மாணவர்கள் மீது பெரும்பாலான பெற்றோர்களுக்கு அக்கறை இருப்பது இல்லை என்பதையே இன்றைய நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. மாணவர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கூடம் செல்வது இல்லை. அடிக்கடி விடுமுறை எடுக்கின்றனர். சிலர் டியூஷன் படிக்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு விளையாட போகின்றனர். இவைகளை எல்லாம் பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை நேர்வழிப் படுத்துவதில்லை.
சென்ற பத்து நாட்களாக நமது ஊரின் சில பகுதிகளில் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பம்பரம் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள். பள்ளிக்கூடத்திற்கு லீவு போட்டுவிட்டு எந்நேரமும் ரோட்டிலே பம்பரத்துடனே இரவு, பகலாக விளையாடிக் கொடிருக்கின்றனர்.
அவர்களிடம், தம்பி இந்த நேரத்தில் (இரவு 9 மணி) ஏன் விளையாடுகிறீர்கள்? படிக்கவில்லையா? என்று கேட்டால், நாங்கள் 7 ஆவது வகுப்புங்கோ! 10 ஆவது வகுப்பு படிக்கிறான் அவனே விளையாடுகிறான் பாருங்கோ! என்கிறான். 10 ஆவது படிக்கும் மாணவனை கூப்பிட்டு அறிவுரை சொன்னவுடனே, சரிங்க படிக்க போகிறேன் என்று சொல்லி போய் விட்டான்.
மறுநாள் மதியம் 2 1/2 மணிக்கு கூட்டமாக என் வீட்டருகில் பம்பரம் விளையாடி கொண்டிருந்தனர், என்னுடன் வந்த ஒரு பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகளில் ஒருவர் , பம்பரம் விளையாடிக்கொண்டிருந்த 8 ஆவது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை அழைத்து ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை என்றார், அதற்கு அவன் திருச்செந்தூருக்கு டாக்டரை பார்க்கப் போகிறேன் அதனால் பள்ளிகூடம் செல்லவில்லை என்றான், என்னிடம் வந்து அனுமதி வாங்கினாயா என்றார். இல்லை நாளை வந்து உங்களிடம் சொல்வேன் என்றான். ஏம்பா! விடுமுறை எடுப்பதற்கு முன்பு அனுமதி வாங்குவியா ? அல்லது விடுமுறை எடுத்தபின் அனுமதி கேட்பியா ? இது என்ன முறை என்று கூறிவிட்டு அவனுடைய பெயர் விவரங்களை வாங்கி செல்கிறார்.
மாணவர்கள் விளையாடுவதை குறையாக சொல்லவில்லை. அதுவும் கம்ப்யூட்டர் கேம், வீடியோ கேம் மற்றும் டிவி என்று வீணாக பொழுதை போக்குவதைவிட இப்படி வெளியே வந்து விளையாடுவது உடலுக்கும் , மனதுக்கும் சிறந்ததுதான் இருந்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இந்த காலம்தான் சரி இல்லை. காரணம் மாணவர்கள் தற்போது படித்துக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்கு மாறுவதற்காக பரீட்சை எழுத கூடிய காலம் இது.
முதல் வகுப்பு மாணவராக இருந்தாலும் சரி அல்லது 11 ஆவது வகுப்பு மாணவராக இருந்தாலும் சரி பரீட்சைக்கு நெருக்கமான இந்த நாட்களில் அவர்கள் நன்றாக படித்து பரீட்சை எழுதினால்தான் நல்ல மார்க்குகளை எடுத்து பாஸாக முடியும். பிற்காலத்திலும் அவர்கள் மேற்படிப்புகளை அதிக அக்கறையுடன் படித்து முன்னேற வாய்ப்பளிக்கும்.
சின்ன வகுப்புத்தானே எப்படியும் பாஸாகிவிடலாம் , எட்டாவது வகுப்புவரை எல்லா மாணவர்களுக்கும் அந்த சலுகை அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறதே என்று ஒரு மாணவரோ அல்லது அவருடைய பெற்றோரோ நினைத்தார்களானால் அது தவறு. அப்படி நினைப்பது மாணவருடைய முன்னேற்றத்திற்கு தடையை ஏற்படுத்தக்கூடிய ஒரு வழியாகும்.
நேர்மையற்ற அரசியல்வாதிகளால் நடத்தப்படும் அரசுகள் நிச்சயமாக நேர்மையானதாக இருக்க முடியாது - ஆகவே அரசாங்கங்கள் கொடுக்கும் இந்த சலுகையானது அறிவுப்பூர்வமானதல்ல. ஒரு மாணவன் கற்றுத்தேர்ந்து சிறந்த மனிதனாக வளர வேண்டும் என்றால் அவன் ஆரம்பம் முதலே, சிறுவனாக இருக்கும்போதே நல்லது எது ? கெட்டது எது ? என்பதையும் வெற்றித் தோல்வியையும் உணர்ந்தவனாக வளர வேண்டும்.
