இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து தற்போது அரசியல் உலகில் பெரும் வாதப் பிரதி வாதங்கள்
அலையடித்தபடி உள்ளன. பா.ஜ கவினால் பிரதம மந்திரி வேட்ப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் நரேந்திர மோடி பட்டேலைத்தூக்கிப்பிடிக்கும்
வேலையை தனது அரசியல் சுயநலம் சார்ந்து செய்துவருகிறார். இதன் காரணம் பட்டேல் தன்னைப்போன்று ஒரு குஜராத்தி எனபது மட்டுமல்ல...
இன்றுபெரும் நாசாகார சக்தியாக உருவெடுத்திருக்கும் இந்துத்துவ கொள்கைக்கு அன்றே ஆசானாக, வழிகாட்டியாக ஏதோ ஒருவகையில் அமைந்தவர்
என்பதுமாகும்.
இதனையொட்டி பட்டேலுக்கு நர்மதை நதிக்கரையோரம் ரூ 2500 கோடி செலவில் சுமார் 600 அடி உயரத்தில் மிகப்பிருமாண்ட சிலை எழுப்பவும் மோடி
அத்வானி முன்னிலையில் அடிக்கல் நாட்டியிருக்கிறார்.
பட்டேல் காங்கிரஸ்காரர் எனபது பிரதமர் மன்மோகன்சிங்கின் கூற்று. பட்டேல் அக்காலத்தில் காங்கிரஸ்காரராக அந்தக்கட்சியில் அங்கம் வகித்தார்.
காந்தியின் பெரும் சீடராக அணுக்கத்தொண்டராகப் பணியாற்றினார் எனபது உண்மையே..! காங்கிரஸ் பேரியக்கத்தின் பல முக்கிய பதவிகளை அவர்
வகித்துள்ளார். தனக்குப் பிறகு பட்டேலையே காந்தி தனது வாரிசாக நியமிப்பார் என்று பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் நேருவை தனது அரசியல்
வாரிசாக காந்தி நியமித்தபோது பட்டேல் உட்பட பலர் அதை வேறு வழியில்லாமல் ஜீரணித்துக்கொண்டனர். நேருவின் பன்முகத்தன்மையும் அவர்
ஏற்கனவே பெற்றிருந்த உலகப்புகழும் காந்தியை இவ்வாறான ஒரு முடிவை எடுக்க நிர்பந்தித்தது.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் நேருவின் கீழ் துணைப்பிரதமராக –உள்ளாட்சித்துறை அமைச்சராக பட்டேல் பணியாற்றியபோதும்
நேருவுக்கும் அவருக்கும் உறவு அத்துணை சுமுகமாக இருக்கவில்லை. காந்தியின் கொலை தொடர்பாக நேருவிற்கும் பட்டேலுக்கும் முரண்பாடு
முற்றியது. நேரு மட்டுமில்லாமல் அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் காந்திக்கு தொடர்ந்து உயிராபத்து கொலை மிரட்டல்கள் இருந்தும்
உள்துறை அமைச்சரான பட்டேல் அதை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று குற்றம் சுமத்தினார்கள்.
பட்டேல் குறித்த இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எந்த அளவுக்கு உண்மை...? இது உண்மையில் பொருட்படுத்தத்தக்க ஒன்றுதானா..? அல்லது வெறும்
அவதூறா..?
எனவே இதை நிரூபிக்க அல்லது மறுக்க வேறொரு ஆதாரத்தை நாடிச்செல்வதே பொறுப்புடையதாகும்.
பட்டேல் யார்...? அவரது உண்மையான முகம் என்ன...? மோடி போன்றவர்கள் இன்று அவரை தூக்கிப்பிடிப்பதன் அவசியம் என்ன...? காரணம்
என்ன...?
பட்டேலைப்போலவே நேருவின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் மவுலானா அபுல்கலாம் அசாத். காங்கிரஸ் தலைவராக காந்தி
இருக்கும் போதே இரண்டு முறை பதவி வகித்தவர் மிகப்பெரும் கல்வியாளர் ஜின்னாவின் தனிநாடு கோரிக்கை உட்பட காங்கிரசில் இருந்து கொண்டு
ஜின்னாவை தைரியமாக எதிர்கொண்டவர்.
அவர் எழுதிய சுயசரிதை நூல் “இந்திய விடுதலை வெற்றி” (INDIA WINS FREEDOM) அந்த நூலில் பட்டேலைக்குறித்த அவரது சொந்த அனுபவத்தை
எழுதிச் செல்கிறார்.
