“நீங்கள் வீட்டுக்குப் போகவேண்டாம், இன்று இரவு மட்டும் ஐ சி யு வில் இருங்கள் என்ன ..!” டாக்டர் சொன்னவுடன் எனக்குள் லேசாக பயம்
எட்டிப்பார்த்தது. அதையும் விட எரிச்சல் என்னவெனில் வீட்டில் தூக்கம் வருவது போல இங்கு அது வராதே ..! ஊருக்குள்தான் எனினும் அந்நிய
இடமாச்சே ...!மனம் புழுங்கியது. அருகில் நின்ற மகளும், மருமகனும் என்ன செய்வதென்று அறியாமல் கை பிசைந்து நிற்ப்பதை ஓரக்கண்ணால்
பார்க்கக்கூடியதாக இருந்தது.
டாக்டர் சிப்பந்தியை அழைத்து “வீல்சேர் ‘கொண்டுவரச் சொன்னார். மகள் அவசர அவசரமாக அவளது உம்மாவுக்கு போன் செய்தாள்.
வீல்சேருடன் சிப்பந்தி வந்தார். ஏறி அமரச் சொன்னார் டாக்டர். தயக்கத்துடன் ஏறி அமர்ந்தேன். காலில் வீக்கம் கண்டிருந்தது. நெஞ்சிலும்,
முதுகிலும் ஒரே வலி. ஒரு எட்டு கூட நடக்கக்கூடாது என்று சொல்லி விட்டார் டாக்டர். கே எம் டி மருத்துவமனையின் அந்த வராண்டா வழியாக
வீல்சேரில் என்னை உருட்டிக்கொண்டு போனார் அந்த சிப்பந்தி. மகளும், மருமகனும் பதட்டத்துடன் பின்தொடர்ந்தனர். வழியில் நிற்பவர்கள் என்னை
அதிர்ச்சியுடன் பார்ப்பதும் தெரிந்தது. தலையைக் குனிந்து கொண்டேன். வீல்சேர் வேகத்துடன் உருண்டது.
என்ன ஒரு சோதனை ...!.நேற்று வரை கம்பீரமாக நடந்து சென்ற நான் இன்று இப்படி இன்னொருவரால் “தள்ளிக்கொண்டு “போகப்படுவேன் என்று
நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. எதிர்பாராதுதானே வாழ்க்கை.
ஐ சி யு வின் அந்தக் கண்ணாடி தடுப்பைத் தள்ளிக்கொண்டு வீல்சேர் உள்ளே நுழைந்தது. மகள் என்னவோ சொல்ல வருவது தெரிந்தது. மருமகன் “
ஒன்றும் பயப்பட வேண்டாம் “என்று சொன்னார். எத்தனையோ முறை, எத்தனையோ பேரை பார்க்க நான் அந்த ஐ சி யு வுக்கு சென்றிருக்கிறேன்.
நானே அங்கு ஒருநாள் அனுமதிக்கப்படுவேன் என்று கனவில் கூட எண்ணியதில்லை.
உயரமான அந்த படுக்கையில் ஏறி படுத்தேன். நர்ஸ் உடனே ஏதேதோ வயர்களை என்னைச் சுற்றி பிணைத்து, அதை எனது தலைக்கு மேலே
பொருத்தப்பட்டுள்ள ஒரு டிஜிட்டல் கருவியோடு பொருத்தினார். அது உடனே பீப்பீப் ஒலியோடு இயங்கத் தொடங்கியது. அவசரமாக சலைன்
பாட்டிலையும் பொருத்தி அதில் ஒரு ஊசியையும் ஏற்றினார்.
அந்த டிஜிடல் கருவியை மெல்ல தலையைத் திருப்பி நோக்கினேன். 50..51...50..51 ..இப்படியே எண்கள் மின்னின. அதுதான் எனது
இதயத்துடிப்பின் எண்ணிக்கை. கூடவோ, குறையவோ இல்லை. அன்றைக்குப் பார்த்து அந்த ஐ சி யு வில் நான் மட்டும்தான் ஒற்றைக்குப்
படுத்துக்கிடந்தேன். எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு நர்ஸ் அந்தக் கருவியையே உற்று நோக்கிக்கொண்டிருந்தார்.
