சினான் ஒரு சுற்றுலா பிரியர். ஒரு முறை அவர் மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் உள்ள ஊர்களுக்கு பயணம் செய்தார். அது கோடை காலம் முடிந்து குற்றால சீசன் துவங்கியிருந்த நேரம். மழை மேகங்கள் மலைகளின் முகட்டைத் தழுவிக் கொஞ்சியபடி நகர்ந்து செல்ல சாரல் அவ்வப்போது உடலை நனைக்க வீசும் தென்றலில் ஒரு சில வினாடிகள் தன்னையே மறந்துபோன சினான் இனி எப்போதும் இங்கேயே தங்கி விட வேண்டியது தான் என தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
சுஹைல் ஒரு தொழிலதிபர். தனது கடைவேலையிலேயே எப்போதும் மூழ்கி கிடப்பவர். ஒரு சிறந்த அறிவாளியும் கூட. இருக்கும் இடத்திலிருந்தே மார்க்கம், உலகம் என அத்தனை விஷயங்களையும் அறிந்திடும் முயற்சியிலேயே இருப்பார். அவர் அவ்வளவாக சுற்றுலா சென்று பழக்கமில்லாதவர். கேட்டால் நான் இருக்குற இடத்தில் இருந்தவாரே ஊட்டி, கொடைக்கானல என் மனதில் கொண்டு வந்து விடுவேன். அங்க போய் அடையும் ஆனந்தத்தை என் உள்ளம் இங்கயே அடைந்து விடும் என்பார்.
சினானும் சுஹைலும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகிறார்கள். மனம் சம்மந்தமான ஒற்றுமைதான் அது. முன்னவர் ஓரிடத்திற்குச் சென்று அந்த சூழலில் அகப்பட்டவராய் தன் மனதை அதன் பால் அலைய விட்டு விடுகிறார். பின்னவரோ இருக்கும் இடத்தையே தன் மனதைக் கொண்டு தான் விரும்பும் சூழலுக்கு மாற்றிக் கொள்கிறார்.
நம் மனம் சக்தி வாய்ந்தது. அது சீராக இருந்தால் உடல் அனைத்துமே சீர் பெற்றிருக்கும். அது கெட்டுப் போய் விட்டால் உடல் முழுதுமே கெட்டுப்போய் விடும். ஒரு ஹதீஸின் வரிகள் இவை.
மனதைச் சீர் படுத்துவதெப்படி.
ஒரு மருத்துவர் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உணவு, உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகளைச் செய்யுமாறு அறிவுறுத்துவதைப் போல உள்ளத்தை ஆரோக்கியமாக (நெஞ்சு வலி வராமல்) வைத்திருக்க தினந்தோரும் சில நிமிடங்கள் நன்றாக நடக்க வேண்டும் என்கிறார்.
திடப்பொருளான இதயத்தை சீராக்குவதற்கு இக்குறிப்புகள் உதவலாம். ஆனால் ஒருவரின் எண்ணத்தைச் சீர்படுத்தி மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேறு பல நற்செயல்களையும் செய்தால் மட்டுமே சாத்தியமாகும். அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்:
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான். (அல் குர்ஆன் 91:8-11)
இவ்வசனங்களில் ஆத்மா எனும் நஃப்ஸ் மனம் சம்பத்தப்பட்டதே.
அதை எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும் என்பதற்கு பின் வரும் வசனம் விளக்கமளிக்கிறது.
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும்,
தொழுது கொண்டும் இருப்பான். (அல் குர்ஆன் 87:14-15)
அல்லாஹ் மேலும் கூறுகிறான்:
الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல் குர்ஆன் 13:28)
உடலின் ஒவ்வொரு அசைவும் மனதுடன் சம்பந்தப்பட்டதே. அண்ணலார் (ஸல்) அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ‘செயல்கள் எல்லாம் எண்ணத்தை அடிப்படையாக கொண்டே அமைகின்றன’ என்றார்கள். (நூல்: புகாரி)
அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த எண்ணம் ஒரு மனிதனைப் புனிதனாகவும் மாற்றுகிறது. அவனைக் கீழ்த்தரமான நிலைக்கும் தள்ளி விடுகிறது.
இறை மருப்புக் கொள்கைவாதியான சிக்மன்ட் ஃப்ராய்ட் மனம் பற்றிய தனது ஆய்வின் முடிவில் ‘செயல்கள் அனைத்தும் ஒருவனது (மனோ இச்சையால் உருவாகும்) பாலுணர்வின் அடிப்படையில் அமைகிறது’ என்கிறான். இறைவனே இல்லை என்ற தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தம் மனம் போன போக்கில் எதையும் செய்வதையே இயல்பாக்கிக் கொள்கின்றனர்.
அல்லாஹ்வை ஏற்று ஈமான் கொண்டு முஸ்லிமான ஒருவன் தான்தோன்றித்தனமாக வாழ முடியாது. முஸ்லிம் என்ற பெயராலேயே அவன் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவனாவான். ஆயினும் அவனது ஈமானில் ஏற்றத்தாழ்வுகளும் குறைபாடுகளும் அவ்வப்போது இருக்கவே செய்யும்.
