இணைபிரியாத இணையதள வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிஜாஸ் மைந்தன் எழுதிய சொந்த மண் சொல்லும் கதை தொடர் ஒன்றை படித்து கருத்தை எழுதினேன்.
இன்னும் பல கருத்தை அதில் எழுதிக் காட்ட முடியவில்லை. ஓர் கட்டுரையாக வடிக்கும் அளவு அது நீண்டதாக இருப்பதால் ஹிஜாஸ் மைந்தனிடம்
அனுமதி பெற்று இதை எழுதுகிறேன்.
அவர் அன்றைய வணிகக் கடை குறித்து எழுதப் போவதாய் சொன்னதால் பழமை வாய்ந்த கடைகள் பட்டியலை அவரிடம் கொடுத்துள்ளேன்.
நமதூர் பஜார் வீதி அன்று எப்படி இருந்தது என்பதைப் பற்றி மட்டுமே இதில் குறிப்பிட விரும்பினேன். அன்று அங்காடிகள் இருந்த இடம் இன்று என்ன
இருக்கிறது என்பதை குறிப்பிட்டுள்ளது நீங்கள் புரிந்து கொள்ளவே இதை இணைத்துள்ளேன்.
நமது பஜாரில் முதல் அங்காடி கடை இருந்த இடம்:
நமது பஜாரில் 1944 ல் கட்டப்பட்ட முதல் வணிக வளாகம் 8 கடை சாகுல் ஹமீது காக்கா கட்டிய கட்டிடம்தான். அது இன்று ஜெயந்தி சுவீட் கடை
இருக்கும் பகுதி கட்டிடமாகும். அந்த கட்டிடம் இன்றும் உள்ளது. அந்த புகைப்படம் காணலாம்.
அதற்கு பின் மஹலறா தங்கும்விடுதி கட்டிடம். 1947ல் அதிலுள்ள கடைகள் மேல்தள அலுவலகம் குறித்து ஹிஜாஸ் மைந்தன் குறிப்பிட்டு உள்ளார்.
அதில் படிக்கவும். அந்த கட்டிடத்திற்குப் பின் வாரச்சந்தை வியாழன் கூடும். ஊரில் உள்ள ஆண்கள் அங்கு வந்து காய்கறி, பழங்கள், ஜவுளி,
மண்பாண்டங்கள் வாங்குவார்கள். குறிப்பாக பெண்கள் தூரத்தில் நின்று கொண்டு சிறுவர் மூலம் சோற்றுப் பானை, மீன்சட்டி, கொமஞ்சான் சட்டிகளை
வாங்கிச் செல்வார்கள். இந்தக் காலம் போல ஆண்களுடன் சேர்ந்துத பெண்கள் சந்தை (மார்க்கெட்) யில் ஒன்றும் வாங்க வரமாட்டார்கள். அது
வெட்கமாக கருதும் காலம். மீன் சட்டியில் மீன் ஆக்கிய அடுத்தநாள் மீன் ஆணம் கட்டியாக மீன் சட்டியின் ஓரத்தில் படிந்து இருக்கும். அதை
ஆப்பத்துக்கு தொட்டு சாப்பிட்டால் சுவையோ தனியாக இருக்கும். நினைத்துப் பாருங்கள்.
பெண்கள் கூடும் கொள்ளைக்கடை இரண்டு:
வியாழன் வாரச் சந்தைக்கு மேற்குப் புறம் நீண்ட அகலமாக வெட்டை இருக்கும். இதை பெண்கள் கொள்ளைக் கடை என்பார்கள். இதுபோல் அலியார்
தெரு ஓட்டைப்பள்ளிக்கூடம் (ஊராட்சி ஒன்றிய ஸ்கூல்) எதிர்புறம் முடுக்கு வழியாக பரிமார் தெருவைச் சேர்ந்த பெண்கள் கொள்க்ளைகடை
இருந்தது. இரு பெருநாட்களிலும் பெருநாள் கந்தூரி கடை என்ற பெயரால் பெண்கள் பலர் கூடுவார்கள். பெண்கள் நடத்தும் வணிக அங்காடிகள்
நிறைய இருக்கும். வடை, சர்பத், மஞ்சள் மிட்டாய் தட்டு தட்டாக செய்து விற்பார்கள். ஆண்கள் யாரும் வரமாட்டார்கள்.
