இத்தொடர் கட்டுரைக்காக நான் தேர்ந்தெடுத்த பழமைவாய்ந்த பாரம்பரிய இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பல தலைமுறைகள் தாண்டி அன்று முதல் இன்று வரை நம்மோடு ஒன்றியிருக்கும் சிலவற்றைத் தேர்ந்தெடுத்தேன். அவற்றுள் மிக முக்கியமானதும், நமக்குத் தேவையானதுமான ஒன்று, நமதூர் அரசு பொது மருத்துவனை. இது மக்கள் பணியில் மகத்தான ஒரு மவுனப் புரட்சியைச் செய்து வருவதை நான் உணர்ந்தேன். எனவே, இந்த மருத்துவமனையின் சேவை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி நாம் தெரிந்திருப்பது அவசியம் என்று கருதி, அது குறித்த தகவலகளைச் சேகரித்து எழுத்துமேடையில் பதிவு செய்ய ஆயத்தமானேன். அதன் பிரதிபலிப்பே இக்கட்டுரை.
ஒரு காலத்தில் காயல்பட்டினத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும், இம்மருத்துவமனைக்கும் ஏதாவது ஒரு முறையில் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கத்தான் செய்யும். அநேகமான நமதூர்வாசிகளின் தொப்புள்கொடி துண்டிக்கப்பட்ட தாய்வீடும் இதுவே எனலாம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடுகளைக் கொண்டு, நமதூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் இது ஓர் அரிய பொக்கிஷமாக பல்லாண்டுகாலமாகத் திகழ்ந்து வருகின்றது.
அன்று, இம்மருத்துவமனைக்காகப் பாடுபட்ட பெரியோர்கள் தமது ஈகைக் குணத்தால், எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் தம் சொந்தச் செலவில் பல வார்டுகளைக் கட்டிக்கொடுத்துள்ளனர். அவர்களுள் பலரும் இன்று நம்மிடத்திலிருந்து மறைந்துவிட்டாலும், அவர்களின் சேவையைப் பறைசாற்றி இன்றளவும் சாட்சியாய் நிற்பது அன்று மனமுவந்து மக்கள் நலனுக்காக கட்டித்தந்தவர்களின் பெயர் தாங்கி நிற்கும் வார்டுகள்தாம்.
பொதுநலனில் அக்கறை கொண்ட நம் முன்னோர்கள் சுயநலம் பாராமல் தம் சொந்த நிலங்களைப் பல்வேறு மக்கள் பணிகளுக்கு தாரைவார்த்து கொடுத்திருப்பதற்கு ஏராளமான சான்றுகளைச் சொல்லலாம். நமதூர் அரசு மருத்துவமனைக்காக சுமார் ஒன்னறை ஏக்கர் நிலத்தை, SK சகோதரர்களான S.K.செய்யது இபுறாஹீம், S.K.முஹம்மது ஹஸன், S.K.முஹம்மது லெப்பை (மர்ஹூம் S.K.ஷாஹுல் ஹமீத் அவர்களின் தந்தையார்) நம் மக்களின் நலன் கருதி தானமாக தந்துள்ளார்கள். மீதமுள்ள நிலத்தை, தைக்கா தெருவைச் சார்ந்த பொம்பளை பிள்ளை ஹாஜி எனும் பெண்மணியும் தானமாக அளித்துள்ளார்கள். இவர்களின் ஈகைக் குணத்தால் பெறப்பட்ட நிலத்தில்தான் இன்று ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவும் அளவிற்கு தாராளமாக நில வசதி கொண்டு, நமதூர் அரசு பொது மருத்துவமனை கோலோய்ச்சி வருகின்றது.
இங்கு ஆண்டுதோறும் நடக்கும் அரசு மருத்துவமனை விழாவில் நம் நகர்மன்றத் தலைவபு ஐ.ஆபிதா ஷேக் அவர்களின் தந்தை மர்ஹூம் பாளையம் இபுறாஹீம் அவர்கள் இந்தத் தகவலை வழக்கமாகக் குறிப்பிட்டுப் பேசி வந்துள்ளார். அன்று இந்த மருத்துவமனைக்காக அந்த நல்லோர்களின் சொந்த நிலம் தானமாகப் பெறப்பட்டிருக்காவிட்டால், நம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்திலுள்ள ஏதேனும் ஓர் ஊருக்குப் போயிருக்கும்.