தவற்றிலேயே மூழ்கிடாமல் இருக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஐந்து கடமைகளை வகுத்துத் தந்துள்ளான். அதில் ஒன்றான நோன்பும் கூட ‘தக்வா’ என்னும் இறையச்சம் சம்பந்தப்பட்டதே.
அந்த ‘இறையச்சம் மனம் சம்பந்தப்பட்டது. மனதில் போலியாக வாழ்ந்து வெளித்தோற்றத்தில் இறையச்சமுள்ளவன் போல வாழ்பவனை குர்ஆன் நயவஞ்சகன் என அழைக்கிறது.
இதயம் எப்போதுமே சூழலுக்குள் அகப்படுவதாகவே உள்ளது.
ஒருவன் எச்சூழலில் மரணிக்கிறானோ அதே சூழலிலேயே எழுப்பப்படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்.
பின் வரும் குர்ஆன் வசனம் இதை உறுதிப்படுத்துகிறது.
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا بَنُونَ
“அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா.”
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
“எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).” (அல் குர்ஆன் 26:88-89)
ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது வாழ்வில் அல்லாஹ் வசந்தத்தை வீசச் செய்கிறான். அதைப் பயன்படுத்திக் கொண்டவன் வாழ்வை வெல்கிறான். அதை அனுபவிக்காமல் விட்டு விடுபவன் இனி எப்போதும் அதை அடைய முடியாதவனாக ஆகி விடுகிறான் என ஒரு நபி மொழியின் கறுத்து கூறுகிறது.
இரண்டாம் ஃகலீஃபாவாகிய செய்யிதினா உமர் ஃகத்தாப் (ரழி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் கணவராகிய தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) அவர்கள், இமாம் மாலிக் (ரழி) அவர்கள் முதலானோர் அவ்வாறு தம் வாழ்வில் வீசிய ஈமானிய வசந்தத்தை தழுவிக் கொண்டவர்களே.
இன்றும் நம்மில் பலர் அவ்வசந்த்தத்தை அடைந்து கொண்டேயிருப்பதை இறையழைப்புப் பணிகளைச் செய்து வருபவர்கள் நன்கறிவார்கள்.
அந்த வசந்தத்தை அடையும் வழிகளிம் மிக முக்கியமான காலம்தான் இப் புனித ரமளான் மாதமாகும்.
இம்மாதத்தை முறையாக பயன்படுத்தாதவன் துற்பாக்கியசாலி மட்டுமல்ல, அல்லாஹ்வின் சாபத்திற்கே உரியவன் ஆகிறான்.
எவ்வளவு கூறியும் ஏற்காத உள்ளங்களைத் துருப்பிடித்த உள்ளமாக அல்லாஹ் கூறுகிறான்:
كَلَّا ۖ بَلْ ۜ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (அல் குர்ஆன் 83:14)
இன்னொரு இறைவசனம் மூஸா (அலை) அவர்களை ஏற்றுக் கொண்டு ஆனால் அவர்களைத் துன்புறுத்திக் கொண்டே இருந்த அவர்களின் சமூகத்தார் பற்றி பின்வருமாறு கூறுகிறது:
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَد تَّعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ ۖ فَلَمَّا زَاغُوا أَزَاغَ اللَّهُ قُلُوبَهُمْ ۚ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
61:5. மேலும், மூஸா தம் சமூகத்தாரிடம்: “என் சமூகத்தாரே! நிச்சயமாக நான், உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதன் என்பதை நீங்கள் திடமாக அறிந்து கொண்டே, ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்?” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக); ஆகவே அவர்கள் (நேர்வழியிலிருந்து) சருகிய பொழுது, அல்லாஹ் அவர்களுடைய இருதயங்களை (நேர்வழியிலிருந்து) சருகச் செய்தான். அன்றியும் - ஃபாஸிக்குகளான - பாவம் செய்வோரான சமூகத்தாரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (அல் குர்ஆன் 61:5)
எனவே, காலத்தால் மிகவும் சிறந்து விளங்கும் இப்புனித ரமளானில் அதை அலட்சியப்படுத்துபவர்களின் குழுவில் நாம் இருக்காமல் நம் மனதை அல்லாஹ்வின் பால் செலுத்தி குர்ஆனை அதிகமதிகம் ஓதுவதைக் கொண்டும் இரவில் நீண்ட நேரம் நின்று வணங்குவதைக் கொண்டும் ஸஹ்ருடைய வேளையில் அல்லாஹ்விடம் சரணடைந்து இஸ்திஃக்ஃபார் செய்வது கொண்டும் வீணான பேச்சுக்கள், செயல்களை விட்டும் விலகி இருப்பது கொண்டும் புயல் போன்ற வேகத்தில் தான தர்மங்கள் புரிவது கொண்டும் நம் வாழ்வைக் கழித்து திருப்தியுள்ள ஆன்மாவாக (நஃப்ஸும் முத்மஇன்னாவாக) நம் இரட்சகனைச் சந்திப்போமாக, ஆமீன்.
|