அக்காலத்தில் பெண்கள் கடற்கரை போவது கேவலமாக கருதப்பட்டது. தெருக்கடைகளில் தொண்டுவாசல் பக்கம் மறைந்து நின்று மளிகைப்
பொருட்களை வாங்குவார்கள். எல்லாத் தெருக்களிலும் முடுக்குப் பக்கம் திரை இருக்கும். நீண்ட முடுக்காக இருந்தால் முடுக்கில் இடையிடையாக
இருபக்கமும் இடைவெளியிட்டு அரை தட்டி தகரம் அடித்து முடுக்கில் பெண்கள் நடமாடுவது தெரியாது. அந்தமாதிரி கண்ணியமான பொற்காலம்
திரும்ப காண முடியாது. நமதூர் கலாச்சாரம் மாறுவதற்கு வெளியூர்க்காரர்கள் குடியேறி அவர்கள் இஸ்டத்திற்கு நடப்பதினால் நமது பழைய
கலாச்சாரம் சிறுக சிறுக அழிந்து போய்விட்டது.
பஜாரில் செய்யிது ஆலிம் பட்டறை:
பஜாரில் அன்று செய்யிது ஆலிம் பட்டறை கம்பி போட்ட கடையாகும். அங்கு அவர்கள் மச்சினன் பட்டறை சாலிஹான் காக்கா பழைய தங்கம்
வாங்குவார்கள். நகை செய்து தருவார்கள். ஊரிலும் சென்னையிலும் நிலம் கட்டிடம் வாங்கி தருவது தொழில்.
இந்த பட்டறையில்தான் தைக்காத் தெரு, புதுக்கடைத் தெரு, மகுதூம் தெரு பிரமுகர்கள் மற்றும் எல்.கே. அப்பா (எனது தந்தை வாவு அப்பாஸ்
அவர்கள்) எம்.டி.எஸ்., எஸ்.ஓ. மற்றும் எஸ்.ஏ. போன்றோர் காலை மாலையில் வந்து பொழுதைக் கழிப்பார்கள். எல்.கே. அப்பா அவர்களின்
ஜனநாயக சபை ஊர்க்கட்சிப் பிரமுகர்கள் சந்திக்கும் இடமாகவும் இருந்து வந்தது. இதற்கு எதிர்புறம் 8 கடை வளாகத்தில் ஆத்தூர் ஆசாரி
தங்கப்பட்டறை செயல்பட்டுவந்தது. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கு இருக்கும் இடத்தில் சூயஸ் கார்னர் டீ ஹோட்டல் இருக்கும். தைக்காத் தெரு பிள்ளைகள்
அங்கு அதிகம் வருவார்கள்.
பஜாரில் இருந்த வண்டிச் சாப்பு:
இன்றைய தாஹா காம்ப்ளக்ஸ் இருக்கும் இடம் முழுவதிலும் சேர்த்து சின்ன நெசவு தெரு திரும்பும் வளைவு முழுவதிலும் 8 கடை சாகுல் ஹமீது
அவர்களுக்கு சொந்தமான தோட்டம் வண்டிச் சாப்பு என்று அன்று கூறுமிடம் இருந்தது. ஊரில் யாரு வீடு கட்டினால் இங்கு மலையாளத்திலிருந்து
பெரிய தடி வரும். தடியை அறுக்க நீண்ட குழி தோண்டப்பட்டு குழியின் குறுக்கே நடுவில் இரு வைரம் பாய்ந்த அரை பனைமரக்கட்டை
இடைவெளியிட்டு போடப்பட்டு தடியை அதில் ஏற்றி மலையாள ஆசாரிகள் 10 அடி நீளமுள்ள பெரிய வாளால் தடியை அறுப்பார்கள். ஆசாரிகள்
கதவு, ஜன்னல், கதவு நிலைகளை இங்கு இருந்தவாறு செய்வார்கள். 8 கடை சாகுல் ஹமீது அவர்களிடம் வட்டவடிவில் குதிரை வண்டி,
காளைமாடு வில்வண்டி, தண்ணீர் பீப்பாய் வண்டிகளும், ஆடு மாடு கோழி கூஸ்வாத்துகளும் இருக்கும். அரசமரம், வேப்ப மரம் மற்றும் பல
மரங்கள் இந்த வண்டிச்சாப்பு தோட்டத்தில் நிறைய நிற்பதால் நந்தவனம் போல் காணப்படும்.
இவர்கள் வட்ட வண்டியில் காலையில் ஓடக்கரை அருகிலுள்ள (பனங்கற்கண்டு ஆராய்ச்சி நிலையம் இருந்த இடம்) தென்னந்தோப்பும்
குளிக்குமிடமும் அதனுள் இருந்தது. கிழக்குப் பகுதி மக்கள் தொட்டியில் குளிக்க இங்கு வருவார்கள். பத்து தொட்டிகள் கட்டி இருந்தார்கள்.
நாகப்பழம் சீசனுக்கு இவர்கள் தோட்டத்தில் நாகப்பழம் கிடைக்கும். இவர்கள் எங்கு போவதாக இருந்தாலும் வட்ட குதிரை வண்டியில்தான்
போவார்கள். ஊரில் யாரிடமும் கார் வசதியில்லை. பலரும் குதிரை வண்டி வைத்திருந்தார்கள். இவர்கள்தான் காயல்கடற்கரை முழுவதுமுள்ள
நிலங்களில் சவுக்கை தோப்பை ஏற்படுத்தி அதன்மூலம் நல்ல வருமானமும் பெற்ற ஊரின் முதல் விவசாயி எனக் கூறலாம். இவர்களின் வணிக
வளாகம் எல்லாம் 8 கடைகளாகவே இருக்கும். அதனால்தான் 8 கடை வீடு என்ற பெயர் வந்தது. இவர்களின் மகன் தாஹா ஹாஜி
ஆவார்கள்.
நேரம் அறிய ஊதிய சங்கு:
பஜாரிலுள்ள சம்மர் ஹவுஸ் (எல்.கே. அப்பா) கட்டிடத்தின் மாடியின் மீது மின்சாரம் மூலம் இயங்கும் சங்கு இருக்கும். ஊர் மக்கள் நேரத்தை
அறிய விடியற்காலை 6 மணி, காலை 9 மணி, பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 9 மணி, நள்ளிரவு 1 மணி அளவில் சங்கு ஓதும் நேரத்தை
அமைத்திருந்தார்கள் எல்.கே. அப்பா. இதுவும் ஊருக்கு ஒரு சேவைதான்.
மத்ரஸாவில் குர்ஆன் ஓதும் சிறுவர்கள் 6 மணி சங்கு ஊதி விட்டது மத்ரஸாக்கு நேரமாகிவிட்டது என்று தாய் துரத்துவார்கள். காலை 9 மணி சங்கு
ஊதி விட்டது ஸ்கூலுக்கு நேரமாகிவிட்டது, மாலை 4 மணியாச்சு மகன் ஸ்கூலிலிருந்து வருவான் என்று காத்திருக்கும் பெற்றோர். பொதுக்கூட்டம்
இரவில் நடந்தால் 9 மணி சங்கு சப்தம் கேட்டால் மக்கள் கூட்டத்தை விட்டு வெளியேறி விடுவார்கள். இப்படி நேரம் அறிய மக்களுக்கு அன்று
மிகப்பெரிய உதவியாக இருந்தது.
முதல் சைக்கிள் கடை
பஜார் ஆரம்பிக்கும் இடம் மாஸ்டர் கம்பியூட்டர் மாடியின் கீழ் பகுதியில் ஸலீம் சைக்கிள் கடை 1942 ல் பரிமார் தெரு சாகுல் ஹமீது காக்கா நீண்ட
நாட்களாக நடத்தி வந்தார்கள். அவர்கள் நற்குணத்திற்காக அப்பாபள்ளி-மரைக்கார் பள்ளி தெரு பிரமுகர்கள் இந்த கடையில் காலை மாலை இரவு 9
மணி வரை பொழுது போக்க வருவார்கள்.
அல் ஜாமிஉல் அஸ்ஹர் இருந்த இடத்தில் என்ன இருந்தது?
அல் ஜாமிஉல் அஸ்ஹர் இருக்கும் கே.டி.எம். தெரு-ஸி கஸ்டமஸ் சாலை இரு பகுதியாக அன்று நூஹ{ காக்கா அவர்களால் இறைச்சிகடை
பெரிதாக டானா வடிவத்தில் நடந்தது. ஊரின் எல்லாப் பகுதி தெரு மக்களும் இந்த கடைக்கே இறைச்சி வாங்க வருவார்கள். இன்றைய பெரிய நாடான்
இவர்களிடம் கறிக்கு ஓலையை சுத்தம் செய்து தரும் சிறுவனாக வேலை செய்தார். அந்தக்காலத்தில் பனை ஓலையில் கறியை வைத்து மேல் நோக்கி
மடித்து ஓலை ஈக்கால் கட்டித் தருவார்கள். மாட்டு இறைச்சிக் கடை எங்கும் இருக்காது. எல்லாம் செம்மறி ஆட்டுக் கறி மட்டுமே. நூஹு காக்கா
விற்பார்கள்.
