இன்று கூடங்குளம் அணு மின் நிலையத்தைத்திறந்தால் நாளையே மின் தட்டுப்பாடும் ,வெட்டும் பறந்தோடி விடும் எனவே கடையடைப்பு செய்யுங்கள் என்ற ரீதியில் ஊர் தீர்மானம் போட்ட கனவான்களே !!! கீழ்க்கண்ட செய்தியை கொஞ்சம் படியுங்கள்:
சமீபத்தில் ஏற்பட்டுள்ள 10 மணி நேர மின்சார வெட்டிற்கான காரணம் பின் வருமாறு:
”தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் 5 உள்ளன.இவற்றில் 4 நிறுவனங்கள் மின் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இந்த 4 நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின் அளவுகள், ஜி.எம்.ஆர். வாசவி 196 MW, பிள்ளை பெரும நல்லூர் 330.5 MW, மதுரை பவர்106MW, சாமல்பட்டி பவர் 105.66 MW. பத்தாண்டுகளுக்கும் மேலாக இவர்கள் தமிழ்நாடு மின் வாரியத்துடன் வணிகம் நடத்தி சம்பாதித்தது 250% லாபம்.
தமிழக முதல்வர் அவர்கள் மின் புதிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்காக ரூபாய் 5995 கோடியை ஒதுக்கியுள்ளார். அந்த மொத்த நிதியும் தங்களுக்கு வரும் என் இந்த தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வாய் பார்த்திருந்தன. அது தங்களுக்கு கிடைக்காமல் போகவே அந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக இந்த மின் உற்பத்தி முடக்கத்தை தொடங்கி தமிழக மக்களைப்பிணையாக்கியுள்ளனர். இதனால்தான் மின்வெட்டு 10 மணி நேரமாக கூடியுள்ளதற்கு காரணம்.
இந்தியாவின் எந்த அணு உலைக்கும் PLF (plant load factor) என்பது 40% மேல் இல்லை. கூடங்குளம் உலை நவீனமானது என்ற அடிப்படையில் ஒரு பேச்சுக்கு PLF 70% என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் 1000 MW மின் உற்பத்தியில் 700 MW தான் வெளிவரும்.இதில் 75 MW உலையை இயக்க தேவைப்படும்.அதாவது 625 MWதான் உலை வளாகத்தைத்தாண்டி வெளியே வரும். இதில் தமிழகத்தின் பங்கு என்பது 45%மட்டுமே. அதாவது 281MW. இதில் மின் சக்தியை தொலைவு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும்போதும், வினியோகிக்கும்போதும் ஏற்படும் இழப்பு 35 %. அதாவது 182.65MW மட்டுமே .தமிழகத்திற்கு கிடைக்கும்.” { தகவல்கள்,தரவுகள் உதவி : உயிர்மை மார்ச் {2012} மாத இதழ் }
மேற்கண்ட காரணிகளின் விளைவாகத்தான் 2 அல்லது 3 மணி நேரம் என இருந்த மின் வெட்டு 10 மணி நேரமானதே தவிர கூடங்குளம் உலை முடக்கம்தான் காரணம் என்பது உண்மைக்கு மாறானது.
மின் வெட்டை கண்டித்த வரைக்கும் சரி.ஆனால் ஆழம் தெரியாமல் கூடங்குளம் உலையை ஆதரித்து இயற்றப்பட்ட தீர்மானத்தின் பின்னணியில் உள்ள அரசியலையும் அபத்தங்களையும் நாம் பேசாமல் இருக்க முடியாது.அந்த வகையில் தீர்மானம் இயற்றிய முஸ்லிம் லீக் கட்சியினருக்கு சில கேள்விகள்;
1. தங்களின் அரசியல் கூட்டணி் பதவியில் இருக்கும்போதுதான் இந்த மின்வெட்டு தொல்லையே தமிழகத்தை பிடித்தாட்டத்தொடங்கியது.அந்த அரசு ்மின் உற்பத்தியில் செய்த கோளாறுகளுக்கும்,குளறுபடிகளுக்கும் நீங்கள் மௌன பார்வையாளராக இருந்தது ஏன்?
2. பேரழிவு மிக்க அணு குண்டையும்,அணு தொழில் நுட்பத்தையும் ஆளும் வர்க்கமும்,ஃபாஸிச பா.ஜ.க. வும்,உயர்சாதி அறிவியல் தொழில்நுட்பவியலாளர்களும் ஆதரிப்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த ஆட்கொல்லி கூட்டணியோடு நீங்கள் ஏன் கை கோர்க்க வேண்டும்?
3. தமிழகத்தில் அணு உலைக்கு ஆதரவான கருத்தை வலிந்து செயற்கையாக உருவாக்க ஆளும் வர்க்கம் பல கோடி ரூபாய்களை வாரி இறைக்கிறதாக செய்திகள் கசிந்து வருகின்றன. இந்த கையூட்டு பணம் அறிவு ஜீவிகள்,ஊடகங்கள்,அரசியல் கட்சிகள்,தன்னார்வ தொண்டு அமைப்புகளை குறி வைத்து பாய்ச்சப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் மக்களைப்பாதிக்கும் தலை போகும் பிரச்சினைகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு அவசர அவசரமாக அணு உலையை ஆதரிக்க துடிப்பது ஏன்?
4. நமதூரில் உள்ள தாரங்கதாரா வேதியியல் ஆலையும் {டி.ஸி.டபிள்யூ} தனது தேவைக்கு கூடுதலாகவே மின் உற்பத்தி செய்து வருகின்றது.நமக்கு தேவையான மின்சாரத்தை அவர்களிடமிருந்து பெறுவதை விட்டு விட்டு எதற்காக அவர்களிடம் சுற்றாடல் காரணங்களுக்காக நாம் போராட வேண்டும்?
கூடங்குளம் அணு உலையினால் யார் தலை உருண்டால் என்ன? எங்களுக்கு தேவை மின்சாரம்தான் என்ற வாதம் சரியென்றால் இதுவும் சரிதானே?
5.முஸ்லிம் எதிர்ப்பையும்,வெறுப்பையும் முழுமுதல் கோட்பாடாக கொண்டு செயல்பட்டு வரும் ஃபாஸிச பா.ஜ..க வினரை மதித்து ஊர் அழைத்து ஊர் கூட்டம் போடும் அளவிற்கு உங்களுக்கு என்ன பிரச்சினை? நெருக்கடி? கட்டுச்சோற்றுக்குள் ஏன் நரியை கட்டுகின்றீர்கள்?
மனித குலத்திற்கு எதிரான, பேரழிவு தன்மை வாய்ந்த ஒரு திட்டத்திற்கு ஆதரவாக கடையடைக்கக்கோரும் உங்களின் முடிவானது வரலாற்றின் தவறான பக்கத்தில் நாம் நின்றதாக என்றென்றைக்கும் பதியப்படும். |