இத்தொடரின் முதல் பாகத்தை காண இங்கு அழுத்தவும்
* * * * * * * * * * * * * * *
13.11.2013 புதன்கிழமை அதிகாலை 04.30 மணிக்கு கண்விழித்தோம். ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தொழுகைகளை பயணியருக்கு இஸ்லாம் வழங்கிய சலுகைப்படி நாங்கள் கூட்டாக இணைந்து தொழுதோம். எங்களுடன், வேறு சில ஊர்களிலிருந்து வந்திருந்த இரண்டு முஸ்லிம் நண்பர்களும் தொழுகையில் இணைந்துகொண்டனர். தொழுகையை முடித்துவிட்டு, குடிலுக்குத் திரும்புகையில், அங்கிருந்த மாடுகளின் சாணத்தை ஒரு முதியவர் தன் கைகளால் சேகரித்துக் கொண்டிருந்தார். முந்தைய நாளில் வெளியூர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த அப்பெரியவர்தான் நம்மாழ்வார் அய்யா.
பூச்சி விஷமில்லா இயற்கை விவசாயம்; எளிய வாழ்க்கை முறை என்று முழங்கி, தமிழ் கூறும் உலகையே தன்னை நோக்கி புருவமுயர்த்தச் செய்யுமளவுக்கு புகழ்பெற்றவர். எங்களனைவரையும் குடிலில் சந்தித்து முகம் மலர அவர் வரவேற்றபோது, புகழ்பெற்ற மனிதருக்குரிய எந்த அடையாளத்தையும் அவரிடம் காண முடியவில்லை. “இவரா அவர்?” என வியப்புற்றோம் நாங்கள்.
மெலிந்த உருவம்... அடர்ந்த மீசை... நீண்ட தாடி... கீழங்கியும், பச்சை நிற மேல்துண்டும், தலைப்பாகையுமே அவரது நிரந்தர உடை! சட்டை அணிவதில்லையாம். வயதுதான் 76 ஆக இருந்ததே தவிர, அவரது பேச்சும், செயலும் – துடிப்புமிக்க - இன்றைய 26 வயது இளைஞனையும் விஞ்சியிருந்தது.
ஆம்! இத்தனை வயதிலும் அவருக்கு ஒரு பல் கூட விழவில்லை. கண்ணாடி அணியவில்லை. ஏற்கனவே அணிந்திருந்த கண்ணாடியையும் இயற்கை மருத்துவத்தின் மூலம் கழற்றி விட்டாராம்.
பொறுப்பாளர் ஒருவர் அவருக்கு இயற்கை உணவைத் தட்டில் வைத்துக் கொடுக்க, அதை வாங்கி உண்டவாறே எங்களுடன் பேசினார். எல்லோரையும் தன்னறிமுகம் செய்யச் சொன்னார். அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
>> நான் இறக்கும் முன் இன்ன செயலை செய்து முடிக்க வேண்டும்... 13.11.2015 அன்று நான் இச்செயலை செய்து முடித்திருக்க வேண்டும்... என ஒரு குறிப்பேட்டில் அன்றாடம் இரவு உறங்குமுன் எழுதி வைக்கச் சொன்னார் அவர். இலக்கு இல்லாத வாழ்க்கை நேர விரயம் என்பதே அவர் சொல்ல வந்த கருத்து.
>> ‘படிப்பது’, ‘கற்பது’ இரண்டுக்குமுள்ள வேறுபாடு என்ன?
படிப்பது - பிறர் அனுபவத்தை உள்வாங்கல்; கற்பது -- நம் பட்டறிவை ஆய்வுக்கு உட்படுத்தல்.. ஆகா! எத்தனை தத்துவங்கள்...!! அய்யா பேசப்பேச தத்துவங்கள் பொங்கி வழிந்தன. அது உரையல்ல! எங்களுடனான உரையாடல். எமது உரையாடலில் வீணாக ஒரு சொல் உதிர்க்கப்பட்டாலும், அதைச் சுட்டிக்காட்டி விளக்குவார்.
ஒரு பங்கேற்பாளர் ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்கு அய்யா விளக்கமளித்தார். மற்றொருவர் கேள்வி கேட்கும்போது, “அதேபோல...” என்று துவங்கினார். “அது என்ன அதேபோல...? உங்க கருத்தை நீங்க சொல்லுங்க!” என்றார்.
