இன்று நாம் என்னவாக இருக்கிறோம்...? இதற்கு முன்பு –நமது குழந்தைப் பருவத்தில் –சிறு பிராயத்தில் –மாணவப் பொழுதுகளில் வாலிப வயதில் என்னவாக இருந்தோம்...? எதை சாப்பிட்டோம் ...? என்ன உணர்ந்தோம் ...? எதைக் கற்றோம் ...? எங்கே நமது பொழுதுகள் கழிந்தன ...? அப்போது நமது ஆசைகள் என்னவாக இருந்தன ...? தேவைகள் நிறைவேறியதா ...? நமது பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு நண்பர்களுக்கு உண்மையாக நடந்துகொண்டோமா ...? நமது துஷ்டத்தனங்கள், நடவடிக்கைகள் பிறரை பாதிக்கக்கூடியவையாக இருந்ததா ...? என்றெல்லாம் இன்று யோசித்துப் பார்க்கும்போது ஐம்பதைத் தாண்டிய என்போன்றவர்களிடமிருந்து ஒரு பெருமூச்சும், நிறைய புன்சிரிப்பும் மனதுக்குள் வழிந்தோடுகிறது.
நமது குழந்தைப் பருவத்தில் ஆடையின்றி எடுக்கப்பட்ட பழைய கருப்பு –வெள்ளை புகைப்படத்தை இன்று பார்க்கும் போது நம்மையறியாமலே நம்மிடம் ஒரு குறுகுறுப்பான வெட்க உணர்வு சுழித்தோடுமல்லவா ..!அதுபோன்று சுழித்தோடும் நினைவுகள் நம் எல்லோரிடமும் நிறைய இருக்கின்றன.
இன்றைய நமது வாழ்க்கையும் , இப்போது நமக்கிருக்கும் சமூக அந்தஸ்த்தையும் ஒருகணம் மறந்து, நமது குழந்தைகள் நம்மைப்பார்த்து நகைப்பார்களோ ..என்ற சிரமம் துறந்து நாம் கடந்துவந்த அந்த பழைய உலகில் கொஞ்சம் சஞ்சரிப்போமானால் ஆஹா ....அது ஒரு அற்புதமான உலகம் ..!சென்றகாலம் பழம்பஞ்சாங்கம் பேசுவது எனக்கு எப்போதுமே பிடிக்காது. அன்று நடந்ததெல்லாம் நல்லதுமல்ல. இன்று நடப்பதெல்லாம் கெட்டதும்அல்ல. ஆனால் நெஞ்சம் தாங்கும் இனிய நினைவுகள் எல்லோருக்குமே பொதுவானது .அவை பழம்பஞ்சாங்கம் என்ற பொருளுக்குள் அடங்காது.
இப்போது விளையாட்டுக்கள் வியாபாரமாகவும், விவகாரமாகவும் குறுகி விட்டன. விளையாட்டில் விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இப்போது விளையாடுகிறார்கள். ஆனால் அறுபது , எழுபதுகளில் –எனது மாணவப் பொழுதுகளில் பிடிக்கிறதோ ,இல்லையோ ..எல்லோரும் விளையாடுவார்கள். ஏனெனில் வேறு பொழுதுபோக்குகள் அப்போது இல்லை. விளையாடி, விளையாடி உடல் களைத்துப் போனாலும் விளையாட்டு குறித்த சுவாரஸ்யமான பேச்சுக்கள் தொடரும். இதற்க்கு அடுத்தபடியாக அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாதான்.
இப்போதும் கூட சினிமா கவர்ச்சி நிறைந்த பொழுதுபோக்குதான். இன்று சினிமாவோடு இன்னும் நிறைய பொழுதுபோக்குகள் வந்துவிட்டன. நிறைய சினிமா தியேட்டர்கள் இருந்த இடம் தெரியவில்லை. அவைகள் இருந்த இடத்தில் இன்று பெரிய பெரிய வணிகவளாகங்களும், திருமண மண்டபங்களும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தில் மக்களின் ஆராதனைக்குரிய இடமாகவும், பொழுதுபோக்குத் தளமாகவும் இருந்த இடங்கள் இன்று விருந்து சாப்பிடும் இடமாகவும், வியாபாரம் பேசும் தளமாகவும் மாறிவிட்டன.
அப்போது வேறு எங்காவது பெற்றோர்களுடன் போகும்போது எங்காவது சினிமாத் தியேட்டர் கண்ணில்பட்டால் அது கண்ணிலிருந்து மறையும்வரை அதையே திரும்பித் திரும்பி பார்க்கும் அளவுக்கு அது ஒரு மந்திர ஸ்தலமாக அமைந்து கிடந்தது. எந்த தியேட்டரில் என்ன படம் , எத்தனை நாள் ஓடியது ..? அதன் வசூல் என்ன ..?என்ற தகவல்களை எல்லாம் விரல்நுனியில் வைத்திருக்கும் பெரியஅண்ணன்கள் எங்களால் மரியாதையோடு கவனிக்கப்பட்டார்கள். சினிமா பார்த்துவிட்டு எங்களிடம் ரீல் ஓட்டுவதும் அவர்கள்தான். நமக்கு எங்கே அந்த சினிமாவை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது ..?என்ற தவிப்பில் வாயில் ஈ நுழைவது தெரியாமல் அதை கேட்டுக்கொண்டிருக்கும் அப்பாவிச்சிறுவர்கள் நாங்கள்.
எம் ஜி ஆர் –சிவாஜிக்கு மட்டுமல்ல ...நம்பியாருக்கும், ரவிச்சந்திரனுக்கும் கூட ரசிகர்கள் இருந்தார்கள். “ரிவால்வா ரீட்டா “ என்ற ஒருபடம் வந்தது.ரிவால்வர் என்றாலே என்ன என்று எனக்கு அப்போது தெரியாது. அந்த படத்தைப் பார்த்துவிட்டு வந்த அந்த நண்பருக்கும் தெரியாது. என்னமோ ...டிஷ்யூம் ..டிஷ்யூம் என்று கதை விட்டுக்கொண்டிருந்தார். நாங்களும் கேட்டுக்கொண்டிருந்தோம். அடுத்தநாள்தான் தெரிந்தது –அவர் அந்த படத்தைப் பார்க்காமலே எங்களிடம் கதையளந்தது. அவரது இன்னொரு நண்பர் மூலம் அதுஎங்களுக்குத் தெரியவந்தது.
“உலகம் சுற்றும் வாலிபன் “படத்தின் டைட்டில் கார்டில் பெயர் விழும்போது என்னமாதிரி இசை ஒலிக்கும் என்பதை வாயாலேயே இசைத்துக் காண்பித்தான் ஒரு பள்ளி நண்பன். நிஜமாகவே அந்தப் படத்தை பார்க்க நேரிட்டபோது அதே இசையே ஒலித்தது. எவ்வளவு கூர்மையாக கவனித்திருக்கிறான் பாருங்கள்.
முப்பத்தாறு பைசா மட்டுமே தரை டிக்கெட். சோபா, பெஞ்ச் எனில் இரண்டு ரூபாய். ஐந்துபைசா, பத்து பைசா சில்லறைகளை ஜேபியில் போட்டுக்கொண்டு ஓடுகிறபோது சில்லறை தெறித்து வெளியே விழாமல் இருக்க ஜேபியைப்பிடித்தபடியே ஓடுவோம். வசதி ஆறுமுகநேரி தங்கம் தியேட்டர்தான். ஏனெனில் அங்குதான் நடந்துபோய்விட முடியும். திருச்செந்தூர் எனில் பஸ்சுக்கோ, அல்லது சைக்கிளுக்கோ கூடுதல் காசுவேண்டும்.
கடும் வெய்யிலில் நமதூர் ஒட்டைக்கோவில் பக்கமாக நடந்து சென்று அப்படியே காட்டுப்பாதை வழியே பேயன்விளை வந்துவிடுவோம். அங்கெ வட்டமாக ஒரு குடிநீர்த் தொட்டி இருக்கும் .அதில் தண்ணீர் பருகிவிட்டு முகம் கழுகி விட்டு மறுபடியும் ஓட்டம். மேட்னி ஷோ தொடங்க அரைமணி நேரத்துக்கு முன்பே தியேட்டரில் ஆஜர். தரைடிக்கெட்டுக்குத்தான் கூட்டம் அம்மும். ஒரு ஆள் போகும்படிதான் நீண்டவழி அமைத்திருப்பார்கள்.
பாதையின் முடிவில் டிக்கெட்கவுண்டர் இருக்கும். கூட்ட நெரிசலில் துட்டு கீழே விழுந்துவிட்டால் அவ்வளவுதான். அந்த இழப்பைத் தாங்கக்கூடிய சக்தி ஏது...? எனவே உள்ளங்கையின் வியர்வை பிசுபிசுப்பில் சில்லறைகள் பத்திரமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை எனில் ஜனநெரிசல் இன்னும் அதிகமாக இருக்கும். உடல் வலிமையுள்ள சில கட்டுமஸ்தான்கள் எதைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். முன்னே நிற்கும் வரிசையினரின் தோள்மீதும், தலை மீதும் கால்வைத்து பயணம் செய்து கரெக்டாக டிக்கெட் கவுண்டர் முன்பு குதித்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்றுவிடுவார்கள். பின்னே ... வெறுமே சினிமா பார்ப்பது மட்டுமா சுவாரஸ்யம்...இது போன்று “வீரதீர “செயல்களில் ஈடுபட்டு சினிமா பார்ப்பதில்தான் நிஜமான சுவாரஸ்யம் அடங்கியிருக்கிறது.
எம் ஜி ஆரின் ‘நேற்று இன்று நாளை “ படம் வெளியானபோது இப்படித்தான் நடந்தது. முதல் இரண்டு நாட்களும் கடுமையான கூட்டம். மூன்றாவது நாள் சென்றேன். அப்போதும் கூட்ட நெரிசல் குறையவில்லை. முன்னும் பின்னுமாக இடித்துத் தள்ளுகிறார்கள். அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவன். இன்னும் இரண்டு நாட்களில் அரையாண்டுத் தேர்வுகள் துவங்க இருக்கின்றன. டிக்கெட் தீர்ந்துவிட்டது என்று சொல்லி கவுண்டர்களை மூடிவிட்டுச் சென்றுவிட்டார்கள். .அப்போதும் கூட்ட நெரிசல் கலையவில்லை. அடுத்த ஷோ வுக்கு அப்படியே நிற்கிறார்கள். நான் நடுவே மாட்டிக்கொண்டேன். என்னைப் ஒன்ற சிறுவர்களின் கூக்குரல் வேதனையில் கதறுகிறது. பிறகு போலீஸ் வந்து கூட்டத்தைக் கலைத்தார்கள்.
வகுப்பறையை கட் அடித்துவிட்டு சினிமாவுக்குச் செல்லாதவர்கள் நம்மில் அனேகமாக எவரும் இருக்கமுடியாது. அது இன்றும் கூட மாணவர்களிடம் தொடரும் பழக்கம்தான். அப்படி நான் சென்ற சினிமாக்கள் ஏராளம். “எங்கள் தங்க ராஜா “மேயர் மீனாட்சி “ “திருடி “ “வரவேற்பு “ இன்னும் ஏராளமான படங்கள். நான் சென்ட்ரல்பள்ளியில் பயிலும்போது அன்று அப்பள்ளியின் தலைமையாசிரியாராக இருந்த திரு. ஜான்துரைப் பாண்டியன் நமதூர் ரெயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் இருந்த ஒரு பேட்மிண்டன் கிரவுண்டில் மாலை வேளைகளில் அவரது நண்பர்களுடன் பேட்மிண்டன் விளையாடிக்கொண்டிருப்பார். சினிமா முடிந்துவரும்போது அந்த கிரவுண்டின் வேலிவழியே எட்டிப்பார்த்து “ சார்...சார் ..” என்று கூச்சலிடுவோம். அவரும் சிரித்தபடி “ வீட்டுக்குப் போங்கலே..” என்பார். மறுநாள் வகுப்பறையில் “ நேற்று சினிமாவுக்குப் போய் கண்ணைக் கழுவியது எவன்லே ..?” என்பார். வேறு ஒன்றும் சொல்ல மாட்டார்.
