நோம்பு மாசம் வந்தாச்சி...!
அது என்ன நோம்பு மாசம்...?
ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆங்கில மாதங்களை சிறிதும் தயக்கமின்றிச் சொல்லும் நம் பிள்ளைகள். ஏன், சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதங்களைக் கூட அழகாகச் சொல்லிவிடும். ஆனால், முஹர்ரம் முதல் துல்ஹஜ் வரை ஹிஜ்ரீ மாதங்களையெல்லாம் கேட்கக் கூடாது. அது, பரீட்சை நேரத்தில் மட்டும் மனப்பாடம் செய்யவும், வளர்ந்து ஆளான பிறகு திருமணத்திற்கு நாள் குறிக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது நமதூரின் எழுதப்படாத விதியாகவே இன்றளவும் உள்ளது.
போதிய விபரங்களைப் பெற்றிராத நம் முன்னோர்கள் கூட, ரபீஉல் அவ்வல் மாதத்தை ‘ஸுப்ஹான மவ்லூது மாசம்’ என்றும், ரபீஉல் ஆகிர் மாதத்தை ‘முஹ்யித்தீன் மவ்லூது மாசம்’ என்றும், ரஜப் மாதத்தை ‘புகாரி ஷரீபு மாசம்’ என்றும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட மொழிகளிலேயே கூறி வந்தனர். இன்றும் கூறி வருகின்றனர். அந்த வரிசையில்தான் புனித ரமழான் மாதமும் ‘நோம்(ன்)பு மாசம்’ என்று அழைக்கப்படுகிறது.
ரமழானுக்கு முந்திய ஷஃபான் மாதம் துவங்கிவிட்டால், காயல்பட்டினம் ஆண்கள் அரபிக் கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாக்கள் நடத்தப்பட்டு, கல்லூரி விடுமுறையும் அளிக்கப்படும். அம்மாதத்தின் பிற்பாதி துவங்கிவிட்டால், ரமழான் தலைப்பிறை குறித்த சர்ச்சைகளும் துவங்கிவிடும். முன்பு வாயளவிலும், பின்னர் எழுத்தளவிலும், தொலைபேசிகள் மூலமாகவும் மட்டுமே விவாதிக்கப்பட்டு வந்த இந்த தலைப்பிறை சர்ச்சை, இன்று ‘ஃபேஸ்புக்’கையும் நிறைத்துக் கொண்டிருக்கிறது. “நான் சொல்வதே சரி” என தம் கருத்துக்காக முகநூலில் மல்லுக்கட்டும் யாருக்குமே புரிவதில்லை அதை முஸ்லிம்கள் மட்டும் பார்க்கவில்லை என்பது!
ஒரு சாரார் சந்திர ஓட்டத்தைக் கணக்கிட்டு ரமழான் முதல் நாளை அறிவிப்பர். மறுசாரார் சர்வதேச பிறைத் தகவல் அடிப்படையில் அறிவிப்பு வெளியிடுவர். இன்னொரு சாரார் ஊரிலுள்ள இரண்டு அரபிக் கல்லூரிகளில் கலந்தாலோசித்து வெளியிடப்படும் அறிவிப்புகள் அடிப்படையில் செயல்படுவர். இவ்வாறாக ஒரு வகையாக ரமழான் நோன்பு துவங்கும்.
அசைவமின்றி ஸஹர் உணவு ஹல்கை (தொண்டைக் குழியை)த் தாண்டாது. ரமழான் முடியும் வரை அதிகாலை ஃபஜ்ர் தொழுகையில் பள்ளிவாசல்களில் வரிசைகள் ஓரளவுக்கு நிரம்பும். தொழுத வேகத்தில் துவங்கும் உறக்கம், குழந்தைகளுக்கான பள்ளிக்கூட நாட்களில் பெற்றோருக்கு காலை 8 மணி வரையிலும், விடுமுறை நாட்களாயின் 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் கூட நீடிக்கும். சிறிது வேலைகளைப் பார்த்த பின் மீண்டும் தொடரும் உறக்கம் அஸ்ர் வரை நீடிக்கும்.
“நோன்பு நோற்றுக்கொண்டு உறங்குவதும் நன்மையே!” என்ற கருத்தை முன்வைத்துக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நீண்ட நேர உறக்கம் சில காலமாக விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், தற்காலத்தைப் பொருத்த வரை - இருவர் கூடிவிட்டால், கிடைத்தவர்களையெல்லாம் கழுவிக் குடிக்கும் நிலையையும், தொலைதொடர்புக் கருவிகளில் நேரத்தைத் தொலைப்பதையும் பார்க்கும்போது, உறக்கம் எவ்வளவோ மேல் என்றே தோன்றுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நோன்பு கால மாலை நேரங்களில், வீடுகள் களை கட்டும். அவரவருக்குத் தெரிந்த வடைக்கலையெல்லாம் அடுப்பேறும். சமைத்தது, பொரித்தது என நோன்பு துறக்க வகை வகையாகப் பரத்தி வைக்கப்பட்டிருக்கும். இப்போதுதான் நம் பெண்களுக்கு உடல் வளைவதே இல்லையே...? எனவே, கடைகளிலிருந்து வாங்கி வரப்படுகிறது.
