இணையதள இனிய வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
‘நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம், சிந்திக்க வேண்டாமா’ என்ற இரண்டாம் பாகக் கட்டுரையை படித்த பலர் நேரில் கண்ட இடங்களில் எல்லாம் பாராட்டு மழை தந்தார்கள். நல்ல ஐடியா. வீடு கட்டுவோரை விழிப்படையச் செய்திருக்கிறீர்கள் என்று கூறி, தட்டிக்கொடுத்து புகழாரம் சூடி சென்றனர்.
இதற்குக் காரணம் எழுதவும், சிந்திக்கவும் செய்த வல்ல இறைவனுக்கு நன்றி கூறிக்கொண்டேன். உங்கள் ஐடியா படி பள்ளிவாசலுக்கு புதிய தொழில் கிடைக்குமு். முஹல்லாவாசிகளில் வீடு கட்டிய பல பொருட்களை அவர்களாகவே எடுது்து வீட்டுக்காரர்கள் சிறு செலவில் பள்ளி மையவாடியின் மறுபகுதி காலியான இடத்தில் போட்டு வைத்து, வேலையில்லாத தெருவாசிகள் அழகாக தொழில் முதல் இல்லாமல் இதைக் கொண்டு செய்ய முடியும்.
இதுவரை வீடுகட்டுமுன் அல்லது கட்டிய பின் மீதும் ஆகிய பொருட்களை காசு ஆக்காமல் விட்டதால் மேஸ்திரி அண்ணன்கள் எடுத்துப்போய், நம் மார்க்கத்துக்கு ஒவ்வாத பல்வேறு காரியங்களுக்கும் பயன்படுத்துவது தெரிய வருகிறது என்று பலர் சொன்னார்கள். ஒரு சமயம் நமதூர் இணையதளம் ஒன்றில் ஒரு கட்டுரையில் பார்த்த தகவல்: நமதூருக்கு வரும் செங்கல், ஜல்லி கல், மணல் வழி நெடுக உள்ள சாலையோர கோவில் கட்ட அங்கு செங்கல்கள் 10 என போட்டு விடுவார்கள். வேறு சில கட்டிடப் பொருட்களிலும் முறைகேடுகளைச் செய்ததாக அறிய முடிகிறது. நான் ஏதோ துவேஷத்தில் இதை எழுதுவதாக யாரும் கருதிவிடக் கூடாது. அவரவர் காசில் அவரவர் வழிபாட்டுத் தலங்களை முறையான இடங்களில் கட்டுவது தவறில்லை. என் காசில் வாங்கப்பட்ட பொருட்களை எங்கோ கொண்டு போடுவதற்கு நான் ஏன் சம்மதிக்க வேண்டும்? இதுபோன்ற ஒரு சம்பவத்தில், மணல், செங்கல் குறைவது கண்டுபிடிக்கப்பட்டவுடன் நடவடிக்கைக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது. காரணம், மேஸ்திரியிடம் மொத்த ஒப்பந்தம் கையெழுத்து ஆகி பல லட்சம் பணம் நம்பிக்கையின் பெயரில் கைமாற்றப்பட்டுவிட்டதாம்.
சமீபத்தில், நமது வேலையில்லாத வாலிபர்களின் கண்காணிப்பில் செங்கல் எண்ணப்பட்டபோது பெரும் எண்ணிக்கையில் செங்கல்கள் ஒரு லாரிக்கு குறைவாகவும், அவற்றில் 500க்கும் மேற்பட்ட செங்கல்கள் உடைந்த நிலையிலும் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம். உடைந்த செங்கல் விலை மிக மிகக் குறைவு. நமது பிள்ளைகள் வெளிநாடுகளில் நிறைய கஷ்டங்களுக்கு மத்தியிலேயே பணத்தை அனுப்புகின்றனர். மிஷின் போட்டு நோட்டு அடிக்கவில்லை. தலை வெடிக்கும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து, அதன் வழியாக பணத்தைத் தேடி தாயார் / மனைவி மற்றும் மகள்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். (இந்தப் பணத்தில் வீடுகட்ட அவர்களின் கடின உழைப்பில் கவனக் குறைவால், வீடுகட்டும் பொருட்கள் நாசம் ஆகாமல் தடுக்க எனது யோசனையைக் கவனிக்கும்படி பெற்றோர்களையும் தெரிந்துகொள்ள எழுதி எடுத்துக்காட்டுகிறேன்.)
எந்த மேஸ்திரி மீதும் குற்றமில்லை. நாம் கவனிப்பதில்லை. அதைப் புரிந்துகொண்ட சிலர் தவறாக நமது பிள்ளைகளின் பொருட்களை சுலபமாக வீணாக்குகிறார்கள். நமதூரில் பிறந்த நான் என் ஊருக்காக என் மக்களின் பொருளாதாரம் வீணாகக் கூடாது என விரும்பி அல்லாஹ்விடம் கேட்டு மன வருத்தத்துடன் எழுதுகிறேன். இல்லாவிட்டால் நாளைக்கு அவன் என்னிடம் கேட்பான். தெரிந்தும் தெரியாமல் நடந்துவிட்டாயே? உன் அருகிலிருந்த மக்களுக்கு எழுதிக் காட்டினாயா என அவன் நாளை கேட்காமல் இருக்கவே எனது இக்கருத்தை எழுதுகிறேன்.
எனது சிந்தனைகளை தெரிந்தோ, தெரியாமலோ எழுதினால் பாராட்டுக்கு பதிலாக திட்டும் ஏச்சும் வந்தால், அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நாற்பது ஆண்டு எழுதிய பழக்கத்தில் ஏகப்பட்ட குறை தளும்புகளுடன் இது ஒரு சிறு கீறலாக இருக்கட்டும். இது புரட்சிக் கட்டுரை அல்ல. வீடு கட்டப்போகும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய கட்டுரை என்பதால் எழுதியுள்ளேன். |