பிப்ரவரி 14-ஐ வேலன்டீன் டே என ஆங்கிலத்திலும் காதலர் தினம் என தமிழிலும் பொதுவாக அழைக்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும்
பதின்பருவ ஆண் பெண்களிடம் ஒரு கொண்டாட்டமாகவே ஆகியிருக்கிறது இந்த தினம். இத்தினம் உருவானது பற்றி என் அருமை நண்பர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் ஏற்கனவே முந்தைய கட்டுரையில் சொல்லியிருக்கிறார். அதை அறிந்து கொள்ள அதுவே போதுமானது.
இக்கட்டுரைக்கு “உலக வெட்கங்கெட்ட தினம்” எனப் பெயரிடலாமா எனக் கூட நான் யோசித்தேன். அதைவிட நேர்மறையாக “வெட்க தினம்” எனக்
கூறி அதைப் பற்றி புதிய தலைமுறையினரிடம் கொஞ்சம் நெஞ்சைத் தொட்டு தெரிந்ததைச் சொல்லலாமே என்ற நினைப்பில் உருவானதே
இக்கட்டுரை.
இவ்வருடம் பிப்ரவரி 14 வெள்ளிக்கிழமை என்பதால் அன்று நடைபெற்ற ஒரு ஜுமுஆவில் பேசுவதற்காக நான் எடுத்துக் கொண்ட குறிப்புகள் இங்கு
கட்டுரையாக அமைகின்றன.
வெட்கம் என்பதற்கு அரபியில் ‘ஹயா’ எனக் கூறப்படும். இந்த அரபுப் பதத்திற்கு மிக அருகிலுள்ள இன்னொரு சொல் ‘ஹயாத்’. அதன் பொருள்
வாழ்க்கை. இரண்டுமே நமதூரின் புழக்கத்தில் உள்ள வார்த்தைகளே. தேவைப்படும் போதெல்லாம் இந்த வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தும் நாம்
அதன் உட்பொருளை விளங்காததுதான் நம் சமூக வாழ்வின் பின்னடைவிற்குக் காரணமெனலாம். அரபு மொழிப்புலமை மிக்கவர்கள் ‘ஹயா’ இல்லை
என்றால் ஹயாத் இல்லை என்கின்றனர். அதாவது வெட்கம் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்பதாகும்.
காருண்ய நபி (ஸல்) அவர்கள் அது குறித்து கூறும் ஹதீஸைப் பாருங்கள்:
“ஈமான் (இறைநம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிலைகளுடையது. வெட்கம் அதன் ஒரு கிலையாகும்.” அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி),
நூல்: புஹாரி.
சிலர் வெட்கத்தை இஸ்லாத்தின் ஓர் அம்சம் என நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாமோ முழுக்க முழுக்க வெட்கத்தைச் சுற்றியே அமைந்துள்ளது.
அது இல்லாதவர் ஒரு வேளை தன்னை முஸ்லிம் என வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஒருபோதும் அவர் முஃமின் ஆக முடியாது.
ஈமான் என்பது மனதில் தூய்மையுடன் நம்பி அதை நாவால் வாய்மையுடன் மொழிந்து அதன்படி உடலின் ஒவ்வொரு அங்க அவயங்களாலும்
சான்றுபகர்வதற்குப் பெயர். அவ்வகையில் நடப்பவருக்குப் பெயரே முஃமின் ஆகும்.
ஒரு ஹதீஸ் இவ்வாறு கூறுகிறது.
“வெட்கமும் ஈமானும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்த நண்பர்கள். அதில் ஒன்றை விட்டுவிட்டால் மற்றொன்றும் வெளியேறி விடும்.”
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி), நூல்: பைஹகீ.
ஆக வெட்கத்தை இழந்தவன் முஃமினாக இருக்க முடியாது. ஒரு முஃமின் ஒரு போதும் வெட்கத்தை இழக்க மாட்டான்.
ஒரு பர்தாவிற்குள் நாணத்துடன் மறைந்திருக்கும் கன்னிப் பெண் போல நபி (ஸல்) அவர்கள் இருப்பார்களென அபூ ஸயீதுல் ஃகுத்ரீ (ரழி) அவர்கள்
நபியவர்களின் வெட்க உணர்வைப் பற்றி அறிவிக்கிறார்கள்.
