அல்லாஹ் உன் பேரைச் சொல்லி ஆரம்பிக்கும் போது எல்லாமே வெற்றிதானே தோல்வி என்பதேது? தித்திக்கும் தேன்குரலால் திசைதோறும் முழங்குகின்ற, தீன்முரசு உஸ்மான் காக்கா அவர்களது திகட்டாத பாடல் காற்றில் கலந்து நமது காதை நனைக்கின்றது. கண்கள் கண்ணீரில் கரைகின்றது.காலத்தால் காய்ந்துபோகாத இதுபோன்ற ஆயிரமாயிரம் சன்மார்க்கப்பாடல்களை வடித்தெடுத்த அற்புதமான கவிஞர்,காயல்பிறைக்கொடியான் மர்ஹூம் எஸ்.எம்.பி.மஹ்மூது ஹுசைன் தோழப்பா அவர்கள் இந்த மண்ணுலகைப் பிரிந்து ஆண்டுகள் ஐந்து
உருண்டோடி விட்டாலும், தமிழ் இஸ்லாமிய இலக்கியத்திற்காக அவர்கள் ஆற்றிய அருந்தொண்டு, அன்னைத்தமிழ் அகிலத்தில் வாழும்வரை நிலைத்திருக்க,ஏக நாயனை இருகரமேந்தி துஆ செய்து துவங்குகின்றேன்.
அருநகிரி நாதரின் திருப்புகழுக்கு, மறுப்புகளும்,மறுபுகழுமாக,திருப்புகழ் இன்பத்தை வடிவமைத்த வரகவி காசிம் புலவர் நாயகத்தின் ஏழாவது வழித்தோன்றலான கவிஞர் அவர்கள், அன்பும், எளிமையும், நேர்மையும், இறைபக்தியும், தன்னகத்தே நிரம்பப்பெற்ற மிகப்பெரும் சமூக,மத நல்லிணக்கவாதி ஆவார்கள். தனது இளமைக்காலம் தொட்டு, தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தொண்டராக வாழ்ந்த இந்த மாமனிதரை, முஸ்லீம் லீக்கின் சாதாரண உறுப்பினர் முதல்,இயக்கத்தின் தேசியத் தலைவர்கள் வரை அறிந்து வைத்திருந்தார்கள். இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, தாய்ச்சபையால் மாத்திரமே இயலும் என்று உறுதிபட நம்பிய எஸ்.எம்.பி.அவர்கள் தான் சார்ந்த இயக்கப்பற்றின் காரணமாக ' காயல் பிறைக்கொடியான் ' என்ற அடைமொழியில் எழுதிய கவிதைகள், பாடல்கள்,எண்ணிலடங்காதவை.அதிலும் குறிப்பாக நமது நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து பிறைக்கொடியான் வடித்த பாடல்கள் அனைத்தும் பரவசமூட்டக் கூடியவை.
நினைவு யாதும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யாரசூலல்லாஹ்!
அணைந்திடாத உலகஜோதியாய்த் தோன்றி
அகிலமெங்கும் ஒளிதெளித்த யாஹபீபல்லாஹ்!
என்று எழுதிய கவிஞர் அவர்களின் இந்தப்பாடலை,தனது வாழ்நாள் முழுதும், வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பாடி பாடி பரவசம் அடைந்த, நமது மண்ணின் மைந்தன், மர்ஹூம் பாடகர்.ஸாலிஹ் காக்கா அவர்கள் என்றும் நமது நினைவில் போற்றத்தக்கவர். சிறுபள்ளி கட்டிட நிதிக்காக,அன்னார் அவர்கள் இந்தப்பாடலை பாடாத மேடைகளே இல்லை என்று சொல்லலாம். மறைந்த மரியாதைக்குரிய தலைவர்கள் பனாத்வாலா, ஆ.கா.அ.அப்துல்
சமது மற்றும் லீக்கின் நிகழ் தலைவர் பேராசிரியர்.காதர் முஹைதீன், அருமை சகோதரர் அபூபக்கர் ஆகியோரின் அன்பையும்,பாராட்டையும் பெற்ற நமது கவிஞரின் ஏராளமான கவிதைகள் அலங்கரித்த நாட்கள் ' மணிச்சுடர் ' பத்திரிகையின் பொற்காலமாகும்.
இறைநேசர்கள் மீது, இடையறா நேசம் கொண்ட இனிய நம் கவிஞர் ,குத்பு நாயகம் அவர்களின் புகழ்பாடும் இனியபல பாடல்களை தந்தவர் ஆவார்கள். " யாமுஹ்யத்தீனின் நாமம் யாம்புகழ்ந்தோம் பாரிலே "என்ற பாடல், தலைமுறைகளைத் தாண்டியும் நிலைத்து நிற்கின்றது. மகான்.தைக்கா சாஹிபு வலியுல்லாஹ் அவர்களின் மாண்பைக் குறித்த, நூற்றுக்கணக்கான பாடல்கள்,என்றென்றும் பிறைக்கொடியானின் புகழைப்பாடி நிற்கும்.இவற்றுள் ' எழில் முத்துப் போலே 'என்ற பாடல், கடல் கடந்து வாழ்கின்ற தமிழ் முஸ்லிம்களின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்கின்றது.