அதல்லாமல் முதல் வகுப்பு முதல் 8 ஆவது வகுப்புவரை தோல்வி என்றால் என்ன என்பதை என்னவென்று விளங்கிக் கொள்ளாமல் வளரச்செய்து விட்டு, அவன் 13 , 14 வயது டீன்னேஜ் மாணவனாக வளர்ந்து 9 ஆவது வகுப்பு படிக்கும்போது அவனுக்கு தோல்வியைப் பற்றி உணர்வுப்பூர்வமாக , செயல் ரீதியாக காட்டினால் அவனுடைய மன நிலை என்னவாகும் ?. எனவே பெற்றோர்கள்தான் பிள்ளைகள் மீது அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
8 ஆவது வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் கட்டாய தேர்ச்சிப் பெறச்செய்வது எவ்வளவு மோசமான செயல் என்பதற்கு உதாரணம் இந்த வாரம் ஒரு நாளிதழில் வெளியான செய்தியாகும். அந்த செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்கள் கல்வியை பற்றிய ஆய்வு நடத்தியதில் 5 ஆம் வகுப்பு மாணவர்களில் 32 % மாணவர்களுக்குத்தான் எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிகிறதாம், 8 ஆம் வகுப்பில் 66 % மாணவர்களுக்குத்தான் எளிய தமிழை படிக்க இயலுகிறதாம்.
அடுத்து 5 ஆம் வகுப்பில் 45 % மாணவர்களால் கழித்தல் கணக்கு மட்டுமே செய்ய முடியும் 14 % மாணவர்களுக்கு மட்டுமே கழித்தல் , வகுத்தல் இரண்டையும் செய்ய இயலுகிறதாம்.
8 ஆவது வகுப்பில் கழித்தல் மற்றும் வகுத்தல் இரண்டும் செய்யக்கூடியவர்கள் 45 % மாணவர்கள்தானாம்.
மேலும் 5 ஆம் வகுப்பு மாணவர்களிடம் 2 ஆம் வகுப்பு தமிழ் பாட நூலைக் கொடுத்து படிக்கச் சொன்னபோது அரசு பள்ளி மாணவர்களில் 68 % திணறினார்களாம் - தனியார் பள்ளி மாணவர்களில் 66 % திணறினார்களாம்.
நமது கல்வியின் தரம் இந்த நிலையில் இருந்தால் வருங்கால மாணவர்களின் கல்வித் தரம் என்னவாகும் என்பதை சற்று யோசித்து பாருங்கள். எட்டாம் வகுப்பு வரை எல்லோரையும் தேர்ச்சிப்பெற செய்தால் கல்வித்தரம் இப்படித்தான் இருக்கும். எனவே அரசாங்கத்தை நம்பி பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சிதைக்க வேண்டாம்.
குடி குடியை கெடுக்கும் என்று விளம்பரம் செய்து விட்டு அரசாங்கமே மது கடைகளை திறந்து விற்பனை செய்கிறது. புகைப் பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு , கேன்சர் நோய் வரும் என்று சிகரெட் பெட்டிகளில் படங்கள் போட்டு விளம்பரம் செய்து, அந்த சிகரெட்டை விற்பதற்கு அனுமதிக்கிறது.
எனவே அரசாங்கம் மக்களை படுகுழியில் தள்ளுகிறதே தவிர , மக்களுக்கு நன்மையை செய்யவில்லை. இதுபோன்றுதான் 8 ஆம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் தேர்ச்சிப் பெறச்செய்வது என்பது. எனவே பெற்றோர்களே! உஷாராக இருங்கள். உங்கள் மக்களின் எதிர்காலம் உங்கள் கையில்தான் , அரசாங்கம் கொடுக்கும் சலுகையில் இல்லை என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.
பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளை அடிக்க வேண்டிய நேரத்தில் அடித்தும் , அரவணைக்க வேண்டியபோது அரவணைத்தும் நடந்தால் உங்கள் பிள்ளைகள் உங்களைவிட நல்லவர்களாக , மேலானவர்களாக வளர்வார்கள்.
உங்கள் அன்பு செல்வங்களுக்காக உங்கள் பொழுதுபோக்குகளை தவிர்த்து , கொஞ்சம் தியாகம் செய்து , அவர்களை நல்லவர்களாக வளர்த்தால் - இப்பொழுதும் சந்தோஷமாக உங்கள் வாழ்வு அமையும் , வயோதிக காலத்திலும் நீங்கள் நிம்மதியாக மிகவும் சந்தோஷமாக உங்கள் காலத்தை கழிக்கலாம். இது அனுபவப்பூர்வமான உண்மை என்பதை அறியத்தருகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ்! பெற்றோர்கள் அனைவரையும் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்தி வளர்க்கவும் அந்த பிள்ளைகள் பெற்றோர்களை நல்ல மரியாதையுடன் நடத்தவும் கிருபை செய்வானாக ஆமீன். |