நமதூர் அரசு பொது மருத்துவமனை தோன்றிய வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதன் தோற்றமும் வளர்ச்சியும் இன்றைய சூழலும் மிகவும் சுவரஸ்யமான ஒன்று. பல தலைமுறைகளுக்கு முன்னர், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1937ஆம் ஆண்டு, தென் திருநெல்வேலி ஜில்லா போர்டு தலைவர், திரு,R.Y.I.C.ஈஸ்வரன் பிள்ளை. M.L.C அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, அந்த அமைப்பின் உறுப்பினரான, மர்ஹூம் A.K.பிஜிலி சாகிப் பஹதூர் M.A.L.L.B அவர்களின் முயற்சியால் தென் திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் பொறியியல் வல்லுநர் திரு. Nபாலகிருஷ்ன ஐயர் B.A.,B.E. அவர்களின் மேற்பார்வையில் T.K.வீரபாகு பிள்ளை அவர்களால் கட்டிமுடிக்கப்பட்டு, 05-04-1938 அன்று அன்றைய மதறாஸ் மாகானத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த யாகூப் ஹசன் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது.
சுமார் எழுபத்தைந்து வருடங்கள் நம் வம்சாவழியினருக்கு மருத்துவ சேவையாற்றி வரும் இம்மருத்துவமனையின் வளாகத்திற்குள், பரம்பரைகள் பல கண்ட ஓர் ஆலமரம் வேரூன்றி விருட்சமாக நிற்பது அனைவரும் அறிந்ததே! அந்த மரத்தின் கம்பீரமும், பொலிவும் இன்னும் தளர்ந்துபோய் விடவில்லை. பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சொந்த வீட்டைப் போல் தங்கியிருக்கையில், தாய் - சேய் நலமுடன் வீடு திரும்பும் வரை, தம்முடன் அழைத்து வந்த அன்றைய குட்டீஸ்களுக்கு அந்த ஆலமரம்தான் உற்ற நண்பனாக இருந்து வந்தது. தனிமரம் தோப்பாகாது எனும் பழமொழியையும் புறந்தள்ளி தனிமரமும் தோப்பாகும் என அன்று பறைசாற்றிய அந்த ஆலமரம் இன்று தம் நண்பர்களை இழந்து தவிப்பதாகவே எனக்குத் தோன்றியது. இளம் விழுதுகளுக்குத் தெரியாது இதன் அருமையும், பெருமையும். இந்த விழுதுகளில் தொங்கியபடி நான் ஊஞ்சலாடிய நினைவுகள் இன்றும் பசுமை மாறாமல் என் மனதுக்குள் ஊஞ்சலாடுவது உண்மை.
எத்தனையோ சிறந்த மருத்துவர்கள் பலர் கால்பதித்து கடமையாற்றிய பெருமை இம்மருத்துவமனைக்கு உண்டு. Dr.ஜானகி, Dr.பரிமளம், Dr.பானுமதி, Dr.சன்முகசுந்தரம், Dr.அபூபக்கர், போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். மனித நேயமிக்க இந்த மருத்துவர்கள் அக்காலத்தில் நள்ளிரவு நேரங்களில் கூட நாம் அழைத்தபோதெல்லாம் குதிரைவண்டியிலும், சைக்கிள் ரிக்ஷாக்களிலும் நம் வீட்டிற்கு வந்து சிகிட்சை செய்ததையும் நம்மால் மறக்க இயலாது.
