அது ஒரு மாபெரும் மாநாடு. மக்கள் திரளாக கூடியிருக்க அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த மாபெரும் அறிஞர் உரை நிகழ்த்த ஆயத்தமாகிறார். பேச்சைக் கேட்க வந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். உரையைத் துவங்க நினைத்தவர் சற்றே அழுகிறார். அடுத்து சில வினாடிகளில் சிரிக்கிறார். இப்போது பேச்சைத் துவங்குகிறார். யார் இவர் என்பதை பிறகு பார்ப்போம்.
துஃபைல் ஒரு காவல்துறை அதிகாரி. மிடுக்கானவர். அவர் ஒரு பெயர்தாங்கி முஸ்லிம். தொழ மாட்டார். வணக்க வழிபாடுகள் எதுவும் புரிய மாட்டார். பணிநேரம் முடிந்து விட்டாலோ நன்றாகக் குடித்துவிட்டு போதையில் மூழ்கி உருள்வதே அவரது வாடிக்கை. ஒரு நாள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அவர் இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அதில் ஒருவர் தாம் தம் பிள்ளைக்காக ஒரு பரிசுப் பொருளை வாங்கியதாகவும் அதை மற்றவர் திருடிவிட்டார் எனவும் கூறியபோது போலீஸ் அதிகாரியான துஃபைல் பொருளை இழந்தவருக்கு சாதகமாக ஆறுதல் கூறி நீர் உம் குழந்தையிடம் சென்று அல்லாஹ்விடம் அப்பொருள் திரும்ப கிடைக்கப் பெருவதற்காக பிரார்த்திக்கச் சொல்லும் என்றார்.
இதைச் சொல்லி விட்டு வீட்டிற்குச் சென்ற துஃபைலுக்கு மனதில் ஒரே அமைதி. பதினேழு வருடத்தில் காணாத ஒரு பூரிப்பை அப்போது அவர் கண்டார். நமக்கும் இப்படி ஒரு குழந்தை இருந்தால்... சிந்திக்கலானார் துஃபைல். ஹூம், காவல் அதிகாரி அதுவும் முடாக் குடியனாகிய நமக்கெல்லாம் யார் பெண் கொடுப்பார். ஒரு அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்கி உரிமை விட்டு அவளையே மணம் முடிக்க வேண்டியதுதான் என முடிவெடுத்தார். அப்படியே மணமுடித்தார். இறையருளால் அதன் மூலம் ஃபாத்திமா என்ற ஒரு பெண் குழந்தையை வாரிசாகப் பெற்றார்.
தன் செல்ல மகளை உயிருக்குயிராய் அவர் எப்போதும் நேசித்து வந்தார். துஃபைல் தன் குடிப்பழக்கத்தை மட்டும் விடவே இல்லை. மகளுக்கோ அவள் ஒரு வயதைத் தாண்டிய குழந்தையாக இருந்தாலும் தந்தையின் போதைப் பழக்கம் ஒரு வினோதச் செயலாகவே அவளுக்கு தெரிந்தது. வீட்டில் பாட்டில்களைக் கொண்டுவந்து குடிக்க முற்படும்போதெல்லாம் அதைத் தான் அதிகம் நேசிக்கும் தன் தந்தையின் கையிலிருந்து தட்டிவிட்டுஅவர் மீதே கொட்டிவிடுவாள்.
இதை நிறுத்திவிடுங்கள் பாபா என எவ்வளவு சொன்னாலும் பாசப் பிள்ளையின் இந்த வார்த்தைகளை மட்டும் துஃபைல் பொருட்படுத்துவதே இல்லை.
இந்நிலையில் துஃபைலின் உயிர்நேசத்திற்குரிய அம்மகள் இரண்டு வயதேயான போது இறந்து போனாள். கவலையை மறக்க துஃபைலுக்கு குடிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. குடித்துக் குடித்து அதிலேயே உறங்கிப் போய்விட்டார்.
அது ஷஃபான் மாதம். திடீரென துஃபைல் ஒரு கனவு காண்கிறார். அதில் அவரது இடது கையில் ஒரு புத்தகம் தரப்படுகிறது. அத்துடன் பெரிய பாம்பு ஒன்று அவரைத் துறத்திக் கொண்டே போக அங்குமிங்கும் ஓடி அய்யோவென தன்னைக் காப்பாற்றுமாறு அறைகூவல் விடுக்கிறார். அப்போது ஒரு பெரிய மனிதரைக் காண்கிறார். மிகவும் வயோதிகரான அவரிடத்தில் இந்த பாம்பை விட்டும் என்னைக் காப்பாற்றுங்கள் எனக் கெஞ்சிய போது எனது இயலாமையைப் பார். இந்த பாம்பை என்னால் என்ன செய்ய முடியும் என அப்பெரியவர் கூற அவரைக் கடந்து மேலும் ஓடிக்கொண்டிருந்த போது கொலுந்துவிட்டு எரியும் நெருப்பின் அருகில் செல்ல, ‘நீ எனக்காக உள்ளவன் அல்ல போ’ என அது கூறிவிட, சற்று தூரத்தில் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கூட்டத்தின் அருகில் சென்ற துஃபைலுக்கு ஒரே ஆச்சரியம். இறந்துபோன தன் பிரியமுள்ள மகள் ஃபாத்திமா முழுநிலவாய் காட்சி தரும் அக்குழந்தைகள் கூட்டத்திலிருந்து ஓடிவந்து பதற்றத்துடன் நின்றிருந்த தன் தந்தையிடம் என்ன பாபா, ஏன் பதற்றமாய் உள்ளீர்கள் எனக் கேட்க அந்த பாம்பை விட்டும் தன்னைக் காப்பாற்றுமாறு தந்தை கூறியது தான் தாமதம் உடனடியாக அப்பாம்பை விலகிப் போவெனக் கூற அது விலகிச்சென்று விடுகிறது. பிறகு அதிர்ச்சியில் உரைந்துபோய் நின்ற தம் தந்தையை அழைத்து தந்தையே உங்களுக்குத் தெரியாதா. அல்லாஹ் திருமறையில் கூறுகின்றானே,
أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَن تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِن قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ ۖ وَكَثِيرٌ مِّنْهُمْ فَاسِقُونَ
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (அல் குர்ஆன் 57:16)
என்ற இறைவசனத்தை மகள் கூறக்கேட்டு கனவு கலைந்துவிட முடாக்குடியரான துஃபைல் பதரி விழித்து படுக்கையிலிருந்து விடுபட்டவராக அன்றைய ஃபஜ்ர் தொழுகையை நிறைவேற்ற இறையில்லம் நோக்கி விரைகிறார்.