மற்றொருவர் தெளிவின்றி கேள்வி கேட்டார். அய்யா அதை தெளிவுறக் கூறுமாறு கூறியதும், வேறொருவர், “அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்...” என்று கூற முற்பட்டபோது இடைமறித்த அய்யா, “அவருக்கு நீங்க வக்காலத்தா...? அவர் மனதில் பட்டதை அவர் கேட்கட்டும்” என்றார். அனைவருமே சிரித்துவிட்டோம்.
அவர் எங்களுடன் உரையாடிய முழுப்பொழுதும் நகைச்சுவை நிறைந்து காணப்பட்டது. நேரம் போனதே தெரியவில்லை.
“சனி நீராடு” என்று ஆத்திச்சூடியில் அவ்வையார் சொல்லியிருக்கிறாரே... அதன் பொருளென்ன?” இது அய்யாவின் கேள்வி.
“சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கனும்...” இது எங்கள் விடை.
“தவறு! சனி என்பது மிகக் குளிர்ச்சியான கிரகம். சனி நீராடு என்றால், குளிர்ந்த நீரில் குளி என்று பொருள்” - இது அய்யாவின் விளக்கம். முதல் வகுப்பில் படித்த ஆத்திச்சூடிக்கு அன்றுதான் விளக்கம் கிடைத்தது போங்க!
“சோம்பித் திரியேல்” என்ற ஆத்திச்சூடிக்கு விளக்கமளித்தார் அய்யா.
சோம்பலின் அடையாளங்கள் 3 உள்ளனவாம்.
(1) காலைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருத்தல்
(2) இலக்கற்ற பயணம்
(3) தன்னால் கூடுதலாக முடியும் என்ற நிலையிலும் குறைவாக வேலை செய்தல்
“இலக்கு நிர்ணயித்து வாழ்ந்தால், நம்மால் பிறர் பயனடைவர்; அவர்களால் நாம் சிதைய மாட்டோம்... ஒவ்வொரு பொருளும் அருகிலுள்ள பொருளைப் பாதிக்கும் என்பது பௌதீக விதி”
“மனிதனுக்கு பிறந்த நாள் முக்கியமல்ல! அவன் இறக்கும் நாளில் எவ்வாறு இறக்கிறான் என்பதே முக்கியம். அதற்கு அவன் வாழ்நாள் முழுதும் சிந்தித்து செயல்பட வேண்டும்...”
“24 மணி நேரத்தைக் கொண்ட ஒரு நாளில், ஓய்வு - உறக்கம் - நம் தேவைகளுக்காக 8 மணி நேரமும், செய்யும் பணிக்காக (அது கல்வி, வேலை எதுவாகவும் இருக்கலாம்) 8 மணி நேரமும் கழிகிறதெனில், எஞ்சிய 8 மணி நேரம் நம்முடையது. அதை நாம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அவ்வளவு கூட வேண்டாம். வாரத்துக்கு நான்கரை மணி நேரத்தையாவது அதற்கு ஒதுக்கலாம்.”
- இவையெல்லாம் அய்யாவின் கருத்துப் பொழிவில் கிடைத்த அருஞ்செய்திகள். கேட்டுக்கொண்டேயிருக்கலாம். நேரம் இடம் தர வேண்டுமே...? “சலிப்பு தட்டினால் சொல்லிடுங்க! நிறுத்திக்கிறேன்...” என்றார் அய்யா. எங்கே சலிப்பு தட்ட...? மதிய உணவு வேளை வந்ததால், உரையை நிறுத்திக்கொண்டார் அய்யா.
* * * * * * * * * * * * * * *
சிறிது நேரத்தில் ஒருவர் வந்து, “நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் இன்று சமைக்காத உணவு தரப்படவுள்ளது” என்று கூறிச் சென்றார். “அது என்ன சமைக்காத உணவு...?” அந்நேரத்தில் எங்களுக்குப் புரியவில்லை.
வழமை போல 4 பொறுப்பாளர்கள் 5 பாத்திரங்களுடன் காத்திருக்க, நாங்கள் தட்டேந்தி உணவைப் பெற வரிசையில் நின்றோம். என் முறை வந்தது. ஒருவர் என் தட்டில் ஒரு வாழைப்பழத்தை வைத்து, நான் கையில் வைத்திருந்த டம்ளரில் - நம்மூரு ‘பாலும் பழமும்’ பானத்தில், கைக்குத்து அவலை ஊறப்போட்டு அவல் பாயசம் தந்தார்.
