ஆயகலைகள் அறுபத்துநான்கு என்கிறார்கள். அதில் புகைப்படக் கலையும் ஒன்றா...? எனபது எனக்குத் தெரியாது. ஆனால் இப்போது மூன்று
நாட்கள் விடாது கைதட்டிக்கொண்டே இருப்பது, பத்துநாட்கள் தொடர்ந்து சைக்கிளில் சவாரி செய்துகொண்டே இருப்பது, நூறு இட்லியை ஒருமணி
நேரத்தில் சாப்பிடுவது ... எனபது போன்ற செயல்களையும் கலைகள் என்கிறார்கள்.
கலைகள் வேறு, சாகசம் வேறு... இரண்டுக்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருமனிதனின் உள்ளத்தில் இருந்து இயல்பாகவே எழும் அழகுணர்ச்சியே
கலைகளின் அடிநாதம்.
சோறு யாரும் சமைக்கலாம். ஆனால் பானையில் அளவான தண்ணீர் விட்டு, தேவையான உப்பிட்டு, பூபோன்ற பதத்தில் சோறு வடிப்பது ஒரு கலை.
நாம் பொழுதுபோகாமல் பேப்பரில் கிறுக்கும் படங்களும் ஒரு ஓவியனின் செய்நேர்த்தி மிகுந்த ஓவியமும் ஒன்றாகுமா ...?
எனவே எதையும் அக்கறை எடுத்து, மனத்தால் அதற்க்கு ஒரு வடிவம் கொடுத்து செய்வது நேர்த்தியான கலைகளின் பாற்படும். அதில் ஒன்றுதான்
புகைப்படக் கலையும்.
புகைப்படத்தின் ஆரம்பம் எது என்று கேட்டால் நான் கண்ணாடி என்று சொல்வேன்.
கண்ணாடி எப்போது கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்போதே புகைப்படக் கலைக்கு வித்தூன்றி விட்டாகிவிட்டது என்று சொல்லலாம். கண்ணாடியில்
பிரதிபலிக்கும் உருவம் நாம் அதன் எதிரில் நின்றால் மட்டுமே தெரிவது. தனது உருவத்தை எப்போதும் நினைத்த நேரத்தில் பார்க்கும் ஒரு நிலையான
எற்ப்பாட்டுக்குப் பெயரே புகைப்படம் என்று சொல்லலாமா...?
ஒருமனிதன் இன்னொரு மனிதனோடு தொடர்புகொள்ள - முதலில் பொருள் தெரியாத சப்த்தங்கள், பிறகு பாறைகளிலும், கற்களிலும் வரைந்த
கற்கால ஓவியங்கள், அதன் பிறகு முறைப்படுத்தப்பட்ட ஓவியங்கள், அதன் பிறகு பாடல்கள், புத்தகங்கள், மொழித் தொடர்பு, அதன்பிறகு
புகைப்படங்கள்... என்ற வரிசையில் இப்போதைய செல்போன் வரை வந்து முடியும்.
கிட்டத்தட்ட தந்தி, போன் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களும் கூட காமிரா கண்டுபிடிக்கப்பட்ட அதே 19 நூற்றாண்டிலேயே
கண்டுபிடிக்கப்பட்டன.
புகைப்படக் கலையின் ஆரம்பம் எது என்று பார்த்தால் சீனத் தத்துவவியலாளர் மோ-டி என்பவர்தான் இதன் ஆரம்ப நுணுக்கங்களைக் கண்டுபிடித்தவர்
என்று சொல்லப்படுகிறது. கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டிலும், யூக்ளிட்டும் கூட இதன் ஆரம்பகால கர்த்தாக்கள்தான். ஆனால் இன்றைய நவீன
காமிராவின் வடிவமைப்புக்கு வித்திட்டவர் தாமஸ் வெட்ஜ்வுட் என்பவர். இவர் முதலில் கண்டுபிடித்த காமிரா முயற்சி தோல்வியில் முடிந்தது.
இவரது உதவியாளர் நைஸ்போர் நைஸ்பேக் கிட்டத்தட்ட ஒரு வெற்றிகரமான காமிராவை 1820களில் உருவாக்கிவிட்டார்.
