தாய்மை வேண்டி தவம் இருக்கும்
அனைத்து தேடல்களுக்கும்
கண்ணீருடன் இக் கவிதை
சமர்ப்பணம்... முஸ்தாக் அஹ்மத்
பூக்கள் நிறைந்த தோட்டத்தில்
கை கால் முளைத்த பூங்கொத்தின்
ஸ்பரிசத்தில் விடியுமென் முற்பகல்
தேடித் தேடி தீர்ந்தபோது- பூக்களற்ற
தேசத்தில் தொடருமென் நிமிடங்கள்...
ஒருமுறை தான் மரிக்க முடியுமான இம்மையில்
ஒவ்வொரு மாதமும் மரணித்துத் திரும்புமென்
ஜீவிதம்.
மாதம் முழுக்கக் கட்டிவைத்த- என்
மக்களுக்கான மனக் கோட்டை
மாதக் கழிவுகளோடு கரைந்தே விடுகிறது.
கன்னம் வழி கண்ணீர் வந்தால்
கணவனுக்குக் கவலை...
உள்ளே உருகி வழியும் கவலைக்கு
என் உயிரே விலை.
விசாரிப்புகளின் நெரிசலில் – சிக்கித்
தவிக்குமென் உயிர்
கரிசன போர்வையில்
கருகிக் கிடக்கும்மென் கனவுகள்
வயிற்றின் வழி வந்தால்தான்
வாரிசு என்று வல்லவனே வகுத்த பின்
படைத்தவனின் படைப்புகள்
என்னதான் செய்ய முடியும்...
ம்மா என்று சொல்லச் சொன்ன
லாத்தாக்கூட
சண்டை வந்தால் சாச்சி என்றுதான்
சொல்லச் சொல்கிறாள்...
பொருள்கள் அற்ற என் பொழுதுகள்...
பூமிக்கடியில் புதைந்து கிடக்கும்
பொக்கிஷம் போல்
நெஞ்சம் முழுதும் நிறைந்திருக்குமென்
ஆசைகள்
நான்
மகளானேன்...
நான்
சகோதேரியானேன்...
நான்
உறவானேன்...
ஆனால்
நான் எப்போது
முழுமையாவேன்...
உள்ளம் சிந்தும் புன்னகை
அறிவு தரும் புத்தகம்
பசி தீர்க்கும் தர்மம்
நட்ட மரம்
கட்டிய பள்ளி
வெட்டிய கிணறு
ஒட்டிய உறவு
இத்துடன்
உறவுகள் தாண்டி –பிறர்
உயர்வுக்கான பிரார்த்தனை
இனி உங்களுக்கான பிரார்த்தனையில்
நானும் இருப்பேன் என்ற நம்பிக்கையுடனும்
ஜக்கரிய்யா நபியின் துஆக்களோடும்
இன்னும் என் இருப்பை
அர்த்தபடுத்திக் கொண்டே இருக்கும்
அழகிய பொறுமையை ஆடையாய்
அணியச் சொல்லும் அல்லாஹ்வின்
அழகிய மார்க்கம் கொண்டு
கண்ணுக்குப் புலப்படாமல் கட்டப்பட்ட
ஈமானின் துணையோடும்
கடந்து செல்லுமென் நாட்கள்...
5. Re:... posted by:shaik abbas faisal D (kayalpatnam) on 12 December 2013 IP: 115.*.*.* India | Comment Reference Number: 31934
இறைவன் சிலருக்கு ஆண் வாரிசுகளையும்,சிலருக்கு பெண் வாரிசுகளையும்,சிலருக்கு ஆண்,பெண் இரு வாரிசுகளையும் இன்னும் சிலரை வாரிசுகளே இல்லாத மலடாகவும் படைத்துள்ளான்(அல்-குரான்).இது இறைவன் விதித்திட்ட நியதி,எனினும் பொறுமை கடலினும் பெரியது சகோதரர் முஸ்தாக் அவர்களே.உங்கள் ஏக்கமும் என் துவாவில் நிச்சயம் உண்டு இன்ஷா அல்லா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross