பசுமை மறையும் காயலைக் கண்டு ஆதங்கம்...
நவீனத்தை மறந்து இயற்கையில் நகரம் தவழ ஏக்கம்...
மனித வசதிக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளே மனிதனை அடிமையாக்கி வருவது கண்டு வருத்தம்...
நாள்தோறும் மாலை வேளைகளில் கடற்கரையில் நண்பர்களுடன் கூடும்போதெல்லாம் இவை குறித்து கொஞ்சமேனும் பேசத் தவறுவதேயில்லை நாங்கள்.
ஒருநாள், முகநூலில் பார்த்த தகவலை - எழுத்தாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சகோதரர் சாளை பஷீர் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். கரூர் மாவட்டம், சுருமான்பட்டியில், வானகம் என்ற பெயரில் 133 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் குறித்த ஆராய்ச்சி நடுவம் உள்ளதாகவும், நம்மாழ்வார் என்ற தமிழ்ச் சித்தரால் அங்கு மாதந்தோறும் 3 நாட்கள் முகாம் நடத்தப்படுவதாகவும், நவம்பர் மாத முகாம் 12, 13, 14 தேதிகளில் நடைபெறவுள்ளதாகவும் எனக் கூறுவதே அந்த முகநூல் தகவல்.
எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது என்ற என்.எஸ்.இ. மாமா, சமூக ஆர்வலர் ‘மெகா’ நூஹ் காக்கா, எழுத்தாளர் சாளை பஷீர், திரைப்பட இயக்குநரும் - எங்கள் நண்பருமான அமீர் அப்பாஸ் ஆகியோருடன் நானும் முகாமில் கலந்துகொள்ள அப்போதே முடிவு செய்தோம்.
“அந்த இடம் எப்படி இருக்கும்?”
“அங்கு என்ன நடக்கும்?”
“தங்கும் வசதிகள் எல்லாம் எப்படி இருக்கும்?”
முகாமில் பங்கேற்க முடிவெடுத்த நாள் முதல் என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் பெரும்பாலும் இப்படித்தான் விவாதித்துக்கொண்டிருந்தனர்.
நான், என்.எஸ்.இ.மாமா, ‘மெகா’ நூஹ் காக்கா ஆகியோர் நவம்பர் 11ஆம் தேதி இரவு 09.30 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து திருச்சிக்கு செல்லும் பேருந்தில் ஏறி புறப்பட்டோம். மறுபுறத்தில் சாளை பஷீர் காக்கா சென்னையிலிருந்து தொடர்வண்டி மூலம் புறப்பட்டார்.
12.11.2013 செவ்வாய்க்கிழமை அதிகாலை 04.30 மணியளவில் நாங்கள் திருச்சியைச் சென்றடைந்தோம். அங்கு, ஜங்ஷன் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அடுத்த பயணத்திற்கு நாங்கள் ஆயத்தமாக, சாளை பஷீர் காக்கா வந்து சேர்ந்தார். அனைவருமாக, காலை 07.15 மணிக்கு, ஜங்ஷன் பேருந்து நிலையத்திலிருந்து கடவூர் செல்லும் பேருந்தில் புறப்பட்டோம்.
* * * * * * * * * * * * * * *
பேருந்துச் சக்கர அச்சோடு சேர்ந்து நகர்ப்புறமும் தொலைந்தது... கிராம வாசல் திறந்தது. மணப்பாறையைத் தாண்டியதும், அடுத்தடுத்து வந்ததெல்லாம் புழுதி படிந்த வறண்ட கிராமங்கள்.
ஓலைக் குடிசை... சுற்றிலும் வேலி... சிறிய கோழிக்கூண்டு... அதனருகே - தன் குஞ்சுகளைத் திருட வந்த காகத்தை விரட்டும் கோழிகள்... தொழுவத்தில் கட்டப்பட்ட ஆடுகள்... மணற்பரப்பெங்கும் அதன் புலுக்கைகள்... பரபரப்பான மணற்பரப்பிலிருந்து, ஓய்வும் அமைதியும் நிறைந்த மணற்பரப்பிற்கு செல்வது என்பது மனதை வருடுவதாக இருந்தது... ஐம்பது ஆண்டுகளுக்கு முன் காயலர்களும் அனுபவித்த அதே வாழ்க்கைமுறையிலான பகுதிகள்.