பிறகு லூயிஸ்டாக்குரே என்பார் புகைப்படத்தை டெவலப் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். 1816 ல் நைஸ்போர் நைஸ்பெக் பேப்பர் கோட்டேட்
சில்வர் குளோரைட் முறையில் புகைப்படங்களை பிரதி எடுக்கும் முறையையும் கண்டு பிடித்தார். ஒரு செவ்வக வடிவிலான பெட்டிக்குள் துளையிட்டு
அதன் வழியே ஒளியைப் பாய்ச்சி பிம்பங்கள் விழும் முறைக்கு காமிரா அப்ஸ்குரா என்று பெயர். இதுவே நவீன காமிராக்களின் ஆரம்பக்கால வடிவம்.
எல்லா நவீன விஞ்ஞான சாதனங்களையும் போலவே புகைப்பட காமிராவையும் ஆங்கிலயயேரே இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். லண்டனிலில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அக்கால சில்வர் கோட்டட் பிலிம் ரோல்களினால் புகைப்படங்களை எடுத்தனர். புகைப்படம் எடுத்தால் ஆயுள்
குறையும் என்ற இந்தியரது மூட நம்பிக்கையை படாத பாடுபட்டு பிரிடிஷ்காரர்கள் நீக்கினார்கள்.
காமிராவைச் சுமந்து வந்த ஆங்கிலேயேனைக் கண்டாலே வீட்டுக்குள் ஓடோடி ஒளிந்தனர். காமிராவை உயிரைப் பறிக்க வரும் எமதர்மன் என்றே
எண்ணினர். இப்போதும் கூட பட்டிதொட்டிகளில் இந்த நம்பிக்கையின் எச்சசொச்சங்கள் இருக்கின்றன.
பாஸ்போர்ட்ட்டுக்குப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.
கையில் எடுத்துச்செல்லும் காமிராக்கள் புழக்கத்தில் இல்லாத அக்காலத்தில் எல்லோருமே ஸ்டூடியோவில் போய்த்தான் படம் எடுத்திருக்கின்றனர்.
கைகளை ராணுவ அட்டென்ஷனில் முட்டிக்கால்கள் மீது வைத்து இறுக்கமான முகத்தோடு அமர்ந்திருக்கும் நமது முன்னோர்களின் கருப்பு-வெள்ளைப்
புகைப்படங்கள் இன்றும் கூட பலரது வீடுகளில் இருக்கலாம்.
93 வயதான எனது பூட்டியின் புகைப்படம் எனது வீட்டில் ரொம்பக்காலம் இருந்தது. கையில் தஸ்பீஹ் மணியை வைத்தவாறே இருக்கும்
அப்புகைப்படத்தை கிழவியை ஏமாற்றி எடுத்தது என்று எனது கம்மா சொல்லியிருக்கிறார்கள். பிறகுவந்த நவீன காலத்தில் புகைப்படங்கள் எடுக்காத
–எடுக்க ஆசையில்லாத நபர்களே இல்லை என்று சொல்லிவிடலாம்.
எங்கள் வீட்டு ஜான்சில் ஜாமி உல் அஸ்ஹரர் பள்ளியின் சட்டமிட்ட புகைப்படம் ஓன்று நீண்ட நாட்களாக தொங்கியது. எனது கண்ணுவாப்பா அவர்கள்
அப்பள்ளியின் ஆரம்பகால ஆதரவாளர்களில் ஒருவர். எந்த வீடுகளுக்குச் சென்றாலும் நான்கோ, ஐந்தோ புகைப்பட பிரேம்கள் தொங்கும்.
போட்டோக்களுக்கு பிரேம்கள் செய்து தரும் கடையே அக்காலத்தில் நமதூரில் இருந்தது.
சிறுவயதில் என்னை யாரேனும் புகைப்படம் எடுத்திருக்கலாம். ஆனால் எனக்கு நினைவு தெரிந்து நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் கல்லூரியில்
பரீட்சை எழுத (ஹால் டிக்கெட்டுக்காக) நான் எடுத்துக்கொண்ட கருப்பு-வெள்ளை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்தான். திருச்செந்தூர் பாப்பு
ஸ்டூடியோவில்தான் அதை எடுத்தேன். அது 1978 ம் வருஷம் என்று நினைக்கிறேன். மூன்றுநாள் கழித்துதான் பிரதி கிடைக்கும் என்று
சொல்லிவிட்டான். (இப்போது மூன்று நிமிடத்தில் பிரதி கிடைத்துவிடுகிறது).
