"ஐயா..."
குரல் கேட்டு தலையுயர்த்தி நோக்கினாரவர்.
அது வரை வரவு-செலவு ஏடதில் ஆழ்ந்து போய் பேனாவை ஓட விட்டுக்கொண்டிருந்தார். பெரு நகர் ஒன்றில் தோல் வாணிபத்தில் பேரோங்கித்
திகழ்ந்த வணிகக் குழுமங்களின் உரிமையாளருள் ஒருவரவர்.
தமது அலுவலகப் படியேறி உள்ளே வந்து, தனக்கெதிரில் அதிக வயதில்லாத ஒருவன் வறுமையின் உருவாய் கூனிப்போய் நின்றதைக் கண்ட
அவர்
"என்னப்பா வேண்டும்?" எனக் கேட்க,
"ரெம்ப பசியாயிருக்குதுங்க" என்ற பதில் வந்தது.
அப்போது பிற்பகல் நேரம் மூன்று மணி போலிருக்கும். அவர் மனம் கசிந்தது இரக்கத்தால்.
அலுவலகமும், அவர் உண்டு உறையுமிடமும் ஒன்றேதாம். தனக்கருகிலிருந்த அழைப்பு மணியினைத் தொட்டதுதான் தாமதம்! சில நொடிகட்குள்
அடுக்களை அலுவலர் வந்தெதிரில் பவ்வியமாக நின்றார். முதலாளியை விட வயதில் சற்று மூத்தவர். அவர் மீது அளவிலா அன்பும் அக்கறையும்
கொண்டவர் அவ்வூழியர்.
"இவருக்கு சாப்பிடக் கொடும்!"
"எல்லோரும் உண்டாகிவிட்டதே; மீந்தது ஒன்றும் இல்லையே தம்பீ...? "
-இது சமையற்காரரின் மறுமொழி.
"நான் இன்னும் உண்ணவில்லைதானே...? அதைக்கொடும்!”
"அப்ப தம்பி உமக்கு?"
"எனக்கு ஒரு பன்னு ரொட்டியும், பழமும் வாங்கித் தாரும்!"
ஒன்றும் சொல்ல வழியுமின்றி, மனப் பொருத்தமும் இன்றி முணமுணத்துக் கொண்டேயகன்றார் அவ்வூழியர். சில கணத்தில் வந்தவனுக்கு உண்ணவும்
பருகவும் தந்துவிட்டுப் போய் விட்டார். வயிறார உண்டவன் வாயார வழுத்தி விட்டு கை கூப்பி விடைபெற்றான்.
இது நடந்து மாதங்கள் பல - அல்ல! ஆண்டுகள் பல நகர்ந்திருக்கலாம். நினைவில் பதித்து வைக்க வேண்டிய நிகழ்வு ஒன்றும் இதுவல்லதான். இதுபோன்று பலமுறை நடந்தும் இருக்கலாம்...
ஒரு ஞாயிற்றுக்கிழமை... நகரை விட்டு வெகு தொலைவிலிருந்த தோல் பதனிடு தொழிற்சாலையொன்றுக்கு பணம் கொண்டு செல்ல வேண்டியது வந்தது. அந்த முதலாளி, தன் நண்பர் ஒருவரையும் துணைக்கழைத்துக்கொண்டு, வாடகைக் கார் ஒன்றையும் பேசியமர்த்திக்கொண்டு, பணத்தையும் கட்டியெடுத்துக்கொண்டு பயணமானார்.
நகரத்தை விட்டு வெகு தூரம் வந்தாகி விட்டது. போக்குவரத்து சந்தடி அதிகம் அற்ற வீதியின் மருங்கொன்றின் மர நிழலில் வண்டியினை நிறுத்திய
ஓட்டுனன், கண்ணெட்டிய தொலைவிலிருந்த குடிலொன்றைக் காட்டி,
"சார், அங்கு சென்று என் தங்கையைக் கண்டு ஓரிரு வார்த்தை பேசி விட்டு ஐந்தே நிமிடத்தில் வந்து விடட்டுமா?"
என அடக்கமாகக் கேட்டதும்,
'சரி' என்றார்.
சென்றவன் சொன்னது போன்று சில மணித்துளிகளில் குடிசையை விட்டும் வெளியேறி, இன்னும் ஒருவனுமாக பேசிக்கொண்டே வண்டியை நோக்கி
வந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அண்மி வந்ததும், வண்டிக்குள்ளிருந்தவாறே
"என்னப்பா, பரவாயில்லையே... சொன்னது மாதிரி சீக்கிரமாகவே வந்துவிட்டாயே...?"
என்று சொன்னதுதான்! ஓட்டுனனுடன் வந்தவன் தன் முதுகுப்புறமாக சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த கொடுவாளைக் கையில்
எடுத்துக்கொண்டு,
"இறங்குங்கடா, பணக்கட்டை எடுங்கடா" என அச்சுறுத்திக் கத்தினான்.
அச்சத்தில் அதிர்ந்து போய் நடுங்கிக்கொண்டே கார் கதவைத் திறந்திறங்கியவரைப் பார்த்ததுதான் தாமதம்... வந்தவன் கையிலிருந்த வாளைக் கீழே
வீசியெறிந்துவிட்டு, அவர் காலில் வீழ்ந்து கிடந்தான்! உணர்ச்சி பொங்க ஓவென்றழுதான்!! ஓட்டுனன் உள்ளிட்ட ஒருவருக்குமே சூழல் இன்னதென்று
புரியவில்லை.
அப்போது கொள்ளையடிக்க வந்தவன் வார்த்தையை வரவைத்துப் பேசினான்.
"எசமானே...!
தான் பசித்திருந்து எனக்குப் பசி தீர்த்தாயே...?
உனக்கா பாதகம் நினைத்தேன்...??
கேடு கெட்டுப்போனேனே...
மன்னித்தருள் மகாராசனே..."
என்றழுது மீண்டும் காலில் வீழ்ந்தான். அவனைக் கைத்தாங்கி எழுப்பிய முதலாளி, அவனைத் தேற்றி நல்வழியில் உழைத்துப் பொருளீட்டி
உண்ணென்று அறிவுரை தந்து கைப்பொருளும் ஈந்துதவினார்.
"தருமம் அல்லலையகற்றும், விதியையும் மாற்றும்" எனும் பொருள் பதிந்த அருளுரையை அருளின் உரையை ஆழ்ந்துணர்ந்து செயலாற்றுதல் நம்
கடமை அன்றோ?
கேட்டறிந்தவன் : "அல் யமீன் " |