முந்தைய பதிவில் பெற்றோர்களின் கடமை & இஸ்லாமிய முறையில் குழந்தை வளர்ப்பதின் அவசியத்தை பற்றியும் அலசினோம். இப்பகுதியில் மாணவ சமுதாயத்தை பற்றி பார்க்கலாம்.
ஊருக்கு போகிறோமே என்று அங்குமிங்கும் கடன் வாங்கி மனைவி-மக்களுக்கு வேண்டிய பொருட்களை 'சபர்' வரும் போது வாங்கிவரும் தந்தையை பார்த்து...வாப்பாதான் நல்லா சம்பாதிக்கிறாரே நாம் ஏன் கஷ்டபட்டு படிக்கணும் என்று பள்ளிக்கு ‘கட்’ அடித்து விட்டு சினிமா தியேட்டரில் தன்னுடைய அபிமான ஹீரோ 'என்னாமா' கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை/ஊரை காப்பாத்துறார்னு ‘உணர்ச்சி’ பொங்கும் இவர்களுக்கு, அந்த அரேபிய பாலைவனத்தில் 'நாம் தான் ஒழுங்கா படிக்காமல் இப்படி கஷ்டபடுகின்றோம் நம்முடைய பிள்ளைகளாவது இப்படி கஷ்டபடாமல் இருக்கணுமே’ என்பதற்க்காக தன்னுடைய இளமையையும் ஆசைகளையும் துறந்து உதிரத்தை வியர்வையாக்கி ‘என் பிள்ளைகள்’ நன்றாக படித்து முன்னேறனுமே என்று நினைக்கும் 'தன் தந்தை' ஒரு 'ஹீரோவாக' தெரியாமல் போனது ஒரு துரதிஸ்டமே. ஒரு காலத்தில் கல்வி என்பது நமது சமுதாயத்தினருக்கு எட்டா கனியாய் பாகற்காவாய் கசந்த காலம் போய் இன்று கல்வி கற்று பல துறைகளில் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் பல தேசங்களில் பணி புரிந்து வருகின்றார்கள். ஆனால் நம்முடைய இளைய சமுதாயம் (பெண்கள் உட்பட) போகின்ற பாதையை பார்த்தால் கல்வி கற்க அனுப்ப முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி விடுவார்களோ என்ற பயம் இல்லாமல் இல்லை.
''அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதை யானவர் யார்?'' என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்க்கு நபி (ஸல்) அவர்கள், மூன்று முறையும் ''உன் தாய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5971 . பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று.தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது நபி மொழி என்று பலமுறை கேட்டிருந்தும் நமது மாணவமனிகள் தாயை ஏக வசனத்தில்இங்கே எழுத முடியாத அளவுக்கு திட்டுவார்கள். இதுவும் காலம் காலமாக நமதூரில் தொடர்ந்து வருகிறது. யாரும் இதை சீரியசாக எடுப்பதில்லை.
இன்றைய காலத்து பிள்ளைகள் மேலைநாட்டில் வளரும் பிள்ளைகளை போல் கலாச்சாரத்திலும், உடை நடையிலும், நவீன பொழுது போக்குகளை பயன்படுத்துவதிலும் தாங்களும் மாற/அனுமதிக்க பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அத்தேவையற்ற ‘மாற்றம்’ தான் முதற்பிரச்ச்சனை. கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரவில்லை எனில் அமெரிக்க குழந்தைகள் இந்தியா, சீனா போன்ற மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவர் என்று ஒபாமாவே அச்ச்சபடுகின்றார் என்றால் அதற்க்கு காரணம் நாம் கல்வியில் சிறந்து விளங்குவதினால் தான். நாம் ஒழுங்காக படிக்கிற வரைக்கும் தான் நமக்கு மேலை நாடுகளில் வேலை. ஒழுக்கமும், பெற்றோர்களின் அரவணைப்பும், ஆதரவும், படித்து முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும் பெரும்பாலான மேலை நாட்டு குழந்தைகளுக்கு அமையாத வரைக்கும்தான் நாம் அவர்கள் மண்ணில் ‘அவர்களையே’ வேலை வாங்க முடியும். ஒரு வேளை அவர்களுக்கு இதெல்லாம் அமைந்து விட்டால் அல்லது நமது நாட்டில் கல்வித்திறன் குறைந்து விட்டால் ‘இந்தியர்கள்’ அனைவரும் ஊரை பார்த்து பெட்டி கெட்ட வேண்டியது தான்.
தெருவிலும் விளையாட்டு மைதானத்திலும் விளையாடிய காலம் போய் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் திகழ வேண்டிய இன்றைய மாணவ சமுதாயம் ‘சதா’ வீடியோ கேம்ஸ், டிவி, அலைப்பேசி, கணினி என்று தனிமை/தனியறையில் முடங்கி கிடக்கின்றனர். அத்தனிமைதான் அவர்கள் கெட்டு போவதற்க்கு முதற்ப்படியாகவும், பெற்றவர்களுக்கு அவர்கள் 'தனிமையில்' என்ன செய்கிறார்கள் என்றே தெரியாமல் போகிறது. பின்னர் எதிர்பாராத விபரீதங்கள் நடக்கின்றது. அலைப்பேசி, கணினி,டிவி போன்றவைகளை ‘தேவைக்கு’ பெற்றோர்கள் அனுமதியுடன் அவர்கள் முன்னிலையில் பயன்படுத்தும் போது தவறான எண்ணங்களுக்கு முற்று புள்ளி வைக்க முடியும். இன்டர்நெட் என்பது கூர்மையான கத்தியை போன்றது. அது அறிவையும் வளர்க்கும் அதே நேரத்தில் தீய வழிக்கும் இட்டு செல்லும். இன்டர்நெட் யுகத்தில் புரியாத ஒரு பாடத்தை நீங்கள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தேடினால் நிறைய விபரங்கள் செய்திகளாகவும் செய்முறை வீடியோகளாகவும் கிடைக்கின்றது. சுயமாகவே சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை எத்தனை மாணவர்கள் அதற்காக பயன்படுத்துகிறார்கள்?
மேலை நாடுகளில் பிள்ளைகளின் 18 வயதுக்கு (12th std) மேல் அவர்களை பராமரிக்க வேண்டிய கட்டாயம் பெற்றோர்களுக்கு இல்லை. சரிவராத பிள்ளைகளை வீட்டைவிட்டே துரத்தி விடுகிறார்கள். ஏனென்றால் கல்லூரி படிப்பு நமது நாட்டை போல் அங்கு எல்லோருக்கும் சுலபம் இல்லை. வருடத்திற்க்கு சுமார் $30000 செலவு வரும். அதுவும் படிக்கும் படிப்பையும் யுனிவர்சிட்டியை பொருத்து அமையும். அச்சுமையை சுமக்க அங்குள்ள பெற்றவர்கள் தயாராக இல்லை. இங்குள்ள பெரும்பாலானோர்கள் ‘மாணாக்கர் கடன்’ திட்டத்திலும் பகுதி நேர வேலை (அதாவது கார்வாஷ்) செய்தும் படிக்கின்றார்கள்.ஆனால் நமது நாட்டில் இந்நிலைமை இல்லை. நமது பெற்றோர்கள் பிறந்தது முதல் வேலை கிடைத்து வாழ்க்கையில் செட்டில் ஆகிற வரை தம் பிள்ளைகளுக்கு எவ்வித கஷ்டத்தையும் தராமல் பராமரிக்கின்றார்கள்.அப்பேர்பட்டவர்களுக்கு நாம் செய்கின்ற கைமாறு என்னஎன்று சிந்தித்து அதை படிப்பில் நல்லொழுக்கத்தில் காட்ட வேண்டும்.
“…எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.”
