ரமளான்! புண்ணியம் பூத்துக் குலுங்கும் புனித மாதம்; நன்மைகளும் நல்லமல்களும் ஒருசேர கிடைக்கப்பெறும் மாதம்; ஒன்றுக்குப் பன்மடங்கு கூலிகளைப் பெற்றுத் தரும் மாதம். இப்படி இந்த மாதத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நோக்கம் அதுவன்று.
நமதூருக்கென தனிச்சிறப்புகள் பல உள்ளன. அவற்றுள் பிரதானமானது ஹாஃபிழ்களும், ஆலிம்களும் நிறைந்த ஊர் என்பது. வீட்டுக்கு வீடு திருக்குர்ஆனை மனனம் செய்த ஹாஃபிழ்கள் நிறைந்துள்ளனர். தற்போது பெண்களிலும் ஏராளமான ஹாஃபிழாக்கள் உருவாகி வருவதும் அதற்கென ஆங்காங்கே பெண்களுக்கான ஹிஃப்ழு மத்ராஸாக்கள் உருவாக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. பெற்றோர் பலர் தம் பிள்ளைகளை ஹாஃபிழ்களாக்க வேண்டும் என்ற ஆவலே இதற்கான காரணம். எனக்குக் கிடைத்த தகவலின்படி, தற்போது நமதூரில் மாணவர்களுக்கென ஐந்து ஹிஃப்ழு மத்ரஸாக்களும், மாணவியருக்கான நான்கு ஹிஃப்ழு மத்ரஸாக்களும் நடைபெற்றுவருகின்றன.
மாணவர்கள் ஹிஃப்ழு முடித்த பிறகு பள்ளிப் படிப்பைத் தொடரும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அத்துடன் கல்லூரிகளில் பட்டப் படிப்பை முடிக்கும் வாய்ப்பைப் பெறுவதும் கூடுதல் சிறப்பாகும். இதன் மூலம் பலர் என்ஜினீயர்களாகவும் உயர்கல்வி முடித்த பட்டதாரிகளாகவும் ஆகின்றனர். ஹிஃப்ழு பயிலும்போதே மத்ரஸாக்களில் பள்ளிப் படிப்பையும் கூடுதலாகக் கற்பிப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.
பொதுவாக திருக்குர்ஆனை மனனம் செய்பவர்களுக்கும், மனனம் முடித்த ஹாஃபிழ்களுக்கும் தங்கள் மனனத் திறமையை வெளிப்படுத்தும் தருணமாகவும், அரங்கேற்றமாகவும் ரமளான் மாதம் அமைந்துள்ளது. அதையே கட்டுரையின் தலைப்பாக ஆக்கியுள்ளேன்.
ஆம்! பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகைகளில் தங்கள் இனிய குரல்வளத்தையும், மனன சக்தியையும் வெளிப்படுத்தும்போதுதான் அவர்களின் திறமைகளைக் கண்டறிய முடியும். ஹாஃபிழ்களைப் பொறுத்த வரை அவர்களுக்கான அரங்கேற்றம் ரமளானில் தராவீஹ்.
நம் மூதாதையர்களில் பலர் திண்ணைப் பள்ளிகளில் குர்ஆனை மனனம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் குர்ஆன் ஓதல்முறை என்பது அப்போதைய சூழலில் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது. இப்போது வேண்டுமானால் அதை பழைய ஸ்டைல் எனலாம். இருந்தாலும், “ஓல்ட் இஸ் கோல்ட்”தான். ஆனால், அவர்களின் ஓதலில் எழுத்துப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ இருந்த்தில்லை. ‘வாவு’ ‘ஃபே’ போன்ற எழுத்துகள் வருகின்ற இடங்களில் மிகக் கவனமாக ஓதுவார்கள்.
திருக்குர்ஆனை ஓதுகையில் எழுத்துப் பிழைகளோ, உச்சரிப்புப் பிழைகளோ ஏற்பட்டால், அர்த்தம் அநர்த்தமாகிவிடும் என்பது நாம் அறிந்த ஒன்றே. முன்னோர்களில் பலர் பொருளுணர்ந்து திருக்குர்ஆனை மனனம் செய்துவைத்திருந்ததும் திருக்குர்ஆன் விரிவுரையான தஃப்சீரையும் கற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
தற்போதைய தராவீஹ் தொழுகைகளில் திருக்குர்ஆனை தமது இனிய குரலால் ரீங்காரமிட்டு ஓதுகின்றனர் நமது இளவல்கள். அவர்களின் ஓதல் முறையில் மக்கா ஹரம் ஷரீஃப் இமாம்களான ஷெய்க் அப்துர் ரஹ்மான் சுதைஸ், ஷெய்க் ஷுரைம் உள்ளிட்ட பிரபலமான காரீகளின் இராகம் தொனிக்கிறது. இந்த சின்ன வயதில் எவ்வளவு அழகாக ஓதுகிறார் என்று நாமும் ஆனந்தமடைகிறோம். தம் பிள்ளைகள் திருக்குர்ஆனை மனனம் செய்து தராவீஹ் தொழுவிக்கும்போது, பெற்றோர் அடையும் பேரானந்தத்தையும் நிம்மதிப் பெருமூச்சையும் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இந்த எல்லா சிறப்பம்சங்களும் நமதூருக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் என்பதில் இருவேறு கருத்தில்லை.