துண்டு துண்டாக நறுக்கி, எழுமிச்சைச் சாறில் தோய்த்தெடுத்த சுரைக்காயில் ஒரு கைப்பிடி...
கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, தேங்காய் துருவல் கொண்டு அரைக்கப்பட்ட துவையல் ஒரு விழுது...
ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் பீட்ரூட், அச்சு வெல்லம் கலந்து இனிப்பு அவல் ஒரு கைப்பிடி...
ஊறப்போட்ட கைக்குத்து அவலுடன் துண்டுகளாக்கப்பட்ட கேரட், வேர்க்கடலை, தேங்காய் துருவல், மிளகுத் தூள் கலந்து கார அவல் ஒரு கைப்பிடி... - இவைதான் சமைக்காத உணவு.
“ஐயே... கொஞ்சமாத்தானே இருக்கு...? இது எப்படி நம்ம வயித்தை நிறைக்கும்...?” தட்டில் கை வைக்குமுன் நான் நினைத்தேன் .இப்படி. சாப்பிடத் துவங்கி, நிறைவு செய்ய எனக்கு 30 நிமிடங்கள் பிடித்தது.
இவற்றைக் கொஞ்சங்கொஞ்சமாக அரைத்து, சுவைத்துதான் சாப்பிட முடியும். சமைத்த உணவு போல அரைகுறை அரைப்பில் உள்ளே தள்ள முடியாது என்பது புரிந்தது. வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிடச் சொன்னார்கள்... சாப்பிட்டோம்.
“சரி, டேஸ்ட் எப்படீ”ன்னு கேட்கிறீர்களா...? – ஆகா... என்ன ஒரு சுவை தெரியுமா...? ரசித்து, சுவைத்து சாப்பிட்டு எழுந்தோம்.
* * * * * * * * * * * * * * *
மதியம் 02.30 மணிக்கு, பயிர்களுக்கான பூச்சு விரட்டி செய்து காண்பிக்கப்பட்டது. வழமையாக பயிர்களுக்கு அடிக்கப்படுவதை, ‘பூச்சி மருந்து’ என்று சொல்லக்கூடப் பொறுக்கவில்லை அய்யாவுக்கு. “அத பூச்சி விஷம்ன்னு சொல்லுங்க! மருந்து யாரையாவது சாகடிக்குமா? விஷம்தானேய்யா சாகடிக்கும்...?” என்றார்.
“ஒடிச்சா பால் வரனும்; சுவைத்தால் கசக்கனும்; முகர்ந்தால் நாறனும்” இந்த வரைவிலக்கணப்படி, பப்பாளி, வேம்பு, வேலிகாத்தான் போன்ற மரங்களின் இலைகளைச் சேர்த்து, துண்டு துண்டாக நறுக்கி, மாட்டு சிறுநீருடன் கலந்து ஊற வைத்து காண்பிக்கப்பட்டது.
அதைப் பயிர்களுக்குத் தெளித்தால், வழமையான வாசனையை எதிர்பார்த்து அதை உண்ண வரும் பூச்சிகள், வேறு வாசனை வருவதை உணர்ந்து அங்கிருந்து திரும்பிச் சென்றுவிடுமாம். இதுதான் பூச்சி விரட்டியின் தத்துவம்.
அதுபோல, பழக்கழிவுகளைக் கொண்டு ‘பழக்காடி’ என்றொரு கரைசல், மீன் கழிவுகளைக் கொண்டு ‘மீன் அமிலம்’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு, கூடுதலாக நெய், தயிர், வாழைப்பழம் போன்ற பொருட்களைச் சேர்ந்து ‘பஞ்சகாவ்யா’, பசு அல்லது ஆட்டின் சாணம் - சிறுநீரைக் கொண்டு அமிர்த கரைசல், தேங்காய் பால் - புளித்த மோரைக் கொண்டு ‘தேமோர் கரைசல்’ ஆகியன செய்து காண்பிக்கப்பட்டது.
இவையனைத்தும் பயிர்களுக்கு ஊட்டம் கொடுப்பனவாகவும், தொல்லை தரும் பூச்சிகளை விரட்டுவனவாகவும் செயல்படுமாம்.
