“புண்ணியங்கள் பூத்துக் குலுங்கும் புனித ரமழான் மாதத்தில் இது என்ன தலைப்பு? இதில் என்னத்த சொல்லப் போறான் இவன்?” என்ற நினைப்பு
இத்தலைப்பைப் பார்த்த பலருக்கும் இருக்கும். போகப் போகத் தெரியும்!
காயல்பட்டினத்தில் சுமார் 28 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள், ஹாஜியப்பா தைக்கா பள்ளி, கே.எம்.டி. பள்ளிவாசல் ஆகிய பள்ளிகளைத் தவிர இதர அனைத்துப் பள்ளிவாசல்களிலும் ரமழான் மாதத்தில் நோன்புக் கஞ்சி தயாரிக்கப்படுவது வழமை. எல்லாப் பள்ளிவாசல்களிலும் பெரும்பாலும் வெண்கஞ்சியே நாள்தோறும் தயாரிக்கப்படும்.
பச்சரிசி, தேங்காய்ப்பால் கலவையில் நறுமணப் பொருட்களுடன், முருங்கைக் கீரையையும் இட்டு தயாரிக்கப்படுவதே வெண்கஞ்சி. அதன் மணமும்
சுவையும், அதை உணர்ந்து அருந்தியவர்களுக்குத்தான் தெரியும்.
கஞ்சிக்கு தொட்டுக்கொள்ள (காம்பினேஷனாக) அம்மியில் அரைக்கப்பட்ட துவையல் தரப்படும். பொட்டுக்கடலை (பொரி கடலை) துவையல்,
கொத்தமல்லி துவையல், புதினா துவையல் என பல வகைகளில் நாள்தோறும் துவையல் தயாரிக்கப்பட்டு, நோன்பு துறக்க வருவோருக்கு பூவரச மர
இலையில் (செட்டிக்காய் பூசணி மரம்) வைத்து கொடுக்கப்படும்.
இடது கையில் கஞ்சிக் கோப்பையைத் தாங்கிப் பிடித்து, வலது கையால் இலையிலுள்ள துவையலைக் கிள்ளியெடுத்து, கஞ்சி ஒரு வாய்க்கு; துவையல் ஒரு வாய்க்கு என மாற்றி மாற்றி உட்கொள்ளும்போது ஏற்பட்ட இன்பமே தனிதான்! எந்த வகைத் துவையலானாலும் அதில் அடை ஊறுகாய் (உப்பு போட்டு ஊற வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம்) சேர்த்து அரைக்கப்படுவதால், துவையலை வாயில் வைக்கும்போதே 75 மில்லி லிட்டர் எச்சில் நாக்கின் அடியில் சுரந்துவிடும் என்பது தனி!!
படிக்கப் படிக்க பலரது நாக்குகளிலும் - துவையல் படாமலேயே 100 மில்லி லிட்டர் எச்சில் சுரந்திருக்கும்.
சரி! விஷயத்திற்கு வருவோம்...
மேலே கூறப்பட்டுள்ள தகவல் ஏதோ சித்தர் காலத்து சுவடிக் கதை அல்ல. நம் வாழ்நாளில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் யாவரும்
அனுபவித்து, இன்று - மரணித்த பாட்டனாரை மறப்பது போல மறந்தும், காணாமல் போன குழந்தையைத் தேடுவது போல தேடிக் கொண்டும்
இருக்கிறோம்.
வெண்கஞ்சி மட்டுமே அனைத்துப் பள்ளிகளிலும் தயாரிக்கப்பட்ட காலகட்டத்தில், ஒரு சில பள்ளிகளில் - 12ஆம் இரவு, 17ஆம் இரவு, 27ஆம் இரவு என குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் கறிகஞ்சி தயாரிக்கப்படும். ஓரிரு பள்ளிகளில் நாள்தோறும் கறிகஞ்சி தயாரிக்கப்படும். அதன் காரணமாக அப்பள்ளிவாசல்களுக்கு தனி மவுசு இருந்தது. காலப்போக்கில் எல்லாப் பள்ளிவாசல்களிலும் கறிகஞ்சி பரவலாக தயாரிக்கப்பட்டது.
“உங்க பள்ளியில் இன்று வெள்ளையா, கலரா?”
“வெள்ளையா, மஞ்சளா?”
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ரமழான் மாலை நேரங்களில் காயல்பட்டினம் வீதிகளில் நடமாடும் அனைவர் காதுகளிலும் தவறாமல் விழுந்த
வாக்கியங்கள் இவை. இன்றோ நிலைமை தலைகீழ்!
