இன்று நமதூரில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ஆதரவாக முஸ்லிம் லீக் கட்சி கலந்தாலோசனை செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தின் பின்னணியில் இது தொடர்பாக நாம் விவாதிக்க வேண்டும் என்ற எண்ணவோட்டத்தின் அடிப்படையே இக்கட்டுரை உருவாவதற்கு காரணம்.
நமதூரில் மட்டும்தானா மின் வெட்டு நடைமுறையில் உள்ளது? தமிழகம் முழுக்க மின் வெட்டு நடைமுறையில் உள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தைத்திறந்தால் நமது மின் தடை நீங்கும் என்று யார் சொன்னது? அரசியல் வாதிகள் தரும் உத்திரவாதங்கள் ஓடுகின்ற நீரில் உலக்கையால் எழுதப்படவேண்டியவையே.
அணு நிலையங்கள் மூலம் இந்நாட்டுக்கு கிடைக்கும் மின்சாரம் என்பது வெறும் 2% ந்தான். அப்படி உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெரும்பகுதியானது பண முதலைகளின் பாரிய முதலீட்டில் இங்கு நிறுவப்பட்டுள்ள பெரு வணிக நிறுவனங்களுக்கும்,ஆலைகளுக்குமே செல்லும். இந்த ஆலைகள் ஒன்றும் மக்களுக்கு அத்தியாவசியமானவற்றை உற்பத்தி பண்ணக்கூடியவை இல்லை. நுகர்வு வெறியை ஊக்குவிக்கும் ஆடம்பர பொருட்களை தயாரிக்கக்கூடியவை மக்களுக்கும்,சிறு தொழில் நிறுவனங்களுக்கும் பெப்பே தான்.
நடைமுறையில் உள்ள மின் வெட்டிற்கான ஒரே காரணம் கூடங்குளம் ஆலையை திறக்க அனுமதிக்காததுதான் என்ற பரப்புரையில் எந்த நீதியுமில்லை, நியாயமுமில்லை. மின் வெட்டிற்கான உண்மைக்காரணங்கள்
------இருக்கின்ற அனல்(நிலக்கரி), புனல் (நீர்) மின் உற்பத்தி நிலையங்களை முறையாக பராமரிக்காதது, தரமற்ற நிலக்கரியை வாங்கியது, வாங்குவதில் இடம்பெற்ற ஊழல்கள்
-------மாற்றுமுறை மின் உற்பத்தி முறைகளான கதிரொளி முறை (SOLAR ENERGY) சாண எரிவாயு ,கடலலை, காற்றாலை போன்றவற்றை ஊக்குவிக்காதது
-------மின் வினியோகத்தில் ஏற்படும் மின் இழப்பு, ,மின் திருட்டு போன்றவற்றை சரி செய்ய முறையான முயற்சிகளெடுக்காதது
------அரசு அலுவலகங்களிலும்,பொது விழாக்களிலும் விரையமாக்கப்படும் மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வழிமுறைகளைப்பற்றி அலட்டிக்கொள்ளாதது
------மின் உற்பத்திக்கும், மின் தேவைக்கும் இடையே உள்ள இடைவெளியைப்பற்றி எந்த கவலையும்படாதது
------இங்கு கிளைகளைத்திறக்கும் கொள்ளை ஆதாய வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் வீசி எறியும் சில்லறைகளுக்கு கைமாறாக சலுகை விலையில் மின்சாரத்தை அவர்களுக்கு தாரை வார்த்தது.
இந்த குற்றங்களை செய்தது நம் தாய் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களே.
அணு மின் நிலையத்தின் ஆபத்துக்கள்:
நடைமுறையிலிருக்கும் அனைத்து மின் உற்பத்தி முறைகளை விடவும் மிகவும் ஆபத்தானது அணு மின் நிலைய உற்பத்தி முறைதான் என்பதை உலகெங்கிலுமுள்ள மனித நேயமிக்க அறிவியலாளர்கள்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ,மனித உரிமைப்போராளிகள் ஆகியோர் ஆணித்தரமான சான்றுகளுடன் எடுத்துரைக்கின்றனர்.
சாதாரண காலத்தில் அணுமின் நிலையங்கள் ஏற்படுத்தும் கதிரியக்கம்,அணு கழிவு அகற்றல் போன்றவை இன்றளவும் உலகால் தீர்க்கவியலா சிக்கல்களாக நீடிக்கின்றன. அணு விபத்து ஏற்பட்டாலோ சொல்லவே தேவையில்லை. ரஷ்யாவின் செர்னோபில்,ஜப்பானின் ஃப்குஷிமா அணு உலைகளில் நடந்த விபத்துக்கள் ஏற்படுத்திய அனர்த்தங்களை ( புற்று நோயாளிகள் பெருக்கம்,,இறப்பு, மூளை,உடல் உறுப்புக்குறைபாடான குழந்தைகள் பிறப்பு ) என எழுதப்போனால் ஏடு தாங்காது.
அணு உலையும் நமதூரும்:
சில வாரங்களுக்கு முன்னர் அணு மின் நிலைய எதிர்ப்புக்குழுவினர் போராட்டங்களுக்கு நிதி கேட்டு வந்த போது நமதூர் கடைக்காரர்கள் அவர்களை விரட்டியுள்ளனர்.இது மிகவும் வருத்தம் தரும் நிகழ்வாகும். கூடங்குளம் அணு உலையில் ஏதாவது பெரும் விபத்து ஏற்பட்டால் 75 கி.மீ சுற்றளவில் உள்ள ஊர்கள்தான் பெரும் அழிவிற்குள்ளாகும். நமதூரோ இந்த அபாய சுற்றெல்லைக்குள்தான் வருகின்றது.
ஏற்கனவே புற்று நோய் பரவலால் அவதிப்படும் நாம் நமதூரின் எல்லையில் உள்ள வேதியியல் தொழிற்சாலையை குற்றஞ்சாட்டும் நாம் அதை விட பல மடங்கு ஆபத்தான அணு உலை பற்றி கூடங்குளம் மக்கள் தெரிவிக்கும் அச்சத்தையும்,காட்டும் எதிர்ப்பையும் சட்டை செய்யாமலிருப்பது என்ன வகை நீதியோ? ஒரு வேளை நமதூரின் எல்லையில் அணு மின் நிலையம் இருந்தால்தான் நாம் எதிர்ப்போமோ என்னவோ?
|