பயிர்களுக்கு இடுபொருள் இடுதல், பஞ்சகாவ்யா தயாரித்து தெளித்தல், சவுக்கு விளைச்சல் செய்தல், வட்டப்பாத்தி அமைத்து பல்வேறு செடிகளுக்கான விதைகளை நட்டல், மழைநீரை பயிர்களுக்காக எளிய முறையில் சேகரித்தல் உள்ளிட்டவற்றைக் கொண்டு, மதிய உணவுக்கு முன்பு 3 செயல்திட்டம், மாலை 04.30 மணிக்கு 3 செயல்திட்டம் என மொத்தம் 6 செயல்திட்டங்களை, பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலுடன் பயிர் வளர்ந்த இடங்களில் பங்கேற்பாளாராகிய நாங்கள் நேரடியாகச் சென்று செய்தோம்.
இதில் ஒரு வேடிக்கையும் உண்டு. இந்த செயல்திட்டங்களை ஒவ்வொன்றாகச் செய்வதற்காக பங்கேற்பாளர்கள் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். வட்டமாக அமர்ந்திருந்த எங்களை 1 முதல் 6 வரை அடுத்தடுத்து சொல்லச் சொல்லி, 1 சொன்னவர்கள் தனியாக, 2 சொன்னவர்கள் தனியாக என அனைவரும் 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டோம். “இதிலென்ன வேடிக்கை?” நான் இன்னும் சொல்லவேயில்லை.
நான் 1ஆம் எண் குழுவில் இருந்தேன். நமதூரைச் சேர்ந்த மற்ற மூவரும், அய்யாவின் இந்த எண் தந்திரத்தில் வெவ்வேறு குழுக்களில் பிரிக்கப்பட்டனர்.
‘மெகா’ நூஹ் காக்கா 5ஆம் எண் குழுவிலிருந்தார். அக்குழுவின் பொறுப்பாளர், அவர்களனைவரையும் ‘பஞ்சகாவ்யா’ செய்ய அழைத்தார். “இன்னாலில்லாஹி... மாட்டு மூத்திரத்தில் கை வைக்கச் சொல்றாங்களே...” என்று நினைத்த ‘மெகா’ நூஹ் காக்கா, நைஸாக எனது 1ஆம் நம்பர் குழுவில் வந்து இணைந்துகொண்டார்.
தனது புத்திசாலித்தனத்தை என்னிடம் மகிழ்ச்சியாக அவர் சொன்னபோது, “காக்கா, இந்த 6 குழுவினரும் சுழற்சி முறையில் 6 செயல்திட்டங்களையும் செய்தேயாகனும்... நாங்க இப்ப இரண்டாவது செயல்திட்டத்தில் இருக்கிறோம்... அடுத்து, நீங்க ஆசைப்பட்ட பஞ்சகாவ்யாதான்...” என்றேன். அப்போது அவர் அசடு வழிந்ததைக் காண நூறு கண்கள் வேண்டும்... :-)
செயல்திட்டங்களை நிறைவு செய்த பின்னர், மருந்தடிக்காமல்... ஓ மன்னிக்கனும்! விஷமடிக்காமல் விளைவிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு – அதாங்க... நம்மூரு ஏழல கிழங்கு ஓர் அகன்ற பாத்திரம் நிறைய வைக்கப்பட்டிருந்தது.
மூலிகைத் தேனீரை அருந்தியவாறு கிழங்குகளை விரும்பிய மட்டிலும் சாப்பிட்டு மகிழ்ந்தோம். ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு...? மறுநாள் காலையில் அந்தக் கிழங்குப் பாத்திரத்தில் கைவிட்டேன்... அதே கிழங்கு... அதே ருசி! பிசுபிசுப்பு எதுவுமேயில்லை. நான் சாப்பிடுவதைப் பார்த்து இன்னும் இரண்டு பேர் பாத்திரத்திற்குள் கை விட்டனர்.
காலையில் இதுகுறித்து அய்யா பேசுகையில், “அய்யா இந்த கிழங்கு சாப்பிட்டீங்களே... சுவையா இருந்திச்சா...? இப்ப கூட அதை நேற்று போலவே சாப்பிடலாம்... பிசுபிசுப்பே இருக்காது அய்யா... அந்த பிசுபிசுப்பிற்குக் காரணமே பூச்சி விஷம்தான்.
