தலைப்பு வித்தியாசமா இருக்கேன்னு பார்க்குறீங்களா? உண்மைதான்! நமதூரில் பன்னெடுங்காலமாக தொழில் நடத்தி வரும் வியாபார ஸ்தாபனங்களின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அவற்றின் உரிமையாளர்கள், அல்லது பழமை வாய்ந்த இடங்கள் அவற்றைச் சார்ந்துள்ள சுவாரஸ்யமான சம்பவங்கள் என அலசிப் பார்த்து, அவற்றைக் கண்டறிந்து, ஒரு மலரும் நினைவாகத் தொகுத்துத் தரலாம் என்கிற எண்ணவோட்டத்தில் உருவான முயற்சிதான் இந்த “சொந்த மண் சொல்லும் கதை” எனும் தொடர்.
இதில் தற்போது இரண்டு விஷயங்கள் பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். இனி வருங்காலங்களில் தொடர்ந்து நம் காயலை அலசி, கடந்தகால பழமை வாய்ந்த இடங்கள், வணிக ஸ்தாபனங்கள் ஆகியவற்றின் சரித்திரப் பின்னணிகளையும், மூத்தவர் தம் கருத்துக்களையும் கேட்டறிந்து, தொடராகத் தொகுத்துத் தர நாடியுள்ளேன், இன்ஷா அல்லாஹ்.
ஒருநாள் காலை நமதூர் கிழக்குப் பகுதியில் உள்ள சில வாலிபர்கள், ஏரல் சேதுக்குவாய்த்தான் கால்வாயில் குளித்து விட்டு ஊர் வந்து, செந்தூரான் ஹோட்டலில் சுட்டசுட இட்லி சாப்பிட்டுள்ளனர். அசத்தலான சாம்பார், ஆவி பறக்கும் மல்லிகைப் பூ போன்ற இட்லி. கோரமான பசி! எனவே கடையிலிருந்த அத்தனை இட்லிகளையும் காலி பண்ணிவிட்டனர்.
இவ்வளவு சீக்கிரத்தில் இட்லிகள் காலியானதால் சந்தோஷப்பட வேண்டிய கடைக்காரர் முகம் கவலை தோய்ந்து காணப்பட்டது. காசைப் பெற்று கொண்ட அவர் தாழ்ந்த குரலில், “தம்பிகளா நீங்க நல்லா சாப்பிடுங்க! அதுலெ ஒன்னும் தப்பில்லை... ஆனா, இப்புடி திடீர்ன்னு பத்து பேர் வந்து மொத்த இட்லிகளையும் காலி பண்ணிட்டீங்க... எங்க ஹோட்டலை நம்பி எத்தனையோ நோயாளிகள், பள்ளிக்கூட பிள்ளைகள், வயசானவங்கன்னு நிறைய பேர் இருக்காங்க... அதனால, இனி வர்றதா இருந்தா முன்னதாக சொல்லி விட்டு வாங்க தம்பி... மாவு கொஞ்சம் கூட்டிக் கொள்றேன்...” எனக் கூறினாராம்.
விற்றால் போதும் எனும் மனோபாவத்தில் இருக்கும் எத்தனையோ வியாபாரிகளுக்கு மத்தியில், தனது கடையை நம்பி வரும் வாடிக்கையாளர்களின் ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத சொற்ப நபர்களுள் ஒருவர்தான் இக்கடைக்காரர்.
ஒரு முறை அல்ல பல முறை எனக்கு நேர்ந்த அனுபவம் இது! எனது கைபேசியில் “ஹலோ செந்தூரான் ஹோட்டலில் இட்லி முடிஞ்சு போச்சு! வேறெ கடையிலெ வாங்கிட்டு வரவா?” என வீட்டுக்கு போன் போட்டு கேட்க, “அதெல்லாம் ஒன்னும் வேணாம்! நீங்க நேரா வீட்டுக்கே வாங்க!! வேறெ எந்த கடையிலெயும் வாங்கிட்டு வந்துடாதீங்க!!!” என மறுமுனையில் மனைவியின் குரல் அதட்டலோடு ஒலிக்கும்.
