பிறை… வருடத்தில் இரு பெருநாள் தினத்தன்று வந்து போகும் ஓர் விவாதப்பொருளாய் ஆகிப்போனது. இனி அடுத்த நோன்பு வரை, பிறை பற்றிய அறைகூவல்கள், வாதப் பிரதிவாதங்கள், கருத்து பரிமாற்றங்கள் இல்லை என்று பெருமூச்சு விடுவதற்குள் 'முஹர்ரம் பிறை' செய்தி கமெண்ட்களை படித்தவுடன் எங்கே திரும்பவும் தொடங்கி விட்டதோ என்று நினைக்கத் தோன்றியது. அந்தளவுக்கு மார்க்க அறிஞர்களிடையே, பொதுமக்களிடையே, ஒரு குடும்பத்துக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நமக்குள் உருவாகிவிட்டன.
நம் சமுதாயத்திற்கு மகிழ்ச்சியான இருதினங்கள் அந்த பெருநாட்களே. இபாதத்துடன் ஒன்றுபட்டு மகிழ்ச்சியாக கழிக்க வேண்டிய அந்நாட்களில் தான் கருத்து வேறுபாடுகளில் சிக்கி, பிறை குறித்து இவ்வளவு சர்ச்சை தேவையா என்று நம்மவர்களே எண்ணுமளவுக்கு, ஒரே ஊரில் இப்படி தனித்தனியாக பெருநாள் கொண்டாடுகின்றார்களே என மாற்றுமத சகோதரர்கள் கூட கவலைப்படும் அளவுக்கு ... உண்மையான நம் பெருநாள் சந்தோசம் நம்மை விட்டு மெல்ல விலகிச் சென்று விட்டது !
பிறையைக் கணக்கிட்டு நோன்பு மற்றும் பெருநாளை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு சாராரும், பிறையை புறக்கண்ணால் தத்தம் பகுதிகளில் பார்ப்பது கட்டாயம் என்று பிரிதொரு சாராரும்... உலகில் எங்கு பிறை பார்த்தாலும் பரவாயில்லை என்று அடுத்த சாராரும் கூறுகின்றனர். மேற்கூறிய மூன்று சாராரில் ஏதோ விபரமரிந்தவர்களின் நிலையை விட, இம்மூவரில் எவர் கூறுவது சரி என மார்க்கத்தைத் தெளிவாக ஆய்ந்து பின்பற்ற இயலாத பாமரனின் நிலை தான் பரிதாபம்.
கடல் கடந்து வெளிநாட்டில் பெருநாள் கொண்டாடி கிடைத்த சந்தோசம் கூட, சொந்த மண்ணில் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் ஒரு புறம். 'உங்களுக்கு பிடிச்சா நீங்க மட்டும் இன்னைக்கு பெருநாள் கொண்டாடுங்க. எங்களுக்கு (பிள்ளைகளையும் சேர்த்து) நாளைக்குத்தான்' என்று கூறுமளவுக்கு கணவன் மனைவிடையே கருத்து வேறுபாடுகள். 'எங்க சாச்சாப்பவுக்கு நேத்திக்கு பெருநாள், மாமாவுக்கு இன்னிக்கி... எங்களுக்கு நாளைக்கு’ என்று மழலையர் மனதில் 'பெருநாள் என்றால் மூன்று' என்று எழுதாமல் எழுதி விட்டோம்.
விஞ்ஞான வளர்ச்சி, கொள்கை பிளவு இல்லாத நம் சிறுபருவத்தில் இலங்கை வானொலியின் அறிவிப்பிற்காக ஆவலுடன் காத்திருந்து அத்தகவலை கொண்டு பெருநாள் அறிவிக்கப்பட்டு, " நாளைக்கு பெருநாள் நம்மளுக்கு நல்ல நாள் கப்பக்கோழி ......." என்று சந்தோசமாக பாட்டு பாடி, பெருநாள் இரவில் மெயின்/கூலக்கடை பஜார்கள் களைகட்டி, தத்தம் பள்ளிவாயில்களில் ஒன்றாக பெருநாள் கொண்டாடி, பெருநாள் அஸரன்று கடற்கரையில் அலைமோதிய அந்நாட்கள் நம் கண் முன்னே வந்து போகின்றது.