ஆண்கள் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் நோன்பு துறப்பர். சிலர் வீடுகளில் துறந்துவிட்டு, பள்ளிவாசலுக்குத் தொழ வருவர். பின்னர் வீடுகளில் சிறிது ஊண், உறக்கம் முடித்துவிட்டு, தராவீஹ் தொழுகைக்காக பள்ளிவாசல்களுக்குத் திரண்டு செல்வர் ஆண்கள். பெண்கள் அவர்களுக்கான தைக்காக்களிலும், சில இடங்களில் பள்ளிவாசல்களில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் தொழுகையை நிறைவேற்றுவர்.
பின்னர், விரும்புவோர் இரவுணவு உண்பர். மற்றவர்கள் நோன்பு நோற்பதற்காக நள்ளிரவு 03.30 மணியளவில் ஸஹர் உணவு மட்டும் உண்பர்.
திருக்குர்ஆனோடு தொடர்புள்ளவர்கள், இந்த ரமழான் மாதத்தில் கூடுதல் நேரம் எடுத்து, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அதனைப் பொருளறிந்தோ - அறியாமலோ ஓதி நன்மைகளைச் சேர்ப்பர். இவையே காயல்பட்டினத்தில் ரமழான் மாதத்தின் ஒருநாள் காட்சிகள்.
“சரி, இப்ப என்ன சொல்ல வர்றே...?”
நோன்பாளிகள் அதிகாலை சுமார் 05.00 மணி முதல் மாலை 06.30 மணி வரை கிட்டத்தட்ட 13 முதல் 14 மணி நேரங்கள் உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பர். சுவையான உணவு சட்டி நிறைய இருக்கும்... நல்ல குளிர்பானம் குளிர்சாதனப் பெட்டியில் அமர்ந்துகொண்டு அழைக்கும். பார்வைக்கழகாக இல்லத்தரசியும் இருப்பார். பார்க்க யாருமே இல்லாவிட்டாலும் கூட நோன்பாளிகள் உண்ணவோ, பருகவோ, வீடுகூடவோ மாட்டார்கள்.
“யாரு பார்க்கப் போறாங்க...? ஒருத்தரும்தான் இங்கு இல்லையே...?” என - நோன்பு நோற்ற யாரிடம் கேட்டாலும் அவர் சொல்லும் மறுமொழி, “படச்ச ரப்பு (இறைவன்) பார்க்காமலா இருப்பான்...?” என்பதாகவே இருக்கும்.
யார் பார்க்காவிட்டாலும், இறைவன் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான் என்ற எண்ணம்தான் இந்த நோன்பின் அடிப்படை. இந்த எண்ணம், இஸ்லாம் மார்க்கத்தை நன்கு கற்றுணர்ந்தவர்களை மட்டுமின்றி, நோன்பு நோற்கும் பாமர முஸ்லிமிடமும் கூட வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனால், இந்த தாக்கம் நாள்தோறும் நோன்பு துறந்ததோடு முடிந்துவிடுவது ஏன்? மொத்தத் தாக்கமும் ரமழான் மாதம் முற்றுப்பெற்றதோடு முடிந்து போவது ஏன்? என்ற கேள்விகளுக்கு நாம் விளங்கியும் விடையளிக்க மறுக்கிறோம்.
வாய் திறந்தாலே காது கூசும் சொற்களையே பேசிப் பழகியவர்கள் பலர் நோன்பு நோற்றிருக்கும்போது கட்டுப்பாட்டுடன் இருக்கின்றனர். வெளியிடும் மூச்சுக் காற்றெல்லாம் செய்யது பீடியில் துவங்கி, கோல்ட் ஃப்ளேக், மார்ல்பொரோ சிகரெட் புகைகளாகவே விட்டுத் தள்ளிக்கொண்டு, “ஐந்து நிமிடங்கள் கூட புகை பிடிக்காமல் என்னால் இருக்க முடியாது” என்று கூறிக்கொண்டிருப்பவர்களெல்லாம், அதிகாலை முதல் நோன்பு துறக்கும் வரை காத்திருக்கத்தான் செய்கின்றனர்.
