“இவ்ளோ பெரூ...ஸ்ஸா இருக்கே...? இத வச்சி எப்படி வாப்பா தூக்கி அரைச்சாங்க...?
இருபது ஆண்டுகளுக்கு முந்தைய வீடு ஒன்றின் முற்றத்து ஓரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னத்தைத் தாங்குவதற்கு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் அம்மியைப் பார்த்து, பத்து வயது பெண் மகள் தன் தந்தையிடம் கேட்டாள்.
“நல்ல வேள! நீ இந்தளவுக்காவது கேக்குறியே...? உன் வயது தோழிமார் பலருக்கு இது என்னான்னே தெரியாதுன்னு சொன்னா நம்புவியா?”
“இது எப்டி வாப்பா தெரியாம இருக்கும்? சமையல் சாமான்கள அரைக்கிற அம்மின்னு கூடவா அவங்களுக்குத் தெரியாது வாப்பா...?”
இப்படியாக தந்தை - மகளுக்கிடையே சென்றது உரையாடல்.
அம்மியிலோ, உரலிலோ - கொஞ்சம் உப்பு, இரண்டு மிளகாய் வற்றல் (வத்தல்) போட்டு முதலில் பொடியாக்கப்படும். அப்புறம், ஒரு விரல் அளவுக்கு - கண்ணாடி பக்குவத்திலுள்ள மாசியை அதன் மீது போட்டு இடிக்கப்படும். பின்னர், அதில் ஒரு முழுத் தேங்காயின் கீறிய துண்டுகளைப் போட்டு இடிக்கப்படும். (சூறை மீனைப் பதப்படுத்தி பெறப்படுவதுதான் மாசி.) தேங்காயைப் போட்டு இடிக்க, இடிக்க அம்மி அல்லது உரலிலிருந்து இடிபட்ட மாசிப் பொருட்கள் சிதறும். அதைப் பொறுக்கி வாயில் போட்டு அசைபோட்டவாறு இடிப்பு தொடரும்.
நிறைவில், 4 அல்லது 5 சிறு வெங்காயம், 2 பச்சை மிளகாய் போட்டு - ஏற்கனவே இடிக்கப்பட்ட மாசிப் பொருட்களின் மீது லேசாக படர்ந்து இடிக்க, உரலைக் குப்புறப் படுக்க வைத்து அல்லது அம்மியை வழித்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் கொட்டி வைக்கப்படும் மாசி.
அடுத்த சில நிமிடங்களில் வீட்டில் அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை சண்டைகள் தூள் பறக்கும். மாசி இடிக்கப்பட்ட உரல் அல்லது அம்மியில், சமைத்த சோற்றிலிருந்து சிறிது போட்டு, குழப்பியெடுத்து உண்பதற்குத்தான் ‘நான், நீ’ என சண்டை. அடுக்களையில் காய்கறி சமைத்துக்கொண்டிருக்கும் தாய் அனைவருக்கும் அதைப் பகிர்ந்தளித்து, கனப்பொழுதில் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவார்.
நேற்று சமைத்த சோற்றில் மிஞ்சியது பழஞ்சோறாக மாற்றப்பட்டிருக்கும். பழஞ்சோற்றை சில பகுதிகளில் ‘பழைய சாதம்’ என்று கூறுவர். கேலியாக சிலர் ‘ஐஸ் பிரியாணி’ என்றும் கூட கூறுவதுண்டு. அந்தப் பழஞ்சோறு அப்படியே இருக்கும் வரை அதைச் சீண்ட ஆள் இருக்காது.
ஆனால், அதைக் கையிட்டுப் பிசைந்து, தேவைக்கு உப்பு போட்டு, கொஞ்சம் சிறு வெங்காயம், கொஞ்சம் பச்சை மிளகாய், சிறிதளவு அடை ஊறுகாய் போட்டு, (எலுமிச்சைப் பழத்தை நான்காகப் பிளந்து, உப்பில் ஊறப்போட்டு, சில மாதங்கள் கழிந்த பிறகு எடுத்துப் பயன்படுத்தப்படுவதே அடை ஊறுகாய்) சிறிதளவு கெட்டித் தயிர் ஊற்றிப் பிசைந்த பிறகுதானே பார்க்க வேண்டும்? நேரம் செலவழித்து, அவதிப்பட்டுப் பிசைந்தவருக்கு ஒரு பிடி பழஞ்சோறு கூட இருக்காது.
அத்தனை சுவை மிக்கது அது! இடித்த மாசி அல்லது சுட்ட சாளைக் கருவாடு அல்லது அரைத்த துவையலையும், பிசைந்த இந்தப் பழஞ்சோற்றையும் ஒரு சேர உண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் மகிமை.
மட்டன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை, ஃப்ரைட் ரைஸ், வெஜிட்டபிள் குஸ்கா இப்படி எதை வேண்டுமானாலும் அடுக்கி வைத்து, இந்தப் பழஞ்சோற்றையும் - அதன் துணை உணவுகளையும் மறுபுறம் வைத்துப் பார்த்தால், சுட்டெரிக்கும் இந்தக் கோடை காலத்தில் எது காலியாகும் என்பதைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.
