1999இல் நடந்த நிகழ்வு! காயல்பட்டினத்தைச் சேர்ந்த குறும்புக்கார அண்ணன்கள் இருவர் (உறவு முறையில் மச்சான்கள்!) இப்படி பேசிக்கொண்டனர்...
“மச்சான்! வீட்டுக்குள்ள பூந்தாலே ரொம்...ப கேவலமா இருக்குடா...!”
“அப்டி என்ன மச்சான் நடந்திடிச்சி...?”
“என் தங்கச்சி மட்டைக்கி ப்ளஸ் டூ பப்ளிக் எக்ஸாமாம்... ராத்திரி, பகல் பாராம உழுந்து உழுந்து படிச்சிட்டு இருக்கிறாடா... சோறு, தண்ணி எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கிறதில்லே!”
“சரி...? அது நல்ல விஷயம்தானே...? இதுல கவலைப்பட என்ன மச்சான் இருக்கு...?”
“மண்ணாங்கட்டி! உன் மனசாட்சிய தொட்டு சொல்லு...? என்னைக்காவது நாம இப்டி படிச்சிருப்போமா...?”
“சத்தியமா இல்லே...! பப்ளிக் எக்ஸாம்க்கு முந்திய ராத்திரியில நான் ஆறுமுகநேரி சாந்தியிலலோ இருந்தேன்...?”
“இப்ப சொல்லு! இது நமக்கு அவமானமா இல்லையா...?”
“ஆமாடா மச்சான்...! உங்க வீட்டுலயாவது ஒரு தங்கச்சி! என் வீட்டுல ரெண்டு மட்டைங்க! ஒருத்தி எஸ்.எஸ்.எல்.சி., இன்னொருத்தி ப்ளஸ் டூ படிக்கிறா! நீ சொல்ற மாதிரிதாம்ப்பா ரெண்டு பேரும் இருக்காளுங்க... அவங்க படிச்சிட்டு இருக்கிற நேரத்துல உம்மா கண்ணுல நான் பட்டுட்டா, அவங்க என்னைப் பார்க்கிற கிண்டல் பார்வை இருக்கே...? அது வேற என்னெ ரொம்...ப கொல்லுதுடா...”
“சரி மச்சான்! இப்ப என்ன செய்யலாம்...?”
சிறிது நேர விவாதத்திற்குப் பின் ஒரு செயல்திட்டம் வடிவமைக்கப்படுகிறது இரு மச்சான்களாலும்!
வழமை போல, தேர்வு நேர வகுப்பிற்காக, தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் மாணவியர் கூடியிருந்தனர். கண்களில் நீர் கோர்த்த நிலையில் ஒரு மாணவி, தன் முகவரிக்கு வந்த அஞ்சலட்டையை ஆசிரியையிடம் காண்பிக்கிறார்...
“எந்த கொழுப்பெடுத்தவன் இத எழுதினான்? அறிவு கெட்டப் பய!! பிள்ளைங்களுக்கு பரீட்சையே முடியல... அதுக்குள்ள இப்டி கூப்ட்டிருக்கான்...?” அஞ்சலட்டை வாசகத்தைப் படித்ததும் ஆசிரியை குமுறினார் இப்படி! அப்படி என்னதான் வாசகம் அதில்?
“அன்புள்ள மாணவிக்கு வணக்கம்.
அரசுப் பொதுத் தேர்வுகள் நெருங்குவதையொட்டி, இரவு - பகல் பாராமல், ஊண் - உறக்கமின்றி நீங்கள் இப்படி படித்துக் களைத்துப் போயிருக்கிறீர்கள். இத்தனை சிரமங்களையும் பட்டுத்தான் ஆக வேண்டுமா? எல்லாவற்றையும் இலகுவாக எடுத்துக்கொள்ளுங்கள்! முடிந்த வரை படியுங்கள்! ரிசல்ட் எப்படி வந்தால் என்ன? உடல் நலனை விடவா அது முக்கியம்?
ஒருவேளை நீங்கள் தேர்வில் தோல்வியுற்றாலும், உங்களுக்குத் துணை புரியவே எமது திருச்செந்தூர் xxxx டுட்டோரியல் காலேஜ் காத்துக் கொண்டிருக்கிறது!”
இதுதான் அந்த வாசகம்.
“அடியா... எனக்கும் அதே மாதிரிதாண்டீ போஸ்ட் கார்டு வந்திருக்குது...!”