மேற்குலகம் வெட்கத்தை ஒரு நோயாகவே பார்க்கிறது. எனவேதான் அதை ஒழித்துக் கட்டத் தேவையான அனைத்துக் கைங்கர்யங்களையும் வெகுவாக
செய்து வருகிறது.
மேற்குலகில் வாழ்ந்து வரும் ஒரு இளம்பெண் பின்வருமாறு கூறுகிறார்:
“நாங்கள் சக தோழியருடன் இணைந்து கேளிக்கை விடுதிகளுக்குச் செல்வதும், கிளப் - மால்களுக்குச் செல்வதுமே பெருமை என எண்ண
வைக்கப்படுகிறோம். ஒரு ஆண் எங்களைப் பார்க்கும் போது அவனது பார்வையை ஈர்க்கும் வண்ணம் உடலின் பல பாகங்கள் தெரிவது போன்றும்
ஆடையணிந்தும் அணியாதது போலவும் ஆடை அணிவதற்கு கற்பிக்கப்படுகிறோம். மேலும் எங்களை ஏருட்டும் பார்க்காத ஓர் ஆண் நிச்சயம் ஓரினச்
சேர்க்கையாளனே என எண்ணுவோம். ஆனால் என் கடந்த கால தீச்செயலுக்காக படைத்த மாவல்லோனிடம் தவ்பா செய்த நான் இப்போது ஒழுக்கமாக
ஆடையணிந்து பர்தாவைப் போர்த்திக் கொள்பவளாக மாறிவிட்டேன்” என்கிறார் அந்தப் பெண்.
மேற்குலகின் இத்தகு சிந்தனை எவ்வளவு மோசமானது என்பதைப் பார்த்தீர்களா? காமாலைக் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல,
மேற்குலகின் பொருள்சார் சிந்தனையாலும், பணம்தான் எல்லாமே என்ற இலக்கற்ற கொள்கையாலும் உருவானதே - கற்பைப் பாதுகாக்கும் ஆண்
பெண்களைக் குறித்து தவறான சிந்தனையை விதைப்பதாகும். இத்தகைய வெட்கங்கெட்ட ஒரு கலாச்சாரத்தைப் பரப்பி வரும் மேற்குலகை
இறையச்சமுள்ள எவரும் பின்பற்றவே மாட்டார்கள்.
இன்று நாம் மனிதர்களுக்கு வெட்கப்படும் அளவிற்கு நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் நாம் வெட்கப்படுவது
இல்லை. எவ்வாறெனில், அல்லாஹ்வும் அவனது தூதரும் எதை நமக்குத் தடுத்தார்களோ அதைச் செய்வதும், அல்லாஹ்வும் அவனது தூதரும்
எதைச் செய்யுமாறு ஏவினார்களோ அதைச் செய்யாமலிருப்பதும் ஆகும்.
நல்ல வெட்கமும் தீய வெட்கமும்.
உதாரணத்திற்கு அல்லாஹ்வும், அவனது தூதரும் முஃமினான ஆண்களையும், பெண்களையும் மது அருந்தக்கூடாது, வட்டி வாங்கக் கூடாது, புறம்
பேசக்கூடாது, பொறாமைக் கொள்ளக் கூடாது, அடுத்தவருக்கு துன்பம் தரும் வகையில் நடக்கக் கூடாது, ஹராமானதை உண்ணக்கூடாது எனத்
தடுத்தவற்றை எல்லாம் செய்யாமலிருப்பது நல்ல வெட்கமாகும்.
இதில் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படியும் வகையில் இதைச் செய்யாதே என ஒன்றைக் கட்டளையிட்ட பின் அதைச் செய்வதால் அதே
நிலையில் குர்ஆனைப் படிக்கும் போதோ அல்லது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் செவிமடுக்கும் போதோ இறையச்சமுள்ள
எவருக்கும் இயல்பாகவே தன்னுள் ஒரு வகையான வெட்க உணர்வு வெளிப்படவே செய்யும். அத்துடன் மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில்
அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்போது அவன் தடுத்ததைச் செய்ததை எண்ணி வெட்கித் தலைகுனிய நேரிடும்.