பட்டேல் சிலைக்கு அடிக்கல்நாட்டு விழாவில் மோடி இவ்வாறு பேசுகிறார் “பட்டேல் மதசார்பற்றவர்தான் அவர் கடைபிடித்த மதசார்பின்மை
நாட்டைப்பிரிக்கவில்லை ஒன்றிணைத்து வலுப்படுத்தியது “(தி இந்து “1 11 13) இது உண்மையா ..?
பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த மிகச்சில காங்கிரஸ் தலைவர்களில் பட்டேல் தலையாயவர். இன்னொருவர் நமது ராஜாஜி.
பிரிவினை குறித்து பட்டேலின் கருத்து என்ன..? மவுலானாவின் குறிப்பு இதோ, ”இதை எனக்கு நினைவூட்டி, பிரிவினை தவிர்க்க முடியாதது
என்றே தனக்குத்தோன்றுவதாக கூறினார் காந்திஜி. அது எந்த அமைப்பில் உருப்பெற வேண்டும் என்பதுதான் முடிவாக வேண்டிய ஒரே விஷயம். இரவு
பகலாக காந்திஜியின் முகாமில் இந்த விஷயம்தான் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த விஷயம் முழுவதையும் பற்றி நான் ஆழ்ந்து சிந்தித்தேன்
.காந்திஜி தமது கருத்தை இவ்வளவு விரைவில் எப்படி மாற்றிக்கொள்ளக்கூடும்? சர்தார் பட்டேலின் செல்வாக்குதான் இதற்க்கு காரணம் என்று
எனக்குத்தோன்றியது .பிரிவினை தவிர வேறு வழிகாணோம் என்று பட்டேல் பகிரங்கமாகச் சொன்னார். “(பக் 243)
இதுதான் பட்டேல்..! அவரை இந்தியசமஸ்தானங்களை ஒருங்கிணைத்த “இந்தியாவின் இரும்பு மனிதர்“ என்ற அடைமொழியால் அழைக்கின்றனர்.
இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் ஆங்காங்கே குட்டிக்குட்டி தீவுகளாய் சிதறிக்கிடக்கும் சமஸ்தானங்களை அன்று பெரும் ராணுவசக்தி
படைத்த இந்திய அரசால் வழிக்கு கொண்டு வந்ததில் என்ன பெரிய அசாதாரணம் இருக்கிறது..? மேலும் சுதந்திரம் வாங்கித்தந்த காங்கிரஸ் கட்சியின்
பேரெழுச்சியும் சமஸ்தானங்களில் இயல்பாகவே எழுந்த மக்கள் போராட்டமும் இதை பட்டேலுக்கு எளிதாக காரியசாத்தியம் ஆக்கித்தந்தது. எனவே
இதை பட்டேலின் தனித்த முயற்சி என்று கூறுவதற்கு இதில் எதுவுமில்லை. அந்தக்கால காங்கிரஸ்காரர்கள் காந்திக்கு “தேசப்பிதா “என்று பட்டம்
வழங்கியது போலவே பட்டேலுக்கு இந்த பட்டத்தை வழங்கினார்கள்.
இந்தியப்பிரிவினை வரலாற்றில் எழுந்த பெரும் சோகமாகும் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் கற்பழிக்கபட்டனர், மேலும்
லட்சக்கணக்கானோர் வீடு வாசல் இழந்து அகதிகள் ஆயினர். டெல்லியிலும் லாஹூரிலும் பஞ்சாபிலும் ரத்த ஆறு ஓடியது.
டெல்லியில் வன்முறை தலைவிரித்து ஆடியது எங்கும் எரியும்புகை, மக்களின் பெரும் கூக்குரல், வேதனை... யாரை யார் கொல்கிறார்கள் என்று
யாருக்கும் தெரியவில்லை. எங்கும் மரண ஓலம் ..! உள்துறைக்கு பொறுப்பு வகித்த சர்தார் பட்டேல் என்ன செய்து கொண்டிருந்தார்...?
ஆசாத் எழுதுகிறார்...
“சர்தார் பட்டேல் உள்துறை மந்திரி எனவே டெல்லி நிர்வாகம் நேரடியாக அவரது பார்வையில் இருந்தது. கொலை, தீயிடல் பட்டியல் நீண்டு கொண்டே
போனது. காந்திஜி பட்டேலுக்குச்சொல்லியனுப்பி இந்தக்கொலை வெறியை தடுத்து நிறுத்த அவர் செய்து கொண்டிருப்பது என்ன என்று கேட்டார்.
