| |
ஆக்கம் எண் (ID #) 114 | | | செவ்வாய், அக்டோபர் 29, 2013 | | யார் மோசடிகாரர்கள்! சமூகப் பார்வையாளர்
|
| இந்த பக்கம் 4012 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
சென்னை மவுன்ட்ரோட்டில் உள்ள மக்கா பள்ளியில் ஜுமுஆ தொழுது வந்தேன். ஜுமுஆ பேருரையை உத்தரபிரதேசத்தில் உள்ள தேவ்பந்த் மத்ரஸாவின் மூத்த அறிஞரும் அங்குள்ள ஹதீஸ் கலைப் பிரிவின் தலைவரும் அகில இந்திய ஜம்யிய்யதுல் உலமாவின் தலைவருமான அஷ்ஷெய்ஃக் முஹம்மத் அஸ்அத் மதனீ அவர்கள் தூய தித்திக்கும் உர்தூவில் உரை நிகழ்த்தினார்கள். சூரா அல்முதஃப்ஃபிஃபீன் அத்தியாயத்தின் முதல் ஆறு வசனங்களை ஓதி அதற்கான விளக்கத்தையும் தனதுரையில் வழங்கினார்கள்.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
83:1 وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ
83:1. அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
83:2 الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ
83:2. அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
83:3 وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ
83:3. ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
83:4 أَلَا يَظُنُّ أُولَٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ
83:4. நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
83:5 لِيَوْمٍ عَظِيمٍ
83:5. மகத்தான ஒரு நாளுக்காக,
83:6 يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
83:6. அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
இங்கு எடைகளிலும் அளவைகளிலும் மோசடி செய்பவர்களுக்கு கேடுதான் என அல்லாஹ் கூறுகின்றான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் பிரரிடத்தில் தனக்காக எதையும் வாங்கும்போது சரியான எடைக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்ளவே ஆசைப்படுகிறார்கள்; ஆனால் தான் எதையாவது அளந்துகொடுக்கும்போதும் நிறுத்துக்கொடுக்கும்போதும் அதன் எடையில் குறைவு செய்யவே நாடுகிறார்கள். எனவேதான் அவர்களைப்பற்றி குர்ஆனில் அல்லாஹ் மோசடியில் ஈடுபட்டவர்கள் எனக் கூறுகிறான். இங்கு மோசடி என்பதற்கு “தத்ஃபீஃப்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மேலும் கேடு என்பதற்கு “வைல்” என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இதே வார்த்தைக்கு இன்னுமொரு பொருள் உண்டு. அதாவது, அல்லாஹ் மறுமையில் “வைல்” என்னும் ஒரு ஓடையைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறான்.
மது, விபச்சாரம், சூதாட்டம் போன்ற பெரும்பாவங்களைச் செய்பவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நரகில் எடை மற்றும் அளவையில் மோசடி செய்பவர்களைப் வீசியெரியாமல் அவர்களுக்காகவே பிரத்தியேகமாக அமைத்துள்ள இடம் தான் “வைல்” என்னும் நரகின் ஓர் பகுதியாகும்.
ஏனெனில் மற்ற பாவங்களை மனிதன் அல்லாஹ்விற்கு எதிராகவே செய்கின்றான். ஆனால் அளவு மற்றும் எடையில் மோசடி செய்பவர்கள் பிறமனிதர்களுக்குரிய உரிமையில் தலையிடுவதால் அல்லாஹ் அவர்கள் மன்னிக்காதவரை அவனும் மன்னிப்பதில்லை.
ஹதீஸ்குதுஸியில் ஒரு ஹதீஸ் பின்வருமாறு வருகிறது.
ஆதமின் மகன் வானளவு பாவங்கள் செய்து பிறகு அல்லாஹ்விடம் பிழைபொறுக்கத் (இஸ்திஃக்ஃபார்) தேடினாலும் அல்லாஹ் தான் நாடினால் அப்பிழை பொறுப்பை ஏற்று அவனை மன்னித்து விடுகிறான். பிழைபொறுப்பின் மூலம் மனிதன் செய்யும் அனைத்துப் பாவங்களுக்கும் அல்லாஹ்வால் பரிகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் எடை மற்றும் அளவு மோசடி அவ்வாறானது அல்ல. மனிதனுக்கு எதிராக மனிதன் செய்யும் நம்பிக்கை மோசடி அது.
அத்தகையவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்போது அவரது மோசடித் தனத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் கொண்டு வந்து நீதி செலுத்துவதற்காகவே தனியாக “வைல்” என்னும் ஒரு ஓடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அஃதல்லாமல் எடை மற்றும் அளவையில் மட்டும்தான் மோசடியா (தத்ஃபீஃப்) எனில் அவ்வாறில்லை. குர்ஆன் மிகவும் சுருக்கமான ஒரு நூல். ஆனால் அதில் வழங்கப்படும் கருத்துக்கள் மிகவும் விரிவானது. விசாலமானது.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிபவருக்கு அதன் உரிமையாளர் சரியான ஊதியம் செலுத்தவில்லையெனில் அதுவும் “தத்ஃபீஃப்” ஆகும். அதேபோன்று அந்த ஊழியர் வாங்கும் சம்பளத்திற்கு உரிய முறையில் அவ்வூழியர் கடமையாற்றத் தவறினால் அதுவும் “தத்ஃபீஃப்” ஆகும்.
ஒரு கணவன் தன் மனைவியிடமிருந்து உரிமைகளை மட்டும் எதிர்பார்த்துக் கொண்டு கடமையைச் செய்யாமல் விடுவதும் “தத்ஃபீஃப்” ஆகும். அதே போலத்தான் ஒரு மனைவி தன் கணவரிடம் சகலவிதமான உரிமைகளையும் எதிர்பார்த்துக் கொண்டு அவனுக்குச் செய்யும் கடமைகளை செய்யாதொழிவதும் “தத்ஃபீஃப்” ஆகும்.
குழந்தையாக இருந்த போது தாயின் மார்பிலிருந்து உரிஞ்சி உண்டும் தகப்பனின் ஆதரவில் உடுத்தும் படித்தும் பெரிதாக ஆளாகிய பின் தன் பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பணிவிடைகளையும் ஒருவன் செய்யாமல் புரக்கணிப்பதும் “தத்ஃபீஃப்” ஆகும். இவர்களுக்காகவே அல்லாஹ் அந்த “வைல்” என்னும் மிக மோசமான நரக ஓடையை ஆயத்தப்படுத்தியுள்ளான்.
எனவே தான் உலகில் இதுபோன்ற தத்ஃபீஃப்களில் (மோசடி) ஈடுபடுபவர்களை நோக்கி, “மகத்தான ஒரு நாளுக்காக, அகிலாத்தாரின் இரட்சகன் முன் மனிதர்கள் நிற்கும் நாள் (அல் குர்ஆன் 83:5-6)” என எச்சரிக்கின்றான் அல்லாஹ். அல்லாஹ் அந்த நாளிலிருந்தும் அதில் மோசடிகாரர்களுக்கு வழங்கும் நீங்காத வேதனைகளிலிருந்தும் நம் அனைவரையும் பாதுகாப்பானாக என உரையை கொடுக்கப்பட்ட மிகச்சுருக்கமான நேரமாகிய 25 நிமிடத்திற்குள் (அஷ்ஷெய்ஃக் ஷம்சுத்தீன் காசிமி அவர்களின் மொழிபெயர்ப்பு உட்பட) ஆற்றொழுக்கு மிக்க தமது உரையை முடித்துக் கொண்டார்கள். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். |
| |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|