தீய வெட்கம் என்பது அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒன்றைச் செய்யுமாறு ஏவியிருக்க அதைச் செய்வதால் தன்னை மக்கள் எவ்வாறு
எண்ணுவார்களோ என மக்களுக்கு வெட்கப்பட்டு செய்யாமல் விடுவதாகும். உதாரணத்திற்கு அல்லாஹ், ஆண் பெண் இருவருக்கும் அவர்தம்
மானத்தை மறைக்கும் விதமாக ஆடைகளை உடுத்துமாறு கூறியிருக்க, புதுப்புது வடிவமைப்புகளில் (ஃபேஷன்களில்) உடலின் மறைக்கப்பட
வேண்டிய பாகங்கள் தெரியுமளவு ஆடைகளை அணிவதாகும்.
அதைப் போன்றே உணவு சாப்பிட்ட பின் கைசூப்புவது, தாடி வைப்பது, பிரயாணங்களில் தொழுகை நேரம் வரும்போது அதனை நிறைவேற்றுவது
உள்ளிட்ட அக்கம்பக்கத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என எண்ணி அச்செயல்களைச் செய்யாமல் விடுவதும் தீய வெட்கம் ஆகும்.
“உனக்கு வெட்கம் இல்லையென்றால் நீ விரும்பியதைச் செய்து கொள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமஸ்வூத் உக்பா இப்னு ஆமிர் (ரழி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புஹாரி.
இந்த ஹதீஸை இரு வகையாக அணுகலாம். ஒன்று. மனிதன் தன் மனம் போன போக்கில் செய்யும் வெட்கங்கெட்ட செயல் ஓர் அணுவளவாக
இருந்தாலும் அதுபற்றி மறுமையில் அல்லாஹ்விடம் கணக்கு கொடுத்தே தீரவேண்டுமென்பது. மற்றொன்று. உனக்குதான் வெட்கமில்லையே, பிறகு
நீ எந்த அசிங்கத்தைத்தான் செய்யாமல் விடுவாய் என்னும் கருத்து.
இறுதியாக, மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளும் மறுமையில் சாட்சி சொல்வதற்காக காத்திருக்கின்றன என்பதை வெட்கம் குறித்த
சிந்தனையில்லாதவர்கள் உணரவேண்டும். அதுபற்றி அல்லாஹ் கூறுவதைக் காண்பீர்:
இறுதியில், அனைவரும் அங்கு சென்றடையும்போது அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களுடைய உடம்பின் தோல்களும் உலகில்
அவை என்னென்ன செயல்களைச் செய்து கொண்டிருந்தன என்று அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். அவர்கள் தங்கள் தோல்களைப் பார்த்து
கேட்பார்கள்: “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி சொன்னீர்கள்?” அதற்கு அவை பதிலளிக்கும்: “ஒவ்வொன்றையும் பேச வைத்த இரட்சகனாகிய
அல்லாஹ்தான் எங்களையும் பேச வைத்தான். அவனே உங்களை முதன் முறையாகப் படைத்தான். மேலும், இப்போது அவனிடமே நீங்கள் திரும்பக்
கொண்டு செல்லப்படுகிறீர்கள். உலகில் நீங்கள் குற்றங்களை இரகசியமாக செய்து கொண்டிருந்தபோது உங்களுடைய காதுகளும், உங்களுடைய
கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும் எனும் எண்ணமே உங்களுக்கு இருந்ததில்லை. மாறாக, நீங்கள்
செய்கின்ற செயல்களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணியிருந்தீர்கள்.
உங்கள் இரட்சகனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களுடைய இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. அதே காரணத்தால் நீங்கள்
இழப்புக்குரியவர்களாய் ஆகிவிட்டீர்கள்.” குர்ஆன் 41:20-23
எனவே மறுமையில் இத்தகைய மோசமான சூழல்களை எதிர்கொள்வதற்குப் பதிலாக நாம் இவ்வுலகில் வாழும் வாழ்க்கையில் அனைத்துச்
செயல்களிலும் வெட்கத்தை கடைபிடித்து உண்மையான முஃமின்களாக வாழ்ந்து அல்லாஹ் இவ்வுலகில் தடுத்தவற்றை விட்டும் விலகிப்
பொறுமையுடன் இருந்ததற்காக மறுமையில் அவன் சித்தப்படுத்தி வைத்திருக்கும் உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் அஃலாவில்
நாம் அனைவரும் அவனது கருணை கொண்டு நுழைவோமாக ஆமீன். |