தொலைவில் ஒரு சிறிய பள்ளிக்கூடம்... நிறைய மழலையர்... எப்போதாவது வரும் எங்கள் பேருந்தை மட்டும் பார்த்து உற்சாகதுடன் கையசைத்தது ஒரு கிராமத்து மழலை... பகரமாக நானும் கையசைத்தேன்... அது என்னைக் கவனிக்கவேயில்லை.
ஆங்காங்கே படிக்கட்டுகளில் விவசாயக் குடிமக்களும், சில கரைவேட்டி பிரமுகர்களும் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். ஒரே அறையைக் கொண்ட ஒடுங்கிய வீட்டிற்குள் அமர்ந்து, தட்டு நிறைய மனைவி தந்த காலை உணவை ரசித்து, ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு விவசாயி.
ஓட்டுநர் வண்டியை குறைந்த கியருக்கு மாற்றினார். தலைதூக்கிப் பார்த்தபோது அது உயர்ந்த மலையில் ஏறிக்கொண்டிருந்தது. ஊட்டிக்குச் செல்லும் பாதை போல கொண்டை ஊசி வளைவுகள்... குறைந்த நீர்மட்டத்துடன் குறுக்கிட்டது அழகிய அணைக்கட்டு ஒன்று . ஒருவழியாக காலை 10.00 மணியளவில் எங்களை வரவேற்றது, வானகமும், அதற்குள்ளிருந்த கானகமும்.
கற்பாறை நிறைந்த கரட்டு பூமி... நதிகள், குளங்கள் என எதுவுமே இல்லாத வனாந்திரம்... கிணற்று நீரை மட்டுமே நம்பி நடக்கும் கொஞ்சம் விவசாயம். முழு அளவிலான வேளாண்மை என்பது இப்பகுதியைப் பொருத்த வரை ஓர் அறைகூவல்தான்! நம்மாழ்வாரின் மனத்துணிவை எண்ணுகையில் வியப்பாக இருந்தது.
தங்கும் அறையும் கழிப்பறையும் மட்டும் திருப்தியாய் இருந்தால் போதும் என்று முனுமுனுத்தவாறு என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் முன்னே நடக்க, 3 நாட்களையும் முழுமையாகத் தாக்குப் பிடிப்பார்களா? என்ற கேள்வியுடன் அவர்களைப் பின்தொடர்ந்தோம் நானும், சாளை பஷீர் காக்காவும்.
காற்று புகுந்து விளையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த ஓலைக் குடிலில் ஒன்றுசேர்ந்தோம் இடத்தால் - மதத்தால் - தொழிலால் - பொருளாதாரத்தால் வேறுபட்ட நாங்கள் 40 பேரும். குடிலைச் சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அறிவுறுத்தும் காட்சிப் படங்கள் அடங்கிய ஏராளமான பலகைகள் தொங்க விடப்பட்டிருந்தன.
ஊரில் இஞ்சிகலந்த தேனீர் குடித்துப் பழகிய எங்களை வரவேற்றது கம்பங்கூழும், கொத்தவரைக்காய் வற்றலும்.
யார் சொன்னது நல்லாயிருக்காது என்று...? வற்றலைக் கடித்தவாறே இரண்டு கோப்பைகள் பருகி வயிறு நிறைத்தோம். சிறிது நேரத்தில், எங்களை மரம் நட வருமாறு ஒருவர் அழைத்தார். கையில் சாந்து சட்டிகள், மண்வெட்டிகள், கடப்பாறைகள், குடங்களைத் தாங்கியவாறு அவரைப் பின்தொடர்ந்தோம்.
மேடு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பில், குறிப்பிட்ட ஒரு பகுதியைச் சென்றடைந்தோம். அனைவருமே மண்வெட்டி பிடித்து, பள்ளம் தோண்டி, அதற்குள் சவுக்கு, மா, நெல்லி, அகத்தி என பலவகை மரங்களை நட்டோம்.
பின்னர் நிலப்பரப்பில் முளைத்திருந்த களை - வெற்றுப் பயிர்களைத் வெட்டித் துண்டுகளாக்கி, குழிக்குள் இட்டோம். மண்ணில் மக்கிய சாணி உரத்தையும் அதனுள் இட்டு, தேங்காய் தும்புகளை மரத்தைச் சுற்றியிட்டு, நீண்ட தொலைவிலிருந்து குடத்தில் நீர் சுமந்து நடந்து வந்து குழிக்குள் ஊற்றியவாறு ஆளுக்கொரு மரம் நட்டினோம். மரம் நட்டுவதென்றால் குழிதோண்டி, நட்டு, நீரூற்ற வேண்டும் என்று எல்லோரையும் போல் கருதிய எங்களுக்கு அங்கு கிடைத்தது அந்த முதற்பாடம். பின்னர் அவ்விடத்தை விட்டும் வசிப்பிடம் திரும்பி வந்தோம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் உடம்புகளிலிருந்து கொட்டிய வியர்வை காய்ந்திருந்தது. மனதிலோ ஒரு வகையான புத்துணர்ச்சி!