சினிமா பார்ப்பது எனபது வெறும் திரைப்படத்தோடு அடங்காது. அதற்க்கு பஜாரில் ஒட்டிய திரைப்பட போஸ்டரில் ஆரம்பித்து சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்புவது வரையில் அமையும் வரிசைகிரமமானதொன்று. எம் ஜி ஆரின் “ இதயவீணை “பட போஸ்டரில் எம் ஜி ஆர் ஒரு சமைத்த கோழியின் தொடைப்பகுதியை சாப்பிட்டவாறு இருப்பார். சத்தியமாகச் சொல்கிறேன் ... கோழியின் தொடைப்பகுதி அவ்வளவு ருசியாக இருக்கும் எனபது அதன் பிறகே எனக்குத் தெரியும். இன்று நினைக்கும்போது இது கேவலமாகத் தெரியலாம். ஆனால் ஒருவனின் ஆளுமைகள் அவனைச் சுற்றியிருக்கும் சூழல்களால்தான் உருவாக்கப்படுகின்றன. அதில் அன்று பெரும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்த சினிமாவும் ஓன்று எனச் சொல்லிக்கொள்வதில் எனக்கு ஒன்றும் வெட்கமில்லை.
வீட்டின் அனுமதி பெற்று சினிமா பார்ப்பதென்பது வெகு அபூர்வம். அது இரண்டு பெருநாட்களின் போதுமட்டும்தான் அமையும். அப்போதும் கூட கடற்கரைக்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு சினிமாவுக்கு போவதுதான் வழக்கம். அப்படிப் பார்த்த ஒரு சினிமா “ ராஜராஜ சோழன் “ தமிழின் முதல் 70 M M (சினிமா ஸ்கோப்) திரைப்படம். ஆறுமுகநேரியில் போட்டிருந்தார்கள். இங்கு எல்லாம் 35 M M திரைதான். எனவே அசல் திரைக்கு மேலே வேட்டிபோல ஒன்றைக்கட்டி “பெரிய திரை “யை உருவாக்கியிருந்தார்கள். படம் போட்டவுடன் கீழே இழுத்துக் கட்டியிருந்த திரையின் ஒருமுனை அவிழ்ந்து திரை காற்றில் பறந்தது. ரசிகர்கள் கூச்சலிட்டார்கள். படம் நிறுத்தப்பட்டது. சிரிப்பும், ஆரவாரமும் இன்னொருபுறம் குமிழியிட்டன.
டூரிங் டாக்கீஸ் (ஓலைக்கொட்டகை) அனுபவம் இன்னும் வித்தியாசமானது. தரை டிக்கெட் எனபது அங்கு வெறும் மண்ணில் அமர்வதுதான். நமது ரசிகப்பெருமக்கள் தரையில் அசிங்கம் செய்து வைத்திருப்பார்கள். வெற்றிலைச்சாறு கலந்த எச்சில், சிறுநீர் கூட சமயங்களில் அருகே கழித்து வைத்திருப்பார்கள். நாம்தான் ஜாக்கிரதையாக அமரவேண்டும். தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே மாற்றி அமைத்த “ 16 வயதினிலே “ தகழியின் “ செம்மீன் “ இன்னும் பல வெற்றிப்படங்களை வீரபாண்டியன்பட்டணம் அருகில் (இன்றைய கருணாலயா இருக்கும் இடத்தின் நேர்எதிரே) அமைந்திருந்த பாத்திமா டூரிங் டாக்கீசில்தான் பார்த்தேன்.