“உனக்குமாடீ...? எங்கே உன் லெட்டர காட்டு!”
மற்றவர் அஞ்சலட்டையைக் காண்பிக்க, “இது என் காக்கா மூதி நீங்குவானோட எழுத்துலோ...?”
“அப்ப உன்னோடத காட்டு!” காண்பிக்கப்பட்டதும், “இது என் காக்கா நாசமத்துப்போவான்ட எழுத்துதான்! ச்சீ... இப்புடியுமா விளையாடுவானுவோ...?”
இரு சாராரும் வேகமாகச் சென்று, குமுறிய ஆசிரியையிடம் இந்தத் தகவலைச் சொல்ல, அன்றும் - அதைத் தொடர்ந்து தேர்வு நாள் வரையிலும் வயிறு குலுங்க சிரித்தே ஓய்ந்துவிட்டனர் அம்மாணவியரும், அவர்களின் தோழியரும்! அஞ்சலட்டை அனுப்பியது வேறு யாருமல்ல! நான் மேற்குறிப்பிட்ட மச்சான்கள் இருவரும் தம் தங்கையருக்கு அனுப்பியவைதான் அவை! அண்ணன் கையெழுத்தைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, அவர் தங்கைக்கு இவரும், இவர் தங்கைகளுக்கு அவரும் கடிதம் எழுதி அனுப்பியிருக்கின்றனர். அன்றைய நிகழ்வை மறக்காமல், இன்றளவு ஓர் அண்ணன் அவளது தங்கையை அந்த டுட்டோரியல் காலேஜ் பெயரைக் கொண்டே செல்லமாக அழைக்கிறான்.
இணையதள பயன்பாடு பரவலாவதற்கு முன்பு வரை அரசு பொதுத்தேர்வு முடிவுகள் எல்லாம் செய்தித்தாள்களில்தான் அச்சாகி வரும். மாலை செய்தித்தாள்கள் வெளியாகும் நேரத்திலேயே தேர்வு முடிவும் வெளியாகும். காலை செய்தித்தாள் நிறுவனத்தினர், தேர்வு முடிவுகளுக்காக சிறப்பு வெளியீடு செய்வார்கள்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரது எண்களும் சில பக்கங்களில் அடுத்தடுத்து அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கும். என் குடும்பத்தில் தேர்வெழுதி, முடிவுக்காக காத்திருந்த ஒன்றுவிட்ட தங்கையிடம், லாட்டரி சீட்டுக்கு ரிசல்ட் பார்ப்பவர்கள் சொல்வது போல், “ஸபூர் செஞ்சிக்கோமா... ஒரு நம்பர்ல தப்பிட்டு!” என்பேன். “ஓ...”வென ஒப்பாரியாக இருக்கும்.பிறகு, “கேலிக்கு சொன்னேன்மா... நீ பாஸ்தான்!” என்று உண்மையைக் கூறி ஆறுதல் படுத்தினாலும், “இல்லே... நா நம்ப மாட்டேன்... நா ஃபெயிலாயிட்டேன்...” என்று கூறி அழுகை தொடரும். உம்மா, பெருமா, சாச்சிகளின் வசவுகளை வாங்கியவாறு வீட்டை விட்டும் வெளியேறி விடுவேன்.
சரி, தகவலுக்கு வருகிறேன். இக்கட்டுரையின் நோக்கமே இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டதுதான்! (1) மொழிவழி (Medium), (2) காயல்பட்டினம் பெண்களின் கல்வி.
தாய்மொழி தமிழை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் மக்கள் அவ்வளவு சரளமாக வாசித்த நிலை மாறி, இன்று ஏதோ அண்டை மாநிலத்திலிருந்து வந்தவன் புதிதாகப் படிப்பது போல அதை வாசிக்கும் நிலை. இது மிகைப்படுத்தப்பட்ட தகவலல்ல!
ஏழாம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் பயின்ற என் உறவினர் ஒருவரின் மகள் இவ்வாண்டு அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளார். விபரம் கேட்டபோது, “அந்த ஸ்கூல் ரொம்...ப தூரத்துல இருக்கு! இது பக்கத்துல இருக்கு... அதே இங்கிலீஷ் மீடியம் இங்கேயும் இருக்கிறதால இங்கே சேத்துட்டோம்...” என்று பதில் கிடைத்தது.