மூன்று நாட்களாக எனக்குத் தூக்கமில்லை. நாம் போட்டோவில் எப்படி இருப்போம் ...?அழகாகக் கூட வேண்டாம்... சுமாராகவேனும்
இருப்போமா...? நண்பர்கள் பார்த்து எதுவும் கிண்டல் பண்ணிவிடக்கூடாதே...! ஏனெனில் நான் அப்போது மிகவும் மெலிந்து முகம் ஒடுங்கி
இருப்பேன். எனக்கு சரியாக தலைவாரக் கூடத் தெரியாது. எப்படியோ...ஒப்பேற்றி போட்டோ எடுத்துவிட்டேன் என்றாலும் அந்த போட்டோ எனக்குத்
திருப்தி தரவில்லை. இப்போதும் கூட அது என்னிடம் இருக்கிறது. சமீபத்தில் அதை எனது வீட்டுக்காரியிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டேன்.
“சொன்னால் கோபித்துக் கொள்ளக்கூடாது....” முதலிலேயே கண்டிஷன் போட்டாள்.
“சரி...சொல்லு....”
“அசல் கோழிக் கள்ளன்தான் ...!”
“என்ன இது! உன் உள்ளம்கவர் கள்வனை கோழிக்கள்ளன் என்று சொல்லிவிட்டாய்...?”
“படத்தில் என்ன சாடை காட்டுகிறதோ...அதைத்தானே சொல்லமுடியும்...”
இப்படித்தான் நமது இளைமைக்கால தோற்றத்துக்கும் இப்போதைய நமது தோற்றத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதைப் புகைப்படம்
காட்டுவதுபோல வேறு எதுவும் காட்டாது.
பள்ளிகளில் எடுக்கும் குரூப் போட்டோ இன்னொருவகை. அந்த துணி போட்டு மறைத்த காமிராவை வைத்து படம் எடுப்பதற்குள் போதும் போதும்
என்றாகிவிடும். அந்த நேரத்தில் போட்டோ எடுப்பவரை எறும்பு கடித்துவிட்டால் என்னாகும்...?என்று கோக்குமாக்காக சிந்தித்திருக்கிறேன்.
இன்னும் சிலருக்கோ... காமிரா வாகுள்ள முகம் அமைந்திருக்கும். எந்த தோற்றத்தில் அவர்களை புகைப்படம் எடுத்தாலும் அழகாக இருப்பார்கள்.
நாமோ சுமார் மூஞ்சி குமார்தான்.
தொழில் ரீதியாகவும் புகைப்படம் எடுக்கும் கலை மிகவும் வெற்றிகரமானது சினிமா நடிக நடிகைகள் தங்களுக்கென பிரத்யேக ஸ்டில்
காமிராமேன்களை வைத்திருப்பார்கள். அவர்கள் மட்டும்தான் அவர்களை புகைப்படம் எடுக்கவேண்டும். அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்சிகளுக்கும்
கூடவே அந்த போட்டோகிராபர்களை அழைத்துச் செல்வார்கள்.
தோற்ற உருவை வைத்தே தொழில் செய்யும் சினிமா, நாடகக் கலைஞ்சர்களுக்கு புகைப்படம் எனபது மிகவும் முக்கியமானது. எனவேதான்
புகைப்படங்களில் அழகாகத் தோன்றும் சில நடிக, நடிகையர்கள் நேரில் அவ்வாறு தோன்றுவதில்லை.
அது எப்படியோ... நம்மை யாராவது புகைப்படம் எடுக்கிறார்கள் என்று நாம் உணர்ந்துவிட்டாலே - நமது முகமும் உடலும் இறுக்கமாகிவிடும்.
புகைப்படத்தில் - அப்படி, இப்படி தோன்றிவிடக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்வுதான் காரணம். ஆனால் நாம் இயல்பாக இருந்தாலே அழகாக
இருப்போம். அந்த தேவையற்ற இறுக்கஉணர்வைத் தணிக்கவே போட்டோகிராபர்கள் நம்மை ஸ்மைல் ப்ளீஸ் என்று சிரிக்கச் சொல்லுகிறார்கள்.