நம்மளது இயற்கை விவசாயத்தில் வந்ததல்லவா? தைரியமா சாப்பிடுங்க...” என்றார். இப்படிச் சொன்னதுதான் தாமதம்... அனைவரும் ஆளுக்கொரு துண்டு எடுத்து சாப்பிடத் துவங்கிவிட்டனர்.
* * * * * * * * * * * * * * *
இப்படியாக இரவு எங்களை வந்தடைந்தது... குடிலுக்கு வெளியே நிலவொளியில் அய்யா நாற்காலியில் அமர்ந்தார். அனைவரும் தரையில் பாய் விரித்து அமர்ந்து கதை கேட்டோம்... பேசினார்... பேசினார்... நிறைய தகவல்களைச் சொன்னார்...
இம்முறை, விவசாயத்தையும் தாண்டி அய்யாவிடம், இலங்கை தமிழர் பிரச்சினை, உலக பயங்கரவாதம், குறைந்த செலவில் நிறைவான வாழ்வு, அய்யாவின் தன் சரிதம் என பலவற்றைப் பற்றியும் கேள்விகளை எழுப்பினோம்... அழகாகவும், எளிமையாகவும் அவர் விளக்கமளித்த பாங்கு - கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்கும் விதம் குறித்து பாடம் நடத்துவது போலிருந்தது.
கூடவே அய்யாவின், ஆங்கிலப் புலமை, உலக - தேசிய - மாநில அரசியல் அறிவு, அறிவியல் அம்சங்களில் தெளிவான பார்வை, இயற்கை விவசாயத்திற்கு இலக்கணம், நகைச்சுவை உணர்வு, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா – கர்மவீரர் காமராசர் - திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் என பல புகழ்பெற்றவர்களின் குரல்களைப் போல் பலகுரலில் பேசி எங்கள் கவனத்தை முழுமையாக ஈர்த்தது என பல அம்சங்கள் அவரது பேச்சில் வெளிப்பட்டது.
நம்மாழ்வார் அய்யாவுடன் உரையாடுகையில் இயற்கை வேளாண்மையின் பரவலுக்காக இந்த முதிய வயதில் தனது குடும்ப வாழ்வை அர்ப்பணித்ததை மிகவும் சாதாரணமாகவும், மேலோட்டமாகவும் சொல்லிக் கடந்து சென்றார்.
“அய்யா! குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வது உங்களுக்கு வருத்தத்தை அளிக்கவில்லையா?“ எனக் கேட்கப்பட்டதற்கு, “மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட்டேன்... மனைவிக்கு எனது பொது வாழ்வு பிடிக்கவில்லை... அதனால் இந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் வரவில்லை... ஒன்றை அடைய வேண்டுமானால் ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும்... எனக்கு நாடு முழுக்க குடும்பங்களும் உறவுகளும் இருக்கின்றன“ என அவர் சொல்லி முடிக்கும்போது எங்கள் கண்கள் பணித்தன.
நம்ம ஊரில் உள்ள புற்றுநோய் பரவல் தொடர்பாக அய்யாவிடம் கேட்டோம். “மனித உடல் இயற்கையாகவே அதன் வேலையைச் செய்துகொண்டுதான் இருக்கிறது... அனைவரின் உடம்பிலும் புற்றுநோயை உண்டாக்கும் கிருமியும் உள்ளது... அது வரையறுக்கப்பட்ட அளவுக்கு இருப்பது தேவையான ஒன்றே... அளவு கூடினால்தான் அது புற்றுநோயில் போய் முடிகிறது... நமது உடல் மாசடைவதே புற்று நோய்க் கிருமியின் அளவு அதிகமாவதற்கு முக்கிய காரணம்...
நீர், நிலம், காற்று அனைத்தும் மாசுபட்டுள்ளது... அவற்றைத்தான் நாம் உள்வாங்குகிறோம்... பற்றாக்குறைக்கு, நாம் உண்ணும் உணவும் இன்று விஷமில்லாத ஒன்றைக் காண்பதே அரிது என்றாகிவிட்ட பிறகு, இந்த மாசு எல்லாம் சேர்ந்துதானய்யா அந்த புற்றுநோய்க் கிருமிக்கு தீனி போடுது...” என்றார்.
புற்றுநோயை இயற்கை முறையில் குணமாக்க வாய்ப்புண்டா என இயற்கை உணவியல் நிபுணர் மாறன்ஜியிடம் கேட்டபோது,
“அவங்க இயற்கை உணவுக்கு முழுமையாக மாறனும்... புற்றுநோய்க் கிருமிகளுக்கு இயற்கை உணவில் எந்தத் தீனியும் கிடைக்காது என்பதால் அவை செத்துப் போகும்...