ஒரு காலத்தில் படிப்பில் சுமாராக இருந்தாலும் ஒழுக்கத்தில் உயர்ந்திருந்தார்கள். எதாவது தப்பு செய்ய தோணினால் இறையச்சம் பெற்றோர்கள்,குடும்ப கௌரவம்/ஊர் பண்பாடுகள் தடுத்து விடும். ஆனால் இன்றைய மாணவர்களுக்கு இவைகளில் எதுவும் இருக்கிறதா என்றே தெரியவில்லை.அப்படியிருந்திருந்தால் ‘மாற்று’ மதத்தவனை காதலித்து அவன் மதத்திற்கே (அதாவது இஸ்லாத்தை விட்டே வெளியேறும் அளவுக்கு) மாறும் அவலங்கள் நடக்குமா. யார் எப்படி போனால் நமக்கென்ன என்கிற ‘சுயநலம்’கூட இவர்கள் வழிதவறுவதட்க்கு ஒரு காரணம். ஒரு காலத்தில் பிள்ளை ஒழுங்காக படிக்கவில்லையே என்ற கவலை மட்டும் தான் பெற்றவர்களுக்கு இருந்தது ஆனால் இன்று வெளியில் தலை காட்ட முடியாத அவமானத்தையும் மிகுந்த மன வருத்தத்தையும் ஏற்படுத்தி விடுகின்றனர். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற திருக்குறள் அளவுக்கு உங்களை பெற்றவர்களுக்கு பெருமை சேர்க்க விட்டால் கூட பரவாயில்லை அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் இருந்தாலே நலம்.
சில வருடங்களுக்கு முன் ‘ஆர்குட்’ மூலம் நமதூரை சார்ந்த கடைசி வருடம் பொறியியல் பயிலும் பையன், எனக்கு அமெரிக்கா வந்து MS பண்ண வேண்டும். அது சம்பந்தமாக எனக்கு உதவுங்கள் என்றான். நானும் டபுள் MS படித்த என் நண்பனை அவனுக்கு அறிமுக படுத்தி வைத்து உதவினேன். பின்னர் அந்த பையனிடம் கேட்டேன்...எப்பொழுது MS படிக்க வருகிறாய் என்று. அதற்க்கு அவன் சொன்னான்...எனக்கு மூன்று நான்கு அரியர்ஸ் இருக்கிறது. நான் அதை பாஸ் பண்ணி விட்டு அடுத்த வருடம் வருவேன் என்றான். அரியர்ஸ் வைத்திருந்தாலும் அவனுடைய தன்னம்பிக்கையை வியப்பூட்டியது. இன்றைய மாணவர்கள் தன்னம்பிக்கையில் மிக பலவீனமுள்ளவர்களாக இருக்கின்றார்கள். அதை முதலில் துடைத்தெரிய வேண்டும்.
சமீபத்தில் ஆசிரியர் திட்டியதன் காரணமாக, உடுமலைப்பேட்டை பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை. தேர்வில் வெற்றிபெற தவறியதற்காகவும், ஆசிரியர் திட்டியதற்காகவும், மதிப்பெண் குறைந்ததற்காகவும் தற்கொலை செய்துகொள்ளும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தோல்வியால் துவண்டு உட்காருவதை விட சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயலவேண்டும். குறைவாக வாங்கியதற்காக ஆசிரியர் திட்டினார் என்றால் அடுத்த முறை அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வர வேண்டும். இன்றைய மாணவர்களிடம் போராட்டங்களைச் சந்திக்கும் ‘மனதிடம்’ குறைவாகவே உள்ளது. அவர்கள் வளரும்போதே அப்பருவத்தில் பொதுவாக ஏற்படும் போராட்டங்களைச் சந்திக்கும் மன திடத்தையும் வளர்த்துக் கொள்ள நாம் பழக்க வேண்டும்.
பூக்கள் வசந்த காலத்தில் தான் பூக்கும் அது போல உங்களுடைய பள்ளி பருவம் தான் மாணக்கருடைய வசந்த காலம். அதுதான் நாளை நீங்கள் யார் என்பதனை சொல்லும். ஒரு தடவை சறுக்கி விட்டோம் என்பதற்க்காக படிப்பில் தோற்று விட்டோம் என்று மனம் தளராதீர்கள். நம் மண்டைக்கு ஏறின படிப்பு அவ்வளவுதான் என்ற முடிவுக்கு வராதீர்கள். இயற்பியலில் கோட்டை விட்டு இன்று நமதூருக்கே கணிதம் எடுக்கும் ஆசான் அது போல பணிரெண்டாம் வகுப்பு வரை மிக சாதரணமாக படித்து கல்லூரியில் மிக கடினமாக உழைத்து பல்கலைகழகத்திலே முதல் மாணவனாக திகழ்ந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.