“வெள்ளக்கஞ்சிய பார்த்தே ரொம்...ப வருஷம் ஆயிடுச்சே…?”
“அந்தக் காலத்துலயே நான் எந்தப் பள்ளிவாசலுக்கும் தூக்குச் சட்டிய தூக்கிட்டுப் போனதில்லை... ஆனா இப்ப, எங்க ஊட்டு மட்டெ - எனக்கு வேலை இருக்குன்னு சொல்லியும் கூட கேக்காம, இந்த வெள்ளைக் கஞ்சிய தேடி ஊருல
உள்ள பள்ளியெல்லாம் சுத்த வச்சிட்டாளே...?”
“உங்க பள்ளியில இன்னைக்கி வெள்ளக்கஞ்சியா? மச்சான் நோம்பு தொறக்க நா வந்துடுறேன்... இடம் போட்டு வச்சிக்கோ... சட்னிய மறக்காம எடுத்து வச்சிடு...”
இவைதான் இன்று நம் காதுகளில் ஒலிக்கும் வாக்கியங்கள்.
மணமும், சுவையும் நிறைந்த வெண்கஞ்சி மறைந்ததன் மர்மம்தானென்ன?
கறிகஞ்சியுடன் ஒப்பிடுகையில், செலவால் சில ஆயிரங்கள் குறைவாகவே இருக்கும் வெண்கஞ்சி தயாரிக்க. பத்தாண்டுகளுக்கு முன்பு வரை எல்லாப்
பள்ளிவாசல்களிலும் அந்தந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலரே கஞ்சிக்கு அனுசரணையாளர்களாக ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ளனர். ஆண்டுகள் செல்லச் செல்ல நகரில் படித்து பட்டம் பெற்று, நல்ல ஊதியத்துடன் பணி செய்வோர் எண்ணிக்கையும் உயரவே, அதற்கேற்ப அனுசரணையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. குறைந்தளவு அனுசரணையாளர்கள் இருந்த காலத்தில், அனைவரும் வெண்கஞ்சி
தயாரிக்கவே ஆர்வம் காட்டினர். ஆனால் புது அனுசரணையாளர்களோ,
“ஒரே என்ன வெள்ளைக் கஞ்சி? நம்ம பள்ளியிலயும் கறிகஞ்சி போடுவோம்...” என ஆர்வத்தில் துவக்கிய வழமைதான் இன்று வெள்ளையே இல்லாமல்
போனதற்கு முக்கியக் காரணமாயிற்று. இதில் யாரையும் குற்றஞ்சொல்லவும் வழியில்லை. காரணம், புதிய அனுசரணையாளர்கள், தாம் சார்ந்த
பள்ளிவாசல்களுக்கும் நல்ல பெயர் கிடைக்கட்டுமே... என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு செய்யத் துவங்கினர்.
“சரி, இப்ப அதுக்கு என்ன?”
பொழுது விடிவதற்கு முன்பு துவங்கி, பொழுது சாயும் வரை உண்ணல், பருகல் என அனைத்தையும் துறந்து - இறைவனுக்காக பட்டினி கிடந்த வயிற்றுக்குள் - நோன்பு துறக்கும்போது வெண்கஞ்சியை உள்ளே இட்டால் அமைதியாகப் பசியடங்கும். அதை விட்டுவிட்டு, மசாலா, மஞ்சள், காரம், கத்தரிக்காய் என அனைத்தையும் கலந்து தயாரிக்கப்படும் கறிகஞ்சியை பசித்த வயிற்றில் இறக்குவதன் காரணமாக, வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதையாக மாறிப்போய்விட்டன நம் வயிறுகள்.
இதன் கொடுமையை உணர்ந்துள்ள சிலர், எந்தப் பள்ளியில் வெள்ளைக் கஞ்சி தயாரிக்கிறார்கள் என பார்த்துப் பார்த்து தேடிச் செல்லும் நிலை. ஆனால்,
பாரம்பரிய வெண்கஞ்சியின் மகத்துவத்தை உணராத தற்காலத்து புதிய தலைமுறை சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இந்த எண்ணம் இல்லை என்றே கூறலாம். எண்ணம்தான் இல்லையே தவிர, கெடுதி எல்லோருக்கும் சேர்த்துதான்.