பிறகு டெலிபோனை எடுத்து யாருக்கோ போன்செய்தார். “ஆமாம் சார் ... ஆமாம் சார் ... பேஷண்டின் ஹார்ட் பீட் ரெம்ப கம்மியா இருக்கு சார்
..ஒ கே சார் ..ஒ கே சார் ..’என்னைக்குறித்துதான் அந்த தாதி யாரிடமோ சொல்வதாகத் தெரிந்தது. எனக்கு பயம் மேலும் அதிகரித்தது.
கண்ணை மூடிக்கொண்டேன். மரணம் என் அருகிலேயே இருப்பதாகத் தெரிந்தது. மருத்துவமனைக்கே உரிய பினாயில் வாசனையோடு சேர்ந்து மரண
வாசனையும் வீசுவதாகத் தோன்றியது. பிறகு எப்படித் தூங்கினேன் என்று தெரியவில்லை.
பொழுது நன்கு பளபள என்று விடிந்து விட்டது. கண்விழித்தேன். நல்லவேளை ... நாம் இன்னும் இறக்கவில்லை ... உயிரோடுதான் இருக்கிறோம்
... என்ற அந்த எண்ணமே எனக்கு ஆசுவாசத்தைத் தந்தது. இன்னும் கூட ஒரு சூரியோதத்தை நான் பார்த்துவிட்டேனே ..!
டாக்டர் பாவனாசகுமார் உள்ளே வந்தார். “எப்படி இருக்கீங்க ...?” என்று கேட்டுக்கொண்டே ஸ்டெத்தை வைத்து என்னை சோதித்தார். அவர் அன்று
விடியற்காலையில்தான் சென்னையில் இருந்து ஊர் திரும்பியிருந்தார். உடனே டூட்டிக்கு வந்து விட்டார். இரவில் நர்ஸ் பேசியது அவரோடுதான் என்று
பின்பு தெரிந்தது.
“ சரி ... நீங்க திருநெல்வேலி கேலக்சியில் அட்மிட் ஆயிடுங்க ... நான் எழுதித் தர்றேன் ..” என்றார். அப்போதுதான் இன்னும் என்னை அதிகமாக
பயம் தொற்றிக்கொண்டது. நமக்கு வந்திருப்பது சாதாரண நோயல்ல ... கடுமையானது ... என்று உணர்ந்தேன். உடனே எனது உடலைச் சுற்றி
இருந்த வயர்களின் பிணைப்புக்கள் நீக்கப்பட்டன. சலைன் பாட்டில் இணைப்பும் நீக்கப்பட்டது. ஐ சி யு கதவை திறந்து திறந்து யார்யாரோ
எட்டிப்பார்த்தார்கள்.
ஐ சி யு வில் இருந்த ஒரே ஆள் அன்று நான் மட்டும்தானே ...! என்னைப் பார்க்கத்தான் அத்துணை கூட்டமும் ...! பாவனாசக்குமார் எனது அடி
வயிற்றில் இரண்டு ஊசியைச் செலுத்தினார். மறுபடியும் வீல்சேர் ...! வெளியே வந்து பார்த்தால் எனது குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே கவலை
தோய்ந்த முகத்துடன் நின்றார்கள். கீழே ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. விசில் அடித்தவாறே அது தனது புறப்பாட்டுக்கு ஆயத்த நிலையில் நின்றது.
அங்கேயும் ஒரு கூட்டம்.
டிரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் என் தம்பி உள்ளே எனது அருகில் எனது மச்சானும், மனைவியும் எனக்கு எதுவமில்லை. நான் நல்ல நினைவுடன்
எப்போதும் போலிருந்தேன். என்னை படுக்கையோடு பிணைத்து பெல்ட் வைத்து இணைத்து எனது மூக்கினுள் ஆக்சிஜன் குழாய்கள் செருகப்பட்டன.
மனைவியிடம் ஈனஸ்வரத்தில் கேட்டேன் .” என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் ..?’
“மதுரைக்கு ..மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரிக்கு ...” ஏதோ கொஞ்சம் ஆசுவாசமாயிருந்தது.
ஆம்புலன்ஸ் புறப்பட்டது. தூத்துக்குடி வழியில் மெல்ல ஓடத்தொடங்கியது. ஆத்தூரும், பழைய காயலும், ஸ்பிக்நகரும் கடந்து சென்றன. எத்தனை
எத்தனை மாலை நேரங்களில் இந்த ஊர்களைக் கடந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் வேடிக்கை பார்த்தவாறு சென்றிருப்பேன் ...! இறைவா ... என்னை
இந்த கதிக்கு ஆளாக்கி விட்டாயே ...! மனம் புலம்பியது. போகிற வழியிலேயே நம் கதை முடிந்து விடுமோ ...! நெஞ்சு திக்திக்
அடித்துக்கொண்டது.