வாடகைக்கு அணிந்துகொண்ட ஒப்பனை சிரிப்பை நாமும் சிரித்து வைக்கிறோம்.
குற்றம் சார்ந்த வழக்குகளிலும், விபத்துக்கள் நிகழும்போதும் புகைப்பட சாட்சியங்களை நீதிமன்றம் கேட்டுப்பெறுகிறது.
ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் குண்டுதாரிப் பெண் தனுவை அடையாளம் காட்டியது ஒரு புகைப்படமே. குண்டுவெடிப்பில் இறந்துபோன
ஹரிபிரசாத் என்ற காமிராமேனின் காமிராவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமே தனுவையும், சிவராசனையும் அடையாளம் காட்டியது.
அதே நிகழ்வில் பங்கு பெற்று புகைப்படங்கள் எடுத்த பிரபல போட்டோகிராபர் சுபா சுந்தரமும் அந்த வழக்கில் சந்தேகம் காரணமாக கைது செய்யப்பட்டு
ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்தார். பின்பு விடுதலை செய்யப்பட்டு அவர் இறந்தும் விட்டார். இத்துணைக்கும் தமிழக அரசியல்வாதிகள்
அனைவரையும் தெரிந்தவர் அவர். அவரது காமிராவில் சிக்காத அரசியல் பிரபலங்களோ, சினிமா பிரபலங்களோ இல்லை. அவ்வாறு இருந்தும் கூட
அவர் வழக்கில் சிக்கியதை யாராலும் தடுக்க முடியவில்லை.
உலக ரீதியாக எடுக்கப்பட்ட சில புகைப்பங்கள் உலக மக்களின் மனசாட்சியைத் தொட்டு உலுக்கியவை.
வியட்நாம் போரின்போது அந்நாட்டின் மைலா கிராமத்தில் அமெரிக்க போர் விமானங்கள் நேபாம் குண்டுகளை வீசியபோது உடையின்றி கையை
விரித்தவாறே அலறிக்கொண்டு ஓடிவரும் அந்த சிறுமியை யாரால் மறக்க முடியும்...? அதன்பிறகே உலகநாடுகள் வியட்நாமில் இருந்து
வெளியேறும்படி அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுத்தன.
1993ம் ஆண்டு சூடான் நாட்டு உணவுப் பஞ்சத்தில், உணவுக்கு வழியின்றி வாடி பூமியில் விழுந்து கிடந்த அந்த அப்பாவிக் குழந்தையை உண்ண அருகில் காத்து நிற்கும் கழுகை புகைப்படம் எடுத்து உலகின் அந்தராத்மாவை பிடித்து குலுக்கிய கெவின் கார்டர் என்ற புகைப்பட நிருபர் அந்தக் காட்சி தந்த அவலத்தில் இருந்து மீள முடியாமல் பிறகு தற்கொலையே செய்துகொண்டார்.
கும்பிட்ட கரங்களோடு குஜராத்தில் கண்ணீர் வழியும் முகத்தோடு நின்ற குத்புதீன் அன்சாரியை யாரால் மறக்க முடியும்...?அந்த ஒரே ஒரு
புகைப்படம்தான் மோடியின் முகத் திரையைக் கிழித்தது.
இன்று செல்போன்களின் வழியே நிமிடத்திற்கு நூறு படங்கள் எடுத்துவிடலாம். அதை கண்ணிமைக்கும் நேரத்தில் உலகின் பல பாகங்களுக்கும்
அனுப்பிவிடலாம் என்றாலும் கடமை உணர்வோடு புகைப்படங்களை எடுத்து - தனது சொந்த ரசனை சார்ந்தும், ஊரின், உலகின், அழகையும்,
அவலங்களையும் ஒருசேர தனது காமிராவில் அமுக்கிக்கொண்ட அந்தப் புகைப்படக் கலையும், கலைஞர்களும் என்றேறெண்டும் நமது போற்றுதலுக்கு
உரியவைதான்....!
இன்று ஆகஸ்ட் 19! உலகப் புகைப்பட நாள்!!
|