கீமோ கொடுத்தாச்சா...?” என்று கேட்டார். “கொடுக்கப்பட்டவர்களும் உண்டு; கொடுக்கப்படாதவர்களும் உண்டு” என்றோம்.
கொடுக்கப்பட்டவர்களின் உடம்பு ஏற்கனவே நாசப்படுத்தப்பட்டுவிட்டது... அந்த உடம்பில் இயற்கை உணவு வேலை செய்ய பெரும்பாடு படும்... முயற்சிக்கலாம்! இதுவரை கீமோ கொடுக்கப்படவில்லையெனில், அவர்கள் முழுமையாகக் கட்டுப்பட இசைந்தால், இயற்கை உணவைக் கொண்டே குணப்படுத்த முடியும்” என்றார் நம்பிக்கையூட்டும் விதமாக!
* * * * * * * * * * * * * * *
இவ்வாறாக இரண்டாம் நாள் இரவு எங்களிடமிருந்து விடைபெற்று, 14.11.2013 வியாழக்கிழமையன்று மூன்றாம் நாள் விடிந்தது... சிற்சில செயல்திட்டங்களும், யோகா – மன வலிமைக்கான செய்முறைப் பயிற்சிகளும் - அவற்றுக்கென வந்திருந்த நிபுணர்களால் செய்து காண்பிக்கப்பட்டது.
பயிர்கள் வளர்ந்துள்ள பகுதிகளுக்குச் சென்று, அவற்றின் மீது இருக்கும் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வருமாறு பணிக்கப்பட்ட நாங்கள், காலை 07.00 மணியளவில் உற்சாகமாக வெளியிறங்கினோம் - பூச்சி பிடிக்க.
இலைகளின் மீது அமர்ந்தும், இலைகளைச் சுருட்டித் தனக்குப் போர்வையாக்கிக் கொண்டும், கிளைகளின் மீது தவழ்ந்தும், வேர்களையொட்டியும் அலைந்து திரிந்த பல வகையிலான பல வண்ணப் பூச்சிகளைப் பாய்ந்து பாய்ந்து பிடித்தோம். கடைசி வரை பிடி தராத தட்டாம்பூச்சியை (அதாங்க... நம்மூரு தும்பியை) இளைஞர்கள் பறந்து பறந்து பிடிக்க முயற்சித்து, இயலாமல் மண்ணைக் கவ்விய காட்சிகள் ரசிக்கும்படியாக இருந்தன. நிறைவில், பிடிபட்ட பூச்சிகளைக் கொண்டு ஒரு செயல்திட்ட அறிக்கையை தயாரித்து, வானகம் நடுவ பொறுப்பாளர்களிடம் சமர்ப்பித்தோம்.
முகாமில் கடந்த இரண்டு நாட்களாக ஓரளவுக்கே பழகியிருந்த நாங்கள், இந்த பூச்சி வேட்டையின் மூலம் நெருங்கிய நண்பர்களானோம். ஆம்! பல ஊர்களிலிருந்தும் இன்று எங்களுக்கு ஏராளமான பசுமைத் தோழர்கள் உள்ளனர்.
நிறைவாக, அய்யா குடிலுக்கு வந்தமர்ந்தார். “இந்த 3 நாட்கள்ல நீங்க பெற்ற பட்டறிவு குறித்து ஒரு பத்து பேரு சொல்லுங்கய்யா...” என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கருத்துக்களைக் கூறினோம்.
அய்யா கேட்டுக்கொண்டதோ பத்து பேரை மட்டும் பேச! பேசியதோ 20 பேர் வரை!! அனைவருமே இந்த முகாம் தங்களுக்கு இயற்கை விவசாயம் - எளிய வாழ்க்கை முறை குறித்து மிகுந்த ஆர்வத்தையும், வேகத்தையுமே ஏற்படுத்தியுள்ளதாகவும், விஷம் கலந்த அனைத்தின் மீதும் அளவிட முடியாத வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆதங்கத்துடன் கூறக்கேட்ட அய்யா, அனைவருக்கும் சில அறிவுரைகளை வழங்கினார்.