இரவில் ஒளிவீசும் நிலவை பார்த்து ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக நிலாச்சோறு உண்ட காலம் போய்... அந்நிலவின் தலைப் பிறையை மைய்யமாக பிரிந்து கிடக்கும் அவல நிலை. அல்லாஹ் ஒருவன், மார்க்கம் ஒன்று, குர்ஆன் ஒன்று என்று பிறரிடம் மார்தட்டிக் கொள்ளும் நாம், நீண்டகாலமாக நிலவும் இக்குழப்பமான அவலநிலையிலிருந்து என்றைக்கு ஒரு நிலைப்பாட்டிற்கு வர போகின்றோம்? மார்க்கமும் விஞ்ஞானமும் பிண்ணிப் பிணைந்துள்ள இவ்விடயத்தில் என்று நமக்கு விடை கிடைக்கும்?
இவ்வருடப் பெருநாளை காயலில் கொண்டாடும் வரை இப்பிறை விவகாரம் மனதில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்க வில்லை. அமெரிக்காவில் வெவ்வேறு மாநிலங்களில் பெருநாள் கொண்டாடியிருந்தாலும் ஒன்றுக்கு மேற்ப்பட்ட நாளில் பெருநாள் கொண்டாடியதில்லை. இத்தனைக்கும் பல தரப்பட்ட கலாச்சாரம் இனம் மொழி தேசத்தை சார்ந்தவர்கள் அங்கு வசிக்கின்றார்கள். இவ்வேறுபாடுகளையும் தாண்டி ஒரு 'புரிந்துனர்தல்' மூலம் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள், ஒன்றாக தொழுகின்றார்கள், ஒற்றுமையாக பெருநாள் கொண்டாடுகின்றார்கள். கொள்கை விவாதமோ திணிப்போ அங்கே நாம் காண இயலாது. ஒரே மார்க்கம் தான்... மனிதர்கள் தான் வேறுபடுகின்றார்கள் வேறுபடுத்துகின்றார்கள் !
வட கரோலினாவின் 'சார்லட்டில்' மூன்று வருடம் பெருநாள் கொண்டாடியிருக்கின்றேன். நோன்பு மற்றும் பெருநாள் நாட்களில், இபாதத் & மகிழ்ச்சி பரிமாற்றம் என பள்ளிகள் களைகட்டி விடும். ஒரு முறை சவுதியில் பெருநாள் என்று அறிவிக்கப்படிருந்தது. ஆனால் அமெரிக்காவில் பிறை காணப்படாததினால் நாங்கள் நோன்பு நோற்றிருந்தோம். ஒரு சில அரபு மக்கள் நோன்பு நோற்காமல் மறுநாள் எல்லோருடனும் ஒன்றாக பெருநாள் கொண்டாடினர். அதைப்பற்றி ஒரு சகோதரரிடம் வினவினேன்.
பலவருடங்களுக்கு முன்னர் 'தத்தம் பகுதி'(இந்தியர் - பாகிஸ்தானியர் வசிக்கும் மஸ்ஜித்களில்), 'சவுதிப்பிறை' என கருத்து வேறுபாடுகள் உருவாகி இருநாட்களில் பெருநாள் கொண்டாடப்பட்டதாக கூறினார். இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக 'ஒருங்கிணைந்த அமைப்பு' ஏற்படுத்தப்பட்டு, சமுதாய ஒற்றுமையை வலியுறத்த வேண்டும் என்ற நன்நோக்கில் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 'சவுதி அறிவிப்பை' பின்பற்றுவது என்றும் நோன்புப் பெருநாள் விடயத்தில், அமெரிக்காவில் பிறை காணப்பட்டால் அதனை எடுத்துக்கொள்வது. காணப்படவில்லையென்றால் அண்டை (பிற) நாடுகளின் அறிவிப்பை அடிப்படையாக எடுத்துக்கொள்வது என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்நேரத்தில் மாற்றுக்கருத்து / கொள்கையுள்ளவர்கள் கூட ஒருவருக்கொருவர் பொருந்திக் கொண்டது போய், இளைய தலைமுறையினருக்கு இது போன்ற விடயங்களில் ஒரு 'பொதுப்பாதையை' புரிந்துனர்தலின் அடிப்படையில் அழகான முறையில் ஏற்படுத்தும் ஒரு வழிமுறையும் சொல்லி தரப்பட்டு விட்டது. இதனை கூட பலகோணத்தில் ஆராய்ந்து அது தவறு என்று நம்மில் சிலர் விமர்சிக்கலாம். ஆனால் அங்கே அது எவ்வித மாற்றத்தை ஏற்படுத்த போவதில்லை.
நம் இந்திய திரு நாட்டில், மார்க்க விடயத்தை பொறுத்தவரை அது விழிப்புணர்ச்சியாகட்டும் அல்லது குழப்பமாகட்டும் (அவரவர் பார்வையை பொருத்தது) அதன் காலடி எப்பவுமே முதலில் நம் தமிழகத்தில் தான். அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வாழும் நமதூர் போன்ற ஊர்களில் தான். பிறை விடயத்தில், ஜமாத் / அமைப்பினர்களின் முடிவுக்கு கட்டுப்பட்டு அதேநேரத்தில் அம்முடிவில் அதிருப்தியோடு இருப்பவர்களை நமதூரில் காணலாம்.