மீன் கடையில் நீண்ட (ஒரு ஜான் அகலம்) வாய் கூடையில் மீன் தருவார்கள். இது குருத்து ஓலையில் செய்யப்பட்டிருக்கும். பரிமார் தெரு பெண்கள்
ஒன்னரை அடி நீளமுள்ள மீன் கூடையை தயாரிப்பார்கள். இதன்விலை கால் அனா (6 பைசா) மீன் வாங்கிவிட்டு மீண்டும் கழுவி காய வைத்து
பயன்படுத்தலாம். இன்றைய 25 பைசா அளவு நிறைய துவாரம் இருக்கும். காற்றுப் போகும். மீனும் கீழே விழாதவாறு பாதுகாப்பாக இருக்கும். மீன்
கூடை.
சதுக்கைகள்
ஊரில் முக்கிய பிரமுகர்கள் கூடும் இடம் சதுக்கைத் தெரு சதுக்கையாகும். இங்கு வடபகுதி மக்கள் சேவா சங்க உட்கட்சி பிரமுகர்கள் கூடுவார்கள்.
காலை மாலையில் இந்த இடம் ஓர் பொழுதுபோக்கு இடமாகவும் அன்று முதல் இன்றுவரை உள்ளது. நெய்னார் தெரு, பெரிய ஜும்ஆப் பள்ளி
வளாகத்தில் வட்ட சதுக்கை உள்ளது. வடபகுதி மக்கள் அனைவருமே ஆந்திரா பூராவும் தோல் பதனிடும் தொழிற்சாலை விற்பனைக் கூடம் அமைத்து
தொழிற் செய்து வந்தார்கள். அதனால் இந்த வடபகுதி மக்கள் தெலுங்கு மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்து இருப்பார்கள். அத்துடன் ஹிந்தி
மொழியையும் பேசுவார்கள். ஊரைப் பற்றி இன்னும் நிறைய தகவல்கள் உள்ளன. ஹிஜாஸ் மைந்தனின் அனுமதி பெற்று எழுதுகிறேன். ஏனெனில்
அவர் ஊரைப் பற்றி எழுதுகிறார். அவரை முந்தி நான் சொல்லக் கூடாது என்பதே என் எண்ணம்.
சதுக்கைத் தெரு சதுக்கை இப்பகுதி பெரியவர்கள் காலை, மாலை, இரவு வேளைகளில் அமரும் இடம் மட்டுமல்ல. வடபகுதி மக்களின்
பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் இடமாகவும் இருந்து வருகிறது. இந்த சதுக்கையில் அன்று ஆதம் ஹாஜி அவர்கள், எம்.கே.டி. அபூபக்கர் அப்பா
அவர்கள் போன்றோர் மாலைப் பொழுதில் அமர்வதுண்டு. பொழுதுபோக்கு இடம் மட்டுமல்ல. ஊரில் நல்லது கெட்டதை கலந்தாய்வு செய்து வரும்
இடம் என தெரிகிறது. இந்த சதுக்கையின் ஓர் பகுதியில் காயல் நகரின் உதவி அரசு தபால் நிலையமும், அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றமும்
உள்ளது.
பெரிய ஜும்மா பள்ளி வளாகம் உள்ளே புகழ்பெற்ற வட்ட சதுக்கை உள்ளது. இதில் 14+2ஸ்ரீ16 தூண்கள் இருந்தது. தமிழ் சங்கங்களுக்கு அன்று 16
தூண்கள் வைத்துக் கட்டப்பட்டதாகவும் இந்த வட்ட சதுக்கையில்தான் முத்தமிழ் சங்கம் இயங்கி வந்ததாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் திரு
ராமச்சந்திரன் அவர்கள் இங்கு வந்து இதைக் கண்டு கூறியதாக இப்பகுதி இளைஞர் பிரபு சுல்தான் ஜமாலுத்தீன் கூறினார். கல்வெட்டுகள் பல ஆய்வு
செய்து வருவதாகவும் சொன்னார்கள். தற்போது இவர் துபாய் பயணம் மேற்கொள்வதால் அடுத்தமுறை சபர் திரும்பும்போது அவரிடம் காயல்
கல்வெட்டுகள் குறித்து இன்ஷா அல்லாஹ் நான் செய்தி சேகரித்து அனுப்புகிறேன். இந்த வட்ட சதுக்கை தற்போது 13 தூண்கள் உள்ளது. இதன்
அருகில் காயிதேமில்லத் சமூக அமைப்பு பொது சேவை சங்கமாக இயங்கி வருகிறது.
குறிப்பு: இடம்பெற்ற மூன்று போட்டோக்கள் எடுத்து தந்தவர் ஹிஜாஸ் மைந்தன். அவர்களுக்கு நன்றி.
|