ஆனால், ஹிஃப்ழு துறையில் தனிக்கவனம் செலுத்த வேண்டிய இன்னும் சில முக்கியமான அம்சங்கள் உள்ளன என்பது உணரப்படுகிறது. ஹிஃப்ழு மத்ரஸாக்களும், அதன் ஆசிரியப் பெருமக்களும், உலமாக்களும், நிர்வாகிகளும், பெற்றோரும் இதில் கூடுதல் கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம். இது நமக்கு நாம் செய்துகொள்ள வேண்டிய சுய பரிசோதனை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
பொதுவாக தராவீஹ் தொழுகையில் ஒரு நாளைக்கு ஒன்றேகால் ஜுஸ்உ ஓதிவருவது வழக்கம். குறிப்பிட்ட சில நாட்கள் கழிந்த பின்னர் அதில் பாதி (5 ஸுமுன்) ஓதப்படும். தொழுகையில் நிற்கும்போது தொழுவிப்பவரின் ஓதலில் ஏற்ற இறக்கம், இனிய குரல்வளம், இராகம், தர்த்தீல் ஆகியவை கவனிக்கப்படும்.
ஓதலுக்கேற்றவாறு பின்னால் நிற்கும் மஃமூம்கள் கவனம் சிதறாமல் மனஓர்மையுடன் நிற்பார்கள்; கிராஅத்தில் மெய் மறந்துபோவார்கள். இல்லையெனில், தக்பீர் கட்டியவுடன் மறந்துபோன பழசெல்லாம்தான் ஞாபகத்திற்கு வரும். கவனம் எங்கெங்கோ போய்வரும். இறுதியில் நின்றோம்; குனிந்தோம்; சிரம்பணிந்தோம் என்ற நிலைதான் நடைபெற்றிருக்கும். மனஓர்மை ஏற்பட்டிருக்காது.
சிறந்த முறையில் குர்ஆனை ஓத வேண்டிய அம்சங்களோடு தொழுவிப்பவர், அவரின் ஓதல்முறையால் நம்மை எங்கும் செல்ல விடாமல் கட்டிப்போட்டுவிடுவார். பொருள் புரியாவிட்டாலும் அவரின் ஓதல் முறையால் நாம் ஈர்க்கப்படுவோம் அவரோடு பின்தொடர்ந்து உயிரோட்டமான முறையில் நமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம்.
தர்த்தீல், மஃக்ரஜ், திலாவத் ஆகியவற்றில் நமது இளவல்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். விதிவிலக்காக சிலர் நன்றாக ஓதலாம். மேற்குறிப்பிட்ட எல்லா சிறப்பம்சங்களுடன் இவையும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இராகத்தில் மட்டும் சுதைஸும் ஷுரைமும் வந்தால் போதாது.
இறைமறை அல்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே!) நீர் குர்ஆனை நிறுத்தி தர்த்தீலாக ஓதுவீராக! (சூரா அல்முஸ்ஸம்மில், 73:4)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இனிய) உங்கள் குரல்களால் குர்ஆனை அலங்கரியுங்கள். (நஸயீ)
இது சம்பந்தமாக ஏராளமான நபிமொழிகளும், சன்றோர்களின் கூற்றுகளும் உள்ளன.
நமது இளவல்களின் ஓதல்முறையான திலாவத், தர்த்தீல், தஜ்வீத் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளை ஹிஃப்ழு மத்ரஸாக்கள் கண்டறிந்தால், எதிர்காலத் தலைமுறையினர் எல்லா வகையிலும் சிறப்புத் தேர்ச்சியுடன் மிளிர்வார்கள் என்பதில் ஐயமில்லை. இது நமது இளவல்களின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்தான். இதைவிட சிறப்பான ஆலோசனைகள் இருப்பின் அவற்றை உங்கள் பின்னூட்டங்களினூடாக (கமெண்ட்ஸ்) தெரிவிக்கலாம்.