கையிலிருக்கும் வெண்ணெய்யின் அருமை தெரியாமல் நெய்யைத் தேடி அலைவதுதானே மனித இயல்பு? காலப்போக்கில் வசதி மற்றும் உயர் சிகிட்சைக்காக நம் மக்கள் தனியார் மருத்துவமனைகளில் தஞ்சம் புகத் துவங்கினர். இதன் காரணமாக, எங்களின் பிறப்பிடமான - தாய் வீடாகத் திகழ்ந்த இம்மருத்துவமனையின் நிழல் கூட தற்காலத் தலைமுறையினர் மீது படாமலே போயிற்று. இருப்பினும் இம்மருத்துவமனை ஓய்ந்து விடவில்லை. இன்றளவும் தினமும் 250 முதல் 300 பேர்கள் வரை புற நோயாளிகள் பிரிவுக்கு வந்து சிகிட்சை பெற்றுச் செல்கின்றனர். திங்கள், புதன் ஆகிய நாட்களில் நீரிழிவு, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு மருந்துகள் வழங்கப்படுவதால் சுமார் 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் அந்நாட்களில் வந்து செல்கின்றனர்.
துவக்க காலங்களில் சீட்டுகளில் எழுதி பெயர் பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது அனைத்தும் கணனி மயமாக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவு செய்யப்பட்ட சீட்டு மூலம் தமிழகத்தின் எந்த அரசு மருத்துவமனைகயிலும் நாம் காண்பித்து சிகிட்சை பெற்றுக்கொள்ளும் வசதி அரசாங்கத்தால் தற்போது செய்து தரப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் மருந்துகள் இரண்டு மருந்து பரிசோதனைக் கூடங்களில் பரிசோதனைக்குட்பட்டு பயன்பாட்டுக்கு வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளுக்கான மருந்துகள் மூன்று பரிசோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்ட பிறகே சிகிட்சைகாக வெளிவருகின்றது. அரசால் வழங்கப்படும் அனைத்து மருந்துகளும் தரமானவைகயே! சுதாதாரத்துறை இதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புடன் செயல்பட்டு வருகின்றது. இலவசம் என்றாலே நமக்கு இளக்காரம்தானே? எனவேதான் நம் மக்கள் அதைப் பெரிதாக மதிப்பதில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
தற்போது, Dr.சரஸ்வதி, Dr.ஜாஃப்ரி ஆகியோரருடன் சுமார் பன்னிரெண்டு செவிலியர்களும், கணணி பிரிவு, மருந்து வழங்கல், அறுவை சிகிட்சை சம்பந்தமான ஊழியர்கள், துப்புரவு தொழிலாளிகள் என 34 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும் போதுமான மருத்துவப் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர் இல்லை என்பதே இங்கு பணிபுரிவோரின் ஆதங்கம். இம்மருத்துவமனையில் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் ஒன்றும் உள்ளது. மின் பற்றாக்குறையால் ஏற்படும் பவர்கட்டை சமாளிக்க ஜெனரேட்டர் இருந்தும் அது பல நாட்களாக பழுதாகி பயன்பாடின்றி இருப்பது கவலைக்குரியதே!
அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு ,பல் மருத்துவப் பிரிவு, குடும்ப நலப்பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை அரங்கம், உள்நோயாளிகளில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி வார்டுகள், பொது வார்டுகள் என பல பிரிவுகள் இயங்கி வருகின்றன. சித்தா மருத்துவப் பிரிவின் முதன்மை மருத்துவர், Dr. நமச்சிவாயம் BSMS, சித்தா மருந்தாளுனரான N.மீனா (எல்.கே.மேனிலைப்பள்ளி ஆசிரியர் சிதம்பரம் அவர்களின் துணைவியார்) ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சித்த மருத்துவத்தின் பத்தியம் மற்றும் பக்கவிளைவுகள் இல்லாத சிகிட்சை முறைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகின்றனர்.