சமீபத்தில் மேலப்பாளையத்தை சார்ந்த சிகாகோ பல்கலைகழகத்தில் MS பயின்றவர் சொன்ன விஷயம். இன்று 'தான்' ஒரு நல்ல மார்க்க பற்றுள்ளவனாக ஒழுக்கமானவனாக இருக்கிறதட்க்கு ஒரே காரணம், அதே பல்கலைகழகத்தில்...படிப்பிலும், ஒரு முஸ்லிம் எப்படி இருக்க வேண்டுமோ அது போன்ற தோற்றத்திலும், மார்க்க ஒழுக்கத்திலும் பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருந்து பேராசிரியர்களிடத்தில் தனக்கென்று நற்பெயரையும் பெற்றிருந்த நமது மாநிலத்தை சேர்ந்த மற்றொரு முஸ்லிம் மாணவர் என்றார். வருடங்கள் பத்தாகியும் அவருடன் பயின்ற மாணவர்களாலும் பேராசிரியர்களாலும் இன்றுவரை பெருமையாக பேச படுகின்றார். இது போன்ற மாணவர்கள் மேலை நாடுகளுக்கு உயர்கல்வி பயில்வதோடு நின்று விடாமல் இஸ்லாத்தின் நறுமணத்தை பல்கலைகழக வளாகத்திலும் வீசி செல்கின்றனர்.
இன்றைய பெற்றோர்கள் தனக்கென்று என்று எதையும் பிள்ளைகளிடம் எதிர் பார்ப்பதில்லை.அவர்கள் எதிர் பார்ப்பு எல்லாம் பிள்ளைகள் நன்றாக படித்து வாழ்வில் முன்னேறி மார்க்க நெறிபடி நடக்க வேண்டும் என்பதே. தன்னுடைய கருத்து பதிவில் மக்கி நூஹு தம்பி காக்கா உல பூரிப்பு அடைந்து கூறியது போல் (அதாவது எனது மக்கள் அனுப்பிய மடிக்கணினியை எப்படி இயக்க வேண்டும் என்ற அறிவை அவர்களிடமிருந்தே கற்றுக்கொண்டேன். புதுயுகத்தில் இருக்கும் எனது மக்கள் அல்லாஹ்வின் பேருதவியால் "இஸ்லாமிய உணர்வுகளுடனும் வாழ்ந்து வருகிறார்கள்") அது போன்ற ஒரு சந்தோசத்தை உங்களை பெற்றவர்களுக்கும் கொடுங்கள்.
நண்பா (மச்சான்) ! உன்னை போல் நானும் நன்றாக படித்திருந்தால் இன்றைக்கு உன்னை போல் நல்ல வேலையில் இருந்திருப்பேன். என்னுடைய குடும்பமும் நல்ல நிலையில் இருந்திருக்கும் என்று அன்று படிப்பில் கோட்டை விட்டவர்கள் /கவனக்குறைவாக இருந்தவர்கள் இன்று வருந்தி தன் சக நண்பர்களிடம் கூற கேட்டிருப்போம். இது போல் இன்றைய மாணவசெல்வங்களும் நாளை உங்கள் நண்பர்களிடம் கூறாதிருக்க வேண்டும் என்றால்...இன்றே விழித்து கொள்ளுங்கள். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பார்களே அது போல ஆகி விடாமல் பார்த்து கொள்ளுங்கள்!!
வல்ல இறைவன் நம் இளைய சமுதாயத்தினருக்கு நேர் வழியையும் மார்க்க ஒழுக்கத்துடன் கூடிய கல்வியையும் தருவானாக!!
(இறைவன் நாடினால் தொடரும்)
|