அப்படி என்ன அந்த ஹோட்டலில் சிறப்பு? மூன்று பேர் வேலை பார்க்கும் சுமாரான ஒரு சின்ன கடைதான். இருப்பினும் நான்கு தலைமுறைகளாக நமதூரில் நல்ல பெயர் எடுத்து வருகின்றனர். மற்ற ஹோட்டல்களில் உள்ள சாம்பாருக்கும் இவர்கள் சாம்பாருக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருக்கும். பார்க்க வெளிறிப் போய் ரொம்ப பெரிய டேஸ்ட்டுன்னும் சொல்ல முடியாது. சட்னி காரமாகவும் அதே நேரம் மணமாகவும் இருக்கும். இட்லி மட்டும் சும்மா பஞ்சு மாதிரி இருக்கும். எனவேதாம் வேறு கடையில் வாங்கி வந்து அங்கேதான் வாங்கினேன் என்று பொய்யுரைத்தால் கூட, வீட்டில் சுலபமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். பச்சைக் குழந்தை முதல் வயோதிகர் வரை இங்குள்ள இட்லியை பாரபட்சம் பார்க்காமல் தைரியமாக சாப்பிடுவார்கள்.
இந்த உணவகத்திற்கென்றே நிறைய வாடிக்கையாளர்கள் தலைமுறைகள் கடந்து இன்னும் இருந்து வருகின்றனர். வீட்டில் தயாரிக்கும் அதே பாங்கோடு சுத்தமாகவும் இருப்பதுவே இதற்குக் காரணம். எனவே, இரவு ஏழு மணிக்கெல்லாம் இட்லியும் காலியாகிவிடும். இத்தனைக்கும் இரண்டு இட்லி வியாபாரம்தான் பெரும்பாலும் அங்கே நடக்கும். சரி, இனி இந்த உணவகம் நமதூரில் தோன்றியது எப்படி? என்று பார்ப்போம்.
ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் இருக்கும் பேரூர் எனும் சிற்றூரிலிருந்து 1943ஆம் ஆண்டு நமதூருக்கு வந்து, இந்த உணவகத்தை துவங்கியவர் மருதநாயகம் பிள்ளை. அவரது மறைவுக்குப் பின் - மருமகனான செந்தில் ஆறுமுகம் பிள்ளை என்பவர் பல வருடங்களாக இந்த உணவகத்தை தொடர்ந்து நடத்திவந்தார். நீண்ட தலைமுடி, அடர்ந்த தாடியுடன் ஒரு யோகியின் தோற்றம் கொண்ட அவர் நமதூர் மக்களிடம் மிக நெருங்கிப் பழகி நன்மதிப்பை பெற்றவர். எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் செந்தில் ராமன் ஹோட்டல் என்றுதான் எண்ணியிருந்தேன். பிள்ளைமார் சமூகத்தில் பிறந்த செந்தில் ஆறுமுகம் இவர் என்பதால் அதுவே காலப்போக்கில் செந்தூரான் என மருவியிருக்கிறது.
செந்தில் ஆறுமுகம் பிள்ளை - காயலரின் அன்பிலும், ஆதரவிலும் தன்னை இணைத்துக் கொண்ட இவர், திமுகவின் தீவிர பக்தர். இவரது கடைக்கு எதிர்புறத்தில் இருந்த சோமு சுந்தர நாடார் என்பவரது குளிர்பானக் கடையில் (இன்றைய முத்து ஸ்வீட் இருக்குமிடத்தில்) தான் அன்றைய இளைஞர் பட்டாளம் தாவளமடித்து, அரட்டையும் அதே நேரத்தில் நகர் நலனுக்காகவும் செயல்பட்டு வந்துள்ளனர்.
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.கழகம் வேர்பிடித்த விருட்சமாய் காயல் மண்ணில் காலூன்றியிருந்த காலகட்டம் அது! அப்போதைய திமுகவின் ஆதரவாளர்கள் கொடிகள், போஸ்டர், தட்டி போர்டுகள். ஆகியவற்றை இந்த உணவகத்தில்தான் வைத்திருப்பார்கள். அன்றைய அரசியல் சூழல்கள், ஆக்கப்பூர்வமான பணிகள், மேடைப் பேச்சுக்கள் ஆகியவற்றில் திளைத்திருந்த இளைஞர் பட்டாளத்தின் நட்புறவால், செந்தூரானும் தன்னை முழுமையாக திமுகவில் இணைத்துக்கொண்டார். இந்த ஹோட்டல்தான் ஒரு காலகட்டத்தில் நமதூர் திமுக கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வந்தது.