ஹிஃப்ழு பயிலும் மாணவர்களுக்கு தஜ்வீதின் சட்டதிட்டங்களை முறையாகக் கற்ற உஸ்தாதை நியமித்துப் போதிக்க வேண்டும். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட உஸ்தாத் தஜ்வீத் கலையில் தேர்ச்சிபெற்றவராக இல்லையெனில், அவர் தஜ்வீத் கற்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். ஹிஃப்ழு உஸ்தாத் ஆலிமாக இருந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஹிஃப்ழு மத்ரஸாக்களில் தஜ்வீதுக்கென தனி பாட நேரம் ஒதுக்கலாம். தனி ஆசிரியரும் நியமிக்கப்படலாம். ஆனால், அவர் யாரிடம் அன்றாடம் பாடங்களை ஒப்புவிக்கிறாரோ, அவர் தஜ்வீத் பிழையின்றி மாணவரிடம் பாடம் கேட்பவராக இருக்க வேண்டும். தஜ்வீத் சட்டங்களை நன்கு அறிந்து வைத்துக்கொண்டு, ஓதும்போது பிழையாக ஓதுவதைவிட, சட்டங்களை மறந்தாலும் பரவாயில்லை; ஓதும்போது முறையோடு ஓதினால் அதுவே சிறந்ததாக இருக்கும்.
• ‘மஃக்ரஜ்’ எனப்படும் உச்சரிப்பிலும், ‘தர்த்தீல்’ எனப்படும் ஓதல் முறையையும் செம்மைப்படுத்துவதற்கான செயல் பயிற்சி (Practical Training) அளிக்கப்பட வேண்டும்.
• திருக்குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்க வேண்டும். தேவையேற்பட்டால் சில முக்கியமான ஆயத்களின் சிறப்புகளையும் அது இறக்கியருளப்பட்ட பின்னணியையும் (ஸப்புந் நுஸூல்) விளக்க வேண்டும். (மனனம் செய்யும்போதே இதுவும் சேர்ந்து மனதில் பதிந்துவிடும். தொழுகையில் அந்த ஆயத்களை ஓதும்போது பொருளுணர்ந்து உயிரோட்டத்துடன் ஓதுவார்.)
• சின்னச் சின்ன அரபி இலக்கணங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக எந்தெந்த சொற்களுக்குப் பின்னால் கஸ்ர் வரும் (ஹுரூஃபுல் ஜர்). (ஆலிமாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்)
• திருக்குர்ஆனில் திரும்பத் திரும்ப இடம்பெறும் சொற்களுக்கான பொருள்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதனால் பெரும்பாலான சொற்களின் பொருள் மனதில் பதியும். (அலீம் عليم - , அழீம்عظيم - , அலீம்أليم - )
• ‘தவ்ர்’ எனப்படும் முழுக் குர்ஆனையும் மீண்டும் மீண்டும் மனனமாக ஒப்புவிக்கும் முறையை குறைந்தபட்சம் 10 தடவையாவது செய்வது.
• மக்தப் மத்ரஸாக்களில் உருவாக்கப்படும் சிறார்களுக்கும் இதில் சிறிய பகுதியைப் போதிக்க வேண்டும். அவர்கள் ஹிஃப்ழுக்கு வரும்போது பெரிய சிரமம் இருக்காது. பொதுவான பாடத்திட்டம் இருக்க வேண்டும். (இந்தப் பாடத்திட்டத்தில் எந்த மஸாயில் வேறுபாடுகளும் இடம்பெற வாய்ப்பில்லை.)
மேற்குறிப்பிட்ட ஆலோசனைகள் நடைமுறைக்கு வந்தால், எதிர்வரும் காலங்களில் உயிரோட்டமான முறையில் ஓதக்கூடிய இளவல்களைக் காணலாம். இந்த ரமளானில்கூட பிள்ளைகள் தொழுவிப்பதற்கு செல்லும்முன் பெற்றோர் அவர்களின் பாடத்தை நன்கு கேட்கலாம். அவர்கள் சார்ந்த மத்ரஸாக்களும் உஸ்தாதுமார்களும் சிறப்புக் கவனம் எடுத்து அவர்களின் பாடத்தைக் கேட்பதற்கான ஏற்பாடுகளை செய்யலாம். தாம் தொழுவிக்கப்போகும் ரக்அத்களை முன்னரே தொழுவித்துப் பார்க்கலாம். இதை ஒலிப்பதிவு செய்து அவர்களையே கேட்கச் செய்யலாம். அவ்வாறு கேட்கும்போது விடுபட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டவும் செய்யலாம்.