இஸ்லாத்தில் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு இருக்கின்றது என்று கூக்குரல் எழுப்பும் நாம், நம்மிடையே பலவருடங்களாக உள்ள இக்கருத்து வேறுபாட்டை களைய சமரசம் அடைய தீர்வை நோக்கி நகராதற்கு யார் / எது காரணம்? மார்க்கம் எப்பொழுதுமே தெளிவானது எளிமையானது. அதனை விளங்கிப் பின்பற்றுபவர்களின் சிந்தனை மாற்றங்களே, அளவு கடந்த (குறிப்பிட்ட) கொள்கை பற்று, எவ்விடையத்திலும் சமரசமின்மை என்பவைகளே கருத்து வேற்றுமைகளை ஏற்படுத்துகின்றன என்பதனை நாம் உணராமல் இல்லை.
இஸ்லாம் எப்பொழுதுமே 'இபாதத்' சார்ந்த மார்க்கக் கடமைகள் அனைத்தையும் சமூகக் கூட்டமைப்போடு நிறைவேற்றப் பணிக்கின்றது. இஸ்லாம் வலியுறுத்துவது சமுதாய ஒற்றுமையே! இந்த சமுதாயத்தை உம்மத்தன் வாஹிதா - ஒரே சமுதாயம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுக் கூறுகிறான். பிளவுக்கும் பிரிவுக்கும் இடமே கொடுக்கக் கூடாது என்பதற்காக நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் உம்மத்தின் ஒன்றுபட்ட நிலையைப் பேணி பாதுகாத்தார்கள் என்பதனை பலமுறை ஜும்மா / மார்க்க பயான்களில் அறிவுறுத்தப்பட்ட விடயம்.
இக்காலத்தில் கொள்கை வேறுபாடுகளையும் இறைவனின் அருள்மொழிகளை மெய்ப்பிக்கும் விஞ்ஞான வளர்ச்சியையும் தவிர்க்கவோ ஒதுக்கித் தள்ளவோ முடியாது. இவ்விரண்டையும் அரவணைத்துத்தான் நாம் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். உலகளாவிய முஸ்லிம்களுக்கான ஓர் இமாரத் (தலைமை) ஏற்படும் வரை, பிறை / பெருநாள் குழப்பங்களை குறைந்த பட்சம் நமதூரிலாவது 'புரிந்துனர்தலின்' அடிப்படையில் தீர்த்து கொள்ள முன்வரலாம்.
இதற்காக நமதூரில் உலமாக்கள், முஹல்லா நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்தலாம். மேற்கூறிய மூன்று கூற்றில் மார்க்க, விஞ்ஞான மற்றும் தொலை நோக்கிய சிந்தனையில் எது சரியான நிரந்தர தீர்வாக அமையுமோ அதனை எடுத்துக் கொள்ளலாம் அல்லது ஒரு 'பொதுப்பாதையை' புரிந்துனர்தலின் அடிப்படையில் ஏற்படுத்தி ஊர் ஒற்றுமைக்காக நம் கொள்கை கோட்பாடுகளை சற்றுத் தளர்த்தி ஒரு சமரசத்திற்கு வரும்போது தான்... நம்மில் பலவருடங்களாக தொலைந்து போன நம் பெருநாள் சந்தோசத்தை மீட்டெடுக்க முடியும். அதன் மூலம் தமிழகத்திற்கே ஒரு முன்மாதிரியாய் நம் சமூக ஒற்றுமையை வழியுறுத்த முடியும்.
நாம் எல்லோரும் ஒன்றாக ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடும் அந்நாளை எதிர்பார்த்தவனாக உங்களில் ஒருவனாக அதற்காக துஆ செய்பவனாக இக்கட்டுரையை முடிக்கின்றேன் !!
பின்குறிப்பு - மார்க்கமும் விஞ்ஞானமும் சம்பந்த பட்ட இவ்விடயத்தில் மார்க்க அறிஞர்களே வெவ்வேறு பாதையில் பயணிக்கும் போது நாமெல்லாம் எம்மாத்திரம். இக்கட்டுரையின் நோக்கம் இன்னாரின் கூற்று சரி தவறு என்று ஆராய்ந்து அறிவதற்கு அல்ல. இவ்விடயத்தில் ஏதாவது ஒருவழியில் நமதூரில் சமூக ஒற்றுமை ஏற்படாதா என்ற ஆதங்கத்தில் இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது. |