இவ்வாறு நான்கு ஆண்டுகளாக நடந்து வரும் கூட்டு உழைப்பில் அந்த கரட்டு பூமியில் பசுமை மெல்ல தலையாட்டத் தொடங்கியிருந்தது.
* * * * * * * * * * * * * * *
காலை 10.55 மணிக்கு அங்கு வந்த செந்தில் கணேசன், அடுத்தடுத்து கருத்துப் பரிமாற வரவுள்ள அறிஞர்கள் குறித்து அறிமுகம் செய்துவிட்டுச் சென்றார். ஆம், அவர் கானகத்தின் பொறுப்பாளர்களுள் ஒருவர்.
சிறிது நேரத்தில், அரசு விவசாயத்துறையில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஹுஸைன் என்பவர் உரையாற்ற வந்தார். துவக்கமாக எங்களை தன்னறிமுகம் செய்துகொள்ளச் சொன்னார். பெயர், ஊர், தொழில், முகாமில் பங்கேற்கும் நோக்கம் என ஒவ்வொருவரும் எங்களை நாங்களே அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
வியப்பு என்ன தெரியுமா? முகாமுக்கு வந்த பலர் தகவல் தொழில் நுட்பத்துறையில் (ஐடி) நல்ல ஊதியம் பெறுபவர்களும், ஆடிட்டர் (கணக்குத் தணிக்கயாளர்) உள்ளிட்ட உயர் பொறுப்புகளிலிருப்போரும், பல்வேறு தொழில்கள் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுவோரும், பரம்பரை பரம்பரையாய் விவசாயம் செய்து வருவோரும்தான்!
பெரும்பாலும் தோட்டங்களோடு இணைந்த வீடுகளைக் கொண்டிருந்த நமதூரில் நிலப்பற்றாக்குறையைக் காரணங்காட்டி தோட்டங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதிருக்கும் நிலையில் - மாடித்தோட்டம் போன்ற பல வழிமுறைகள் மூலம் இயன்றளவு விவசாயம் செய்ய மக்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அதற்கான வழிமுறைகளை எதிர்பார்த்தே அங்கு வந்துள்ளதாகவும் காயலர்களாகிய நாங்கள் எங்களது அறிமுகத்தின்போது கூறினோம்.
பின்னர், திரு. ஹுஸைன் பேசத் துவங்கினார். பூச்சுக்கொல்லி கலக்காத இயற்கை விவசாயம் குறித்து உற்சாகத்துடன் உரையாற்றிய அவர், சில நிமிடங்களில் பேரிடியாய் முழங்கத் துவங்கினார்.
>> இந்தியர்கள் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அனைத்துமே விஷம் கலந்தவை...
>> பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களின்பால் இன்றைய மக்களுக்குள்ள நாட்டம் மிகுந்த ஆபத்தானது...
>> மைதாவால் செய்யப்பட்ட புரோட்டாவை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு உண்டால் மலம் வராது...
>> இதே நிலை நீடித்தால் 100க்கு 75 பேர் குழந்தைப் பேறு அற்றவர்களாகவே இருப்பர். நாட்டில் பெருகி வரும் கருத்தரிப்பு மையங்கள் (Fertility Centres) இதற்குக் கண்கண்ட சான்றுகள்...
>> இன்றைய நவீன உணவு முறைகளால் சிறுமியர் 8 வயதில் பூப்பெய்வதும், இளம்பெண்கள் 21 வயதிலேயே மெனோபாஸ் நிலையை அடைவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது...
இவ்வாறு பேசிக்கொண்டேயிருந்த அவர் ஒரு கட்டத்தில்,
பணி நிறைவுபெற்ற பின்னர் இன்றளவும் என்னை பலர் பல்வேறு வேலைவாய்ப்புகளைக் காண்பித்து அழைக்கின்றனர்... பல்லாயிரம் ஊதியமாகக் கூட கிடைக்கும். ஆனால், இந்த விவசாயத்தை நான் இறைவணக்கமாகக் கருதி மன நிறைவோடு செய்து வருகிறேன் எனக்கூறினார்.
இப்படியே சென்றது அவர் உரை. உரையினிடையே பயிர்களுக்குத் தெளிக்கப்படும் விஷம் குறித்து விளக்கிய அவர், “இதற்கு மேல் இதுகுறித்துப் பேசினால் உணர்ச்சிவயப்பட்டு விடுவேன்...“ என்றார். ஆம்! இன்னும் சிறிது பேசியிருந்தால் அவர் அழுதிருப்பார் அல்லது அநியாயக்காரர்களைத் திட்டித் தீர்த்திருப்பார் போலும்! அந்தளவுக்கு அவருக்கு அழுத்தம் இருந்ததை அவரது சொற்கள் உணர்த்தின.
எப்படி குளிப்பது என்பதற்கு அழகான ஒரு முறையைச் சொன்னார். “முன்னோர்கள் குளத்தங்கரையில் குளிப்பர். முதலில் கால் நனைத்து, பின்னர் உடல் நனைப்பர். உடல் சூடு தலை வழியே வெளியேறுவதை உணர முடியும். இறுதியில் தலையை நனைப்பர். இன்றோ நாம் குளியலறையில் ஷவர் பாத் எடுக்கிறோம். எடுத்த எடுப்பிலேயே தலைக்கு நீர் ஊற்றுகிறோம். விளைவு...? சூடு தணியாமல் நோய்களை விலைக்கு வாங்குகிறோம்...” கேட்பதற்கே அருமையாக இருந்தது இக்கருத்து. இன்றும் இம்முறையை வேறு வழிகளில் நாம் பின்பற்றலாம்தானே...?
இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது. பெருமழை பெய்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த உணர்ச்சிப்பூர்வமான உரை.
அவரைத் தொடர்ந்து, பயிர்கள் மீது திரியும் பூச்சிகள் குறித்து திரு. ‘பூச்சி’ செல்வம் பேச வந்தார். (பூச்சிகள் குறித்த அவரது விசாலமான அறிவு காரணமாக, பயிர்களில் ஒட்டுவது போல அவர் பெயருடனும் ‘பூச்சி’ ஒட்டிக்கொண்டதாம்.)
அசைபட விரிதிரை (வீடியோ ப்ரொஜெக்டர்) துணை கொண்டு - உலகம் படைக்கப்பட்ட நாளிலிருந்து துவங்கி, பூச்சிகளை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பிரித்து விளக்கி, பூச்சி போலவே இரைந்து ஆற்றிய அவரது உரையின் பாங்கு, பொறுமையாகவும், பக்குவமாகவும் தயாரித்து வெளியிடப்பட்ட பயனுள்ள ஒரு திரைப்படத்தைக் கண்டு முடித்த உணர்வை எங்களுக்குத் தந்தது என்றால் அதை மிகையாகாது.
* * * * * * * * * * * * * * *
மதிய உணவு சாப்பிடும் நேரம்.
ஐந்து பெரும் பாத்திரங்களில் சோறு, சாம்பார், ரசம், காய்கறிக் கூட்டு, மோர் ஆகியவற்றை வைத்துக்கொண்டு பொறுப்பாளர்கள் காத்திருந்தனர்.
அனைவரும் வரிசையில் நின்று பெற்று உண்டோம். நீண்ட காலத்திற்குப் பிறகு முதன்முறையாக - மருந்தே கலக்காத உணவுப் பொருட்களை உண்டது எங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாயிருந்தது தெரியுமா...?
மதியம் 03.15 மணியளவில் இயற்கை உணவு, சித்த மருத்துவ நிபுணர் மாறன்ஜி பேசத் துவங்கினார்.
பூச்சுக்கொல்லி மருந்துகள் தெளிக்காமல் இயற்கை முறையிலேயே விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளை அவர் விளக்கிப் பேசினார்.
இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து அழகுற விளக்கினார் அவர். உரையின் நிறைவில், அனைவருக்கும் அவர் மருந்து கலக்காத முளை கட்டிய பயறும், நாட்டு வெல்லமும் கலந்த சிறுகடியும் (ஸ்னாக்ஸ்) கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டுகளின் சாறும் வெல்லமும் கலந்த மூலிகை பானமும் வழங்கினார்.