டூரிங்டாக்கீஸ் குறித்து எழுதும்போது இங்கு ஒன்றைக்குறித்து எழுதாவிட்டால் அது முழுமை பெறாது. 1978 ஆம் ஆண்டு என நினைக்கிறேன். தூத்துக்குடி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் மதியம் மேட்னிஷோ பார்த்துக்கொண்டிருந்த ஒரு டூரிங் டாக்கீஸ் திடீரென தீ பற்றி எரிந்தது. கொட்டகை முழுக்க ஆணும், பெண்ணும் குழந்தைகளுமாக கிட்டத்தட்ட 150 ம் மேற்பட்டோர் தீயில் சிக்கி சாம்பலானார்கள். தமிழகத்தையே அதிரவைத்த சம்பவம் அது. முதல்வர் எம் ஜி ஆர் உடனே ஸ்தலத்துக்கு வந்தார். தீயில் ஆடைகளை இழந்த சில பெண்கள் சுற்றிலும் நிற்கும் ஆண்களைக் காண வெட்கப்பட்டு மறுபடியும் தீயிலே விழுந்து சாம்பலானார்கள் என்றும் சொல்லப்பட்டது. அதிலிருந்து டூரிங்டாக்கீசுக்கு தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் ஒரு டூரிங் டாக்கீஸ் கூட இல்லை.
இன்னும் நிறைய எழுதலாம். சினிமா குறித்த கதைகளை சும்மா எழுதிப்பார்க்கும் ஒன்றுமட்டுமே அல்ல இது. சிறுவயதிலிருந்து ஒருவனின் ஆளுமை எப்படி வளர்த்தெடுக்கப்படுகிறது என்பதையும் சொல்லும் ஒரு சிறு குறிப்பாகவும் இதைப்பார்க்கவேண்டும் என வாசகபெருமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
கிட்டத்தட்ட 90 களின் ஆரம்பம் வரை அவ்வப்போது சினிமா பார்க்கும் பழக்கம் என்னிடமிருந்தது. பிறகு இலக்கிய ரீதியான சிந்தனைகள், அது தொடர்பான கற்றல்கள், தொடர்ந்த வாசிப்பு ,சிற்றிதழ்களின் அறிமுகம் இவைபோன்றவைகள் சினிமாவை மெல்ல மெல்ல என்னிடமிருந்து அப்புறப்படுத்தின. இப்போதும் கூட நல்ல நல்ல சினிமா விமர்சனங்களை இதழ்களில் வாசிக்கும்போது அதைப் பார்க்கலாமே என்று தோன்றும். தோன்றுவதோடு சரி. எந்த சினிமாவுக்கும் நான் சென்றதில்லை.
ஒரு மூன்று மணி நேரத்தை வெறும் இருட்டு அரங்கத்தில் அமர்ந்து கழிக்க மனது இடம் தருவதில்லை. இதனால் உண்மையாகவே அருமையான திரைப்படங்களையும், திறமையான, புதிய இயக்குனர்களால் எடுக்கப்படும் குறும்படங்களையும் பார்க்கும் வாய்ப்புக்களையும் தெரிந்தே தவற விடுகிறேன்.
சினிமா என்னும் சிறுபடகில் சவாரி செய்து பொழுதுகளைக் கடந்த கதைதான் இது. இந்தக்கதை அனுபவம் இல்லாதவர்கள் நம்மில் எவருமே இருக்கமாட்டார்கள். ஒவ்வொருவருள்ளும் ஒவ்வொரு கதை நிச்சயமிருக்கும்.
ஒரேகாலத்தில் வாழ நேர்ந்த மனிதர்களின் கதைகளில் பேரளவு வித்தியாசங்கள் இருக்க சாத்தியமில்லை. |