காந்திஜிக்கு கிடைக்கும் தகவல்கள் மிகையானவை என்று சொல்லி, அவருக்கு நம்பிக்கையை உண்டு பண்ண சர்தார் முயன்றார். உண்மையில்
முஸ்லிம்கள் குறை கூறவோ, பயப்படவோ, காரணமேயில்லை என்று சர்தார் பட்டேல் கூறினார். காந்திஜியுடன் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்த
ஒரு சந்தர்ப்பம் எனக்குத் தெளிவாக நினைவுக்கு வருகிறது. டெல்லியிலுள்ள நிலைமையைத் தம்மால் சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை என்று
ஜவஹர்லால் ஆழ்ந்த வருத்தத்துடன் கூறினார். பூனைகள், நாய்களைப்போல் டெல்லியில் முஸ்லிம் குடிமக்கள் கொல்லப்படுவதாகச் சொன்னார். தாம்
அவர்களைக் காப்பாற்ற முடியாத நிராதரவான நிலையில் இருப்பதாகச் சொன்னார். மனசாட்சி அவரை உறுத்தியது. பயங்கரமான நிகழ்சிகளை பற்றி
முறையிட்டவர்களுக்கு தான் என்ன பதில் சொல்லவேண்டும் என்று கேட்டார். நிலைமை சகிக்க முடியாததாக இருக்கிறது என்று அவர் பலதடவை
சொன்னார். மனசாட்சி தம்மை சும்மாயிருக்க விடவில்லை என்றார்.
இவ்விஷயமாக சர்தார் பட்டேலின் பதில் எங்களுக்கு பெரிதும் ஆச்சரியத்தை விளைவித்தது. பட்டப்பகலில் டெல்லியில் முஸ்லிம்கள் கொலை
செய்யப்பட்டு வந்த அந்தக்காலத்தில் ஜவஹர்லாலின் குற்றச்சாட்டுகள் அடியோடு புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன என்று அவர்
அமைதியாக காந்திஜியிடம் தெரிவித்தார். இங்குமங்கும் தனித்தனியாக ஒரு சில நிகழ்ச்சிகள் இருந்திருக்கலாம் ஆனால் முஸ்லிம்களின்
உயிர்களையும் சொத்துக்களையும் காப்பதற்காக சாத்தியமான எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துவருகிறது என்றும், மேலும் செய்யக்கூடியது
ஒன்றுமில்லை என்றும் தெரிவித்தார். தமது அரசு செய்துவருவதை பிரதமர் என்ற வகையில் ஜவஹர்லால் அங்கீகரிக்காது பேசுவது தமக்கு
அதிர்ச்சியை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
சில கணங்கள் ஜவஹர்லால் மவுனமாக இருந்தார். பின்னர் ஆயாசத்துடன் காந்தியை நோக்கினார். இவைதாம் சர்தார் பட்டேலின் கருத்துக்களாயின்
தாம் சொல்லக்கூடியது ஒன்றுமில்லை என்றார். “(பக் 277, 278)
மேலும் முஸ்லிம்கள்தான் இந்துக்களை கொல்ல ஆயுதங்களுடன் தயாராக இருப்பதாகவும், அவர்கள் இதற்காக பெரும் ஆயுதங்களை சேகரித்து
வைத்திருப்பதாகவும் அவ்வப்போது பேச்சுக்கள் அடிபடலாயின.