செந்தூரானின் மறைவுக்குப் பிறகு அவரது மைத்துனர் துரை என்பர் கடையை நடத்தி வந்தார். இப்போது நான்கு தலைமுறைகளைக் கடந்து துரையின் மகன் (சித்தபாவின் பெயர் கொண்ட) செந்தில் ஆறுமுகம் என்பவர் இக்கடையை நடத்தி வருகின்றார். இன்றளவும் தொழில் தர்மத்தைப் பேணிக் காத்து வருவதால்தான் நம் மக்கள் மனதில் செந்தூரான் ஹோட்டல் எனும் சென்ட்ரல் ஹோட்டல் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.
எட்டுக்கடை வீட்டாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் காலங்காலமாக இரண்டு இட்லி வியாபாரம் செய்து வரும் செந்தூரான் ஹோட்டல் பற்றிய குறிப்பை அறிந்தோம். இனி அந்தக் கடையோடு ஒட்டி உள்ள மஹ்ழரா லாட்ஜ் பில்டிங் பற்றி கொஞ்சம் அலசுவோம்.
இக்கட்டிடம் 1947இல் கட்டப்பட்டது. இதுவே நகரில் தோன்றிய முதல் நவீன மாடி வணிக வளாகம் எனலாம். மேல் மாடியில் சில அறைகளும், கீழ்த்தளத்தில் பல கடைகளும் உள்ளன. ஒரு காலத்தில் நமதூர் பஞ்சாயத்து அலுவலகமும் இங்குதான் இயங்கி வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இக்கட்டிடத்தின் கோட்டைச் சுவருக்குள்ளே இருக்கும் வெட்டையில் (மைதானத்தில்) வைத்துதான் வியாழக்கிழமை சந்தை வெகு ஜோராக நடக்குமாம். வாழைத் தார்கள், கிழங்கு வகைகள், காய்கனிகள், துணிமணிகள் என வியாழக்கிழமை சந்தை களைகட்டும் என பலர் சொல்லி நான் கேட்டுள்ளேன்.
ரெடிமேட் எனும் ஆயத்த ஆடைகள் அப்போது மிகக் குறைவு. துணி எடுத்து தைப்பதுதான் கவுரவமாகக் கருதப்பட்ட காலம் அது! யாரவது ரெடிமேட் சட்டை போட்டால், “என்னப்பா சந்தையிலே வாங்கினதா?” என அப்போது கேலி செய்வார்கள். அன்றைய வாண்டுகள் (இன்றைய பெரிசுகள்) சுற்றிப் பார்க்கவும், நேரப்போக்கிற்காகவும் இச்சந்தைக்கு வந்து தமது கூட்டாளிகளோடு கும்மாளம் போட்ட கதைகளைச் சொல்லும்போதே அக்காலத்திற்கு அவர்கள் பயணித்து மெய்மறந்த காட்சிகளை நான் கண்ணுற்றேன்.
இந்த வளாகத்திற்குள்தான் சிங்கர் ஸ்டோர் ஸ்தாபகர் தாவணி, பாவாடை, டவல்கள் என தொங்க விட்டு வியாபாரம் செய்து வந்தார். காலப்போக்கில்தான் தற்போது உள்ள கடையை அவர் எடுத்து நடத்தினாராம். எப்போதும் வழக்கமான இடத்தில் வைத்து விற்பனை செய்து வரும் மீன் கடைகள் கூட வியாழக்கிழமை சந்தையில் இடம்பிடிப்பது வழக்கம். அக்கட்டிடத்தில் ஒரு ஒடுங்கிய வளைவில்தான் சேகு காக்கா என்பவர் டீக்கடை வைத்திருந்தார். இரவு பன்னிரண்டு மணிக்குப் போனாலும் கூட டீ மற்றும் பால் அங்கு கிடைப்பது ஆச்சரியமான ஒன்று!
இந்த வளாகத்திற்குள் குதிரை வண்டிகள் வரிசையாக நிற்குமாம். அருகில் உள்ள பிற ஊர்களுக்குச் செல்ல அப்போது நமக்கு குதிரை வண்டிகள்தான் பிரதான வாகனம். கல்கத்தா, ஆந்திரா, பம்பாய் போன்ற நகரங்களிலிருந்து ஸஃபராக (பயணப்பட்டு) ஊருக்கு வரும் நம் உறவினர்கள், மதறாஸ் பட்டணத்திற்கு வந்து சேர்ந்ததும், ஊருக்கு தந்தி அல்லது ட்ரங் கால் மூலம் தாம் வந்ததை அறிவித்துவிட்டு, ஓரிரு நாள் மதறாஸில் தங்கி மீண்டும் தமது பயணத்தை தொடர்வார்களாம்.
சென்னையிலிருந்து நெல்லைக்கும் சரி, நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கும் சரி, நிலக்கரி எஞ்சின் புகையிரதத்தில்தான் பயணித்தாக வேண்டும். அதில் பயணம் செய்பவர்கள் முகம், உடல் மற்றும் ஆடைகள் முழுவதும் கரிப்படலத்தோடு கறுத்து கரிக்குளித்து, ஆளே அடையாளம் தெரியாத வகையில் காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும். வரவேற்க வந்திருக்கும் உறவினர்கள் கொண்டு வந்த ஆடைகள், சிற்றுண்டிகள், தேனீர் ஆகியவற்றோடு, அருகிலிருக்கும் ஸ்டேஷன் பள்ளிக்குச் சென்று இளைப்பாறி, குளித்துவிட்டு ஆடைகள் மாற்றி, புது மாப்பிள்ளை போல் குதிரை வண்டியில் வந்திறங்கும் காலம் அது. சுகவீனமானவர்களைச் சுமந்து கொண்டு எடிசன் மருத்துவமனைக்கு அன்று மாட்டுவண்டிகள் அல்லது குதிரை வண்டிகள் மட்டுமே செல்லும்.
நிறைய ஆர்ச் எனும் வளைவு வடிவில் முகப்பு தோற்றத்தோடு கம்பீரமாக பிரதான வீதியில் மிகச் சிறந்த வணிக வளாகமாகத் திகழ்ந்து வந்த அக்கட்டிடம், தற்போது மேல் மாடி முற்றிலுமாக சிதிலமடைந்து கீழ்த்தளம் மட்டுமே எஞ்சி நிற்கும் நிலையில் மிகவும் பரிதாபமாகக் காட்சியளிக்கின்றது. தற்போது எஸ்.ஜே.எம்.மெடிக்கல் இருக்குமிடம் ஓலைக்கூரைகள் வேய்ந்த பல்வேறு கடைகள் கொண்ட குட்டி பஜாராக இருந்து வந்தது.
இப்படி காலப்போகில் பல மாற்றங்கள் கண்ட காயல் பஜார், இன்று பல்வேறு காம்ப்ளக்ஸ்கள் நாளுக்கு நாள் உருவாக - ஒரு பெரும் நகரமாக மாறி வருகின்றது. பாரம்பரியத்தை உணர்த்திய பல வணிக ஸ்தாபன்ங்கள் மறைந்து விட்ட நிலையில், இன்னமும் அதன் தனித்தன்மை மாறாமல் இயங்கிவரும் ஸாலிஹ் ஸ்டோர், முபாரக் ஸ்டோர், அன்ஸாரி ஸ்டோர், ஸ்டார் எண்டர்பிரைசஸ், சுலைமானியா கார்ப்பரேஷன், கரூர் டிரேடர்ஸ், சிங்கர் ஸ்டோர், ராயல் ஹோட்டல், அமிர்தா பேக்கரி, ஆதிலிங்கம் பெட்டிக்கடை போன்ற சில பழமை வாய்ந்த கடைகள் அதன் சாதாரண தோற்றத்துடன் இன்றும் செயல்பட்டு வருகின்றன.
மொத்தத்தில் காயல் அசுர வேகத்தில் அதீத மாற்றத்தை கொண்டு வளர்ச்சி பெற்று வருவது உண்மை! இனி அடுத்த தகவலோடு உங்களை சந்திக்கின்றேன்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
-ஹிஜாஸ் மைந்தன். |