என்ன ஆச்சரியம். துஃபைல் தன் மகளின் வாயிலிருந்து எதைக் கேட்டாரோ அதே இறை வசனம் அன்றைய ஃபஜ்ர் தொழுகையைத் தொழ வைத்த இமாம் அவர்கள் அதே இறைவசனத்தை ஓத அன்றிலிருந்து குடிப்பதைக் கைவிட்டு விட்டு பெயர்தாங்கி முஸ்லிமான தன்னை ஓர் உண்மையான முஸ்லிமாக மாற்றிக் கொண்டார். துஃபைலின் வாழ்வில் ஈமானின் வசந்தம் வெகுவாக வீசத் தொடங்கியது.
தொழவைத்த அந்த இமாம் வேறு யாருமில்லை. அவர்கள் தான் இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்கள்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மேடைப் பேச்சிற்குத் தயாரான போது அழுதாரே அவரையும் துஃபைலையும் யார் எனத் தெரியுமா. அவர்கள் தான் பெயர் கேட்டாலே அல்லாஹ்வின் அருள் அவர் மீது பொலியட்டும் என நாம் திருவாய் மலரும் மார்க்க மேதை இமாம் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள். இவர் ஒரு தாபிஈ ஆவார். இரண்டாம் ஃகலீஃபா உமர் ஃகத்தாப் (ரழி) அவர்களை நேரில் கண்டவர்கள். கண்மணி நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து சில ஹதீஸ்களை அறிவித்துள்ளார்கள். என்னே ஒரு மாற்றம் பாருங்கள்.
ரமளான் அல்லாஹ்வின் வசந்தம் வீசும் மாதம்.
அருள்வீசும் இம்மாதத்தின் பெரு மழையில் நனைந்திட அதிகப்படியாக இன்னும் பதிமூன்று நாட்களே உள்ளன.
ஏற்கனவே பெயர் தாங்கி, அரைகுறை, சராசரி முஸ்லிமாக இம்மாதத்தைக் கழித்தவர்களுக்கு இன்னும் வாய்ப்புகள் நிறைந்தே உள்ளன.
கடைசிப் பத்திற்கு தயாராவதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் அதிகமுள்ளன. ஆடையை இழுத்துக் கட்டிக் கொண்டு இரவுகளில் தாமும் விழித்திருந்து தம் மனைவியரையும் எழுந்திருக்கச் சொல்லி வணக்க வழிபாடுகளில் இரவு நேரம் முழுதையும் கழித்தனர் நம் உயிரினும் மேலான கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள்.
அதே நபியவர்கள் வானவர் கோமான் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறைஞ்ச மிம்பரில் ஏரியவாறு மூன்று முறை ஆமீன் எனக் கூறினார்களே அதில் ஒன்று, யார் ரமளான் மாதத்தை அடைந்தும் அதில் பாவமன்னிப்புக் கோரவில்லையோ அவர் அழிந்து போகட்டும் என வானவர் கூற நபியவர்கள் அதற்குத் தான் ஆமீன் என்றார்கள்.
நபியவர்களின் இந்த ‘ஆமீனுக்குச்’ சொந்தக்காரர்களாய் மாறிடாமல் நமது இரவு நேரங்களை வாலிபால், கேரம், டோமினோஸ், யூநோ, ஷட்டில் என வீணடிக்காமல் மன்னிப்பின் இறகுகளை விரித்து வைத்துக் கொண்டு என் அடியானே கேள் எனக் கூறும் மாவல்லோனாகிய ரஹ்மானிடம் கண்ணீர் மல்க நம் சொந்த வாழ்க்கைக்காகவும், உலகோர் அமைதிக்காகவும் வேண்டிப் பிரார்த்தித்து, பகல் நேரங்களில் பசியறிந்து நோன்பிருந்து, அளவோடு உணவுண்டு.
முந்தைய காலங்களில் மூடத்தனமாகச் செய்துவிட்ட நம் பாவங்களுக்கு இரட்சிப்புக் கோரி வரும் காலத்தை வல்ல ரஹ்மானை உவப்பெய்தச் செய்யும் நற்காரியங்கள் மூலம் மகிழ்வித்து மறுமையை முழுமையாகப் பெற்று ரய்யான் வழியாகவும் இன்னும் அனைத்து வாயில்கள் வழியாகவும் சுவனத்தில் நுழையும் பெரும்பாக்கியத்தை நாம் அனைவரும் அடைந்திடுவோமாக.
அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னா.
|