“ஏன்ம்மா...? வந்தது வந்தாச்சி... தமிழ் மீடியத்துல சேர்க்கலாமே...?” என்று நான் கேட்க, “ஆங்...? இங்கிலீஷ் மீடியத்துல படிச்சாத்தானே நாலு இங்கிலீஷ் வார்த்தைய தெரிஞ்சிக்க முடியும்...?” என்றார் மாணவியின் தாய். அந்தக் குழந்தையை அழைத்து, ஆங்கிலத்திலுள்ள அவளது பாடப்புத்தகம் ஒன்றை வாசிக்கச் சொன்னேன். வெள்ளைக்காரி போன்று அழகான உச்சரிப்புடன் வாசித்தாள். “சரிம்மா... நீ படிச்ச அந்த பத்திக்கு கொஞ்சம் பொருள் சொல்லேன்...?” என்று நான் சொன்னதுதான் தாமதம், என்னைப் பார்த்து பரிதாபமாக சிரித்தாள் அவள். “சரி விடுமா... உன் தமிழ் புத்தகத்தை எடுத்து சில பத்திகளை வாசி!” என்றதும் கடகடவென வாசித்தாள். பொருள் சொல்லக் கூறினேன். அழகாக விளக்கிக் கூறினாள் அந்தப் பிஞ்சு.
இங்கே தவறு யாருடையது என்பதே கேள்வி. எல்லோரும் சேர்க்கிறார்கள், நானும் சேர்க்கிறேன் என்ற ஒன்றைத் தவிர, ஆங்கிலவழிக் கல்வியில் சேர்ப்போருக்கு இதைத் தாண்டி கிடைத்த பயன் என்ன? நாம் எங்கு, எந்த மொழி பேசுவோருடன் பெரும்பாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறோமோ அவர்களுடன் எந்த மொழியில் பேச வேண்டுமோ அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், என்றோ ஒரு நாள் ஏதோ ஓரிடத்தில் பேசப்போகும் ஒரு மொழிக்காக குழந்தையின் வாழ்க்கையையே அதற்குப் பணயம் வைப்பது சரிதானா?
“இவ்ளோ பேசுறீமரே... உம்ம பிள்ளைய எங்க சேர்த்திருக்கிறீரு...?” என்று கேட்போருக்கு எனது பதில், எனது மூன்று (பெண்) மக்களையும், என் வீட்டுக்கு மிக அருகிலிருக்கும் அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் சேர்த்த தெம்புதான் என்னை இப்படி எழுத வைத்துள்ளது. யாருக்கும் நர்ஸரி பள்ளி கிடையாது. அவர்கள் விரும்பினால், அருகிலிருக்கும் அங்கன்வாடிக்குப் போய் வரலாம்.
“ஏதோ கெட்ட வார்த்தை சொல்றாப்ல இருக்கே...? ‘அங்கன்வாடி’ன்னா என்ன?” என்று கேட்கத் தோன்றுகிறதா? அது மழலையருக்காக அரசு நடத்தும் பாலர் (நர்ஸரி) பள்ளி. பச்சைக் குழந்தை சுமக்க முடியாத அளவுக்கு புத்தக மூட்டையோ, ஹோம் ஒர்க்கோ அங்கு கிடையாது. பெயருக்கு ஏதாவது படித்துக் கொடுப்பார்கள். எஞ்சிய நேரம் முழுக்க விளையாட்டுதான். கல்விக் கட்டணம், டெர்ம் ஃபீஸ், அதுக்கு ஃபீஸ், இதுக்கு ஃபீஸ் என எந்தத் தொந்தரவும் இல்லை. குழந்தை அங்கு போய்விட்டு வீடு திரும்பும்போது கைகளில் ஒரு பொதியைச் சுமந்து வருவாள். அதில் நவதானிய மாவு இருக்கும்... சில நேரங்களில் அவித்த சுண்டல் உள்ளிட்ட கடலை வகைகள் இருக்கும்… பொறுமையுடன் இருக்கும் குழந்தைகளுக்கு அங்கேயே உணவு சமைத்து ஊட்டியும் விடப்படும். நேரம் முடிவுற்றதும், ஆயா அக்காவே தன் இடுப்பில் சுமந்து வந்து குழந்தையை வீட்டில் விட்டுச் செல்வார். குழந்தை விரும்பினால் போகும்; தயங்கினால் வீட்டிலேயே இருக்கும்.
“சரீ... எல்லாம் கேக்க அழகாத்தான் இருக்கு! அந்த நாத்தத்துல புள்ளைய விட மனசு வருமாப்பா...?” இது என்னிடம் பலர் கேட்ட கேள்வி. இவர்கள் மிகைப்படுத்தும் அளவுக்கு அங்கு இல்லையெனினும் சில சுகாதாரக் கேடுகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை. வீட்டில் சுத்தமாகவே வளர்க்கப்படும் பிள்ளைகள் அதிக எண்ணிக்கையில் அங்கு படித்தால் அதற்கேற்ப அங்குள்ளவர்கள் நடந்துகொள்வார்கள். நாம்தான் “கை நிறைய காசு இருக்கு” என்று தனியார் பள்ளியில் சேர்த்து, பச்சைக் குழந்தைகளைப் பொதி சுமக்க விட்டுவிட்டோமே...? எல்லோரும் இங்கு படிக்க வைத்திருந்தால், இங்குள்ள குறைகளை ஒரு குழுவாகச் சென்று முறையிட இயலும். உடனுக்குடன் அவை களையவும் படும். தற்போது நான் மட்டும் தனித்து போராடிக் கொண்டிருக்கிறேன். ஏன், தற்போதுள்ள தனியார் பள்ளிகளில் குறைகளே இல்லையா? அவற்றைக் களைவதற்கு அங்கெல்லாம் முறையிடுவதே இல்லையா? சிந்திக்க வேண்டும்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்வேன். என் குழந்தைகள் விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடி, உண்ண வேண்டிய நேரத்தில் உண்டு, உறங்க வேண்டிய நேரத்தில் உறங்கிப் பொழுதைக் கழிக்கின்றனர். அவர்களுக்கு இறையருளால் இன்றளவும் பள்ளிக் கல்வியைக் கொண்டு எந்த மன உளைச்சலும் இல்லை. அவர்களுக்கு இல்லையென்பதால் பெற்றோர் எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
பொதுவாக பிற மொழிகளை, சூழல்தான் பழக்கப்படுத்தும். “அடிச்சிப் போட்டாலும் இங்கிலீஷ் வராத இந்தப் பய ஏர்போர்ட்டுல கேட்ட கேள்விக்கு ‘தஸ்ஸு புஸ்ஸு’ன்னு பதில் சொன்னானாமே...?” என்று கூறப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதற்குக் காரணமென்ன? நம்மைச் சார்ந்தவர்களே இல்லாத ஓரிடத்தில், அவர்களுக்கேற்ப நம்மையுமறியாமல் நம்மை மாற்றிக்கொள்கிறோம். நீச்சலே தெரியாதவனை, அவன் எதிர்பாராத நிலையில் கிணற்றில் தள்ளிவிட்டால் எப்படி நீந்திக் கரை சேருவானோ அது போலத்தான் இதுவும்!
“உன் தத்துவமெல்லாம் சரிதான்! அப்டீன்னா ஆங்கிலமே வேணாம்னு சொல்ல வர்றியா...?” என்று கேட்கத் தோன்றும். கண்டிப்பாக வேண்டும். தாய்மொழி முதலில், மற்றவை அதனையடுத்துதான். இதுவே எனது வலிமையான கருத்து.
இது ஒருபுறமிருக்க, எந்த நோக்கமும் இல்லாமல் பெண் மக்களைப் பல துறைகளிலும் படிக்க வைக்கும் நிலை நமதூரில் இன்று ஃபேஷனாகவே ஆகிவிட்டது. இரவு-பகல் பாராமல், ஊண்-உறக்கமின்றி, விடுமுறை நாளிலும் கூட ஓய்வெடுக்காமல் படித்துக்கொண்டிருக்கின்றனர் நம் பெண் மக்கள். இதோ, நடப்பாண்டு ப்ளஸ் 1 வகுப்புகள் இன்னும் சில நாட்களில் துவங்கும். அவரவருக்குத் தகுதியான பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், “சயின்ஸ் க்ரூப்தான் நாங்க எடுப்போம்...” என்று நம் இளந்தளிர் பெண் மக்களே விரும்பிச் செல்லும் நிலை. அந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த நாள் முதல், பாடம் எழுத, மனப்பாடம் செய்ய, படம் வரைய, ப்ராக்ட்டிக்கல் என பெண்டு நிமிரும்.