தற்போது ஒரு சின்னஞ்சிறிய அறைக்குள்தான் இந்த சித்த வைத்தி பிரிவு இயங்கி வருகின்றது. மானாவாரியாக் கிடக்கும் பொதுமருத்துவமனையின் நிலத்தில் ஓர் பகுதியில் சற்று வசதியுடன் கட்டி அதற்கான உள் நோயாளி பிரிவையும் ஏற்படுத்தினால் அதன் பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில் நமதூரை ஆட்டிப்படைத்த சிக்குன் குனியாவால் பச்சிளம் குழந்தை முதல் வயோதிகர் வரை பாதிப்புக்குள்ளாகி அவதியுற்றபோது ஆறுதல் தந்தது இந்த அரசு பொதுமருத்துவமனையிலுள்ள சித்தா பிரிவின் நில வேம்பு கஷாயம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை வளாகத்தில் ஒரு பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டு, பாதுகாத்து வளர்த்து வரும் மூலிகைத் தோட்டமும் உண்டு. அதன் பராமரிப்புப் பணிகளை சித்தா மருத்துவப் பிரிவினர் செய்துவருகின்றனர்.
உண்மையில் நாம் நமதூர் அரசு பொது மருத்துவமனைக்குள் சென்று பார்த்து பிற ஊர்களின் மருத்துவமனைகளோடு அதை ஒப்பிட்டால்தான் தெரியும் - நம் மருத்துவமனை சுத்தம், சுகாதாரம், சிகிட்சை, சுற்றுப்புறச்சூழல் இவையனைத்திலும் ஒரு படி மேலேதான் உள்ளது என்று.
பொதுமக்களின் குறை தீர்க்க அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் யாவும் நூறு சதவிகிதம் மக்களுக்கு சென்றடைகின்றனவா எனில் இல்லை எனலாம். அதில் பல்வேறு குறைகள், குளறுபடிகள் இருக்கத்தான் செய்யும். அத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத் திறமையுள்ள தகுதியானவர்களைப் பணியில் அமர்த்துவதே இதற்கான தீர்வு.
உன்னதமான மருத்துவத்தை வெறும் வியாபார நோக்கில் மட்டுமே நடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்து வரும் பெரும்பாலான மருத்துவமனைகளை விதியே என மக்கள் நாடிச் செல்வதற்குக் காரணம், அங்கு எப்போதும் எந்த நோய்க்கும் மருத்துவர் உண்டு என்பதுதான். அவர்கள் ஏழை பணக்காரன் எனும் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்து கொண்டு, பலசரக்கு கடை பில்லை போன்று மருந்துகளை பட்டியலிட்டு அள்ளித் தந்து கொள்ளையடிக்கும் அவல நிலை.
நம் அரசாங்கம் தரமான மருத்துவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கி அவர்களைத் தக்கவைத்து, மக்கள் சேவைக்குப் பயன்படுத்தினால், அரசு மருத்துவமனைகளில் மீண்டும் கூட்டம் அலை மோதும். அரசு மருத்துவமனைகளின் அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து அதை நிவர்த்தி செய்தால், அநியாயமாக காசு பிடுங்கும் தனியார் மருத்துவமனைகள் மண்னைக் கவ்வும் என்பது உறுதி.
குறைந்தபட்சம் பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மனதளவில் முன்வர வேண்டும். தலைவலி, காய்ச்சல் போன்ற சிறிய நோய்களுக்குக் கூட தனியார் மருத்துவமனைகளை நோக்கிப் படையெடுக்கும் மனோபாவத்தை விட்டொழித்து, மக்கள் நலனுக்காக சுகாதாரத்துறை கோடிக்கணக்கில் செலவழித்து வருவது நமது வரிப்பணமே எனும் சிந்தனையுடன் அரசு பொது மருத்துவமனைகளைப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
குறிப்புகள் தேடிச் சென்ற நான் மருத்துவமனையிலிருந்து திரும்பியபோது, என் தாய் வீட்டை விட்டுத் திரும்பிய உணர்வு உள்ளத்தில் உதிக்கவே, என் உடலும் இலேசாக சிலிர்த்தது. நான் மீண்டும் திரும்பிப் பார்த்தேன். இது நான் பிறந்த இடம் என்பதால் ஏற்பட்ட ஓர் உள்ளுணர்வாகக் கூட இருக்கலாம். இனி அடுத்த ஒரு சந்திப்பில் மற்றுமொரு தகவலுடன் வருகின்றேன். இன்ஷா அல்லாஹ்... அதுவரை பிரியாவிடை. |