மார்க்கப்பற்றையும்,தேசப்பற்றையும் தனது இருகண்களாகக் கருதிய கவிஞர் அவர்கள்,'இந்தியா என்னருமைத் தாய்நாடுதான், இதில் இல்லையொரு எள்ளளவும் முரண்பாடுதான் ' என்ற பாடல் உட்பட ஏராளமான தேசியப்பாடல்களை எழுதி இருக்கின்றார். அன்னாரது ஏராளமான பாடல்களை, நமது காயலின் இளம்சிறார்களைப் பாடவைத்து,ஒலிநாடாக்களாக வெளியிட்ட பெருமை 'வாய்ஸ் ஆஃப் இஸ்லாம் ' லரீஃப் அவர்களைச் சாரும். மிகுந்த நகைச்சுவை உணர்வுடைய தோழப்பா அவர்கள் எழுதிய ஹாஷ்யப் பாடல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ' போவோமா குற்றாலம். பெறுவோமே சந்தோஷம்.
மே ஜூன் ஜூலை மாசம், மேலாம் சீசன் காலம் அனுபவிப்போமே சுகந்தானே,அறுந்திடுங் காசு பணம்தானே' என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் அருவியில் குளிப்பது போன்ற ஒரு குதூகலம் ஏற்படும். கவிஞரின் அனைத்து பாடல்களையும் திரட்டி, 'நந்தவனப் பூக்கள்' என்ற தலைப்பில், பேராசிரியர் அவர்களது அன்புக்கரங்களால் வெளியிடச் செய்த வரலாற்றுப் பெருமைக்கு சொந்தக்காரர், கவிஞரின் நண்பரும்,நலவிரும்பியும்,கவிதை மாணவருமான ஏ.ஆர்.தாஹா மற்றும் குழுவினரைச் சாரும்.
'பத்ரீன்களின் தானம் காண,பெரு மாண்புயர் தளங்கள் காண மதிநபியாம் மஹ்மூதவரின் திரு மணிரவ்ழா அதைக்காண அருள்வாயல்லாஹ், ஆவல் நிறைவேற்றல்லாஹ்' என்ற மர்ஹூம்.எஸ்.எம்.பி.அவர்களின் தீராத ஆவலை வல்ல ரஹ்மான் நிறைவேற்றாமலே,அவர்களைத் தன்னிடம்
அழைத்துக் கொண்டான். அன்னாரது ஆவல் நிறைவேற நாளை வரும் மறுமையில், எங்கள் நாயகம் (ஸல்) அவர்களுடன், சுவனப்பதியில் ஒன்றாக இணைந்திருக்க, வல்ல நாயனை, நாம் அனைவரும் மன்றாடி வேண்டுவோமாக!
காயல் பிறைக்கொடியான் அவர்கள்,இந்த பூவுலகைப் பிரிந்து செல்கையில், நெஞ்சுருகி,நமது வலைதளத்தில் நான் எழுதிய ஒரு புதுக்கவிதையை,மீண்டும் உங்கள் பார்வைக்கு வைத்து விடைபெறுகின்றேன். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
மறக்க முடியுமா தோழப்பா!
உங்கள் கரம் பற்றி நடந்த
கவிதை நாட்களை!
சிதறாமல் சேகரித்து
வைத்து இருக்கின்றேன்
உங்கள் பேனா முட்கள் சிந்திய உதிரிப்ப+க்களை!
வெறு(ம்)மை கொண்டு
வடித்ததல்ல உங்கள் கவிதைகள்
அவை எம்மண்ணின் உயிர்மை
அத்துனையும் எங்கள் உரிமை பெருமை.
தாய்ச்சபையின் தலைமகனே!
பிறைக்கொடியே உங்கள் மணிமுடி
சமூக சாக்கடைகளை சுத்தப்படுத்திய
உங்கள் கரங்களில்
எப்போதும் சந்தன வாசம்
நெஞ்சு வலி வந்தபோதும்
நோகாமல் சிரித்த முகம்
தேகபிணி கண்ட போதும்
துவளாத உங்கள் மனம்
நான் அறிந்த கவிஞர்களுள்
மனம் விட்டு சிரிக்கத்தெரிந்தவர்
நீங்கள் மட்டும் தான்!
நீங்கள் இல்லாத வெற்றிடத்தை
உங்கள் கவிதைகளைத்தவிர
காற்றால் கூட நிரப்ப முடியாது.
உளமாற வேண்டுகிறேன் நல்லிறையை
உம் பிழை பொறுத்து சுவனத்தில் சேர்த்திடவே.
|