சரி, இவ்வளவு அவதிகளுக்கிடையில் ப்ளஸ் 2 படித்து முடித்த பின் அவர்கள் செய்வதென்ன? ஒரு பி.காம்., அல்லது பி.எஸ்ஸி., அல்லது பி.பி.ஏ. போன்ற பட்டப்படிப்புகளைக் கல்லூரியில் படித்து முடிக்கின்றனர். வேறு சிலரோ மத்ரஸாக்களில் பயின்று ஆலிமாவாகி விடுகின்றனர். கடைசியில், திருமண அழைப்பிதழில், “மணமகள்: பீவி ஃபாத்திமா B.Sc. / B.Com. / B.A.” என்று அச்சிடப்பட்டிருக்கும். அடுத்து அவர் இல்லத்தரசி ஆகிவிடுவார். இனி குழந்தைகள், குட்டிகள்தான்!
ஆக, “கடைசியில் இல்லத்தரசியாக இருப்பதற்குத்தானா இத்தனை படிப்புகளும் கற்றார்கள்...?” என்ற கேள்விக்கு விடையில்லை. இவர்கள் கல்லூரியில் படித்த இந்தப் பாடப் பிரிவைப் படிக்காமல் இருந்திருந்தால், வேலைவாய்ப்புக்காக முயற்சிக்கும் வேறு சமூகங்களைச் சேர்ந்த யாராவது படித்துப் பயன்பெறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த இடத்தை இவர்கள் பிடித்துக்கொண்டதால் இருவருக்குமே பயனின்றிப் போய்விடுகிறதா, இல்லையா? நூற்றில் ஒருவர் வேண்டுமானால் - வீட்டில் போதிய வருமானம் இல்லாததால், தான் கற்ற கல்வியைக் கொண்டு நல்ல வேலைவாய்ப்பில் அமருவது வரவேற்கத்தக்கது.
எழுத, எழுத கட்டுரை நீண்டுகொண்டே செல்கிறது. முடிவுக்கு வருகிறேன். வருங்காலத்தில் வேலைவாய்ப்பு பெறுவதை நோக்கமாகக் கொள்ளாதவர்கள் ப்ளஸ் 1 வகுப்பில் வணிகவியல், பொருளாதாரம், கணக்குப் பதிவியல், சமையல் கலை, மனையியல் (Home Science) போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தால், படிக்கும்போதும் அவதிப்பட வேண்டியதில்லை. படித்து முடித்த பின்னரும் ஏதோ ஒரு வகையில் பயனிருக்கும்.
இது தொடர்பாக ஆண் மக்களைப் பற்றியும் கூற வேண்டும். பொதுவாகவே மாணவர்களில் பத்தில் ஒருவர்தான் படிப்பில் ஆர்வமாக இருப்பார். மற்றவர்கள் கலையம்சங்கள், விளையாட்டுகளில்தான் ஆர்வம் காட்டுவர். அப்படிப்பட்டவர்களை அவர்களின் பெற்றோரே எதிரிகளாகக் கருதும் நிலையுள்ளது. இறைவன் அவர்களை எதற்காகப் படைத்தானோ அது அவர்களிடம் பிரதிபலிக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் எந்தப் பிரிவில் விரும்பிப் பயில்வார்களோ அதில் இணைப்பதே சிறந்தது. பத்தாம் வகுப்பில் 375க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களை, 11ஆம் வகுப்பில் அறிவியல் பாடப் பிரிவில் வலுக்கட்டாயமாகத் தள்ளுவதால், அவர்களுக்கும் பயன் கிடைக்கப் போவதில்லை, பெற்றோராகிய உங்களுக்கும் பயன் இல்லை.
அறிவியல் பாடப்பிரிவு எடுத்த ஒரே காரணத்திற்காக சிறப்பு என்றோ, மற்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்தால் மட்டம் என்றோ இல்லை. அதுபோல, தமிழ்வழியில் பயின்றவர்களெல்லாம் வீண் போய்விடவுமில்லை; ஆங்கிலவழியில் கற்றவரெல்லாம் உயர்ந்துவிடவுமில்லை. அவரவர் ஆர்வத்தையும், பெறும் சூழலையும் பொருத்தே அவர்களின் வாழ்வும், வளர்ச்சியும் அமைகிறது.
மேற்கூறப்பட்டவை எனது எண்ணத்தில் உதயமானவை மட்டுமே! மாற்றுக் கருத்துக்களும் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். முகம் கோணாமல் தெரிவிக்கப்படும் மனம் திறந்த நல்ல கருத்துக்களை உட்கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன். |