நேற்று மிஞ்சிய சோறு... தேவைக்குப் போக மீதமிருந்த - காய வைத்து கருவாடாக்கப்பட்ட சாளை மீன்... இவற்றுக்கு என்ன செலவு வந்து விடப்போகிறது?
இத்தனை எளிதில், இவ்வளவு சுவையான உணவு வகைகளை மனமகிழ்வோடு உண்ண முடிந்தும், ஏன் யாரும் அதைச் செய்வதில்லை என்று கேட்டால், இந்தக் கட்டுரையின் துவக்கத்தில், 10 வயது பெண் மகள் கேட்டாளே அதற்கேற்பவே இன்றிருக்கும் எல்லா வயதுப் பெண்களும் செயல்படும் நிலை.
“ஹூம்... ஏதோ கதை கேட்ட மாதிரி இருக்கு” என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? ஆம்! அப்படித்தான் மாறிப்போனது நமது வாழ்க்கை முறை.
ஊரில் இருப்பதில் சுவை கண்ட சில ஆண்கள், தமது ஆவலைத் தீர்க்க அவ்வப்போது தன் சொந்தக் கைத்திறனில் - மனைவிக்கு உதவியாக இப்படி மாசி இடித்தால், தன் பழக்கத்தை மறந்த மனைவியும் கூட இருந்து உண்ணும் நிலையாவது இன்றளவும் சில வீடுகளில் உள்ளனவே என்று ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.
“நாங்களும் மாசியெல்லாம் சாப்பிடத்தான் செய்றோம்...” என்று சொல்வோரும் உண்டு. ஆம்! குளிர்பதனப் பெட்டியில் பல வாரங்களாகப் பாதுகாக்கப்பட்ட (?) மாசி, தேங்காய், உறித்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாயுடன் தேவையான இதர பொருட்களையும் எலக்ட்ரிக் க்ரைண்டரில் இட்டு, ஸ்விட்சைத் தட்டி, இருபது விநாடிகளில் பொடியான மாசியை - இதுவே போதும் என்று சாப்பிடுவோரும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் சுவை???
இளசு இளசுதான்! கிழடு கிழடுதான்!!
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் வீடுகளிலிருந்த புகைக்கூடு, அம்மி, உரல் - உலக்கை, அரிசி மாவு திருகை, விறகு அடுப்பு, பனை நார் கொண்டு வேயப்பட்ட கட்டில், தென்னங்கீற்று கொண்டு கட்டமைக்கப்பட்ட குடிசை, களிமண்ணால் செய்யப்பட்ட பல வடிவ மண் பாண்டங்கள், கிணற்றில் நீர் இறைக்கும் தலா, இட்லிக்கு மாவு அரைக்கும் ஆட்டு உரல்... இன்னும் பல!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவர்களை பாடம் செய்து எகிப்து நாட்டில் பிரமிடு கட்டி பாதுகாத்து வருவது போல - மேற்குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இன்னும் சில ஆண்டுகளில் புராதனப் பொருட்களாக அருங்காட்சியகங்களில் அணிவகுக்கப் போகின்றன. அதன் துவக்கத்தை இப்போதே நாம் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.
உடல் உழைப்புக்கு அஞ்சி, இயற்கையை விட்டும் நீண்ட தொலைவிலிருப்பதால் நமக்கு வியர்வை வெளியாவதேயில்லை. ‘அம்மா அல்லது அய்யாவின் ஆசி’யில் சிறிது நேரம் மின் விசிறி ஓடாது போனாலும் இருக்கவே இருக்கு இன்வெர்ட்டர். தன்னையும் மீறி வெளியாகும் வியர்வையும் இப்படித்தான் தடுக்கப்படுகிறது.
நாம் சாப்பிடும் உணவு மற்றும் குடி பொருட்கள் - மலம், சிறுநீர், வியர்வை என பல வடிவங்களில் கழிவுகளாக வெளியேற வேண்டும் என்பது நம்மைப் படைத்த இறைவன் நம் உடலுக்கு விதித்த நிகழ்முறை.
பாரம்பரியமாக நடைமுறையிலிருந்த நல்ல பழக்கவழக்கத்தையெல்லாம் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிய பிறகு,
“அந்தக் காலத்துல இப்படியா தெருவுக்கு ஒரு ஆஸ்பத்திரி இருந்திச்சி...?”
“உங்க அப்பா திருச்செந்தூர் வரைக்கும் சைக்கிள்லதான் போவாங்க தெரியுமா?”
“நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போது நா ஒவ்வொரு நாளும் ஆட்டு உரல்லதான் இட்லிக்கு அரைப்பேன் தெரியுமா?”
என்று பழங்கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால்...
சர்க்கரை வியாதி,
புற்றுநோய்,
ஒற்றைத் தலைவலி,
மூட்டு வலி,
கை வலி,
கால் வலி,
வாத நோய்,
செரிமானக் கோளாறு,
அடிக்கடி வயிற்று வலி,
நீர்க்கடுப்பு,
இடைவிடாத இருமல்
- இன்னும் எத்தனை நோயை வேண்டுமானாலும் அடுக்கிக் கொள்வோம்...
எதுவுமே குணமாகப் போவதில்லை! |