ஆசாத் மேலும் இதுபற்றிக்கூறும் போது,
“இந்த சமயத்தில் நடந்த மற்றொரு நிகழ்ச்சி சர்தார் பட்டேலின் மனப்போக்கைக் காட்டுகிறது. ஒவ்வொருநாளும் முஸ்லிம்கள் மீது
நடந்துகொண்டிருந்த தாக்குதலுக்கு ஏதாவது சமாதானம் சொல்வது அவசியமென அவர் நினைத்திருக்கலாம். நகரிலுள்ள முஸ்லிம் விடுதிகளிலிருந்து
பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்ற கூற்றை அவர் கிளப்பினார். இந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதற்காக டெல்லி
முஸ்லிம்கள் ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர் என்பது அவரது தகவலில் தோன்றுகிறது. இந்துக்களும் சீக்கியர்களும் முதலில்
தாக்கியிராவிடில் முஸ்லிம்கள் அவர்களை அழித்துவிட்டிருப்பார்கள் என்றும் அதில் தொனிக்கிறது. கரோல்பாக்கிலும், சப்ஜி மண்டியிலும் இருந்து சில
ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். சர்தார் பட்டேலின் கட்டளைப்படி அவை அரசின் மாளிகைக்கு கொண்டு வரப்பட்டன. மந்திரிசபையின்
அறைக்கு எதிரே உள்ள அறையில் எங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. நாங்கள் எங்கள் தினசரி கூட்டத்திற்கு வந்தபோது முதலில் எதிரில் இருக்கும்
அறைக்குச் சென்று கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைப் பார்வையிடலாமென சர்தார் பட்டேல் கூறினார். அங்கு மேஜை மீது துருப்பிடித்த கத்திகள்,
சமையலறைக்கத்திகள், பேனாக்கத்திகள், பிடியுடனும் பிடியில்லாமலும் இருந்தன. பழைய வீடுகளின் வேலியிலிருந்துஎடுத்த இரும்புக்கம்பிகளும்
இரும்பு ஈட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன சில இரும்பு தண்ணீர்க் குழாய்களும் இருந்தன. இந்துக்களையும் சீக்கியர்களையும் அழித்துவிடுவதற்காக
இந்த ஆயுதங்களைத்தான் டெல்லியில் முஸ்லிம்கள் சேகரித்து வைத்திருந்தனர் எனபது சர்தார் பட்டேலின் கூற்று. கத்திகளில் ஒன்றிரண்டை லார்ட்
மவுண்ட்பட்டன் எடுத்துப்பார்த்து புன்சிரிப்புடன் “இவற்றைக்கொண்டு டெல்லி நகரை கைப்பற்ற முடியுமென்று எவராவது நினைத்திருந்தால் அவர்
ராணுவத் தந்திரங்கள் பற்றி அற்புதமான கருத்துக்களையுடையவர் “என்று சொன்னார். (பக் 278)
இந்து மகாசபை உறுப்பினரான கோட்சே என்பவனால் காந்தி டெல்லி பிர்லா மாளிகையில் வைத்து கொல்லப்பட்டார். ஏற்கனவே அம்மாளிகையில்
நடந்த ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் காந்தியை கொலை செய்யும் நோக்கில் மாளிகையின் சுற்றுச்சுவரிலிருந்து குண்டு வீசப்பட்டு ..அது
தோல்வியில் முடிந்தது. அதையே ஒரு எச்சரிக்கையாகக்கொண்டு காந்திக்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கலாம் ஆனால் பட்டேல் அலட்சியமாக
இருந்தார். அவரது பொறுப்பின்மை பின்னொரு நாளில் காந்தியை பலிகொண்டது. இது குறித்து பட்டேல் மீது பெரும் அதிருப்தி எழுந்தது.
மறுபடியும் மவுலானா ஆசாத் கூற்றுக்கு போவோம்...
“காந்தியின் இறப்பிற்குமுன் பட்டேலின் அசட்டைத்தன்மை பொதுமக்கள் பலரும் கவனிக்கும் அளவு வெளிப்படையாத் தெரிந்தது. இந்த சோகநாடகம்
நிகழ்ந்ததும் கோபம் மேலிட்டு நிற்ப்பது இயற்கையே. சர்தார் பட்டேல் திறமையற்றவர் என்று சிலபேர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டினர். விசேஷ
தைரியத்துடன் இந்தப் பிரச்சினையை ஜெயப்பிரகாஷ் நாராயன் கிளப்பினார். காந்திஜியின் மரணத்தைக் குறித்து நமது அதிர்ச்சியையும் துக்கத்தையும்
தெரிவிப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில், இந்தக் கொலைக்கான பொறுப்பிலிருந்து இந்திய அரசின் உள்துறை மந்திரி தப்ப இயலாதென அவர்
தெளிவாகச் சொன்னார். காந்தியைக் கொலை செய்யுமாறு மக்களுக்கு ஆத்திரமூட்டும் வெளிப்படையான பிரச்சாரம் நடந்து, அவரை நோக்கி ஒரு
குண்டு வீசப்பட்டிருக்கையில் ஏன் விஷேச ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என்பதற்கு சர்தார் பட்டேல் பதில் கூற வேண்டுமென அவர் கோரினார்.