கஞ்சி உள்ளே இறங்கிய சில விநாடிகளில் காய்ந்த பீடியும் இறங்குவது ஏன்? அதிகாலை முதல் இரவு துவக்கம் வரை - இறைவன் பார்க்கிறான் என்ற ஒரே காரணத்திற்காக எல்லாத் தீமைகளையும் விட்டவர்கள், நோன்பு துறந்தவுடன் மீண்டும் அதைக் கையிலெடுக்கிறார்கள் என்றால், ஒருவேளை நோன்பு துறந்த பின் இறைவன் யாரையும் பார்ப்பதில்லையோ...? ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறானோ...?
பள்ளிவாசல்களில் நோன்பு துறக்கும் இஃப்தார் நிகழ்ச்சிகள் நிறைவுற்ற பின்னர், அதன் சுற்றுப்புறங்களில் தண்டவாளம் இல்லாமலேயே ரயில் ஓடும். அப்படி ரயில் ஓட்டிக்கொண்டிருந்த ஒருவருடனான எனது உரையாடல்:
“காக்கா, காலையிலேர்ந்து கட்டுப்பாடாத்தானே இருந்தீங்க... இப்ப ஏன் காக்கா இதைக் கையில் எடுத்தீங்க...?”
“என்னடா செய்ய...? சனியத்த உட்டுத் தொலைக்கத்தான் நெனைக்கிறேன்... முடிய மாட்டேங்குதே...?”
“ஏன் காக்கா உங்களையும் அறியாம பொய் சொல்றீங்க...? செய்ன் ஸ்மோக்கரான நீங்க, நோன்பு பிடிச்சிட்டா, காலையிலிருந்து நைட் வரைக்கும் விடத்தானே செய்றீங்க...? அப்ப மட்டும் எப்டி முடியுது...?
“அட, அதுக்காக நோம்பு புடிச்சிகிட்டா சிகரெட் பத்த வைக்க சொல்றா...? நோம்பு முறிஞ்சுடுமேடா...?”
“யாரு காக்கா பார்க்கப் போறாங்க...?”
“உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு...? அல்லா பாக்க மாட்டானா...?”
“ஓஹோ...? அப்டீன்னா, அப்ப பார்க்கிற அல்லாஹ் இப்ப மட்டும் பார்க்க மாட்டானா...?”
“சரி, சரி... விடு! நீ என்ன சொல்ல வர்றான்னு புரியுது!! சீக்கிரமே ஸ்டாப் பண்ணிடுறேன்...!”
வருடம் தவறாமல் வாக்களிக்கும் இப்படிப்பட்டவர்கள் நிறைய பேரை நான் பார்த்திருக்கிறேன்.
வாயைத் திறந்தாலே அடுத்தவர் பற்றிப் புறம் மட்டுமே பேசிக்கொண்டிருப்போர் கூட, நோன்பு நோற்றிருக்கும்போது, “ச்சே நோம்பு பிடிச்சிட்டு இப்டியெல்லாம் பேசக்கூடாது...” என்று இருப்பர். நோன்பு துறந்தவுடன் மீண்டும் துவக்கிவிடுவர்.
நோன்பு நோற்றிருக்கும்போது பார்க்கும் இறைவன் இதர நேரங்களிலும் பார்க்கிறான் என்பதை இவர்கள் அறிந்தும் உணர்வதில்லை என்பதையே இது உணர்த்துகிறது. நோன்பு நோற்ற நிலையில் ஒரு குணத்தோடும், நோன்பு துறந்தவுடன் இன்னொரு குணத்தோடும் நடப்பவர்கள் யாவருமே, “நோம்பு பிடிச்சிட்டுதான் இதெல்லாம் செய்யக் கூடாது” என்றே நினைத்துக்கொண்டுள்ளனர்.
“கெட்ட பேச்சுக்களையும், அதனடிப்படையில் செயல்படுவதையும் எவன் விட்டுவிடவில்லையோ, அவன் அவனது உணவையோ, குடிப்பையோ விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை...” என்ற நபிகளாரின் பொன்மொழி உணர்த்துவதென்ன? “நீங்கள் பட்டினி கிடப்பது முக்கியமில்லை... தாகத்தோடு இருப்பது முக்கியமில்லை... வீடு கூடாமல் இருப்பது முக்கியமில்லை... இறைவனாகிய நான் தடுத்தேன் என்பதற்காக, மற்ற நாட்களில் உனக்கு அனுமதிக்கப்பட்டவற்றைக் கூட நோன்பு நோற்ற நிலையில் தவிர்த்த நீ, அனுமதிக்கப்படாதவற்றை எக்காலத்திலும் செய்யக் கூடாது...” என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
நோன்பு குறித்து பேசும் சில மார்க்க அறிஞர்களும் கூட,
“நோன்பாளி சளியை விழுங்கலாமா...?”