தூத்துக்குடி மதுரை ரோடு ரவுண்டானா வந்ததும் ஆம்புலன்சின் வேகம் கூடியது. மின்னல் வேகம். சுழல் விளக்கோடு ஒருகணம் விடாத விசில்
சத்தம். அதுவே கூட என்னை இன்னும் பயப்படுத்தியது. வழியில் டோல்கேட்டில் அம்புலன்சுக்கு எனத் தனியே வழி உண்டு. எனவே அங்கு
ஆம்புலன்சுக்கு கட்டணமோ, சோதனையோ இல்லை. பறந்தது ஆம்புலன்ஸ் ..!
எனக்கு சிறுநீர் கழிக்க வேண்டும்போல இருந்தது. எப்படி சொல்வது ...? இங்கு யார் என்ன உதவி செய்ய முடியும் ...? எப்படியோ
பொறுத்துக்கொண்டேன். சரியாக ஒன்றே முக்கால் மணிநேரம்தான். மதுரை மீனாட்சி மிஷன் வாசலை அடைந்தது ஆம்புலன்ஸ். அந்த
மருத்துவமனையின் பிரதான நுழைவாயல் அருகே உள்ள அவசர சிகிச்சை மையத்தின் கதவுகள் திறந்தன. டாக்டர் பாபநாசகுமார் எழுதித்தந்த சிபாரிசுக்
கடிதத்தை எனது தம்பி அங்குள்ள ஒரு டாக்டரிடம் கொடுப்பது தெரிந்தது.
ஸ்ட்ரக்செரில் வைத்து உள்ளே கொண்டுபோகப்பட்டேன். உள்ளே ஏ சி யின் குளிர் ஜில் என்றிருந்தது. அங்கிருந்த படுக்கையில்
படுக்கவைக்கப்பட்டேன். என்னைச் சுற்றி பயிற்சி மருத்துவர்கள் ஆணும், பெண்ணுமாக சூழ்ந்து கொண்டார்கள். இங்கு இன்னும் என்னவெல்லாமோ
நவீனக் கருவிகள். என்னை அசையக்கூடாது என்றார்கள். என்னைச் சுற்றியும் ஸ்கிரீன். என்னைப்போன்றே இன்னும் ஒரு நாலு ஐந்து பேர்கள் அங்கு
அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். எல்லோரைச் சுற்றியும் டாக்டர்கள். என்னவெல்லாமோ மின்னல் வேகத்தில் சோதனைகள் நடந்தன. சுற்றியும் ஒயர்கள்
பிணைக்கப்பட்டு மனோகரா படத்தில் வரும் சிவாஜிகணேசன் மாதிரிக் கிடந்தேன். சிறுநீர் முட்டுதல் அதிகமானது. ஏற்கனவே ஆம்புலன்ஸ்
பயணத்திலேயே அந்த உணர்வு ஏற்ப்பட்டிருந்தது. இங்கே அவசரசிகிச்சை அறையினுள் ஏற்ப்பட்ட பயத்தில் அந்த உணர்வு சற்றே மட்டுப்பட்டிருந்தது
போலத் தெரிந்தது. இப்போது அது இன்னும் அதிகமாகத் தெரிந்தது. இப்போது ஹார்ட் என்ன ஆனாலும் பரவாயில்லை. முதலில் உச்சா
போகவேண்டும்.
நர்சிடம் எனது சங்கடத்தை சொன்னேன். அவள் உடனேய ஒரு குடுவையை எடுத்துக்கொண்டு வந்து ...”அசையக்கூடாது ... படுத்தவாறே இதில்
பிடியுங்கள் ..”என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். எனக்கானால் நம்ம பள்ளிவாசல் பாத்ரூமில் சிறுநீர் கழிக்கும் இடத்தில் கூட பின்னால் ஆள்
நின்றாலே உச்சா வராது. எனக்கா படுக்கையில் வரும் ..? எனினும் முயன்று பார்த்தேன். முடியவில்லை. ஓன்று உட்க்கார வேண்டும். அல்லது
நிற்கவாவது வேண்டும். படுக்கையில் ம்ஹூம் ... முடியவே இல்லை. நர்சிடம் எனது இயலாமையைச் சொன்னேன்.