கதிரவன் மங்கியதும் இருள் படர்ந்தது. இருளைத் துரத்திடும் செயற்கை முயற்சிகள் எதுவுமே இல்லை - ஓலைக்குடிலுக்குள் எரிந்த ஒரு குழல் விளக்கைத் தவிர! அரசின் மின் இணைப்பும் இல்லை மின் விளக்குகளும், மின் விசிறிகளும் இல்லை.. பெற்றோமாக்ஸ் போன்ற தூக்கும் விளக்குகள் ஒன்றிரண்டு இருந்தன. அவையனைத்தும் கதிரொளி (solar) மூலம் இயங்குபவை. கிணற்றிலிருந்து நீரை இறைக்கும் நீர் இறைப்பானும் (pump set) கூட கதிரொளியில் இயங்கக் கூடியதாக இருந்தது.
மின்சாரத்தின் ஆக்கிரமிப்பு தொலைந்ததால் வானத்தின் இயல்பான வெளிச்சம் இருளோடு விளையாடிக் கொண்டிருந்தது. இருளோ வானகத்தின் வெளியெங்கும் இன்ப உலா வந்து கொண்டிருந்தது. நம் கண்களும் இருளுக்குக் கொஞ்சங்கொஞ்சமாகப் பழகி விட்டிருந்தது. வானகத்தில் உள்ள கானகத்தின் விரிந்த பரப்பும், ஆழ்ந்த அமைதியும், இருளும், அதிராத வெளிச்சத் தடங்களும் ஒன்று சேர்ந்து மனதிற்குள் தென்றல் போல ஏகாந்தத்தை நிறைத்துக் கொண்டிருந்தது.
இயற்கை வேளாண்மை என்ற அளவோடு தனது பணியை நிறுத்திக்கொள்ளாமல் இயற்கை உணவு, எளிமையும் - உடல் உழைப்பும் - களிப்பும் மிக்க வாழ்க்கை என அழகிய ஒரு வளையத்தை வானக நடுவத்தில் காண முடிந்தது.
* * * * * * * * * * * * * * *
மாலை 06.40 மணியளவில், மண்புழு உற்பத்தி மற்றும் மண்புழு மூலம் இயற்கை உரம் தயாரித்து பெருமளவில் தொழில் செய்யும் திரு. கோபாலகிருஷ்ணன் உரையாற்றினார்.
மண்புழு குறித்து பட விளக்கங்களுடன் அவர் ஆற்றிய உரையின் நிறைவில், நம் வீட்டில் சேரும் குப்பைகளை நகராட்சியிடம் கொடுக்காமல், அதைக் கொண்டே விவசாயம் செய்வதற்கான எளிய முறை குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பேசினார்.
உரை நிறைவுற்றதும், இரவுணவாக சாம்பார் சோறு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதுபோன்ற வாழ்க்கை முறைக்கு சிறிதளவும் பழக்கப்பட்டிராத என்.எஸ்.இ. மாமாவும், ‘மெகா’ நூஹ் காக்காவும் கொஞ்சம் அவதியாக உணர்ந்ததை மறைப்பதற்கில்லை. என்.எஸ்.இ. மாமா என்னிடம்,
“ஸாலிஹ்! இன்னைக்கு ஓகே. நாளைக்கு நாம் பக்கத்துல ஏதாவது ஒரு ஊர்ல ரூம் போட்டு தங்கிட்டு, டெய்லி காலைல வந்துட்டு நைட் போவோம்...” என்றார்.
“பார்ப்போம் மாமா...” என்றேன் நான்.
எனக்கோ, சாளை பஷீர் காக்காவுக்கோ ஏற்கனவே இதுபோன்ற வாழ்க்கை முறையில் ஓரளவு பட்டறிவு இருந்ததால், இது அவதியாகப் படவில்லை. ஆனால், இயற்கை விவசாயம், எளிய வாழ்க்கை முறையில் தமக்கிருந்த தீராத ஆர்வத்தின் காரணமாக, நாங்கள் அழைத்தவுடனேயே இசைவு தெரிவித்து, அதனடிப்படையில் எங்களோடு வந்திருந்த இவர்கள் இன்னும் இரண்டு நாட்கள் இன்பமாக இருக்க வேண்டுமே... என்ற ஏக்கம் எங்களிருவரையும் ஆட்கொண்டது.
இயற்கைச் சூழலில் வாழ்ந்த கொசுக்களின் அன்புத் தொல்லைகளுக்கிடையிலும், பயணக் களைப்பு மிகுதியாலும் எப்போது உறங்கினோம் என்றே எங்களுக்குத் தெரியாமற்போனது.
* * * * * * * * * * * * * * *
[தொடரும் ...]
இத்தொடரின் இறுதி பாகத்தை காண இங்கு அழுத்தவும் |