“பேஸ்ட் வைத்து பல் துலக்கலாமா...?”
“அத்தர், ஸ்ப்ரே அடிக்கலாமா...?”
என்பன பற்றியெல்லாம் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு, நோன்பின் அடிப்படை நோக்கம் குறித்து சிறிதும் பேசாமலேயே இருந்துவிடுகின்றனர்.
பசியோ, தாகமோ முக்கியமில்லை; பயிற்சியே முக்கியம் என்பதை உணர்த்தும் சில வழிகாட்டல்களைப் பாருங்கள்:-
நோன்பு நோற்ற நிலையில், மறதியில் சாப்பிட்டுவிட்ட ஒருவர் அதுகுறித்து நபிகளாரிடம் கேட்டபோது, “உன் நோன்பு முறிந்துவிட்டது” என்று கூறவில்லை. மாறாக, “அது அவருக்கு அல்லாஹ் அருளியது” என்றார்கள்.
நோன்பு நோற்பதற்காக ஸஹர் உணவு உண்டுகொண்டிருந்த நிலையில் அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பப்பட்டுவிட்டால், “உணவைத் தவிர்க்கத் தேவையில்லை... (புதிதாக உணவைத் தட்டில் ஏற்றாமல், ஏற்கனவே) தட்டில் உள்ளவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு எழலாம்” என்கிறது இஸ்லாம்.
நோன்பு நோற்றுவிட்டு, உணர்வு மேலீட்டால் வீடுகூடிவிட்ட ஒரு நபித்தோழர் நபிகளாரிடம் வந்து பரிகாரம் கேட்க, தொடர்ந்து 60 நோன்புகள் நோற்கச் சொல்கிறார்கள். தான் பலவீனமானவன் என்றும், தன்னால் தொடர்ச்சியாக நோன்பு நோற்க இயலாது என்றும் கூற, 60 ஏழைகளுக்கு உணவளிக்கச் சொல்கிறார்கள் நபிகளார். அந்தளவுக்கு தன்னிடம் வசதியில்லை என்று அவர் மீண்டும் கூற, பைத்துல் மால் எனும் பொதுக் கருவூலத்திலிருந்து பேரீத்தம்பழங்களை எடுத்துக்கொடுத்து, “இவற்றை 60 ஏழைகளுக்குப் பகிர்ந்தளியுங்கள்!” என்று கூறுகிறார்கள் நபிகளார்.
“அல்லாஹ்வின் தூதரே! இந்த மதீனா நகரில் என்னை விட ஏழ்மை நிலையில் யார் இருக்கிறார்...?” என்று அந்த நபித்தோழர் அப்பாவித்தனமாகக் கூற, அண்ணல் நபிகளார் தம் கடைவாய்ப் பல் தெரிய சிரித்துவிட்டு, அப்பழங்கள் அனைத்தையும் அந்த நபித்தோழரையே பயன்படுத்தச் சொல்லி அனுப்புகிறார்கள்.
நோன்பாளிகளுக்குத் தடுக்கப்பட்ட ஒரு பெரும் செயலையே (தாம் அறியாத நிலையில்) செய்துவிட்டவர்களைக் கூட நபிகளார் தண்டிக்கவில்லை; கண்டிக்கவுமில்லை என்றால், இந்த நோன்பைக் கொண்டு இறைவனும், இறைத்தூதரும் நாடுவதென்ன என்பதை இப்போது விளங்க முடிகிறதல்லவா?
அப்படியானால், நோன்பு நோற்ற நிலையில் நாம் தவிர்த்த புறம் பேசல், பொய் சொல்லல், பிறரைத் துருவித் துருவி ஆராய்தல், உறவுகளில் பிரச்சினை ஏற்படுத்தல், புகைப்பிடித்தல் போன்ற தீய செயல்களை எல்லாக் காலங்களிலும் நாம் தவிர்க்கத் துணியவில்லையெனில்,
வெறுமனே நாம் பசித்திருந்தோம், தாகித்திருந்தோம் என்பதைத் தவிர - அந்த நோன்பைக் கொண்டு வேறென்ன கிடைத்துவிடப் போகிறது...?
கட்டுமஸ்தான கராத்தே மாஸ்டரிடம் காலங்காலமாகப் பயிற்சியெடுத்து, கருப்புப் பட்டையெல்லாம் வாங்கிய பின்பு, முன்பின் தெரியாதவரிடம் தர்ம அடி வாங்கி முகம் முழுக்க தையலுடன் நிற்பவருக்கும், ‘நம்ம நோன்பாளி’க்கும் என்ன பெரிய வேறுபாடு இருக்கப் போகிறது...??? |