மஃரிப் பாங்கு சொல்வதற்கு இன்னும் 12 நிமிடங்கள்தான் இருந்தது. ஆளைக்காணோமே என மனம் பரபரத்துக்
கொண்டிருக்கையில் வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. திறந்து பார்த்தால் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த
நண்பன் நின்று கொண்டிருந்தான்.
சிரித்துக்கொண்டே ஸலாம் சொன்ன அவன் தனது தாமத வருகைக்கான காரணத்தையும் கூறி வீட்டிற்குள்
நுழைந்தான்.
சரி சரி கையை கழுவிட்டு வா, வாங்கு சொல்றதுக்கு 06 நிமிஷந்தான் ஈக்குது என்றேன்.
கையை கழுவி விட்டு உணவு மேசைக்கு முன் வந்து அமர்ந்தான்.
அது ஒரு நோன்பு மாதம். நோன்பை திறந்தாகி விட்டது. அவன் தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த
பழத்துண்டங்களை மட்டுமே எடுத்து தின்று கொண்டிருந்தான்.
கஞ்சி, கறி சமூசா, ரோல்ஸ், கட்லட், தேயிலை, பழச்சாறு, ஃபிர்னி என பரத்தி வைக்கப்பட்டிருந்த வலந்துகளை
அவனருகில் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைத்தேன். மச்சான் இது என்னா ரெஸ்டாரண்ட் மாதிரிலோ
இருக்குது என கிண்டலடித்தான்.
தின்னு என்றேன். சாப்டுவேன் ஆனால் இப்பம் இல்ல அது வறய்க்கும் நீ பொறுப்பியா என புதிர் போட்டான்.
மச்சான் . ஏண்டா இந்த நேரத்துல கொழப்புறே என்னத்துக்குடா இப்படி சுத்தி வளய்க்குறே என்ற என் சலிப்பிற்கு
அவன் நீண்ட விளக்கம் ஒன்றை தந்தான்.
மச்சான்.. நோம்பு புடிக்கும்போது உடம்புல உள்ள நச்சுத்தன்மைலாம் வெளியேறுது என அவன் சொன்னவுடன்
எது வழியா எந்த டைம்ல எப்படி வெளியேறுது என்ற என்னுடைய கிண்டல் கேள்விக்கும் சேர்த்தே அவன் பதில்
சொன்னான்.
நாமோ நோம்பு தொறக்கிற சமயத்துல பழோம், தண்ணி , பால் , கஞ்சி இதுல எத வேணா சாப்டலாம். ஏண்டா
பகல் முழுசா உடம்புல இருந்து சேகரமான வெஷம்லாம் செரிமான உறுப்புலதான் தங்கி ஈக்கும்.
ரொம்ப நேர பட்டினிக்கு பொறவு பழம், தண்ணி , பால் , கஞ்சி போல உள்ள எயற்கையான உணவு உள்ளக்க
போகும்போது நம்ப கொடல் ஈஸியாக நச்சுத்தன்மைய வெளிய தள்ளீரும். நம்ப ஊட்டுல ஆசயா
செஞ்சதுலோண்டு பொரிச்சது வறுத்ததய்லாம் உள்ள தள்ளி கதவ சாத்துனா கொடல் ஜாம் ஆயீரும். அப்புறம்
வெஷம் வெளிய எறங்காது. எனக்கென்னாண்டு அங்கயே செம்மீரும்.
நான் பொரிச்சதயும் வறுத்ததயும் திங்க வாணாண்டு ஒரேயடியா சொல்லலப்பா. நாஞ் சொன்னேன்டு இங்க
இருக்கிறதய்லாம் ஒம் பொண்டாட்டி அள்ளீட்டு போய்டாம. இதய்லாம் நோம்பு தொறந்து ஒன்றர மணி தேரம்
கழிச்சி அளவா சாப்புடலாம்.
ஒரு வழியா நண்பனுக்கான இஃப்தார் உபசரிப்பு முடிவடைந்து அவன் கிளம்பி விட்டான். உணவு தட்டங்களாலும்
மிச்சங்களாலும் நிரம்பி இருந்த மேசையை மனைவி தூய்மைப்படுத்தினாள். நான் அப்படியே சேரில்
அமர்ந்திருந்தேன். என் முன் காலியாக இருந்த மேசை போலவே என் மனதிலிருந்த உணவு , நோன்பு
தொடர்பான முன் கருத்துக்களில் நிறைய வெறுமையாகி விட்டிருந்தன.
நண்பனின் சொற்களில் இருந்து தெறித்த சுடர் என்னை அலைக்கழித்து கொண்டிருந்தது. அவனிடம் இது
தொடர்பாக நிறைய உரையாட வேண்டும் போல இருந்தது. செல் போனை எடுத்தேன். அழைத்தேன். எடுத்தான்.
