவிகளின் கடன் தொகைகளை ஈடுகட்ட மருத்துவர்கள் நோயாளியின் தலை மீதுதான் வேறுவழியின்றி கைவைக்கின்றனர். மனிதனுடைய அனுபவத்தையும், கணிப்பையும் கருவிகள் அளவீடு செய்வதால் அசல் நோயாளியே தேவையில்லை. பரிசோதனை முடிவுகள் கொண்ட நோயாளியின் ஆவணமே போதுமானது.
ஆனால் பரிசோதிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் பல அசல் நோயாளிக்கு தீங்கு விளைவிக்கின்றன. இத்தீய விளைவுகளை அலோபதி மருத்துவம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஏதோ தனிப்பட்ட பிரச்சினையாகத் தள்ளிவிடும். மருந்து, சிகிச்சை, மருத்துவரால் அசல் நோயாளிக்கு விளையும் சேதம் குறித்து பெரும்பாலும் மருத்துவத் துறையினர் பேசுவதில்லை.
உதாரணமாக, அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுள் - பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆண்டுக்கு 23 லட்சம் பேர். மிக வேடிக்கை என்னவெனில், இது இதயநோயாலும், புற்றுநோயாலும் இறக்கும் எண்ணிக்கையை விட அதிகம். இந்தியாவில் இதுகுறித்து துல்லியமான கணக்கு எதுவுமில்லை என்றபோதிலும், அது கிட்டத்தட்ட 15 லட்சத்துக்கும் மேல் என்று ஓர் அறிக்கை சொல்கிறது.
உலகமயத்துக்கு பின் மெல்ல அரசின் மருத்துவச் செலவினங்கள் குறைக்கப்பட்டு, மருத்துவர்களே அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளை தனியார் மருத்துவமனைகளுக்குக் கடத்தும் கடத்தல்காரர்களாய் உருமாறி இருக்கிறார்கள். பல தனியார் மருத்துவமனைக் கட்டிடங்கள் ஐந்து நட்சத்திர விடுதிகளை விடவும் சொகுசாக இருக்கின்றன. இவர்களுக்கு இணையாக பல தனியார் காப்பீட்டுத் திட்டங்களும் உருவாகியிருக்கின்றன. தனியார் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் பலவும் மோசடியானவை.
அதுமட்டுமல்ல, இன்றுள்ள நவீன மருத்துவ முறைகள் என்பது நோயைக் குணப்படுத்துவதற்கு மாறாக, நோயாளிகளை உருவாக்குவதாகவே உள்ளன. உண்மையில் மருத்துவமனைதோறும் நீண்ட வரிசையில் நிற்கும் நோயாளிகளை ஆய்வு செய்யும் பொருட்டு உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஒப்புதலோடு நோயாளிகளை அணுகி ஆராய்ந்தபோது, அவர்களில் சுமார் 75 சதவீதம் பேருக்கு எந்த சிகிச்சையும் தேவையிருக்கவில்லை. பெரும்பாலோருக்கு ஓய்வு அற்ற நிலையும், தூக்கமின்மையுமே அவர்களது நோய்க்குக் காரணமாக இருந்தன.
இறுதியாக, நோயாளிக்கு சரியான சிகிச்சை செய்யாமல் கடமை தவறுவது தொழில் சார்ந்த ஒழுங்கீனம்தான் என்பதை வலியுறுத்தி, நமது சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுவும் கூட ஒரு மருத்துவர் தொடர்புடையதுதான்.
சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஈஸ்வரன் புற்றுநோய் பாதித்த தனது வயது முதிர்ந்த தந்தையை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார். ஆனால் அவரது தந்தை இறந்துவிட்டார். ‘தனது தந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாதினாலேதான் அவர் இறந்து போனார் என்று அவரது தந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர் மீது ஈஸ்வரன் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் புகார் அளித்தார். மருத்துவக் கவுன்சில் அவரது புகாரை தள்ளுபடி செய்துவிட்டது. ஈஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு மீது விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.கே.சசிதரன் இவ்வாறு தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
“ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் ஒப்புக்கொள்ளும் வினாடியிலேயே அந்த டாக்டருக்கும் நோயாளிக்குமான ஒப்பந்தம் தொடங்கி விடுகிறது. தான் விரைவில் குணமடையும் விதத்தில் எல்லா வித முயற்சிகளையும் டாக்டர் மேற்கொள்வார் என நோயாளி முழுமையாக நம்புகிறார். ஆகவே, நோயாளியின் உயிரைக் காப்பற்றுவதற்காக எல்லா முயற்சிகளையும் எடுக்கவேண்டியது டாக்டரின் கடமை. இதற்கு மாறாக, அளிக்கவேண்டிய சிகிச்சையை சரியாக அளிக்காமல் அலட்சியமாக இருந்து டாக்டர் கடமை தவறினால், தொழில் சார்ந்த ஒழுங்கீனத்துக்காக அவரைத் தண்டிக்கலாம்“ (தி இந்து - 10.11.2013)
இந்த தவறான சிகிச்சை என்பது எல்லா மருத்துவர்களையும் உள்ளடக்கியதல்ல. பெரும்பாலான மருத்துவர்கள் மனிதாபிமானத்துடனும், தொழில் நேர்மையுடனும்தான் இப்போதும் பணிபுரிகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. இன்னும் சொல்லப் போனால், ஓர் உயிரைப் போக்குவதில் எந்த மருத்துவருக்குத்தான் என்ன லாபம்...? நிச்சயமாக இல்லை. சில சந்தர்ப்ப சூழலினால்தான் டாக்டர்களும் கூட தவறு செய்ய நேரிடுகிறது. எல்லாத் தொழில்களிலும் தவறுகளும், இழப்புகளும் சகஜம்தான். ஆனால் எல்லா தொழில்களும், உயிரோடு விளையாடும் மருத்துவ தொழிலும் ஒன்றல்ல. இங்கு தவறு நேருமானால் அநியாயமாக ஒரு உயிர் போய்விடும் ஆபத்துள்ளது.
நிறைய மருத்துவர்கள் இதை உணர்ந்து, சர்வ ஜாக்கிரதையாகவே செயல்படுகிறார்கள். மிகச் சில மருத்துவர்களால் மட்டுமே இந்தப் புனிதமான உயிர்காக்கும் தொழிலுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.
-------------------------------------------------------------------
நன்றி :-
1. “தி இந்து“ —தமிழ் நாளிதழ்
2. “காலச்சுவடு“ —ஜூன் 2012 இதழ்
3. “உயிர்மை“ —மார்ச் - 2012 இதழ்
4. “உன்னதம்” -ஏப்ரல் - 2009 இதழ்
|