“சார் ...நீங்க அசையவே கூடாது ... ஈ சி ஜி ... சலைன் எல்லாம் உங்களது உடலில் பொருத்தப்பட்டிருக்கிறது ... எப்படி நிற்ப்பீர்கள்...? டாக்டர்
எங்களைத்தான் சத்தம் போடுவார் ...”
“சிஸ்டர் ... என்னால் முடியவே முடியாது ... எப்படியாவது அனுமதி தாருங்கள். நான் இப்படியே நின்றவாறு இருந்து கொள்கிறேன் ...”
உடனே அந்த நர்ஸ் டாக்டரிடம் கேட்கப்போனாள். டாக்டர் வந்தார்.
“ சார் ..இப்படியே படுத்துக்கொண்டு கொஞ்சம் முக்குங்கள் சிறுநீர் வந்துவிடும் ..’
“ப்ளீஸ் ..டாக்டர் கொஞ்சம் கொஞ்சம் கருணை காட்டுங்கள் ...”
பிறகு டாக்டர் இரண்டுமனதொடு அனுமதி தந்தார். என்னைச் சுற்றியுள்ள ஸ்க்ரீன் இழுத்துவிடப்பட்டது. நான் நின்று கொண்டே உச்சா போனேன் ...
போனேன் ... போய்க்கொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட அந்தக் குடுவையே நிறைந்து விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இனி ஹார்ட்
என்னவானாலும் பரவாயில்லை.அப்பாடா ... நிம்மதியானேன்.
இதற்கிடையே எனது மகள், மற்றும் உறவினர்கள் எல்லோரும் ஒரு காரில் புறப்பட்டு அங்கு வந்தனர். எனது இதயத்திற்கு செல்லும் எல்லா ரத்தக்
குழாய்களும் அடைபட்டிருப்பதாகவும், ஆபரேஷன் செய்ய முடியாதென்றும், பலூன் முறையில் செய்யப்படும் ஆஞ்சியோ பிளாஸ்ட்டி “சிகிச்சைக் கூட
சற்று சிரமம்தான் என்றும், எனினும் தான் முயன்று பார்ப்பதாகவும் கார்டியலாஜி டாக்டர் செல்வமணி எனது குடும்பத்தாரிடம் சொல்லியிருக்கிறார்.
இதெல்லாம் எனக்கு பின்னால் தெரிய வந்த விவரங்கள்.
மார்ச் 13, 2012 மாலை மூன்று மணிக்கு என்னை இன்னொரு ஸ்ட்ரக்சரில் வைத்து வேறு எங்கோ கொண்டு சென்றனர். அன்று காலையில் இருந்து
நடந்த சம்பவங்கள்தான் நான் மேலே விவரித்தது. எங்கேயோ நெடிய வராண்டா ... பிறகு லிப்ட் ... இன்னும் அங்கிருந்து இன்னொரு வராண்டா
..மேலும் ஒரு லிப்ட் என்று எனது ஸ்ட்ரக்சர் பயணம் தொடர்ந்தது .
பிறகு மிகவும் அகலமான இன்னொரு அறைக்குள் என்னைக் கொண்டு சென்றனர். அந்த ரூம் மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. என்னவெல்லாமோ
... பெயரே தெரியாத நவீனக் கருவிகள் எல்லாம் அங்கிருந்தன. ஆபரேஷன் தியேட்டர் போல தெரிந்தது. மிகப் பெரிய எல் சி டி டி வி க்கள் போல
மூன்று ,நான்கு இருந்தது. டாக்டர் செல்வமணியோடு, அவரது பயிற்சி மாணவர்கள் ஒரு பத்துக்கும் மேல் இருந்தனர். எனது உடைகள் அகற்றப்பட்டு
வேறு உடைகள் அணிவிக்கப்பட்டன. என்னுள் பயம் தடதடத்தது.
படுக்கையில் இருந்த எனது முகம் மட்டும் மறைக்கப்பட்டது. எனது வலது கை நாடி நரம்பில் ஒரு ஊசி மெல்ல செலுத்தப்பட்டது. . எனக்குத்
தூக்கம் வருவது போல இருந்தது.