மச்சான் தராவியா முடிஞ்ச பொறவு பத்தர மணி கிட்ட கடக்கரைக்கு போவமா என்றேன். சம்மதித்தான்.
நான் போகும் முன்னரே அவன் கடற்கரையில் விளக்கு கோபுரத்திலிருந்து கொஞ்சம் தொலைவில்
தொப்பியையும் சட்டையையும் கழற்றி பக்கத்தில் வைத்து விட்டு பனியனுடன் மல்லாக்க படுத்திருந்தான்.
கடும் கோடைக்காலமாக இருந்ததால் நிறைய பேர் கடற்கரை மணலில் ஏற்கனவே சாய்ந்து கிடந்தனர்.
அஸ்ஸலாமு அலய்க்கும் மச்சான்! இப்பிடி ஒன்ன மாதிரி அவ்வளோ பேரும் பீச்சுக்கு வந்துட்டா ஏசீலாம்
எப்டீடா விக்கும் என்று கேட்டபடியே அவனருகில் போய் அமர்ந்தேன்.
வ அலய்க்குமுஸ்ஸலாம் வா வா என கண்களை திறந்த படியே பதில் சொன்னான்.
சொகுசுக்கும் வசதிக்குமான நம்மட ஏக்கத்த ஏசீ கம்பனிக்காரன் முதலாக்குறான். வெப்ப காலம் சில மாதங்களல
முடிஞ்சிரும். ஆனா வருஷம் புல்லா எல்லாரும் ஏசீ வச்சா வெளி வெப்பம் மொத்தமா உயருமேண்டு நாம
சிந்திக்கிறதில்ல.
சரி மச்சான் நான் வந்த விஷயம் ஏசீ பத்தி பேச இல்ல. நோம்பு இஃப்தார பத்தி நீ சொன்னத அச போட்டு
பாத்தன்டா. அதப்பத்தி பேசத்தான் உன்ன கூப்பிட்டன் என நான் இடை மறித்தேன்.
கல்கத்தா . டில்லி , பம்பாய்லலாம் ரம்ஜான் பஜார்ண்டே தனியா இருக்குதே. அதுல வெதம் வெதமான
ஈத்தப்பழம் , பால் பசு நெய்ல செஞ்ச இனிப்பு அய்ட்டம் , இம்போர்ட்ட்ட் ஷர்ட் , சின்ன புள்ளைளுக்கான
உடுப்புண்டு கள கட்டுதே.
கேரளால பல எடங்கள்ல நோம்பு தொறக்க பரோட்டா , பத்திரி , வறுத்த கோழி , கப்பக்கிழங்கு மசியல் ,
தோசை , மாட்டுக் கறி ரோஸ்ட்ண்டு வெளுத்துக்கட்டுறாங்களே. நம்ப மெற்ராஸ் மண்ணடிலயும் குமியல்
குமியலா வடை , சம்சா , கட்லட் பொறிச்சு வச்சிருக்குதே. கடப்பாசி , கஞ்சியும் சேத்து விக்கிறாங்களே . ஏன்
நம்மூர்ல மட்டும் கொறவாவா இருக்குது . சிலோன்லயும் நோம்புல வெளுத்துதான் கட்டுறாங்க ? ஒலகமே
இப்படி ஈக்கும்போது நாம மட்டும் மாற்ரது ஈஸி இல்லதானே என்றேன்.
சரி முடிச்சிட்டியா என மூச்சு விட்டபடியே கேட்ட நண்பன் நீ பதில சொல்லீட்ட இப்போ நான் கேள்விய
கேக்கட்டா என்றான். இது என்னா தல குப்புறா இருக்குது. என்னதோ கேளுப்பா என்றேன்.
சிலோன் , கேரளா , தமில் நாட்டுல ஆஸ்பத்திரிய்லயும் மருந்துக்கடய்கள்லயும் போய் பாரு. புர்க்காவும்
தொப்பியும் போட்ட கூட்டந்தான் ஜாஸ்தியா இருக்கும். ஏன் நம்ம ஜனங்க இவ்வளவோ பேர் இங்கேங்கிற
கேள்விக்குத்தான் நீ மொதல்லேயே பதில் சொல்லீட்ட. இப்போம் நம்மட தீனிக்கும் நோய்க்கும் உள்ள
கனெக்சன புரிஞ்ச்சுக்கிட்டீயா.
ரமழான் என்பது வருஷத்துல ஒரு தடவ வர்ற விஷேஷ காலம். இதுலயும் டைட் பண்ணுனா எப்படிடா என
நான் அவனை இடைமறித்தேன். ஏம்பா ஒன்னும் தெரியாத மாதிரி நீனும் பேசுறியே . வருஷம் ஃபுல்லா உங்றது
திங்றதுல ஏதும் கொறவு வய்க்க்றோமா?
இவன இப்படியே உட்டா சரிவர மாட்டான்னுதான் இறைவன் வருஷத்துக்கு ஒரு தடவை நம்பளுக்கு பிரேக்
போடுறான்.
ஆனா நாம என்னண்டா பகல்ல கிடந்த பட்டினிக்கு பழி வாங்குற மாதிரி இஃப்தார்லயும் தராவீஹுக்கு பொறவும்
ஸஹர்லயும் வெளுத்து வாங்கீர்ரோம். கறியும் , மீனும் இல்லாத ஸஹர்ண்டு ஒன்னு நம்மட்ட இருக்குதா ?
நோம்பு பகல்ல நம்ம உடம்பு காத்து போல லையிட் வெயிட்டா இருக்குது .ஆனா ராத்திரி மாட்டு மாட்டுனு
மாட்டுறதுல மஃரிப் , இஷா , தராவியா சுபுகு தொழுவய்ல குனிய்ரதுக்கும் நிமிர்ரதுக்கும் எப்டி மூச்சு முட்டும்
தெரியுமா ?
அது மட்டுமில்லே எளிய மக்கள்ட வேதனய கஷ்டத்த நாமோ ஒணர்ரதுக்குத்தான் நோம்புண்டு நம்புறோம்
சொல்றோம். ஆனா நோம்பு முடிஞ்ச பொறவு நம்ம ஒடம்புட எட கூடவும் செய்யுதே.
நோம்பு மாசத்துல நம்ம வீட்டு செலவு ஏன் பல மடங்காவுது. சாப்பாடுதான் செலவுகளை கூட்டுது. இதே
சாப்பாட்டாலதான் நோம்புட நோக்கங்களும் அடி வாங்குது. தாறுமாறான வாழ்க்க முறயாலயும் உணவாலயும்
நமக்கு விடிவா வந்த ரமழானையும் சரியான பயன்படுத்த தவறிர்ரோம்.
ஒரு பெரியவர் சொன்ன கதையை சொல்றேன் கேள்.
ஒரு சமயம் ரயிலில் நடுத்தர வயதுக்காரர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் முதிய
பாதிரியார் ஒருவரும் பயணம் செய்து கொண்டிருந்தார்.
கிட்டதட்ட ஒரு நாள் வரை நீடித்த பயணம் அது. அந்த பயணத்தில் அந்த பாதிரியார் உணவு எதுவும்
சாப்பிடவில்லை. வெறும் நீரை மட்டுமே அருந்தினார். இதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்த அந்த
நடுத்தர வயதுக்காரர் பாதிரியாரிடம் உணவுண்ணாமைக்கான காரணத்தை கேட்டார்.
அதற்கு அந்த பாதிரி சொன்னாராம். நான் பயணம் செய்யாத நாட்களில் உணவை உண்ணத்தான் செய்கின்றேன்.
பயண நாட்களில் உணவை தவிர்த்து விடுவதற்கான காரணம். அதில் மிஞ்சும் பணத்தை அனாதைகள்
நிலையத்திற்கு கொடையாக அளித்து விடுவேன். எனது உணவில் என்றைக்காவது யாருக்காவது பங்கு இருக்க
வேண்டுமே என்றாராம்.
தஹஜ்ஜுத் நேர தொழுவையும் அதுல குரான் ஓதுறதும் வாக்கையும் மனசையும் ஒன்னு சேக்கும்ண்டு குரான்ல
இருக்குது. பகல்ல நோன்பு மனதையும் உடலையும் சுத்தமாக்குது. ரமழான் மாச தர்மம் பல மடங்கு
நன்மையையும் மன்னிப்பையும் கொண்டு வருது. வசதி உள்ளவங்க வீசுற காத்தப்போல தர்மம் செய்வாங்க.
இல்லாதவங்க உங்கிறதலயும் உடுத்துறதிலயும் செலவை குறைத்துத்தான் தர்மம் செய்ய வேண்டியீக்குது.
நாம எங்கயும் மிஸ்ஸாவிடக்கூடாதுண்டுதான் நோம்பு தொழுவை தர்மம் தஹஜ்ஜூத் குரான் திலாவத்
இஸ்திஃபார் திக்ர் என எல்லா அமலையும் ஒரே நேர் கோட்டில் இணைத்து synchronise செய்துள்ளான்
இறைவன். சிங்க்ரனைஸ் ன்டா என்ன தெரியுமா ? ஒன்றை மற்றொன்றோடு ஒத்திசைந்து செயல்பட
வைக்கிறது.
கடல் அலை போல பெருகி வந்த நண்பனின் சொல் பெருக்கு சட்டென நின்று விட்டது. எங்களுக்கிடையே
கனத்த மௌனம் நிலவியது. வீட்டிற்கு போவதற்காக கிளம்பினோம். அவன் நிதானமாகவும் இலேசாகவும் நடந்து
சென்று கொண்டிருந்தான்.
எதோ சுமையை சுமந்தவனைப்போல நான் அவனுக்கு பின்னால் சென்று கொண்டிருந்தேன்.
|