தண்ணீர், தேனீர் - இவ்விரண்டையும் தவிர எல்லாவற்றிலும் இறைச்சியைக் கலந்து பழக்கப்பட்டுவிட்டோம் நாம். நகைச்சுவைக்காக இதைச் சொல்லவில்லை. கறி வடை, கறி அடை, கறி சம்சா, கறி கட்லட், சிக்கன் ரோல்ஸ், மட்டன் புரோட்டா, கோழி சூப்... அப்பப்பா! இவையெல்லாம்
இருக்கும் மொத்தப் பட்டியலில் அரை சதவிகிதம் கூட இல்லை.
அசைவத்தை சாப்பிடலாம் என இஸ்லாம் நமக்களித்துள்ள அனுமதியை, அசைவம் சாப்பிட்டேயாக வேண்டும் என ஏதோ கட்டாயக் கடமை போல நாம் ஆக்கிக் கொண்டுள்ளோம்.
வழமை போல நடப்பாண்டு ரமழான் நோன்பு துறப்பு - இஃப்தார் நிகழ்ச்சிகளின்போது செய்தி சேகரிப்பதற்காக காயல்பட்டினம் பள்ளிவாசல்களுக்கு நாள்தோறும் செல்லும் வாய்ப்பு எனக்கு உள்ளது. நானும் ஒரு வெண்கஞ்சிப் பிரியன் - இல்லையில்லை, வெண்கஞ்சி வெறியன் என்பதால், எந்தப் பள்ளியில் என்று வெண்கஞ்சி தயாரிக்கப்படுகிறது என பார்த்துப் பார்த்து, அந்தந்த நாட்களில் குறிப்பிட்ட பள்ளிவாசல்களுக்குச் சென்று, கஞ்சியையும் - துவையலையும் ஆசை தீர உட்கொண்டு வருகிறேன்.
என்னருகில் அமர்ந்து நோன்பு துறக்கும் பலர்,
“என்னப்பா! வெள்ளக்கஞ்சி போடுற நாளா பார்த்து வந்திருக்கியே...? கறிகஞ்சி போடும்போது வந்தா
கூட்டம் அதிகமாக இருக்குமே...?” என்று கூற, வெண்கஞ்சி மீதான என் ஏக்கத்தை விளக்கிய பின், “ஆமாப்பா... இதெல்லாம் யாருக்குப் புரியுது?
இன்னைக்கி உள்ள பிள்ளைங்களுக்கு வெள்ளக்கஞ்சி பிடிக்கிறதேயில்லே...” என்று கூறினர்.
“ஏன் பள்ளி நிர்வாகிகளாகிய நீங்கள் நினைத்தால், இந்தப் பள்ளியில் குறிப்பிட்ட நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் வெண்கஞ்சிதான்
தயாரிக்கப்படும் என்று முடிவெடுத்து, அனுசரணையாளர்களிடம் தெரிவிக்கலாமே...?” என்று கேட்டால்,
“ம்... போ வாப்பா! நாங்க பாட்டுக்கு இதப் போயி சொல்ல, துட்டு தர்றவன் திட்டுறதுக்கா? நா என்ன கூட ரெண்டாயிரம் ரூபாய் தர்றதுக்கு
வழியில்லாமலா இருக்கிறேன்-ன்னு அவங்க கேக்கவா?” என என்னை நோக்கி மீண்டும் கேட்கின்றனர்.
அனுசரணையாளர்கள் சிலரிடமும் பேசிப் பார்த்தேன்.
“எல்லோரும் கறிகஞ்சி போடுற நிலையில, நா மட்டும் வெள்ளக் கஞ்சிக்கின்னு காசு கொடுத்தா, என்னை எல்லோரும் என்ன நினைப்பாங்க...?” இது
அவங்களோட கவலையாக உள்ளது.
ஆனால், நோன்பு துறக்கும்போது மட்டும் - நிர்வாகிகள், அனுசரணையாளர்கள், பொதுமக்கள் என அனைவருக்குமே வெள்ளை மீது தீராத காதல்
இருப்பதை உணர முடிகிறது. அவரவர் காதலை வெளிப்படுத்தத்தான் வழி தெரியாமல் இருக்கின்றனர்.
இந்த ஒருதலைக் காதலுக்குத் தீர்வுதான் என்ன?
வெவ்வேறு திசைகளில் தனித்தனியே நின்று சிந்திக்கும் இவர்களின் எண்ணங்களை ஒன்றுபடுத்தப் போவது யார்?? |