“ அப்படித்தான் ..அங்கெ இருக்கு பார் ... மேலே ... மேலே அங்கேயே கொண்டு போ ... இப்படிக் கொஞ்சம் கீழே வாப்பா ... சரியாக அந்த
இடம்தான் ... ஷூட்... ”இவ்வாறான சப்த்தங்கள் எனது காதில் விழுந்தன. அந்த எல் சி டி டி வி யைப் பார்த்துக்கொண்டே இவ்வாறு சொன்னபடி
இருந்தார்கள். ஒரு அரைமணி நேரம் இந்த சடங்குகள் நடந்தன. பிறகு அந்த ஊசி உருவப்பட்டு எனது மணிக்கட்டில் ஒரு அழுத்தமான கட்டு
போடப்பட்டது. டாக்டர் செல்வமணி சொன்னார் ‘ எல்லாம் ஒ கே ...பயப்பட வேண்டாம் ..”
மறுபடி ஸ்ட்ரக்சர் ... மறுபடி நீண்ட நெடிய வராண்டாக்கள் ... லிப்ட் ... இன்னுமொரு ரூமுக்கு கொண்டு செல்லப்பட்டேன். அங்கெ அருகருகே
என்போன்று ஒரு பத்து நபர்கள் படுக்கையில் இருந்தார்கள். இத்துணைக்கும் அப்போது எனக்கு என்ன நடந்தது ... அங்கே டாக்டர்கள் என்னை என்ன
செய்தார்கள் ... எனபது அப்போது எனக்குத் தெரியாது. அங்கெ நான் இன்னொரு படுக்கையில் படுக்கவைக்கப்பட்டேன். அங்கும் கே எம் டி
மருத்துவமனையில் உள்ளதுபோல ஒரு டிஜிட்டல் கருவியோடு எனது உடல் இணைக்கப்பட்டது. இதயத்துடிப்பு இப்போது ...80..85..90... என்று
காட்டியது.
பிறகுதான் தெரிந்தது .”ஆஞ்சியோ பிளாஸ்ட்டி “ என்ற அந்த இதய ரத்தக் குழாயில் அடைப்பு நீக்கும் சிகிச்சை எனக்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டு
என்னை உயர் கவனிப்பு சிகிச்சை பிரிவில் ஒரு வார காலத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது ... என்ற நிம்மதியான செய்தி.
அந்த ஒருவார காலமும் என்னைக் கவனமாக பராமரித்துக்கொண்டார்கள். டாக்டர் செல்வமணி ஒவ்வொருநாளும் என்னை கவனமாக பரிசோதித்தார்.
எனது இதயத் துடிப்பு சீராக இருக்கிறது ...என்று உறுதிப்படுத்திக் கொண்டபின்புதான் என்னை மார்ச் 20 அன்று டிஸ்சார்ஜ் செய்தார். உணவு
அனைத்தும் ஆஸ்பத்திரியிலேதான். கொழுப்பு இல்லாத சரிவிகித உணவு.
எனது மகளும், மருமகனும் அந்த ஒருவாரமும் அந்த ஆஸ்பத்திரியின் வராண்டாவில் தங்கிக்கொண்டு என்னை தினமும் வந்து பார்த்தார்கள். எனது
மனைவி, மற்றும் உறவினர்கள் இரண்டு நாள் மட்டும் இருந்துவிட்டு ஊருக்குச் சென்றார்கள். பிறகு டிஸ்சார்ஜ் ஆகும் சமயம் எல்லோரும் திரும்ப
வந்தார்கள்.
இவ்வாறு மரணத்தின் பிடியிலிருந்து எல்லாம் வல்ல இறைவனின் அளப்பெரும் கருணையினால் பிழைத்தேன். எனக்காக தங்களது உடல் பொருள்
எல்லாமும் கொடுத்த எனது உறவினர்களும், எனக்காக பிரார்த்தித்த எல்லா நெஞ்சங்களும் எப்போதும் எனது நன்றிக்குரியவர்கள்.
அந்த நினைவுடன் டிஸ்சார்ஜ் ஆன மார்ச் 20 2012 மாலை அன்று புதிய பிறவி எடுத்தவனாக காரில் ஏறி அமர்ந்தேன். கார் மெல்ல ஆஸ்பத்திரி
நுழைவாயலைக் கடந்தது.
விசில் அடித்துக்கொண்டு இன்னொரு ஆம்புலன்ஸ் உள்ளே நுழைந்தது .
|