பல நாடுகளில் செயல்படும் காயல் நலமன்றங்கள் எத்தனையோ பல நலத்திட்டங்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்துவருவது பாராட்டுக்குரியது. ஒட்டுமொத்த நகரிலும் சிறந்த முறையில் தொழுவித்த இளம் ஹாஃபிழ்களைத் தெரிவு செய்து அவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசுத் தொகை அறிவிக்கலாம். இதைத் தெரிவு செய்வதற்கான குழு ஒன்றையும் நியமிக்கலாம். இதற்கான வயது வரம்பையும் நிர்ணயிக்கலாம்.
மற்றொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். இன்றைய சூழலில் ஹாஃபிழ்கள் பஞ்சமின்றி நிறைந்து காணப்படும் நமதூரில் ஆலிம்களின் எண்ணிக்கை குறைந்துவருவது வேதனையான உண்மை. அதற்கான காரணங்கள் கண்டறியப்பட வேண்டும். பொதுவாகவே தமிழக அரபிக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை தேக்கநிலை கண்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய நவீன யுகத்தில் இருவழிக் கல்வி முறை அடிப்படையிலான மத்ரஸாவுக்கு மவுசு கூடியுள்ளது. அதுபோன்ற கல்வித் திட்டத்தில் இயங்கும் மத்ரஸாக்களின் சாதக பாதக அம்சங்களை மனதில் கொண்டு காயலில் புதியதொரு மத்ரஸாவைத் துவக்க வேண்டிய தேவை உள்ளது. பாரம்பரியமாக செயல்படும் அரபிக் கல்லூரிகள் இத்திட்டம் குறித்து மீளாய்வு செய்வதுடன், அது போன்ற செயல்திட்டத்திற்கு ஆதரவும் நல்க வேண்டும்.
சமகாலத்தில் உள்ள சில அம்சங்களை பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். நவீன காலத்தில் தொடுக்கப்படும் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய திறமையான அறிவுஜீவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
நம்மிடையே மார்க்கச் சட்ட விவகாரங்களில் கருத்துவேறுபாடுகள் காணப்பட்டாலும், எல்லா தரப்பிலும் அவரவர் கருத்துகளை முன்வைக்கக்கூடிய மார்க்க அறிஞர்களின் பஞ்சம் உள்ளது. வெளியூர்களிலிருந்துதான் ஆலிம்கள் வரவழைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. உள்ளூரில் ஏன் ஆலிம்கள் உருவாவதில்லை? உள்ளூர் அரபிக் கல்லூரிகள் ஏன் இதில் கூடுதல் கவனம் செலுத்துவதில்லை? இப்படி ஏராளமான கேள்விகள் பதில்களை எதிர்பார்த்தவண்ணம் ஏக்கத்துடன் நோக்கியுள்ளன என்பது மட்டும் உண்மை.
தம் பிள்ளைகளை ஹாஃபிழ்களாக்கி அழகு பார்க்கும் பெற்றோர்கள் ஏன் அவர்களை மார்க்க அறிஞர்களாக்கத் தயங்குகின்றனர்? ஷரீஆ துறையில் அவர்களை மிளிரச் செய்யலாமே? சர்வதேச வணிக சமூகமாக கண்டறியப்பட்ட காயல் மக்கள் நாம், பல்துறை சார்ந்த அறிவு பெற்ற நாம், ஏன் இத்துறையில் அலட்சியமாகவும், கண்டுகொள்ளாமலும் இருக்கிறோம் என்பதுதான் விந்தையாக உள்ளது.
நமதூருக்கு பல வகையிலும் நெருக்கமான ஊர் கீழக்கரை. மறைந்த மர்ஹூம், பி.எஸ். அப்துர் ரஹ்மான் அவர்களால் உருவாக்கப்பட்ட சென்னை வண்டலூர், கிரசண்ட் பள்ளி வளாகத்தில் ஆலிம் புகாரீ அரபிக் கல்லூரி நடைபெற்றுவருகிறது. நம்மில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை இது போன்ற கல்லூரிகளில் சேர்க்க முயற்சித்துள்ளோம்? (விதிவிலக்காக சிலரைத் தவிர). அவ்வாறு இக்கல்லூரியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் ஷரீஆ துறையில் பங்காற்றுகின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும்.
காலத்தின் தேவையுணர்ந்து இதுகுறித்து சிந்திப்பதும் விவாதிப்பதும் நம் எல்லோரின் கடமையும் பொறுப்பும் ஆகும். நாம் எல்லோரும் பொறுப்பாளர்களே, நாளை மறுமையில் நம் பொறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவோம்.
சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் உள்ள நம் எல்லார்மீதும் இது கடமை என உணர்ந்து செயல்படுவோம். எண்ணங்கள் தூய்மையாக இருப்பின் செயல்கள் வெற்றியடையும். |