அந்தக் கலந்துரையாடலில் தமிழகம் முழுக்க இயற்கை வேளாண்மையின் பக்கம் மக்கள் திரும்புவதற்கான ஏராளமான சான்றுகள் தென்பட்டன. தஞ்சையில் வேளாண்மை உள்ளிட்ட வாழ்வியல் கல்விகளை கற்பிக்கும் பல்முனைக் கழகம் (multiversity) உட்பட சில நிறுவனங்கள் தொடங்க உள்ளதாகவும் அய்யா தெரிவித்தார்.
வானகத்தில் இயற்கை வேளாண்மையைக் கற்று - பின்பற்றி - பரப்பிடும் நோக்கில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பணியாற்றும் பட்டதாரிகளையும், விவசாயிகளையும் அங்கே காண முடிந்தது. அய்யா நம்மாழ்வார் தன் வாழ்நாள் இலக்கை எட்டிவிட்டதாகவே எங்களுக்குப் பட்டது.
வானகம் நடுவத்தில் அரைபட்ட - மிதிபட்ட வைக்கோல்களும், மர இலை - கிளைகளும் சிதறிக் கிடந்தன. அய்யாவின் போராட்டப் பயணத்தில், மிதிபட்ட அவை - நுகர்வு வெறி, லாப வெறி, கார்ப்பரேட் பண்பாடு, ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றின் சருகுகளாகவே கண்களுக்கு தென்பட்டன.
முகாமில் பங்கேற்ற எங்கள் அனைவருக்கும் அய்யா தன் கைச்சான்றிட்ட சான்றிதழ்களை வழங்கினார். பங்கேற்பாளர் அனைவரின் சார்பிலும் ஐயாவுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தியதோடு, வானகம் நடுவ வளர்ச்சிக்காக எங்கள் சிறிய நன்கொடையையும் கையளித்தோம். பின்னர், அனைவரும் ஆவல் தீருமளவுக்கு அய்யாவுடன் குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.
உங்களுக்கு கண்டிப்பா ஒரு விஷயத்தை சொல்லியே ஆகனும்... முதல் நாளிரவில் “பக்கத்து ஊர்ல ரூம் போட்டு தங்குவோம்” என்று சொன்ன என்.எஸ்.இ. மாமா இரண்டாம் நாளிலிருந்து, முகாம் நிறைவு வரை அவ்வாறு சொல்லவே இல்லை என்பது மட்டுமின்றி, எங்களோடு இணைந்து முகாமில் முழுமையாக ஒன்றிப் போனார். அடுத்த நாளுக்கு என்ன செய்வது என்ற திட்டங்கள்தான் அவர் என்னிடம் பேசும்போது வெளிப்பட்டது. “ஓ... மாமா இந்த வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிட்டார்கள் போலும்!” எனக்குள் நினைத்துக் கொண்டேன்.
* * * * * * * * * * * * * * *
மதிய உணவுண்டோம்... பெட்டியைக் கட்டினோம்..
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த – இயற்கை விவசாயம், எளிய வாழ்க்கை முறை, நோயற்ற வாழ்வு, சுவையான இயற்கை உணவு, சமையல் குறிப்பு குறித்து பல்வேறு தலைப்புகளிலான அருமையான நூற்களையும், பூச்சிக்கொல்லி விஷம் கலக்காமல் விளைந்த தினை, சாமை, குதிரைவாலி, வரகரிசி போன்ற சிறு தானியங்களையும் பணம் கொடுத்து வாங்கி வைத்துக்கொண்டோம்.
அனைவரும் இணைந்து குடிலை விட்டும் விடைபெற்றோம்.
தெரியுமா உங்களுக்கு...? நேற்று மதியம் என் வீட்டில் சமைக்காத உணவுண்டோம். சோற்றுக் கற்றாழையை உடல் முழுக்கத் தேய்த்துக் குளிக்கிறோம்... அப்பாபள்ளி கோட்டைக்குள் நிற்கும் ஆலமரத்தின் விழுதுகளை வெட்டியெடுத்து, அதைக்கொண்டு பல் துலக்குகிறோம்... எங்கள் வீட்டில் சேரும் குப்பை எனும் உரச் சொத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்.
இந்த சிறிதளவு மாற்றத்தைக் கூட நான் செய்யவில்லையெனில், மூன்று நாட்கள் அங்கிருந்ததில் பயன் என்ன இருக்கப்போகிறது...?
[முற்றும்] |