(பக் 291)
வெளிப்படையாக காந்தி இறக்க வேண்டும் எனபது பட்டேலின் ஆர்வமாக நிச்சயம் இருந்திருக்க முடியாது. எனினும் வெளிப்படையான தனது
அலட்சியத்தால் காந்தியின் கொலைக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர் காரணமாக இருந்தார்.
பட்டேலின் அரசியல் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் காந்தி. வக்கீலுக்குப் படித்தவர் வழக்கறிஞ்சராக இருந்து நிறைய சம்பாதித்தவர் மிதவாத
இந்துத்துவ போக்கு கொண்டவர்.
மறுபடியும் மவுலானாவுக்குத் திரும்புவோம்...
“காந்தியின் மனதை பலமாக உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயம் சர்தார் பட்டேலின் மனப்பான்மை. சர்தார் பட்டேல் காந்திஜியின் உள்வட்டத்தைச்
சேர்ந்தவர். அவருக்கு மிகவும் பிரியமானவர்..சர்தார் பட்டேலின் அரசியல் வாழ்வே காந்திஜி அளித்ததுதான். முக்கியமான காங்கிரஸ் தலைவர்களில்
பலர் காந்திஜி அரசியல் அரங்கத்திற்கு வருவதற்கு முன்னரே பொதுவாழ்வில் இருந்தவர்கள். ஆனால் இருவர் சர்தார் பட்டேலும், டாக்டர் ராஜேந்திர
பிரசாத்தும் முற்றிலும் காந்திஜியின் படைப்புகள். (பக் 279)
“பட்டேலின் விஷயம் இன்னும் ஆர்வமூட்டக்கூடியது. ஒத்துழையாமை இயக்கத்திற்கு முன் சர்தார் பட்டேல் குஜராத்தின் பல வழக்கரிஞ்சர்களில்
ஒருவராகத் தொழிலை நடத்தி வந்தார். நாட்டின் பொது வாழ்வில் சிரத்தையோ, ஆர்வமோ அவருக்கு இருந்ததில்லை. காந்திஜி ஆமதாபாத்தில்
குடியேறியபோது சர்தார் பட்டேலைக் கண்டுபிடித்து படிப்படியாக அவரது அரசியல் வாழ்க்கையை வளர்த்தார். பட்டேல் அவரை முழு மனதோடு
ஆதரிக்கலானார். பல சந்தர்ப்பங்களில் அவர் காந்திஜியின் விருப்பங்களைத்தான் எதிரொலித்து வந்தார் என்று முன்னர் கூறியிருக்கிறேன். அவர்
காங்கிரஸ் காரியக்கமிட்டி உறுப்பினர் ஆனதற்கும் காந்திஜிதான் காரணம். .1931 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமைப் பதவியை அவர்
அடைந்ததற்கும் காந்திஜியே காரணம். அதுவரையில் எவற்றிற்கெல்லாம் தாம் பாடுபட்டு வந்திருக்கிறாரோ அவற்றுக்கு நேர்எதிரான கொள்கையை
பட்டேல் பின்பற்றி வருவது காந்திஜியின் மனத்தை மிகவும் புண்படுத்தியது. “(பக் 280 )
இன்னும் நிறைய இருக்கிறது எழுதப்புகின் பக்கங்கள் வளரும்.
இவரைத்தான் மோடி தனது ஆஸ்தான குருவாக கொண்டு தனது அரசியலை முன்னெடுத்துச்செல்கிறார்.
பட்டேல் காங்கிரஸ்காரராக இருந்திருக்கலாம் ஆனால் எப்போதும் வலதுசாரி இந்துத்துவ சார்பு கொண்டவராகவே அவர் இருந்தார். அவரை மோடி
இப்போது தன்னவராக ஆக்கிக்கொள்ள முயற்சிப்பதில் நமக்கு ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
எது இயல்போ...? அது நடக்கிறது...!
நூல் ஆதாரம் மற்றும் உதவி:
இந்திய விடுதலை வெற்றி —மவுலானா அபுல்கலாம் ஆசாத்.
தமிழில் –ஏ.ஜி. வேங்கடாச்சாரி, க.பூரணச்சந்திரன்.
அடையாளம் பதிப்பகம்.
புத்தாநத்தம் - 621310.
திருச்சி மாவட்டம்.
[Administrator: கட்டுரை திருத்தப்பட்டது @ 3:20 pm / 3.11.2013] |